Saturday, November 13, 2021

விதவைன்னா என்ன அர்த்தம்? நிராதரவான பெண் என்பதுதானே? நான் ஒரு நிராதரவான பெண்தான்"

 கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்!

Thanks to whatsapp

தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது...


தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். 


நான் 1985 இல் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன். 


'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார். "நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன்  செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணோட பேரு தங்கம்மா" இப்படி அவர் சொன்னதும், நான் கேட்டேன் "நீங்க யாரு? உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?" என்று.


அவர் மிகவும் சாதாரணமாகச் சொன்னார் "அந்தத் தங்கம்மாவின் கணவரே நான்தான்" என்று. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.


கணவர் உயிரோடு இருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஒரு பெண் விதவை பென்ஷன் வாங்குவது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா? இது ,ஒரு சமூக நலத் திட்டத்தைக் கேலிப் பொருளாக்குவது இல்லையா? உடனே தாசில்தாரை வரவழைத்தேன். 


அவர்தான் விதவைப் பென்ஷன் சாங்ஷன் செய்த அதிகாரி. அவரும் பதறிப் போய் விட்டார். தலையோலப் பறம்பு வில்லேஜ் ஆபீசரின் விசாரணை ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் சாங்ஷன் செய்ததாக அவர் சொன்னார். 


தவறாக ரிப்போர்ட் கொடுத்த வில்லேஜ் ஆபீசரை உடனே சஸ்பெண்ட் செய்ய ஆணை பிறப்பித்தேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் புகார் செய்த கணவர், தங்கம்மா ,வில்லேஜ் ஆபீசர், தாசில்தார் அனைவரையும் வரச் சொன்னேன்.


அந்தத் தேதியும் வந்தது .சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த தங்கமாவும் வந்திருந்தாள். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற குற்ற உணர்வோடு தொங்கிய முகத்துடன் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவள் தைரியமாக என் முன் வந்து நின்றது ஆச்சரியத்தைத் தந்தது.


தங்கம்மாவின் மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையே   புகார் கொடுத்தவர் அவள் கணவரா? இல்லையா ?என்பதுதான். அதை முதலில் அறியவேண்டும் என்று தீர்மானித்த நான், அந்தப் பெண்மணியிடம் கேட்டேன் "இவர் உன் கணவர்தானே ?'' தங்கம்மா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னாள் " ஆமாம்" .


நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசத்தொடங்கினேன்."ஏம்மா நான் தமிழ்நாட்டில் இருந்து .வந்திருக்கிறேன் . எங்கள் கிராமத்தில் பெண்களிடம் அவர்களது புருஷன் பெயரைக் கேட்டால் நேரடியாகப்பதில் சொல்ல மாட்டார்கள். புருஷன் பெயர் முருகன் என்றால் ஜாடை மாடையாக  மயில் மேல இருக்கிறவர்னு சொல்வாங்க.அப்படிப்பட்ட ஊரில் இருந்து நான் வருகிறேன் .புருஷன் உயிரோடு இருக்கும் போது வெறும் 75 ரூபாய் கிடைக்கிறதுக்காக அவர் செத்துவிட்டார் என்று சொல்வதற்கு எப்படிம்மா மனசு வந்தது ?முதல்ல அதை எனக்கு விளக்குங்க!" உருக்கமாக நான் கேட்டேன் .


தங்கம்மா யாதொரு கலக்கமும் இன்றி என்னைக் கேட்டாள் "அரசாங்கம் ஏன் இந்த விதவைப் பென்ஷன் கொடுக்கிறது? விதவைன்னா  என்ன அர்த்தம்? நிராதரவான பெண் என்பதுதானே? நான் ஒரு நிராதரவான பெண்தான்" என்று சொல்லிச் சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தாள். 


