சுடச் சுடசாப்பாடு இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு மும்பைஸ்டைல்
நீங்கள்
வேலைக்குப் போவதற்காகத் தினமும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டை விட்டு
கிளம்பி விடுகிறீர்கள். மத்தியானத்தில், வீட்டுச்
சாப்பாடு கிடைத்தால் எப்படியிருக்கும்! அதுவும் உங்களுக்குப் பிடித்த மாதிரி
இருந்தால் ஒரு பிடி பிடித்துவிடுவீர்கள்தானே! இந்தியாவிலுள்ள மும்பையில்
பணிபுரிகிற ஆயிரக்கணக்கானோர் இந்த விஷயத்தில் கொடுத்துவைத்தவர்கள். ஆம், டப்பாவாலாக்கள்இருக்கும்வரையில்
அவர்களுக்கு என்ன கவலை?* அவர்கள்தான் வீட்டுச் சாப்பாட்டை
அலுவலகத்திற்கே கொண்டுவந்து கொடுக்கிறார்களே!
தொழிலுக்கு வழி பிறந்தது
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இறுதியில் மும்பை (அப்போது பாம்பே என அழைக்கப்பட்டது) வளர்ந்துவரும் வர்த்தக
மையமாகத் திகழ்ந்தது. அந்தச் சமயத்தில், ஆங்கிலேய
வியாபாரிகளும் சரி இந்திய வியாபாரிகளும் சரி, தங்களுடைய
அலுவலகங்களுக்கு வெகு தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. வாகனங்கள் மந்தகதியில் ஓடின,
ஓட்டல்களும் குறைவாகவே இருந்தன. அலுவலகத்திற்குச் செல்வோர் வீட்டுச்
சாப்பாட்டையே விரும்பியதால், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு
மதிய உணவைக் கொண்டு தர வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள். தொழிலில் தொலைநோக்கு
பார்வையுடைய ஒருவர் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்; கிராமப் புறங்களில் வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி,
வீடுகளிலிருந்து அலுவலகங்களுக்குச் சாப்பாட்டை எடுத்துச் செல்லும்
தொழிலைத் தொடங்கினார். சிறியதாய்த் துவங்கப்பட்ட அந்தத் தொழில் சக்கைப்போடு போட
ஆரம்பித்தது.
வீட்டுச் சாப்பாட்டிற்கான மோகம்
இன்றும் குறையவே இல்லை. இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள் இருப்பது
உண்மைதான்; ஆனாலும், ஓட்டல்
சாப்பாட்டைவிட வீட்டுச் சாப்பாடுதான் அதிக செலவில்லாதது, எல்லாரும்
விரும்புவது. அதுமட்டுமல்ல, நிறையப் பேருக்கு உடல்நலப்
பிரச்சினைகள் இருப்பதால் அவர்கள் பத்திய உணவையே சாப்பிட வேண்டியிருக்கிறது. மற்ற
சிலரோ, மதக் கட்டுப்பாடுகள் காரணமாக எல்லா வகையான உணவுகளையும்
சேர்த்துக்கொள்வதில்லை. சிலருக்கு வெங்காயம் ஆகாது, இன்னும்
சிலருக்குப் பூண்டு பிடிக்காது. இதையெல்லாம் ஓட்டல் சாப்பாட்டில்
சேர்த்திருப்பார்கள். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு உணவைக் கொண்டு செல்வது இந்தப்
பிரச்சினைகளுக்கெல்லாம் பரிகாரமாக இருக்கும்.
மிகவும் நம்பகமான சேவை
வருடங்கள்
பல உருண்டோடிய போதிலும், உணவை எடுத்துச் செல்லும் இந்த எளிய முறை இன்னும்
மாறவே இல்லை; ஆனால், பெரியளவில்
செய்யப்பட்டு வருகிறதென்று சொல்லலாம். இன்று, 5,000-க்கும்
அதிகமான ஆண்களும் சில பெண்களும் ஒரு நாளில் 2,00,000 மதிய
உணவை எடுத்துச் செல்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய ஏரியாவில்
உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து, இரண்டு கோடிக்கும்
மேலான மக்கள் வாழ்கிற இந்த நகர்புறத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற
அலுவலகங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார்கள். சுமார் 60 கிலோமீட்டர்
(40 மைல்) சுற்றளவுக்குள் இந்த டப்பாவாலாக்கள்வலம்
வருகிறார்கள்; சிலர், 30 அல்லது 40 டிஃபன் கேரியர்களைத் தள்ளுவண்டிகளில் எடுத்துச் செல்கிறார்கள், இன்னும் சிலர், சைக்கிளிலோ ரயில்களிலோ எடுத்துச்
செல்கிறார்கள். எப்படியானாலும், அவர்கள் உரிய உணவை, உரிய நபரிடம், உரிய சமயத்தில்
சேர்த்துவிடுகிறார்கள். சொல்லப்போனால், 60 லட்சம் பேருக்கு
சாப்பாடு எடுத்து செல்கிறார்கள் என்றால் அதில் ஒரு தவறு மட்டுமே ஏற்படுகிறதாம்!
