Sunday, March 22, 2015

ரயில் பயணங்களில்-01-தொடர் வண்டி பயணிக்கிறது

முதல் நிறுத்தம் 

முன்னுரையில் சொன்னது போலே (அ) அட அப்படியா [exclaim] (ஆ) அட ஆமாயில்ல [recalled exclaim] (இ) அட போங்கய்யா [getting tired] (ஈ) அடடே சொல்லுப்பா [educative] என்கிற ரகமாக எழுத விழைகிறோம்.

பெருமை மிகு இந்தியன் ரயில்வே 

நமது பாரத தேசத்தின் மிக பெரிய பெருமை இந்தியன் ரயில்வே. சமீபத்திய கணக்கிட்டீன் படி (2014-15) கீழ்காணும் தகவல்களை பாப்போம். (நன்றி விக்கிபீடியா) 


மொத்த இருப்பு பாதைகளின் நீளம்
115,000 km
இருப்பு பாதைகள் இணைக்கும் தூரம்
65,436 km
ஒரு ஆண்டிற்கு சராசரியாக சுமக்கும் மனிதர்களின் எண்ணிக்கை (இதில பாருங்க இந்திய மக்கள் தொகையே 120 கோடிதான்).  சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் எட்டு முறை பயணம் செய்ததாக கொள்ளவேண்டும்.
840 கோடி
பயணிகள் மூலம் வருவாய் (ஆண்டிற்கு)
ரூ 4000 கோடி
என்ஜின்களின் எண்ணிக்கை
9,013
பயணிகளுக்கான பெட்டிகள்
62,924
பயனிக்களுக்கான ரயில்களின் எண்ணிக்கை
12,617

உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களை பட்டியிலிட்டால் நமது ரயில்வே துறை ஏழாவது இடத்தில் இருக்கிறது.  சுமார் பதினான்கு கோடி ஊழியர்களை கொண்டது. மிக முக்கியமான விஷயம் தமது ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னமும் ஒய்வு ஊதியம் தருகிறது. 


“One more feather in my cap” அதாவது என்னுடைய தொப்பியில் மேலும் ஒரு இறகு, என்று தமக்கு சேரும் பெருமையை ஒருவர் கொண்டாடுவார்.  அப்படி பார்க்கையில் நமது ரயில்வே துறைக்கு தொப்பியே சிறகில் தான் செய்ய வேண்டும்.  அவ்வளவு பெருமைகள் கொண்ட மிகப்பெரிய துறை.
சரி மேலே சொன்ன தொகைகள் எல்லாம் கோடியில் இருக்கின்றதே என்பது பற்றி பார்ப்போம். பல ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசின் ஒரு ஊழல் பற்றி மிக பிரபலமாக பேசப்பட்டது. அப்போது அந்த ஊழலின் மதிப்பு நூறு கொடி. அதை பற்றி நமது மக்கள் ஒன்றும் சீரியாசாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஒரு ஆதங்கம் கம்யுனிஸ்ட் தோழர்களுக்கு இருந்தது. மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கொஞ்சம் தோண்டிப் பார்த்தல் நூறு என்னும் எண் மிக சிறியதாக உணரப்பட்டது அதற்கு பின் இருக்கும் கோடி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என உணர்ந்தார்கள். அப்படியானால் கோடி என்பது வைத்து ஐந்து பெரிய ஆஸ்பத்திரிகள் கட்டலாம். பதினோரு பள்ளிக்க்கூடங்கள் கட்டலாம். இருபதுக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் கட்டலாம் (அட இது அந்தகாலத்து கணக்கு) என்று எடுத்து சொன்னார்கள். சரி இதில் அரசியலை கொஞ்சம் தள்ளி வைப்போம். கோடி என்பதையும் நாலாயிரம் கோடி என்பதையும் மனத்தில் கொள்வோம்.
சேவை நோக்கம்.
நமது பார்லிமெண்டில் நிதி தவிர எந்த துறைக்கும் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்வது இல்லை. ஆனால் விதிவிலக்காக ரயில்வே துறை பட்ஜெட் தாக்கல் செய்யும். அதிலும் பொருளாதார பட்ஜெட் வாசிப்பதற்கு (ஆம் வாசிப்பதற்கு என்றுதான் சொல்கிறோம்) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். அப்படியானால் நாட்டின் மிக மிக முக்கியமான அங்கம் இந்த ரயில்வே துறை என்பது புரியும். அதிலும் பயணிகள் தொடர்பான போக்குவரத்தும் அவர்களுக்கு என்று மெனக்கேடுவதுமே மிக அதிகம். மேலே சொன்ன பயணிகள் வருவாய் என்பது வெறும் 25% வருவாய் தான். ஆனால் அதற்கு எண்பது சதவீத உழைப்பை ரயில்வே துறை செலவிடுகிறது. சொல்லப்போனால் நஷ்டத்திலேயே பயணிகள் சேவை நடக்கிறது என்றாலும் சேவை நோக்கிலேயே ரயில்வே துறை பயணிகள் சேவையை தொடர்கிறது. அதாவது எப்படி ராணுவம் மருத்துவம், கல்வி என்று சேவை செய்கிறதோ அப்படியே பயணிகள் போக்குவரத்தும் சேவை என்கிற ஒன்றுதான். இதில் வணிக நோக்கம் எதுவுமில்லை (No commercials).  கொஞ்சம் மேல் நோக்கி போனால் பயணிகள் சேவை சரக்கு சேவை என்று இரண்டாக பிரித்தால் பயணிகள் சேவை வருவாயின்றி மிக செலவு வைக்கும் ஒன்று என நன்றாக உணர முடியும்.
ஆகையினாலே எல்லோரும் ரயில்வே என்ன செய்கிறதோ அதை பொறுத்துக் கொள்ளுங்கள் என சொல்வதாக கொள்ளாதீர்கள். அவற்றை நாம் குறைகள் என்று சொல்லாமல் Scope for Improvement என சர்க்கரை தடவிய கசப்பு மாத்திரைகளாக தருவோம்.