"எப்படின்னு கேட்கிறீங்களா? இந்த ஆள் என்னை விட்டுவிட்டுப் போயி எட்டு வருஷம் ஆகுது கோழிக்கோட்டில் ஒரு பெண் கூட எட்டு வருஷமாக இந்தாள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எங்கள் ஊருக்கு வருவது கிடையாது. என் குழந்தைகளைப் பார்க்கிறது கிடையாது அதனால என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆளு செத்துப் போனவன் தானே?  நான் நிராதரவான பெண்தானே? சொல்லுங்க சார் சொல்லுங்க" தங்கம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஆணித்தரமாக வெளிவந்தன.


புகார் கொடுத்த ஆள் அப்போது நெளிவதை  நான் கண்டேன். அதற்குப் பிறகு தங்கம்மாள் ஒரு கேள்வி கேட்டாள், என்னை நேரடியாகப் பார்த்து," உங்கள் சட்டம் என்ன சொல்லுது? ஒருவன்  ஏழு வருஷம் காணாமல் போனால்அவனை செத்தவனாகக் கருதலாம்னு சொல்லுது .இல்லையா? அதனால சட்டப் பிரகாரம் இவன் எனக்குச் செத்துப் போனவன்தான்.நான் விதவை தான் சார்" என்று பேசி முடித்தாள்.


எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒருவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவனைச் செத்தவனாகச் கருதலாம் என்று எவிடென்ஸ் ஆக்ட்  சொல்கிறது .அந்த சட்ட விதிகள் எல்லாம் தங்கம்மாவை எப்படியோ சென்றடைந்து இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு சாமானியப் பெண்மணி சட்டவிதிகளைச் சொல்லி புருஷன் உயிரோடு இருக்கும் போதே அவன் செத்ததற்குச் சமம் என்று வாதிட்டு இருக்க முடியுமா ?


தங்கம்மாவின் வாதம் எனக்கு நியாயமாகப் பட்டது. ஆனால் அப்போதுள்ள பென்ஷன் விதிகளின்படி நான் தீர்ப்பு எழுதினால் அது தங்கம்மாவுக்குச் சாதகமாக அமையாது. அவளது விதவை பென்ஷனை நான் ரத்து செய்தாக வேண்டும்.

அது மனிதாபிமானத்துக்கு எதிராக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். எனவே பென்ஷன் விதிகளில் மாற்றம் செய்ய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது.


தங்கம்மாவின் சூழ்நிலையை விவரித்து விட்டு "இவரைப் போன்ற பெண்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் விதவைப் பென்ஷன் ஏற்படுத்தியதன் உண்மையான பலன் கிடைக்கும். அதற்கு விதவைப் பென்ஷனுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். யாரெல்லாம் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளில் ஒரு பெண்ணின் கணவன் ஏழு வருடங்களுக்கு மேல் காணாமல் போயிருந்தால் அந்தப் பெண்ணும் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் சேர்த்து தங்கம்மாவைப் போன்ற நிராதரவான பெண்களுக்கும் விதவைப்பென்ஷன் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினேன்.


கேரள அரசாங்கத்தின் சிறப்பு என்னவென்றால் இதுபோன்ற மனிதாபிமான விஷயங்களில் அனுகூலமான முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதுதான். என் கோரிக்கை ஏற்கப்பட்டு விதவைப் பென்ஷன் விதிமுறைகளில் மாற்றத்தை அரசாங்கம் அறிவித்தது.


அரசாங்கம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தங்கம்மாவுக்கு பென்ஷன் தொடர்ந்து அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் தங்கம்மா போன்று நிராதரவான  நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்கும் விதவை பென்ஷன் உறுதி செய்யப்பட்டதுதான் எனக்கு மனநிறைவைத் தந்தது.


அதிகாரியாகப் பணிபுரியும் போது நம் முயற்சியால் ஆதரவற்றவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமானால் அதை விட நமக்கு மகிழ்ச்சி அளிப்பது  வேறு இருக்க முடியாது. கண்ணகி தன் கணவன் கோவலன் கொல்லப்பட்ட போது கையில் சிலம்புடன் வந்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள்.


