Friday, March 6, 2015

டாக்டர் முத்துலட்சுமி - முதல் இந்திய பெண் மருத்துவர் - தேவதாசி முறையை ஒழித்தவர்

ஜூனியர் விகடன் 11-03-2015 இதழிலிருந்து மார்ச்-8 மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி பற்றிய தொகுப்பிலிருந்து தெரிந்தெடுத்த பகுதி (நான் ஒரு விகடன் இனைய சந்தாதரர்)
100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதற்கு ஒரு பெண் மருத்துவர்கூட கிடையாது. ஆண் மருத்துவர்கள்தான் இருந்தார்கள். மருத்துவர்கள் இல்லாமல் கிராமத்தில் பெண் மருத்துவச்சிகள் மூலம் மருத்துவம் பார்க்கப்பட்டு நிறைய பெண்கள் இறந்துபோயிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒரு பெண் தனியாக பள்ளியில் படித்து, தனியாகத் தேர்வு எழுதி 15 பேரில் தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. முத்துலெட்சுமி வகுப்பறைக்குப் போனால், 'இந்தப் பெண் டாக்டராகி என்ன செய்யப் போகிறாள், இவளுக்கு எதுவுமே கற்றுத்தராதீர்கள்’ என்று சொல்லி எதுவுமே கற்றுத்தர மாட்டார்கள். ஆனால் முத்துலெட்சுமி, வீட்டிலும் நூலகத்திலும் புத்தகங்களைப் படித்து அறுவைச் சிகிச்சை பாடத்தில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் கோல்டு மெடல் வாங்கினார். கஷ்டப்பட்டு படித்து டாக்டராகிய முத்துலெட்சுமியை மருத்துவம் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தார்கள். பெண்ணிடம் வைத்தியம் பார்ப்பதா என்று ஏளனம் பேசினார்கள். ஏழை எளிய மக்களுக்கு வைத்தியம் பார்க்கலாமே என்று அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார்.
இவரிடம் மருத்துவம் பார்க்க வரும் பெண்கள் முக்காடு போட்டுத்தான் வருவார்கள். மருத்துவரிடம் போவதே தெரியக் கூடாது. அதுவும் பெண் மருத்துவரிடம் போவது தவறு என்று கருதினார்கள். அதன் பிறகு சென்னை சட்டமன்ற உறுப்பினராகி தேவதாசி முறையை ஒழித்தார். பெண் கல்வியை சட்டமாக்கினார். பெண் சுதந்திரத்துக்குப் பாடுபட்டார். நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது இவருடைய வாழ்க்கையைத்தான்!'' என்று அரங்கம் அதிர பேசி முடித்தார் திரு எஸ் ராமகிருஷ்ணன். 

No comments:

Post a Comment