Tuesday, March 10, 2015

அமைதியா இருந்தா தான் எதுவுமே நல்லபடி நடக்கும்-நன்றி சங்கர் கணேஷ் அவர்கள்

தாத்தாவும் பேரனும் -- அமைதி எது?
''என்னடா கோபு இது. எதுக்கு இத்தனை பசங்க இங்கே. யார் இவங்க எல்லாம்?
''எங்க ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தாத்தா. உங்க கிட்டே ஒரு கதை தினமும் வந்து கேக்கப்போகிறாங்களாம் ''
''அமைதியா இருந்தா தான் எதுவுமே நல்லபடி நடக்கும். வேகம், ஆத்திரம்,கோபம், கடுப்பு இதெல்லாம் எதுக்கும் உதவாது. அமைதி தைரியத்தை கொடுக்கும். வேகம் கோபம் எல்லாம் பயத்திலே தான் கலந்தது. விளைவு என்ன ஆகுமோ என்கிற பயம் அதிலே ஜாஸ்தி. ''
ஒரு பையன், ''தாத்தா அந்த அமைதி பத்தியே ஒரு கதை சொல்லுங்க'' என்றபோது அனைவரும் கைதட்டி சிரித்தனர். அமைதியை பத்தி எப்படிடா கதை சொல்ல முடியும்?'' என்றனர்.
''ஏன் முடியாது என்கிறீர்கள். சொல்றேன் கேளுங்க.''
தாத்தாவுக்கு பிளாஸ்கில் இருந்து வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து கோபு நீட்டினான். தாத்தா அதை வாங்கி பருகினார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கதை பிறந்தது.
பழைய காலத்தில் நமது நாட்டில் எங்கோ ஒரு ராஜா ஒரு ஊரை ஆண்டு வந்தான். அந்த ராஜா விசித்ரமானவன். சிந்திப்பவன்.
ஒருநாள் உண்மையான அமைதி எது என்று யாராவது சித்திரம் வரைந்து தந்தால் நல்ல பரிசு உண்டு என்று அறிவித்தான். பல சித்திரங்கள் போட்டிக்கு வந்தன.
எத்தனையோ படங்களுக்கிடையில் ராஜா இரண்டு சித்திரங்களை தேர்ந்தெடுத்தான் ஒன்று நீண்ட, அமைதியான, அழகான ஏரியின் படம். அருகில் நீண்டு நெடிதுயர்ந்த மலை கூட்டங்கள்.மேலே நீல ஆகாயம். பஞ்சு போன்ற மென்மையான மேகங்கள். எங்கும் நிசப்தம். ஏன் என்றால் ஒரு ஜீவராசியும் அங்கே காணோம். மிகவும் பொருத்தமான அமைதியின் படம் இதுவே'' என அனைவரும் போற்றினர்.
இரண்டாவது படம். உயர்ந்த கரடு முரடான மலைகள். கீழே தலை சுற்றும் பயங்கர பள்ளம். மேலே ஆகாயத்தில் இருண்ட பயங்கர மேக கூட்டம் . கண்ணை பறிக்கும் மின்னல்கள். செவிடு பொடிபடும் இடி முழக்கம். கோபமாக ஆகாயத்திலிருந்து மேகங்கள் பிளந்து மழை சோ என்று கொட்டுகிறது. தூரத்தில் மரங்கள் காற்றில் பெருத்த ஓசையோடு தலைவிரித்து ஆடுகின்றன . நீர் பிரவாகமாக நீர்வீழ்ச்சியாக மலையிலிருந்து பெரும் பாறைகள் மீது படிந்து கீழே பாதாளத்தில் வீழ்கிறது.
நீர் வீழ்ச்சி சிதறி கீழே ஓடும் பெரிய பாறை ஒன்றின் பிளவில் ஒரு புதர் . அதற்குள் ஒரு பறவையின் கூடு.
அதில் குஞ்சுகளின் வாயில் தாய் பறவை பதட்டம் இல்லாமல் மெதுவாக அவசரமின்றி ஆகாரம் ஊட்டுகிறது.
''இது தான் சிறந்த படம்'' என்கிறான் ராஜா.
'' ராஜா நீங்களே சொல்லுங்கள் இது எப்படி அமைதியின் படமாகும்'' என்றான் மந்திரி?
''அமைதி என்பது சத்தமில்லாமல் அசைவில்லாமல் இருப்பது இல்லை. எல்லாவிதமான சங்கடங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் இடையில் காண்பது தான் உண்மையான அமைதி. ''
இது உண்மை தானே? நீங்களே சொல்லுங்கள் என்று சிரித்துக்கொண்டே தாத்தா கேட்க ''ஆமாம்'' என்று தலையாட்டினார்கள் மாணவர்கள்.

No comments:

Post a Comment