தலையோலப் பறம்பு தங்கம்மா கணவன் உயிரோடு இருக்கும்போதே அவனைச் இறந்தவனாக ஏன் கருதக் கூடாது என்று அரசாங்கத்திடம் நீதி கேட்டாள். அந்த தலையோலப் பறம்பு தங்கம்மாவை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது!


படித்ததில் பிடித்தது

Friday, June 18, 2021

உயர் திரு கக்கன் - கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது இந்த பெயர்

 #கக்கன்


 "உயர் திரு கக்கன் பிறந்த தினம்" இன்று....


தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....


கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டது. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...


கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 


கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். 


ராமசாமி தனது சுயமரியாதை எனும் ஏமாற்று இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரை உருவபடம் அவமதிக்கும் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.... 


கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர். அவர்  இந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளார் என்பது கூடுதல் தகவல் ...


இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 


விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர்  வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். 


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். 


சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்... நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.


கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை. 


கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 1955- ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 


இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர்.

 "இது முறையல்ல" என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, "நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது" என்றனர். 


கக்கன் "இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.." என்றார். 


இவரின் நேர்மைக்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்...


அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு..


1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்ன போதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு ... நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு . "கணக்கை ஒப்படைச்சிட்டேன்" என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. "யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா.." என சத்தம் போட்டாரு. "அது தானே முறை" என்றார் கக்கன். 

"நீங்க யாருன் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்"ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல...


அது தாங்க கக்கன்" ...


பெருந்தலைவர் காமராஜர் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்…


அவர்களில் ஒருவர் கக்கன்…


இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…


போலீஸ்

பொதுப்பணி

விவசாயம்

சிறுபாசனம்

கால்நடை_பராமரிப்பு

உள்துறை

சிறைத்துறை

நிதி

கல்வி

தொழிலாளர்_நலம்

மற்றும்

மதுவிலக்கு…


இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் ..


பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்....


கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… 


‘குறை சொல்ல முடியாத மனிதர்...,

’ 


என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயர்.....

 

Wednesday, June 16, 2021

இரு சக்கர வாகனங்கள்-அப்டினா? பைக்குனு தமிழ் ல சொல்லுப்பா.. கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்

இன்னைக்கு ஒரு யு டியூப் வீடியோ பாத்தேன், பழைய வண்டிகள் 10 னு ஒருத்தர் போட்டிருந்தார், ஒடனே எல்லா வேலையையும் விட்டுபுட்டு என்னோட தூக்கத்தயும்  விட்டுபுட்டு இத எழுத ஆரம்பிச்சுட்டேன், நான் ரமணன் 

நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் கூட்டு முயற்சி தான் ஆரம்பத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை கொண்டு வந்தது. டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா (ஹீரோ சைக்கிள் கம்பெனி), எய்ச்சர் ராஜ்தூத், கவஸாகி பஜாஜ். இதில் பைக் செக்மென்ட்டில் பெட்ரோல் மைலேஜ் புரட்சி என்றால் அது ஹீரோ ஹோண்டா தான். அந்நாளில் அது ஹோண்டா சி டி 100 என முதலில் வந்தது. லிட்டருக்கு 80 கி மீ கொடுத்ததாக சொல்லப்பட்டது

இதுல சிறப்பு என்னனா இந்தியாவோட ராயல் என்பீல்ட் எய்ச்சர்  வசம்தான் இப்போ இருக்கு 

ஹீரோ ஸ்ட்ரீட் என ஒரு பைக் போட்டார்கள். அருமையான வண்டி. அதில் கிளட்ச் இல்லாமல் வடிவமைத்தார்கள். அது ஒரு புதுமை ஆனால் அதுவே வினையாகி போச்சுது. நமக்கு கிளட்ச் பிடித்தால் தான் அது வண்டி என ஒரு நினைப்பு. தவிரவும் பெட்ரோல் டேங்க் முன்னால இருக்கனும் அதையும் அதுல மாத்தி வெச்சாங்க. வண்டி காணாமலே போச்சு