ரயிலில் ஏறுவதற்கு/(ள்) நாம் படும் பாடு


ஒரு பயணி ரயிலில் ஏறும் முன்னர் நாம் சரியான ரயிலில் ஏறுகிறோமா என்று ஒரு சந்தேகம் இருக்கும். இந்தப் படங்களை பாருங்கள்.



இவை சமீபத்தில் நாம் எடுத்த படங்கள்.  முதல் படம் நெல்லை எக்ஸ்பிரஸின் போர்டு. இரண்டாவது படம் சேரன் எக்ஸ்பிரஸின் படம்.  ரயில் பிளாட்பாரத்தில் நிற்கிறது. பயணி போர்டை பார்க்கிறார். இது செங்கோட்டை செல்லும் வண்டிய இல்லை சென்னை செல்லும் வண்டியா?  இது கோயம்புத்தூர் செல்லும் வண்டியா இல்லை அஹமதாபத் செல்லும் வண்டியா?  குழம்புகிறார். என்னதான் மைக்கில் சொன்னாலும் உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.
சரி, ரயில்வே ஏனிப்படி குழப்புகிறது என்று பார்த்தால், இந்த தொடர் வண்டி முதலில் கோவையிலிருந்து சென்னைக்கு  வந்து, பின்னர் இதே தொடர் சென்னயிலிருந்து அகமதாபாத்திற்கு செல்கிறது என்பதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.  மிக நல்லது.  அப்படியானால் வண்டி கிளம்பவிருக்கும்போது சரியான போர்டை மட்டும் மாட்டக்கூடாதா. நீங்கள் (ரயில்வே) உங்கள் வேலையை மிச்சபடுத்த ஏன் பயணிகளை குழப்புகிறீர்கள்.  அதுவும் கூட இப்போதெல்லாம் டிஜிட்டல் டெக்னாலஜி வந்து விட்டது அதிலும் LCD என்று சொல்லகூடிய வகையில் செய்ய முடியும்.  எளிதில் படிக்க கூடிய கருப்பு வெள்ளை திரையுடனும்(பகலில் நன்கு தெரிவதற்காக)  ஒளிரும் திரையுடனும் (இரவில் தெளிவாக தெரிவதற்காக) எல்லா பெட்டிகளின் பக்கவாட்டிலும் இதனை அமைக்கலாமே.  வேண்டுமானால் இதனையும் வணிக நிறுவனங்களிடம் ஸ்பான்சர் செய்ய கேட்கலாம்.

வண்டி அடுத்த நிலையதிற்கு நகர்கிறது (தொடரும்)
பயணம் - சொல்லுக்கான ஒரு பார்வை 

நமது வண்டி முதல் நிறுத்தத்தினை வந்தடைந்துள்ளது.  பயணம் என்பது துவக்கத்தில் ஒரு ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருப்பது இயல்பு.  இதில் ஒரு முக்கிய வார்த்தையை பிரித்து பதம் கொள்வோம்.  அயனம் என்பதற்கு பாதை என்று பொருள்.  ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி ஆகிய ஆறு மாதங்களும் தட்சிணாயணகாலமாகும். இது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இது தேவர்களுக்கு ஓர் இரவுப் பொழுது என்று கருதப்படுகிறது. 
தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம்இக்காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவியில்லை என்பது ஒரு நம்பிக்கை

தக்ஷின+அயனம் = தட்சிணாயணம் 
உத்தர + அயனம் = உத்தராயணம்

ஆக பயணம் என்கிற  ஒரு சொல் ப்+அயனம் என்று பிரித்து பொருள் கொள்வதாக அமைகிறது. 'ப்' என்கிற சொல் வடமொழியிலே 'ப்ரதம' அதாவது முக்கிய என்ற சொல்லின் முதல் எழுத்து. முக்கிய பயணம் என்று நாம் கொள்ளலாம் என்பது எமது கருத்து. 

நாமும் தெற்கும் வடக்குமாக நிறைய பயணம் கொள்வதால் இதனை சற்றே அனுபவித்து பதம் பிரித்தோம். 

Saturday, March 14, 2015

ரயில் பயணங்களில் - ஒரு தொடர் வண்டி பயணிக்க துவங்குகிகறது - ரமணன் சேஷாத்ரி

ரயில் பயணங்களில்


பச்சைக் கொடி


ஒரு லட்சம் கோடி செலவு செய்து நாம் ராக்கெட் அனுப்பினாலும் அதற்கு முன்னாலே ஒரு ரூபாய் எலுமிச்சை வைத்து பூஜை செய்து அனுப்புவது நம்முடைய அடிப்படை நம்பிக்கை. ஆம் நானும் அத்தகைய இறை நம்பிக்கை கொண்டவன்தான் ஆகையினாலே எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டு, இந்த தொடரினை, தொடர் வண்டியினை நல்லபடியாய் பல ஸ்டேஷன்களையும் ஜங்ஷன்களையும் கடந்து பத்திரமாக  ஊர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எழுத துவங்குகிறோம் மதுரையம்பதி வாழ் மக்களின் மனம் நிறை அன்னை மீனாக்ஷி அவர்களின் பரிபூரண ஆசி எமக்கும் கிடைக்கட்டும் என்றும்,என்றென்றும். 