அவர்களால் எப்படி அந்தளவுக்குத் துல்லியமாகச் செய்துவர முடிகிறது?
1956-ல் இந்த டப்பாவாலாக்கள், ஒரு செயற்குழுவையும் சில அலுவலர்களையும்
கொண்ட தர்ம ஸ்தாபனமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். பணியாளர்கள் தனித்தனிக்
குழுக்களாகச் செயல்படுகிறார்கள்; ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு
சூப்பர்வைஸர் இருப்பார். என்றாலும், இந்த அமைப்பிலுள்ள
எல்லாருமே பார்ட்னர்கள், பங்குதாரர்கள்; அப்படிச் செயல்படுவதுதான் தங்கள் வெற்றியின் ரகசியம் என அவர்கள்
பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இந்தச் சேவை ஆரம்பமாகி 100 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது; ஆனால், இதுவரையில் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் இறங்கியதே இல்லை.
டப்பாவாலாக்களிடம் ஓர் அடையாள அட்டை இருக்கும்; அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளை சட்டை, தொள தொள
பேன்ட், வெள்ளை தொப்பி இவற்றை வைத்து அவர்களை எளிதில்
அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் தொப்பியை அணியாதிருந்தால்... தகுந்த காரணமின்றி
வேலைக்கு வர தாமதித்தால் அல்லது வராமலிருந்தால்... பணியில் இருக்கும்போது மது
அருந்தியிருந்தால்... அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.
தினசரி வேலை
காலை
8:30 மணிக்குள் வாடிக்கையாளரின் வீட்டிலுள்ள ஒருவர்,
ஒருவேளை அவருடைய மனைவி, உணவைச் சமைத்து அதைடப்பாவில், அதாவது பல அடுக்குகள் உள்ள
டிஃபன் கேரியரில், போட்டு வைப்பார். டப்பாவாலா தன்னுடைய பகுதியிலுள்ள வாடிக்கையாளர்களின்
வீடுகளிலிருந்து டிஃபன் கேரியர்களை எடுத்து வந்து சைக்கிளில் அல்லது
தள்ளுவண்டியில் வைத்து ரயில் நிலையத்திற்கு விரைவார்; அவருடைய குழுவிலுள்ள மற்றவர்களும் அங்கு வருவார்கள். அவர்கள் அந்த
கேரியர்களையெல்லாம் அவை போய்ச் சேர வேண்டிய இடம் வாரியாகப் பிரிப்பார்கள், போஸ்ட்மேன் தபால்களை இடம் வாரியாகப் பிரிப்பது போல.
ஒவ்வொரு கேரியரிலும்
எழுத்துகளையும் எண்களையும் கொண்ட வெவ்வேறு நிறக் குறியீடு இருக்கும்; வாடிக்கையாளரின் வீடு இருக்கிற இடம், அடுத்துள்ள
ரயில் நிலையம், போய்ச் சேர வேண்டிய ரயில் நிலையம், அலுவலக கட்டிடத்தின் பெயர், தளத்தின் எண் என இவை
எல்லாவற்றையும் அந்தக் குறியீட்டிலிருந்து கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொரு
பகுதிக்கும் போய்ச் சேர வேண்டிய டிஃபன் கேரியர்களை ஒன்றாகச் சேர்ந்து நீண்ட மரப்
பலகைகளில் அடுக்குவார்கள்; ஒவ்வொன்றிலும் 48 கேரியர்கள்வரை வைக்கலாம். ரயில் வந்ததும் எஞ்சினுக்கு அடுத்தபடியாக உள்ள
ஒரு தனி கம்பார்ட்மென்டில் அவற்றை ஏற்றுவார்கள். முக்கிய ரயில் நிலையத்தை
அடைந்ததும் டிஃபன் கேரியர்களை மீண்டும் பிரித்து அவை போய்ச் சேர வேண்டிய
இடத்திற்குச் செல்லும் ரயிலில் ஏற்றுவார்கள். அந்த ரயில் நிலையத்தை அடைந்ததும்
அவற்றை மீண்டும் பிரித்து, சைக்கிளிலோ தள்ளுவண்டியிலோ வைத்து
வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
இந்த
முறையில் எடுத்துச் செல்வது சிறந்தது மட்டுமல்ல, செலவில்லாததும்கூட.