ஸ்கூட்டிக்கு முன்னர் பஜாஜ் சன்னி என ஒரு வண்டி போட்டார்கள் அதுதான் பலரை ஈர்த்து ஒரு செக்மென்ட்டின் கேம் சேஞ்சர் என வழி வகுத்தது

அந்நாளில் பலர் ஸ்கூட்டர் வாங்க காரணம் ஸ்டெப்னி எனும் உபரி சக்கரம் இருக்கு, எங்கயாவது பஞ்சர் ஆனால் உடனே மாத்திக்கலாம் அப்டின்றதுதான். பின்னாளில் வந்த கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டரில் கூட இதை சேர்த்திருந்தார்கள். ஆமாம் கைனெடிக் ஹோண்டா முதலில் லாஞ்ச் ஆனதும் தோல்வி என தெரியுமா? பின்னர் ஓர் பெண்மணி அந்த வண்டியை இமய மலையில் எவரெஸ்ட்க்கு ஒட்டி சென்றதும் தான் அதற்கு ஒரு மவுசு வந்தது. நிற்க அது ஆட்டோமேட்டிக் கியர் என்பதை பலர் நம்பவே இல்லை.  என்னுடைய +2 ஆசான் தெய்வத்திரு துரைராஜ் கண்ணன் (சோலைமலை மோட்டார்ஸ் அவர்களின் மாப்பிள்ளை) முதலில் இந்த வண்டியை பள்ளிக்கு கொண்டு வந்தார்.  ஆச்சரியமாக இருந்தது) அப்பொழுது அவர்கள் அதற்கு ஏஜென்சி எடுத்திருந்தார்கள். 

YEZDI பற்றி சொன்ன நீங்கள் JAWA பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். YEZDI யின் அப்பா இந்த JAWA. மலை ஏறுவதற்கு மிக பொருத்தமான வண்டி. விபத்தானதாக கேள்விப்பட்டதேயில்லை. இது தவிர ESCORT RAJDOOT பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்

என்பீல்ட் கம்பெனியின் புல்லட், பின்னாளில் கூடுதலாக மினி புல்லட்.  இதில் ஆச்சரியம் மிக சின்ன வண்டி mofa  என்பதுவும் இவர்கள் தயாரிப்பே.  வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் இந்த வண்டியை ஒட்டியிருப்பார்

ஸ்கூட்டரில் அந்நாளில் "எல் எம் எல் வெஸ்பா". இன்றைக்கும் வெஸ்பா புதிய ஸ்லிம் வடிவத்தில் வருகிறது. அதற்கும் முன்னர் விஜய், அப்புறம் லேம்பி  லேம்பெர்ட்டா. இதில் வெஸ்பா வாங்க பதிவு பண்ணி வருடம் முழுவதும் காத்திருந்தோர் பல. பெயர் நினைவில் இல்லை, ஒரு ஸ்கூட்டர் கம்பெனி வண்டி விற்க முன் பணம் முழுவதுமாக வாங்கி அந்த பணத்தில் கம்பெனி ஆரம்பித்து அப்பறம் உற்பத்தி செய்து விற்றார்கள் என நினைவு

டிவிஎஸ் வண்டிகளுக்கு ஒரு வரலாறு உண்டு. டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸல், டிவிஎஸ் சாம்ப் , IND சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஷோகன், மாக்ஸ் 100 ஆர், சாமுராய், டிவிஎஸ் விக்டர், டிவிஎஸ் ஸ்கூட்டி, டிவிஎஸ் ஸ்கூட்டி இ எஸ்,

கொஞ்சம் மொபெட் பக்கமும் பார்வையை திருப்புங்க. டிவிஎஸ் 50, லூனா, ஹீரோ மெஜஸ்டிக், டிவிஎஸ் சாம்ப், ஹீரோ புக், சுவீகா 