அன்னை மீனாக்ஷி பச்சை கொடி காட்டுவதாகவும், எல்லாம் வல்ல கணபதி (God and Guard) எமக்கு guard பெட்டியிலே பொறுப்பெடுத்துகொள்வதாகவும், நம்முடைய இந்த வண்டியின் முன் ஆஞ்சநேயரின் கொடியை பறக்கவிட்டு பயணத்தை துவக்குவோம். 

நோக்கம் 


இந்த தொடரினை எழுதுவதன் நோக்கம், நாம் அன்றாடம் பார்க்கின்ற, அனுபவிக்கின்ற சந்தோஷம் மற்றும் தொல்லைகளையும் பகிர்வதுதான் முதல் நோக்கம்.
எம்முடைய ஆசான் திரு SNK எனக்கு இப்படி சொல்கிறார் "கண்ணா நீ இந்த வேலைக்கு சேந்திருக்குற இந்த நிமிஷம் உனக்குன்னு ஒரு பார்வை புதுசாய்  இருக்கும், அது நிச்சயமாய் குறை கண்டுபிடிப்பதாக இருக்கும்.  அதை எல்லாம் ஒரு லிஸ்ட் எடு, ஆனால் நீ வைக்க வேண்டிய தலைப்பு 'Scope for improvement' அதாவது வளர்வதற்கு வாய்ப்பு என்பதுதான். வெறும் குறையை மட்டும் சொல்லாதே, பக்கத்துலையே என்ன செஞ்சால் முன்னேறும், என்ன செஞ்சால் இது உயர்வானதாக இருக்கும் என்று எழுது"

இந்த வார்த்தைகள் தான் எனக்கு பால பாடம். 

தொடரின் உத்தி (Strategy of series)


இந்த தொடரில் நாம் பயன்படுத்தவிருக்கும் உத்தி என்ன என்பதை முதலில் பகிர்கிறோம்.  நம்மை சுற்றி நிறைய நடக்கும், ஆனால் நாம் அதை அடிக்கோடு இடுவதில்லை. யாராவது சொல்லும்போது "அட ஆமாயில்ல!" என்று வியக்கிறோம். அதே போலே நிறைய கடுப்பாகிறோம், அந்நியன் படத்து  அம்பி போலே கொஞ்சம் கோபம் வருகிறது... யாரிடம் சொல்வது என்று பக்கத்து பயணியிடம் கொஞ்சம் அங்கலாய்த்து விட்டு அதோடு விடுகிறோம். இதை இரண்டையும் சரிவிகிதமாக கலந்து உங்களிடமிருந்து படித்த பாடத்தையே உங்களிடம் ஒப்பித்து காண்பிக்கலாம் என்று ஒரு உத்தி. 

பயணம் என்பது ஒரு இனிமையானது, பல மனிதர்கள் பல மனங்கள், பல மனோ நிலைகள், பல சீதோஷ்ண நிலைகள் (Climate) என கலவையானது. உள்ளபடியே பயணம் என்று பொதுப்படையாக எழுதவே உத்தேசம். இன்றைய பயணங்கள்  இனிமையாக இருப்பதில்லை என்பதை பதிவு செய்யவே ஆசை. ஒரு பயணியாக படும் அவஸ்தைகளை பகிரவே ஆசை இருந்தது.  ஆனாலும் அதையும் பல கிளைகளாக பகிரலாம் என்று ரயில் பயனிங்களில் என்று ஒரு சிறு தொகுப்பாக பிரித்துள்ளோம். 

தலைப்பு கூட கொஞ்சம் பரிச்சியமானதுதான். திரைத்துறையின் உயர்திரு டி.ராஜேந்தர் அவர்களால் டைரக்ட் செய்யப்பெற்று 1981 ஆம் வருடம் திரையிடப்பட்ட படம் 'ரயில் பயணங்களில்'.  இந்த படத்தில் வந்த பாடல்கள் ஆறு.  அனைத்தும் அனைவராலும் முணுமுணுக்கப்பட்ட, அனைத்து வானொலிகளும், இசைநாடாக்களும்  நிதமும் ஒளிபரிப்பிய பாடல்கள்.  வருடக்கணக்கில் வசூலை அள்ளித்தந்த படம். 

அனுபவம் 


மறைந்த எழுத்தாளர் திருவாளர் சாவி அவர்கள் அமெரிக்கா செல்லாமலே, ஆனால் அமெரிக்காவை மையமாக வைத்து    'வாஷிங்டனில் திருமணம்' தொடர்கதை எழுதினார் . அதை வாசித்தவர்களுக்கு அமெரிக்காவிலேயே வாழ்ந்தவர்கள்தான் இப்படி எழுதமுடியும் என்று ஒரு உணர்வை அவர் தம்முடைய எழுத்துக்கள் மூலம் கொண்டு வந்தார்.  வாசகர்களை தம்முடைய எழுத்துக்கள் மூலம் அமெரிக்காவிலே கற்பனையாக வாழ வைத்தார். 

ஆனால் எம்முடைய அனுபவம் வேறு. கடந்த பத்து வருடங்களாக வாரம் இருமுறை, வாரம் ஒருமுறை என்று ரயிலில் குறைந்த பட்சம் இரு இரவுகளை கழிக்கிறோம். ஒவ்வொரு ஞாயிறும் ஒவ்வொரு வெள்ளியும் எமக்கு ரயில் தான் வீடு. அதே சமயம் எல்லா வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்தாயிற்று. 

