Saturday, March 7, 2015

மும்பை ஆட்டோக்காரர்! - Time Pass Vikatan 14-Mar-2015

மும்பை ஆட்டோக்காரர்!
சென்னைக்கு ராயபுரம் மாதிரி மும்பைக்கு பந்த்ரா கர். இங்கே ஒரு பக்கம் பெரிய பெரிய அடுக்குமாடிகளும் இன்னொரு பக்கம் தகரத்திலான கொட்டகைகள் நிறைந்த சேரிகளும். அப்படிப்பட்ட சேரியில் சிறிய வீட்டில் தன் தந்தை, மனைவி இரு குழந்தைகளுடன் வசிக்கும் சந்தீப் பச்சே என்கிற மனிதரின் பேட்டி இதுவரை 28 முறை நாளிதழ்களிலும் தொலைக்காட்சியில் 15 முறையும் வந்துள்ளன. ஏன்?
37 வயதாகும் சந்தீப் 22 வயதிலிருந்து ஆட்டோ ஓட்டுகிறார். வாடகைக்கு ஆட்டோ ஓட்டியவர், பிறகு சொந்த வண்டி வாங்கியபின் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி இன்றைக்கு இந்தியாவின் அதி நவீன வாடகை ஆட்டோவில் மும்பையை வலம்வருகிறார். இவருடைய ஆட்டோவில் கிடைக்கும் வசதிகள், இரண்டு பேர் மட்டும் ஏறினால் டீ, காயின் போன் வசதி, மொபைல் ரீசார்ஜ், டாப் அப், வை-ஃபை, அன்றைய தினசரிகள், முதலுதவிப் பெட்டி (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்றப்படும்) அன்றாட தங்கம், வெள்ளி நிலவரம், அவ்வப்போது வெப்பநிலை, பயணிப்பவர்களின் பாதுகாப்புக்காக வெப் கேமரா, இணையத்துடன் கூடிய டேப்லெட் கம்ப்யூட்டர் என செம அல்ட்ரா மாடர்னாக இருக்கிறது.
“என் அம்மாவுக்கு கேன்சர் வந்து மிகவும் கஷ்டப்பட்டார்கள். சிகிச்சைக்கு ஒருவர்கூட உதவி செய்யவில்லை. அவர்களின் மறைவுக்குப் பின் என் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கேன்சர் நோயாளிகளின் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்துகிறேன். என் ஆட்டோவில் உள்ள உண்டியலில் கேன்சர் நோயாளி களுக்கு என தனி உண்டியல் வைத்திருக்கிறேன். அதில் சேரும் பணத்துடன் என் தொகையும் சேர்த்து உதவி செய்வேன். அதுபோல் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்றால், நான் பணம் வாங்குவதில்லை. அவர்கள் பணக்காரர்களாக இருந்தாலும் உண்டியலில் போடச் சொல்லிவிடுவேன். ஒரு முறைதான் பிறக்கிறோம் என்பதால் உதவி செய்வதை வாழ்க்கையாக்கிக்கொண்டேன்” என்கிறார் சந்தீப்.
இவரைத் தெரியாத வி.ஐ.பி-களே கிடையாது. சல்மான்கான் துவங்கி ஏகப்பட்ட ஆளுமைகள் இவரிடம் பணம் கொடுத்து சேரி மக்களுக்கு உதவச் சொல்கின்றனர். இவர் சஞ்சய் தத்தின் வெறித்தனமான ரசிகர். அவரின் படத்தைக் கையில் பச்சை குத்தும் அளவுக்கு ரசிகரென்றாலும் அவரைச் சந்திக்க முயன்றதே இல்லை என்கிறார்!
- செந்தில்குமார்

No comments:

Post a Comment