கொஞ்சம் வருத்தம். IND சுசுகி பத்தி சொல்லல்லேயே. புன்னகை மன்னன் படத்துல கமல் வருவாரில்லையா. அப்பறமா இந்த வண்டி டிவிஎஸ் சுசுகி அப்டினு மாறினாலும் ஒரிஜினல் IND சுசுகி இன்னிக்கும் ஒரு கிரேஸ் இருக்கு. அப்புறம் நம்ம ஊரு வண்டி, அஞ்சாத நிருபர் வீரபத்திரன் வண்டி M80 பத்தியும் சொல்லணும் என்ன ஒரு அருமையான வண்டி

இப்போதைக்கு இது போதும்.. வண்டிய சைடு ஸ்டாண்டு போட்டு சைடுல விடுவோம் 

Sunday, June 13, 2021

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்

Thanks to Whats up message. 


நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.

Tuesday, May 18, 2021

இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட

 அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே

மாமன் அடித்தாரோ மல்லிப்பூ செண்டாலே

மறந்து போச்சு இந்த பாட்டு – இல்லை

மறைந்து போச்சு நம்ம தாலாட்டு


அத்தை என்று சொன்னேன் நான்

அழகு மகளுக்கு புரியவில்லை

மாமன் என்று சொன்னேன் – நல்ல

மகனுக்கும் தெரியவில்லை – உறவை


என்ன சொல்லி புரிய வைப்பேன்

எப்படி நான் கற்க வைப்பேன்

இன்றைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை

எப்படி நான் எடுத்துரைப்பேன்.


இரண்டு பெற்றால் சுமை என்று

இந்நாளின் இடர்நிறை பொருளியலை

இயல்பாக புரிந்து கொண்ட பெற்றோர்

பெற்றது ஒன்றுமட்டும் – எனக்கு மட்டுமல்ல

என் மனைவியின் நிலையிதுவே


இத்தகைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை

என்ன சொல்லி புரிய வைப்பேன்


கூட்டு குடும்பம் என்பது போய்

கூட்டில் குடும்பம் என சுருங்கி

கூடி வாழ யாரும் இன்றி

தனி குடும்பம் ஆகி போச்சு


அக்கம் பக்கம் எல்லாம் அன்று

அக்கா அண்ணா என்று இருந்த

அழகான காலம் போய் – இன்று

ஆண்டி அங்கிள் ஆயாச்சு


அம்மா அப்பா என்பது போய்

டாடி மம்மி ஆகி இப்போ

டாட் மம் என சுருங்கி

வேற்றுலகம் ஆயாச்சு – ஆம்


இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல

உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட

11.5.2014 written by S.Ramanan

Wednesday, March 24, 2021

நல்ல எண்ணங்கள் மட்டுமே, ஒரு மனுஷன நல்லவனாவே வெச்சிருக்கும்.

 இன்னைக்கு காலைல 8-th படிக்குற ஒரு சின்ன பையனும், 10-th படிக்குற அவனோட அக்காவும்... லூஸ்ல இட்லி அரிசி வாங்குறதுக்காக நம்மகடைக்கு வந்தாங்க. பையன், நல்லா கொழுக் மொழுக்குனு அரிசிமூட்ட மாதிரியே இருந்தான். லீவுன்றதால, கும்பகோணத்திலிருந்து அவங்க பெரியம்மா வீட்டுக்கு வந்திருக்காங்க. "என்ன கிளாஸ் படிக்குறீங்க ?. எந்த ஸ்கூல் ?. ஆன்லைன் கிளாஸ் போகுதா ?..." எல்லாம் கேட்டுட்டு, அரிசியும் போட்டு குடுத்தாச்சு. அரிசிபைய வாங்கிட்டு, இரண்டாயிரம் ரூவா நோட்ட நீட்டுறான். "எங்கிட்ட சில்ற இல்லடா... அப்புறமா இந்த பக்கம் வரும்போது குடு" ன்னேன். "சரி அங்கிள், அரிசி இங்கையே இருக்கட்டும். அப்புறமா வந்து காசு குடுத்துட்டு வாங்கிக்கறேன்" னான். 


