Saturday, March 14, 2015

ரயில் பயணங்களில் - ஒரு தொடர் வண்டி பயணிக்க துவங்குகிகறது - ரமணன் சேஷாத்ரி

ரயில் பயணங்களில்


பச்சைக் கொடி


ஒரு லட்சம் கோடி செலவு செய்து நாம் ராக்கெட் அனுப்பினாலும் அதற்கு முன்னாலே ஒரு ரூபாய் எலுமிச்சை வைத்து பூஜை செய்து அனுப்புவது நம்முடைய அடிப்படை நம்பிக்கை. ஆம் நானும் அத்தகைய இறை நம்பிக்கை கொண்டவன்தான் ஆகையினாலே எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு, இந்த தொடரினை, தொடர் வண்டியினை நல்லபடியாய் பல ஸ்டேஷன்களையும் ஜங்ஷன்களையும் கடந்து பத்திரமாக  ஊர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எழுத துவங்குகிறோம் மதுரையம்பதி வாழ் மக்களின் மனம் நிறை அன்னை மீனாக்ஷி அவர்களின் பரிபூரண ஆசி எமக்கும் கிடைக்கட்டும் என்றும்,என்றென்றும். 

அன்னை மீனாக்ஷி பச்சை கொடி காட்டுவதாகவும், எல்லாம் வல்ல கணபதி (God and Guard) எமக்கு guard பெட்டியிலே பொறுப்பெடுத்துகொள்வதாகவும், நம்முடைய இந்த வண்டியின் முன் ஆஞ்சநேயரின் கொடியை பறக்கவிட்டு பயணத்தை துவக்குவோம். 

நோக்கம் 


இந்த தொடரினை எழுதுவதன் நோக்கம், நாம் அன்றாடம் பார்க்கின்ற, அனுபவிக்கின்ற சந்தோஷம் மற்றும் தொல்லைகளையும் பகிர்வதுதான் முதல் நோக்கம்.
எம்முடைய ஆசான் திரு SNK எனக்கு இப்படி சொல்கிறார் "கண்ணா நீ இந்த வேலைக்கு சேந்திருக்குற இந்த நிமிஷம் உனக்குன்னு ஒரு பார்வை புதுசாய்  இருக்கும், அது நிச்சயமாய் குறை கண்டுபிடிப்பதாக இருக்கும்.  அதை எல்லாம் ஒரு லிஸ்ட் எடு, ஆனால் நீ வைக்க வேண்டிய தலைப்பு 'Scope for improvement' அதாவது வளர்வதற்கு வாய்ப்பு என்பதுதான். வெறும் குறையை மட்டும் சொல்லாதே, பக்கத்துலையே என்ன செஞ்சால் முன்னேறும், என்ன செஞ்சால் இது உயர்வானதாக இருக்கும் என்று எழுது"

இந்த வார்த்தைகள் தான் எனக்கு பால பாடம். 

தொடரின் உத்தி (Strategy of series)


இந்த தொடரில் நாம் பயன்படுத்தவிருக்கும் உத்தி என்ன என்பதை முதலில் பகிர்கிறோம்.  நம்மை சுற்றி நிறைய நடக்கும், ஆனால் நாம் அதை அடிக்கோடு இடுவதில்லை. யாராவது சொல்லும்போது "அட ஆமாயில்ல!" என்று வியக்கிறோம். அதே போலே நிறைய கடுப்பாகிறோம், அந்நியன் படத்து  அம்பி போலே கொஞ்சம் கோபம் வருகிறது... யாரிடம் சொல்வது என்று பக்கத்து பயணியிடம் கொஞ்சம் அங்கலாய்த்து விட்டு அதோடு விடுகிறோம். இதை இரண்டையும் சரிவிகிதமாக கலந்து உங்களிடமிருந்து படித்த பாடத்தையே உங்களிடம் ஒப்பித்து காண்பிக்கலாம் என்று ஒரு உத்தி. 

பயணம் என்பது ஒரு இனிமையானது, பல மனிதர்கள் பல மனங்கள், பல மனோ நிலைகள், பல சீதோஷ்ண நிலைகள் (Climate) என கலவையானது. உள்ளபடியே பயணம் என்று பொதுப்படையாக எழுதவே உத்தேசம். இன்றைய பயணங்கள்  இனிமையாக இருப்பதில்லை என்பதை பதிவு செய்யவே ஆசை. ஒரு பயணியாக படும் அவஸ்தைகளை பகிரவே ஆசை இருந்தது.  ஆனாலும் அதையும் பல கிளைகளாக பகிரலாம் என்று ரயில் பயனிங்களில் என்று ஒரு சிறு தொகுப்பாக பிரித்துள்ளோம். 

தலைப்பு கூட கொஞ்சம் பரிச்சியமானதுதான். திரைத்துறையின் உயர்திரு டி.ராஜேந்தர் அவர்களால் டைரக்ட் செய்யப்பெற்று 1981 ஆம் வருடம் திரையிடப்பட்ட படம் 'ரயில் பயணங்களில்'.  இந்த படத்தில் வந்த பாடல்கள் ஆறு.  அனைத்தும் அனைவராலும் முணுமுணுக்கப்பட்ட, அனைத்து வானொலிகளும், இசைநாடாக்களும்  நிதமும் ஒளிபரிப்பிய பாடல்கள்.  வருடக்கணக்கில் வசூலை அள்ளித்தந்த படம். 