முக்கியமான ஒன்று  நான் இந்த பயனத்தில் ஒரு அப்ரண்டீஸ் தான், எமக்கும் மேலே இதிலேயே பி.எச்.டி செய்தவர்கள் எல்லாம் உண்டு. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உயர்திரு சுருளி என்பவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் மிட்டாய் செய்பவர். அவருடைய விநியோக கிளைகள்  ஹைதிராபாத், சென்னை, பெங்களுரு ஆகிய மூன்று இடத்திலும் இருக்கிறது.  இத்தனை இடங்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் அவர் சென்று வந்தே ஆக வேண்டிய கட்டாயம். அவர் பயணம் செய்வது ரயிலில் மட்டும்தான். கிட்டத்தட்ட முப்பைதந்து ஆண்டுகளாக அவர் பயணம் செய்கிறார். இரவில் ரயிலில் ஏறுவார். தூங்குவார், காலையில் விரைவிலேயே எழுந்து ரயிலிலேயே குளிப்பார், உடை மாற்றுவார் (எப்போதும் சபாரி டிரஸ்தான்), தன்னுடைய ஸ்டேஷன் வந்ததும் நேரே போய் வியாபாரம் கணக்கு பார்க்க சென்று விடுவார்.. மீண்டும் இரவு அதே பயணம் அதே காலை மீண்டும் மீண்டும்.  நிச்சயமாக முன்பதிவு செய்துதான் செல்வார். மிக முக்கியமான ஒன்று அவர் பட்டதாரிகூட இல்லை. ஒரு படிக்காத மேதை.  மிக எளிமையானவர். மிக மிக அமைதியானவர். நல்ல அறிவாளி. நல்ல வியாபாரி. 

எங்கள் குழு 


இந்த தொடரினை எழுதுவதற்கு ஒரு முக்கிய ஊக்கம், எம்முடைய maduraitrainfriends எனும் ரயில் நண்பர்கள்தான். அதிலும் குறிப்பாக திருவளர்கள் ராஜமோகன், லெட்சுமணன், தாமஸ் போன்ற ஜாம்பவான்கள். எங்களுடைய குழுவின் துவக்க உறுப்பினர்கள்  திருவாளர்கள் சந்திரா, சத்தியா, ஷண்முக சுந்தரம், வெங்கட், செந்தில், ஃப்ரெடி போன்றவர்களையும் நினைவு கொள்கிறோம்.  கூகுள் குரூப், மற்றும் வாட்ஸ் அப் எங்களுக்கிடையே தகவல் தொடர்பாக பயன்படுத்தபடுகிறது.  2008 ஆம் ஆண்டு இந்த (முறைசாரா) குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பல நல்ல விஷயங்களையும் பல சொந்த விஷயங்களையும் பகிர்துகொள்வோம். மிக முக்கியமான அம்சம் இந்த குழு மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களிலிருந்து வாரா வாரம் பெங்களூரு செல்பவர்கள். ஒரே ரயில் தூத்துக்குடி - மைசூர் எங்களை இணைக்கிறது. குழுவின் உறுப்பினர்களாக  IT ஊழியர்கள் மட்டுமல்ல இதர துறைகள் சேர்ந்தவர்கள் கூட உண்டு. நான் 2012 ஆம் வருடம் முதல் இதில் பயணம் செய்வது இல்லை, எம்முடைய பாதை வேறாக சென்னை நோக்கி மாறிவிட்டது என்றாலும் இந்த குழு என்னை இன்றும் ஒரு மூத்த அங்கத்தினாராக அங்கீகாரம் செய்து கௌரவிக்கிறது.


ஊக்கம் 

இந்த தொடரினை எழுதுவதற்கு 'பரம(ன்) ரகசியம்' எழுதிய  உயர்திரு என்.கணேசன் அவர்களையும் (enganeshan.blogspot.com), உணவு யுத்தம் எழுதிய உயர்திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களையும் மானசிக குருவாக ஏற்று எழுத விழைகிறோம். இதில் காணும் கருத்துபிழை, எழுத்து பிழை போன்ற குறைகளை சுட்டிக்காட்டி எம்மை வழி நடத்தும்படி தங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம். 

நன்றி 

கூகுள் இன்புட் டூல், வலைப்பூ (blogspot) மற்றும் கூகுள் க்ரூப்ஸ் ஆகிய வசதிகளுக்கும், விக்கிபீடியா சேவைக்கும், மேலும் வலைதொடர்பு (internet) வசதிகளுக்கும் நன்றி பகர்கிறோம். 

(தொடர் வண்டி நகர்கிறது)

Thursday, March 12, 2015

பேரம் நல்ல பேரம்

பேரம் 

நம்ம ஆளு ஒருத்தர்,
பாலஸ்தீன நாட்டுக்கு உல்லாசப் பயணம் சென்றார்.
அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது. இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை....
"படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.
"இருபது டாலர்" என்று அவன் சொன்னான்.
"இந்த தொகை மிகவும் அதிகம்" என்று வாதிட்டார் நம்ம ஆள்.
”அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்”என்றான் படகோட்டி.
’நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்’என்றார் நம்ம ஆள்.
”ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார், தெரியுமா?”என்று கேட்டான் படகோட்டி.
அதற்கு நம்ம ஆள் சொன்னார்,
"ஆமாம் ... நீங்கள் படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால், ஏசு நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!"

தந்திரம் !!!


தந்திரம் !!!


வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.
இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்!தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா! அவர்கள் தினசரி விளையாடினார்கள்.
ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.
இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.
மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.
நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.
இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.”வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.”என்று கூறிச் சென்று விட்டனர்.
பெரியவருக்கு இப்போது பரம திருப்தி !!!