"அடேய்... உன்ன அரிசிய வெச்சுட்டு போகச்சொல்லல. எடுத்துட்டு போய்ட்டு, வேற எதாவது வேலையா இந்த பக்கம் வரும்போது, பணத்தை கொண்டாந்து குடு" ன்னேன். அக்காவும் தம்பியும், ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறாங்க. அந்த பையன் தயங்கித் தயங்கி... "எங்கள யாருன்னே தெரியாது. எங்க பெரியம்மா வீடும் உங்களுக்கு தெரியாது. எப்படி அங்கிள் எங்கள நம்பி... " ன்னு, இழுத்தான். "நீ கொண்டு வந்து குடுப்பேன்னு எனக்கு தெரியும்டா தம்பி... இதுக்காக, இந்த வெய்யில்ல உடனே ஓடி வரவேணாம். வேற வேலையா இந்த பக்கம் வரும்போது வந்தா போதும். கிளம்புங்க. வீட்ல தேடப்போறாங்க" ன்னதும், ரெண்டுபேர் மூஞ்சிலயும் அப்படி ஒரு பெருமிதம். ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துட்டாங்க. ரெண்டுபேரும் வண்டிய நிப்பாட்டின வேகத்துல, "நாந்தான் குடுப்பேன், நாந்தான் குடுப்பேன்"னு ஓடி வர்றாங்க. பையன் முந்திட்டான். "நீ கொண்டாந்து குடுத்துடுவேன்னு, நாந்தான் அப்பவே சொன்னனே !." ன்னதும், அவன் மூஞ்சில தெரிஞ்ச அந்த பூரிப்பு, கெத்து, சந்தோஷம்... 


"அங்கிள்... எங்க பெரிம்மா, 'உள்ளூர்காரி எனக்கே சிலகடைகள்ல கடன் தரமாட்டாங்க. முன்னப்பின்ன தெரியாத உங்கள நம்பி எப்படி குடுத்தாங்க' ன்னு, கேக்குறாங்க" ன்னான். "உங்க பெரிம்மாட்ட போய்... 'அதுக்கு பேர்தான் பாஸிட்டிவ் தாட்ஸ்' ன்னு, அங்கிள் சொல்லச் சொன்னாரு' ன்னு சொல்லு. உங்க ரெண்டு பேரோட நேர்மைய பாராட்டி,

 என் நன்பர் குடுத்த கோயில் பட்டி கடலைமிட்டாய 

உங்களுக்கு தர்றேன், ஆளுக்கு ரெண்டுபீஸ் டேக் இட்... ". தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. 


இதுல ஒரு நுட்பமான விஷயமிருக்கு. ஒருவேள முதல்வாட்டி, 'சில்ற வாங்கிட்டு வந்து குடுத்துட்டு, அரிசிய எடுத்துட்டு போ' ன்னு, சொல்லியிருந்தா... 'பண விஷயத்துல இந்த உலகம் யாரையும் நம்பாது' ன்ற, வழக்கமான எண்ணம்தான், இன்னொரு முறையும் அவங்க மனசுல பதிவாயிருக்கும். இல்ல, அரிசிய குடுத்துட்டு, 'ஏமாத்திடாதடா. ஒழுங்கா கொண்டாந்து குடுத்துட்டு போ' ன்னு, சொல்லியிருந்தா... அந்த 'ஏமாத்தி' ன்ற எதிர்மறையான வார்த்தை, 'ஓ... அப்படிக்கூட நமக்கொரு வாய்ப்பு இருக்கா ?' ன்னு... அந்த பிஞ்சு மனசுல நஞ்சை கலக்குற சிந்தனை துளிர்விடும். 