அதோடு, அந்த டப்பாவாலா போக்குவரத்து நெரிசலில்
மாட்டிக்கொள்ள மாட்டார்; ஏனென்றால், அவர்
சந்துபொந்துகள் வழியாகவோ வாகனங்களுக்கு இடையே உள்ள குறுகிய இடைவெளிகளில் புகுந்தோ
சென்று விடுவார். அதனால், 12:30 மணிக்கெல்லாம்
அலுவலகத்திற்கு உணவு போய்ச் சேர்ந்துவிடும். பிறகு, கடின
உழைப்பாளியான அந்த டப்பாவாலா தன்னுடைய மதிய சாப்பாட்டை
முடித்துவிட்டு மதியம் 1:15-லிருந்து 2:00 மணிக்குள்
காலி டிஃபன் கேரியர்களை எல்லாம் திரட்ட ஆரம்பிப்பார்; அதன்
பிறகு, அவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளில் கொண்டு
சேர்ப்பார்; வீட்டில் உள்ளவர் அதைக் கழுவி அடுத்த நாளுக்குத்
தயாராக வைப்பார். காலையில் ஆரம்பித்து மாலை வரையாக இந்த மொத்த சேவையுமே இடைமாற்று
ஓட்டப்பந்தயம் போல (relay race) படு விறுவிறுப்பாக, சிறப்பாக நடக்கும்.
பாராட்டைப் பெற்றுத்தரும் எளிய சேவை
டப்பாவாலாக்கள் எந்தளவு பேரும் புகழும்
பெற்றிருக்கிறார்கள் என்பது மற்றவர்களுடைய கண்ணில் படாமல் போகவில்லை. அவர்கள் பின்பற்றுகிற
முறையைப் பிற நிறுவனங்களும் அலசி ஆராய்ந்து பார்த்திருக்கின்றன; அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைத் தங்களுடைய தொழிலிலும் பின்பற்றுவதற்காக
அப்படிச் செய்திருக்கின்றன. டப்பாவாலாக்களைப் பற்றிய குறும்படங்களும்
எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் செய்கிற படு துல்லியமான சேவையைப் பாராட்டி ஃபோர்ப்ஸ் குளோபல் மேகஸின், அவர்களுக்குப் பாராட்டுச்
சான்றிதழை வழங்கியுள்ளது. த கின்னஸ் புக் ஆஃப் உவர்ல்ட்ரெக்கார்ட்ஸில் அவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்; அதோடு, அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பிஸினஸ் ஸ்கூல்
ஆய்வுகளிலும் அவர்களைப் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. டப்பாவாலாக்களைமுக்கியப்
பிரமுகர்களும் சந்தித்திருக்கிறார்கள்; அப்படிச்
சந்தித்த இங்கிலாந்தின் இளவரசர் ஒருவர் அவர்களுடைய சேவையைப் பார்த்து அசந்தே
போய்விட்டார்; அதனால் அவர்களில் சிலரைத் தன்னுடைய
கல்யாணத்தில் கலந்துகொள்ள இங்கிலாந்துக்கு அழைத்தார்.
இன்று டப்பாவாலாக்கள் ஆர்டர்கள்
பிடிக்க, கணக்கு வழக்குகள் பார்க்க
கம்ப்யூட்டர்களையும் செல் ஃபோன்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றுகிற முறை மட்டும் மாறவே இல்லை. மதிய சாப்பாட்டு வேளை
நெருங்கினால் போதும், வயிற்றைக் கிள்ளும் பசியில் இருக்கிற
மும்பை அலுவலகப் பணியாளர்கள், சுடச் சுட வீட்டுச் சாப்பாடு
சரியான சமயத்தில் வந்து சேர்ந்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்!
No comments:
Post a Comment