கடவுளின் பார்வையில்

கடவுளின் பார்வையில்...குட்டிக்கதை

பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு கடற்கரை நகரத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு பெரிய மாளிகை முன்பு அதன் சொந்தக்காரனான மீனவக் கிழவன் தன் முன்னால் பெரும் பணக்குவியலுடன் அமர்ந்திருந்தான்.
அர்ஜுனன் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
“கிருஷ்ணா! இதென்ன நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்களைக் கொன்று குவிக்கும் இந்த மீனவனுக்கு இத்தனை வசதியான வாழ்வா?” என்று அர்ஜுனன் கிருஷ்ணரைக் கேட்டான்.
கிருஷ்ணர் பதில் கூறவில்லை.

சில ஆண்டுகள் கடந்தன.
இருவரும் ஒரு காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது யானை ஒன்று மரண வேதனையில் இருந்தது.
நோயால் படுத்துக் கிடந்த அந்த யானையைப் பல்லாயிரம் எறும்புகள் கடித்துக் கொண்டிருந்தன.
“பகவானே! இதென்ன கொடுமை? நோயுற்றிருக்கும் ஒரு யானையை இத்தனை ஆயிரம் எறும்புகள் கடித்துத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனதே...?” என்றான் அர்ஜூனன்.
உடனே கிருஷ்ணர், “அர்ஜூனா, சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு செல்வந்தனான மீனவக் கிழவனைப் பற்றி என்னிடம் கேட்டது ஞாபகமிருக்கிறதா? அன்று பல ஆயிரம் மீன்களைக் கொன்று செல்வந்தனாக இருந்த அவன் இறந்து, இன்று யானையாக மீண்டும் பிறந்திருக்கிறான். அன்று அவன் கொன்ற மீன்கள் அனைத்தும் இன்று எறும்புகளாகப் பிறந்து கடித்துக் கொண்டிருக்கின்றன.”
“கடவுளின் பார்வையில் இருந்து எதுவும் தப்பி விட முடியாது. கால தாமதமானாலும், அவரவர் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றே ஆக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்றான் அர்ஜூனன்.
“இது போல் நல்லது செய்தால் அடுத்த பிறவியிலும் நற்பலன்களும் கிடைக்கும்” என்றார் கிருஷ்ணர்.

நீதிக்கதை-01

நீதிக்கதை"
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.
அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