அனுபவம் 


மறைந்த எழுத்தாளர் திருவாளர் சாவி அவர்கள் அமெரிக்கா செல்லாமலே, ஆனால் அமெரிக்காவை மையமாக வைத்து    'வாஷிங்டனில் திருமணம்' தொடர்கதை எழுதினார் . அதை வாசித்தவர்களுக்கு அமெரிக்காவிலேயே வாழ்ந்தவர்கள்தான் இப்படி எழுதமுடியும் என்று ஒரு உணர்வை அவர் தம்முடைய எழுத்துக்கள் மூலம் கொண்டு வந்தார்.  வாசகர்களை தம்முடைய எழுத்துக்கள் மூலம் அமெரிக்காவிலே கற்பனையாக வாழ வைத்தார். 

ஆனால் எம்முடைய அனுபவம் வேறு. கடந்த பத்து வருடங்களாக வாரம் இருமுறை, வாரம் ஒருமுறை என்று ரயிலில் குறைந்த பட்சம் இரு இரவுகளை கழிக்கிறோம். ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு வெள்ளியும் எமக்கு ரயில் தான் வீடு. அதே சமயம் எல்லா வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்தாயிற்று. 

முக்கியமான ஒன்று  நான் இந்த பயனத்தில் ஒரு அப்ரண்டீஸ் தான், எமக்கும் மேலே இதிலேயே பி.எச்.டி செய்தவர்கள் எல்லாம் உண்டு. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உயர்திரு சுருளி என்பவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் மிட்டாய் செய்பவர். அவருடைய விநியோக கிளைகள்  ஹைதிராபாத், சென்னை, பெங்களுரு ஆகிய மூன்று இடத்திலும் இருக்கிறது.  இத்தனை இடங்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் அவர் சென்று வந்தே ஆக வேண்டிய கட்டாயம். அவர் பயணம் செய்வது ரயிலில் மட்டும்தான். கிட்டத்தட்ட முப்பைதந்து ஆண்டுகளாக அவர் பயணம் செய்கிறார். இரவில் ரயிலில் ஏறுவார். தூங்குவார், காலையில் விரைவிலேயே எழுந்து ரயிலிலேயே குளிப்பார், உடை மாற்றுவார் (எப்போதும் சபாரி டிரஸ்தான்), தன்னுடைய ஸ்டேஷன் வந்ததும் நேரே போய் வியாபாரம் கணக்கு பார்க்க சென்று விடுவார்.. மீண்டும் இரவு அதே பயணம் அதே காலை மீண்டும் மீண்டும்.  நிச்சயமாக முன்பதிவு செய்துதான் செல்வார். மிக முக்கியமான ஒன்று அவர் பட்டதாரிகூட இல்லை. ஒரு படிக்காத மேதை.  மிக எளிமையானவர். மிக மிக அமைதியானவர். நல்ல அறிவாளி. நல்ல வியாபாரி. 

எங்கள் குழு 


இந்த தொடரினை எழுதுவதற்கு ஒரு முக்கிய ஊக்கம், எம்முடைய maduraitrainfriends எனும் ரயில் நண்பர்கள்தான். அதிலும் குறிப்பாக திருவளர்கள் ராஜமோகன், லெட்சுமணன், தாமஸ் போன்ற ஜாம்பவான்கள். எங்களுடைய குழுவின் துவக்க உறுப்பினர்கள்  திருவாளர்கள் சந்திரா, சத்தியா, ஷண்முக சுந்தரம், வெங்கட், செந்தில், ஃப்ரெடி போன்றவர்களையும் நினைவு கொள்கிறோம்.  கூகுள் குரூப், மற்றும் வாட்ஸ் அப் எங்களுக்கிடையே தகவல் தொடர்பாக பயன்படுத்தபடுகிறது.  2008 ஆம் ஆண்டு இந்த (முறைசாரா) குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பல நல்ல விஷயங்களையும் பல சொந்த விஷயங்களையும் பகிர்துகொள்வோம். மிக முக்கியமான அம்சம் இந்த குழு மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களிலிருந்து வாரா வாரம் பெங்களூரு செல்பவர்கள். ஒரே ரயில் தூத்துக்குடி - மைசூர் எங்களை இணைக்கிறது. குழுவின் உறுப்பினர்களாக  IT ஊழியர்கள் மட்டுமல்ல இதர துறைகள் சேர்ந்தவர்கள் கூட உண்டு. நான் 2012 ஆம் வருடம் முதல் இதில் பயணம் செய்வது இல்லை, எம்முடைய பாதை வேறாக சென்னை நோக்கி மாறிவிட்டது என்றாலும் இந்த குழு என்னை இன்றும் ஒரு மூத்த அங்கத்தினாராக அங்கீகாரம் செய்து கௌரவிக்கிறது.


ஊக்கம் 

இந்த தொடரினை எழுதுவதற்கு 'பரம(ன்) ரகசியம்' எழுதிய  உயர்திரு என்.கணேசன் அவர்களையும் (enganeshan.blogspot.com), உணவு யுத்தம் எழுதிய உயர்திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களையும் மானசிக குருவாக ஏற்று எழுத விழைகிறோம். இதில் காணும் கருத்துபிழை, எழுத்து பிழை போன்ற குறைகளை சுட்டிக்காட்டி எம்மை வழி நடத்தும்படி தங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம். 

நன்றி 

கூகுள் இன்புட் டூல், வலைப்பூ (blogspot) மற்றும் கூகுள் க்ரூப்ஸ் ஆகிய வசதிகளுக்கும், விக்கிபீடியா சேவைக்கும், மேலும் வலைதொடர்பு (internet) வசதிகளுக்கும் நன்றி பகர்கிறோம். 

(தொடர் வண்டி நகர்கிறது)

No comments:

Post a Comment