சுடச் சுடசாப்பாடு-டப்பாவாலாக்கள்இருக்கும்வரையில்

சுடச் சுடசாப்பாடு  இல்லத்திலிருந்து  அலுவலகத்திற்கு   மும்பைஸ்டைல்
நீங்கள் வேலைக்குப் போவதற்காகத் தினமும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறீர்கள். மத்தியானத்தில், வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் எப்படியிருக்கும்! அதுவும் உங்களுக்குப் பிடித்த மாதிரி இருந்தால் ஒரு பிடி பிடித்துவிடுவீர்கள்தானே! இந்தியாவிலுள்ள மும்பையில் பணிபுரிகிற ஆயிரக்கணக்கானோர் இந்த விஷயத்தில் கொடுத்துவைத்தவர்கள். ஆம், டப்பாவாலாக்கள்இருக்கும்வரையில் அவர்களுக்கு என்ன கவலை?* அவர்கள்தான் வீட்டுச் சாப்பாட்டை அலுவலகத்திற்கே கொண்டுவந்து கொடுக்கிறார்களே!
தொழிலுக்கு வழி பிறந்தது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மும்பை (அப்போது பாம்பே என அழைக்கப்பட்டது) வளர்ந்துவரும் வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. அந்தச் சமயத்தில், ஆங்கிலேய வியாபாரிகளும் சரி இந்திய வியாபாரிகளும் சரி, தங்களுடைய அலுவலகங்களுக்கு வெகு தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. வாகனங்கள் மந்தகதியில் ஓடின, ஓட்டல்களும் குறைவாகவே இருந்தன. அலுவலகத்திற்குச் செல்வோர் வீட்டுச் சாப்பாட்டையே விரும்பியதால், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு தர வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள். தொழிலில் தொலைநோக்கு பார்வையுடைய ஒருவர் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்; கிராமப் புறங்களில் வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, வீடுகளிலிருந்து அலுவலகங்களுக்குச் சாப்பாட்டை எடுத்துச் செல்லும் தொழிலைத் தொடங்கினார். சிறியதாய்த் துவங்கப்பட்ட அந்தத் தொழில் சக்கைப்போடு போட ஆரம்பித்தது.
வீட்டுச் சாப்பாட்டிற்கான மோகம் இன்றும் குறையவே இல்லை. இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள் இருப்பது உண்மைதான்; ஆனாலும், ஓட்டல் சாப்பாட்டைவிட வீட்டுச் சாப்பாடுதான் அதிக செலவில்லாதது, எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்ல, நிறையப் பேருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் அவர்கள் பத்திய உணவையே சாப்பிட வேண்டியிருக்கிறது. மற்ற சிலரோ, மதக் கட்டுப்பாடுகள் காரணமாக எல்லா வகையான உணவுகளையும் சேர்த்துக்கொள்வதில்லை. சிலருக்கு வெங்காயம் ஆகாது, இன்னும் சிலருக்குப் பூண்டு பிடிக்காது. இதையெல்லாம் ஓட்டல் சாப்பாட்டில் சேர்த்திருப்பார்கள். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு உணவைக் கொண்டு செல்வது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் பரிகாரமாக இருக்கும்.
மிகவும் நம்பகமான சேவை
வருடங்கள் பல உருண்டோடிய போதிலும், உணவை எடுத்துச் செல்லும் இந்த எளிய முறை இன்னும் மாறவே இல்லை; ஆனால், பெரியளவில் செய்யப்பட்டு வருகிறதென்று சொல்லலாம். இன்று, 5,000-க்கும் அதிகமான ஆண்களும் சில பெண்களும் ஒரு நாளில் 2,00,000 மதிய உணவை எடுத்துச் செல்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய ஏரியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து, இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் வாழ்கிற இந்த நகர்புறத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற அலுவலகங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார்கள். சுமார் 60 கிலோமீட்டர் (40 மைல்) சுற்றளவுக்குள் இந்த டப்பாவாலாக்கள்வலம் வருகிறார்கள்; சிலர், 30 அல்லது 40 டிஃபன் கேரியர்களைத் தள்ளுவண்டிகளில் எடுத்துச் செல்கிறார்கள், இன்னும் சிலர், சைக்கிளிலோ ரயில்களிலோ எடுத்துச் செல்கிறார்கள். எப்படியானாலும், அவர்கள் உரிய உணவை, உரிய நபரிடம், உரிய சமயத்தில் சேர்த்துவிடுகிறார்கள். சொல்லப்போனால், 60 லட்சம் பேருக்கு சாப்பாடு எடுத்து செல்கிறார்கள் என்றால் அதில் ஒரு தவறு மட்டுமே ஏற்படுகிறதாம்! அவர்களால் எப்படி அந்தளவுக்குத் துல்லியமாகச் செய்துவர முடிகிறது?
1956-ல் இந்த டப்பாவாலாக்கள், ஒரு செயற்குழுவையும் சில அலுவலர்களையும் கொண்ட தர்ம ஸ்தாபனமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். பணியாளர்கள் தனித்தனிக் குழுக்களாகச் செயல்படுகிறார்கள்; ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சூப்பர்வைஸர் இருப்பார். என்றாலும், இந்த அமைப்பிலுள்ள எல்லாருமே பார்ட்னர்கள், பங்குதாரர்கள்; அப்படிச் செயல்படுவதுதான் தங்கள் வெற்றியின் ரகசியம் என அவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இந்தச் சேவை ஆரம்பமாகி 100 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது; ஆனால், இதுவரையில் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் இறங்கியதே இல்லை.
டப்பாவாலாக்களிடம் ஓர் அடையாள அட்டை இருக்கும்; அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளை சட்டை, தொள தொள பேன்ட், வெள்ளை தொப்பி இவற்றை வைத்து அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அவர்கள் தொப்பியை அணியாதிருந்தால்... தகுந்த காரணமின்றி வேலைக்கு வர தாமதித்தால் அல்லது வராமலிருந்தால்... பணியில் இருக்கும்போது மது அருந்தியிருந்தால்... அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.
தினசரி வேலை
காலை 8:30 மணிக்குள் வாடிக்கையாளரின் வீட்டிலுள்ள ஒருவர், ஒருவேளை அவருடைய மனைவி, உணவைச் சமைத்து அதைடப்பாவில், அதாவது பல அடுக்குகள் உள்ள டிஃபன் கேரியரில், போட்டு வைப்பார். டப்பாவாலா தன்னுடைய பகுதியிலுள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து டிஃபன் கேரியர்களை எடுத்து வந்து சைக்கிளில் அல்லது தள்ளுவண்டியில் வைத்து ரயில் நிலையத்திற்கு விரைவார்; அவருடைய குழுவிலுள்ள மற்றவர்களும் அங்கு வருவார்கள். அவர்கள் அந்த கேரியர்களையெல்லாம் அவை போய்ச் சேர வேண்டிய இடம் வாரியாகப் பிரிப்பார்கள், போஸ்ட்மேன் தபால்களை இடம் வாரியாகப் பிரிப்பது போல.
ஒவ்வொரு கேரியரிலும் எழுத்துகளையும் எண்களையும் கொண்ட வெவ்வேறு நிறக் குறியீடு இருக்கும்; வாடிக்கையாளரின் வீடு இருக்கிற இடம், அடுத்துள்ள ரயில் நிலையம், போய்ச் சேர வேண்டிய ரயில் நிலையம், அலுவலக கட்டிடத்தின் பெயர், தளத்தின் எண் என இவை எல்லாவற்றையும் அந்தக் குறியீட்டிலிருந்து கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொரு பகுதிக்கும் போய்ச் சேர வேண்டிய டிஃபன் கேரியர்களை ஒன்றாகச் சேர்ந்து நீண்ட மரப் பலகைகளில் அடுக்குவார்கள்; ஒவ்வொன்றிலும் 48 கேரியர்கள்வரை வைக்கலாம். ரயில் வந்ததும் எஞ்சினுக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு தனி கம்பார்ட்மென்டில் அவற்றை ஏற்றுவார்கள். முக்கிய ரயில் நிலையத்தை அடைந்ததும் டிஃபன் கேரியர்களை மீண்டும் பிரித்து அவை போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச் செல்லும் ரயிலில் ஏற்றுவார்கள். அந்த ரயில் நிலையத்தை அடைந்ததும் அவற்றை மீண்டும் பிரித்து, சைக்கிளிலோ தள்ளுவண்டியிலோ வைத்து வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
இந்த முறையில் எடுத்துச் செல்வது சிறந்தது மட்டுமல்ல, செலவில்லாததும்கூட. அதோடு, அந்த டப்பாவாலா போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ள மாட்டார்; ஏனென்றால், அவர் சந்துபொந்துகள் வழியாகவோ வாகனங்களுக்கு இடையே உள்ள குறுகிய இடைவெளிகளில் புகுந்தோ சென்று விடுவார். அதனால், 12:30 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு உணவு போய்ச் சேர்ந்துவிடும். பிறகு, கடின உழைப்பாளியான அந்த டப்பாவாலா தன்னுடைய மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு மதியம் 1:15-லிருந்து 2:00 மணிக்குள் காலி டிஃபன் கேரியர்களை எல்லாம் திரட்ட ஆரம்பிப்பார்; அதன் பிறகு, அவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளில் கொண்டு சேர்ப்பார்; வீட்டில் உள்ளவர் அதைக் கழுவி அடுத்த நாளுக்குத் தயாராக வைப்பார். காலையில் ஆரம்பித்து மாலை வரையாக இந்த மொத்த சேவையுமே இடைமாற்று ஓட்டப்பந்தயம் போல (relay race) படு விறுவிறுப்பாக, சிறப்பாக நடக்கும்.
பாராட்டைப் பெற்றுத்தரும் எளிய சேவை
டப்பாவாலாக்கள் எந்தளவு பேரும் புகழும் பெற்றிருக்கிறார்கள் என்பது மற்றவர்களுடைய கண்ணில் படாமல் போகவில்லை. அவர்கள் பின்பற்றுகிற முறையைப் பிற நிறுவனங்களும் அலசி ஆராய்ந்து பார்த்திருக்கின்றன; அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதைத் தங்களுடைய தொழிலிலும் பின்பற்றுவதற்காக அப்படிச் செய்திருக்கின்றன. டப்பாவாலாக்களைப் பற்றிய குறும்படங்களும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் செய்கிற படு துல்லியமான சேவையைப் பாராட்டி ஃபோர்ப்ஸ் குளோபல் மேகஸின், அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.  கின்னஸ் புக் ஆஃப் உவர்ல்ட்ரெக்கார்ட்ஸில் அவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்; அதோடு, அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பிஸினஸ் ஸ்கூல் ஆய்வுகளிலும் அவர்களைப் பற்றிய விவரங்கள் இடம்பெறுகின்றன. டப்பாவாலாக்களைமுக்கியப் பிரமுகர்களும் சந்தித்திருக்கிறார்கள்; அப்படிச் சந்தித்த இங்கிலாந்தின் இளவரசர் ஒருவர் அவர்களுடைய சேவையைப் பார்த்து அசந்தே போய்விட்டார்; அதனால் அவர்களில் சிலரைத் தன்னுடைய கல்யாணத்தில் கலந்துகொள்ள இங்கிலாந்துக்கு அழைத்தார்.
இன்று டப்பாவாலாக்கள் ஆர்டர்கள் பிடிக்க, கணக்கு வழக்குகள் பார்க்க கம்ப்யூட்டர்களையும் செல் ஃபோன்களையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றுகிற முறை மட்டும் மாறவே இல்லை. மதிய சாப்பாட்டு வேளை நெருங்கினால் போதும், வயிற்றைக் கிள்ளும் பசியில் இருக்கிற மும்பை அலுவலகப் பணியாளர்கள், சுடச் சுட வீட்டுச் சாப்பாடு சரியான சமயத்தில் வந்து சேர்ந்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்!


உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்கள் மூலம் இன்னொரு புதிய யோசனை

உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்கள் மூலம் இன்னொரு புதிய யோசனை, சத்தமில்லாமல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர்.
 
டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று, அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி, காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள்.

டப்பாவாலா, வீடியோ காட்சி, Mumbai, Dabbawala, Share My Dubba, Sticker
 
டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆண்களே. இருசக்கர வாகனம், நடை, இரயில் என்று பல்வேறு வழிகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது எஸ்.எம்.எஸ் என்று அறியப்படும் குறுஞ்செய்தி நுட்பத்தையும் தங்கள் தொழிலில் இவர்கள் பின்பற்றுகின்றனர். 
 
வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்தியா வந்திருந்த போது டப்பாவாலாக்களைச் சந்தித்தார். பிபிசி நிறுவனம் டப்பாவாலாக்கள் குறித்த ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகம், இவர்களைக் குறித்து ஆராய்ந்தது. போர்ப்ஸ் நிறுவனம், இவர்களின் செயல்பாட்டு, சிக்ஸ் சிக்மா என்ற சிறந்த தொழில்முறையில் அமைந்துள்ளதாகச் சான்றளித்துள்ளது. மும்பை டப்பாவாலா சங்க தலைமைச் செயல் அதிகாரி பவன் கிரிதர்லால் அகர்வால், கொல்கத்தா ஐஐஎம் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சிறப்பு வகுப்பு நடத்தினார்.
 
இத்தகைய சிறப்பு மிக்க டப்பாவாலா சேவையை மும்பையில் சுமார் 16 இலட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அதே மும்பையில் சுமார் சாலையோரங்களில் வசிக்கும் 2 இலட்சம் சிறுவர்கள் பசியால் வாடுகின்றனர். இவர்களுக்கு எப்படி உணவளிப்பது? 
 
அதே நேரம், இந்த டப்பாக்களில் நாள்தோறும் 120 டன் உணவுப் பொருள் எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றில் 16 டன் உணவு, வீணடிக்கப்படுகிறது. இந்த உணவை எப்படி ஏழைச் சிறுவர்களுக்கு எடுத்துச் செல்வது?
 
இதற்கு ஒரு குழுவினர், புதுமையான யோசனையை முன்வைத்துள்ளனர். இதன்படி, இந்த டப்பாவில் உணவைப் பெறுபவர்கள், தாம் சாப்பிட்டது போல் மீதம் உணவு இருந்தால், அந்த டப்பாவின் மீது, ஷேர் மை டப்பா என்ற ஸ்டிக்கரை ஒட்டுகின்றனர். அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டப்பாக்களை மட்டும் பிரித்து, அதில் உள்ள உணவை வீதியோரச் சிறுவர்களுக்கு டப்பாவாலாக்களும் தன்னார்வலர்களும் பகிர்கின்றனர். இதன் மூலம் உணவு வீணாவது தவிர்க்கப்படுவதுடன், பசியால் வாடும் சிறுவர்களுக்கு உணவும் கிடைத்துவிடுகிறது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர்.
 
ஒரு யோசனை போதும், இந்த உலகத்தின் சிக்கலைத் தீர்க்க. அப்படிப்பட்ட ஒரு நல்ல யோசனை.
 

Tuesday, March 10, 2015

வாரியார் வாரினார் ...நன்றி கதம்பம் - முகநூலில்

்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
அவர்கள் இருவரும் "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.

நான் வேண்டும் வரம் ஒன்றே ஒன்றுதான்

என் மகனுக்காக நான் வேண்டும் வரம் ஒன்றே ஒன்றுதான்,
"அவனும் முதியோர் இல்லம் வந்துவிடக் கூடாது என்பதே" .....

அமைதியா இருந்தா தான் எதுவுமே நல்லபடி நடக்கும்-நன்றி சங்கர் கணேஷ் அவர்கள்

தாத்தாவும் பேரனும் -- அமைதி எது?
''என்னடா கோபு இது. எதுக்கு இத்தனை பசங்க இங்கே. யார் இவங்க எல்லாம்?
''எங்க ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தாத்தா. உங்க கிட்டே ஒரு கதை தினமும் வந்து கேக்கப்போகிறாங்களாம் ''
''அமைதியா இருந்தா தான் எதுவுமே நல்லபடி நடக்கும். வேகம், ஆத்திரம்,கோபம், கடுப்பு இதெல்லாம் எதுக்கும் உதவாது. அமைதி தைரியத்தை கொடுக்கும். வேகம் கோபம் எல்லாம் பயத்திலே தான் கலந்தது. விளைவு என்ன ஆகுமோ என்கிற பயம் அதிலே ஜாஸ்தி. ''
ஒரு பையன், ''தாத்தா அந்த அமைதி பத்தியே ஒரு கதை சொல்லுங்க'' என்றபோது அனைவரும் கைதட்டி சிரித்தனர். அமைதியை பத்தி எப்படிடா கதை சொல்ல முடியும்?'' என்றனர்.
''ஏன் முடியாது என்கிறீர்கள். சொல்றேன் கேளுங்க.''
தாத்தாவுக்கு பிளாஸ்கில் இருந்து வெந்நீர் ஒரு டம்ளர் எடுத்து கோபு நீட்டினான். தாத்தா அதை வாங்கி பருகினார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார். கதை பிறந்தது.
பழைய காலத்தில் நமது நாட்டில் எங்கோ ஒரு ராஜா ஒரு ஊரை ஆண்டு வந்தான். அந்த ராஜா விசித்ரமானவன். சிந்திப்பவன்.
ஒருநாள் உண்மையான அமைதி எது என்று யாராவது சித்திரம் வரைந்து தந்தால் நல்ல பரிசு உண்டு என்று அறிவித்தான். பல சித்திரங்கள் போட்டிக்கு வந்தன.
எத்தனையோ படங்களுக்கிடையில் ராஜா இரண்டு சித்திரங்களை தேர்ந்தெடுத்தான் ஒன்று நீண்ட, அமைதியான, அழகான ஏரியின் படம். அருகில் நீண்டு நெடிதுயர்ந்த மலை கூட்டங்கள்.மேலே நீல ஆகாயம். பஞ்சு போன்ற மென்மையான மேகங்கள். எங்கும் நிசப்தம். ஏன் என்றால் ஒரு ஜீவராசியும் அங்கே காணோம். மிகவும் பொருத்தமான அமைதியின் படம் இதுவே'' என அனைவரும் போற்றினர்.
இரண்டாவது படம். உயர்ந்த கரடு முரடான மலைகள். கீழே தலை சுற்றும் பயங்கர பள்ளம். மேலே ஆகாயத்தில் இருண்ட பயங்கர மேக கூட்டம் . கண்ணை பறிக்கும் மின்னல்கள். செவிடு பொடிபடும் இடி முழக்கம். கோபமாக ஆகாயத்திலிருந்து மேகங்கள் பிளந்து மழை சோ என்று கொட்டுகிறது. தூரத்தில் மரங்கள் காற்றில் பெருத்த ஓசையோடு தலைவிரித்து ஆடுகின்றன . நீர் பிரவாகமாக நீர்வீழ்ச்சியாக மலையிலிருந்து பெரும் பாறைகள் மீது படிந்து கீழே பாதாளத்தில் வீழ்கிறது.
நீர் வீழ்ச்சி சிதறி கீழே ஓடும் பெரிய பாறை ஒன்றின் பிளவில் ஒரு புதர் . அதற்குள் ஒரு பறவையின் கூடு.
அதில் குஞ்சுகளின் வாயில் தாய் பறவை பதட்டம் இல்லாமல் மெதுவாக அவசரமின்றி ஆகாரம் ஊட்டுகிறது.
''இது தான் சிறந்த படம்'' என்கிறான் ராஜா.
'' ராஜா நீங்களே சொல்லுங்கள் இது எப்படி அமைதியின் படமாகும்'' என்றான் மந்திரி?
''அமைதி என்பது சத்தமில்லாமல் அசைவில்லாமல் இருப்பது இல்லை. எல்லாவிதமான சங்கடங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் இடையில் காண்பது தான் உண்மையான அமைதி. ''
இது உண்மை தானே? நீங்களே சொல்லுங்கள் என்று சிரித்துக்கொண்டே தாத்தா கேட்க ''ஆமாம்'' என்று தலையாட்டினார்கள் மாணவர்கள்.