"நீ வருவேன்னு, எனக்கு தெரியும்டா கண்ணா" எப்பேர்ப்பட்ட நம்பிக்கை குடுக்குற வார்த்தை !. 'முன்னப் பின்ன பார்த்திராத, யாருன்னே தெரியாத ஒரு நபர், நம்மள நம்புறாரு. என்ன விலை கொடுத்தாலும், அந்த அங்கிளோட நம்பிக்கைய காப்பாத்தணும்' ன்னு தோணும். அடிக்கடி அந்த குழந்தைங்களோட மனசுல இதுமாதிரி பாஸிட்டிவான விஷயங்கள் பதிவாகும்போது, நல்ல எண்ணங்கள் கிளைபரப்பி வளரும். நல்ல எண்ணங்கள் மட்டுமே, ஒரு மனுஷன நல்லவனாவே வெச்சிருக்கும்.


'குழந்தைகள் தெய்வத்துக்கு சமம்'னு சொல்லுவாங்க. தெய்வத்துக்கு அபிஷேக பூஜைகள்தான் செய்யணுமே தவிர, உக்காரவெச்சு பேய் ஓட்டுற மாதிரி வேப்பிலை அடிக்கக்கூடாது. !!!❣👦👩‍🦰❣

Friday, March 19, 2021

EB விலைப்பட்டியல் (Tariff) ஒரு ஆதங்கம்

 ஒரு Electricity Board Office வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் விற்றுக் கொண்டு இருக்கிறார்.! அவரிடம்.


EB ஆபிஸர் :: வாழைப்பழம் என்னப்பா விலை..?


வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குறீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை சொல்ல முடியும்.?


EB ஆபிஸர் :: என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??


வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழைப்பழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்🍌.!

குழந்தைகளுக்குனு வாங்கினா  ஒரு பழம்🍌 20 ரூபா..!! தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா🍌 விலை 25 ரூபா..!!!

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு🍌 பழம் 30 ரூபா சார்.!!!!


EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

வியாபாரி :: This is my tariff plan.நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு...வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க..கேட்ட tariffனு சொல்லூவீங்க..

நெகிழ்வான கதை இது. நன்றி முகநூல் பக்கம்

 வாட்ஸ் அப் மெஸ்ஸேஜ்லாம் சிலர் ஸ்ரர்த்தையா அனுப்பரா? நான் சின்ன வயசுல இந்த மகானின் இசை நிகழ்ச்சிக்கு எங்கம்மாவோட போய் கேட்ட ஞாபகம் வருது


*நேனெந்து வெதுகுதுரா* 


*By Smt Lalitha Ramachandran*


வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.


ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்கு அருகில் வைத்தார். மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து, அதன்மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார். அதன்பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக எடுத்து இலைகளின்மேல் அடுக்கி வைத்தார்.


அவர் வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக்கொண்டது. அத்தனை போளிகளையும் எடுத்து வைத்தவுடன், வெறும் கூடையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இன்னும் ரயில் வர அரைமணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தார்.


ஆள் நெருங்கியதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். இரண்டு அருணாசலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாகஸ்வரக் குழுவுமே இந்தப் போளிகளுக்கு அடிமை.


அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும்போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு. ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுடே! ஓடுடே!”, என்று பையனை விரட்டுவார்.


ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப்பிடித்துச் சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியாவில்லை என்றாலும் அருணாசலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு. அவரைப் பொருத்தமட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திருநெல்வேலி ஜில்லாவில் அவதாரம் செய்த கந்தர்வன் அருணாசலம் என்பது அவர் துணிபு.


திருச்செந்தூர் பச்சைசாற்றி, திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணாசலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்புவை நிச்சயம் பார்க்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணாசலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்புவை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். ’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம்மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு.


என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.


“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணியாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”


வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.


அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.


“ஒட்டபிடாரத்துல கச்சேரினு தெரியாமப் போச்சே! ராத்திரி வந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.


“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணாசலம்.


வேம்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அதை வாங்காமல் அருணாசலம் தொடர்ந்தார்.


“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும்போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுறதீய, அவம் பணத்தை நீட்டக்கூட விடமாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”


வேம்பு லேசாகப் புன்னகைத்தார்.


“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்லை”


வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.


“ஏ! நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கிறது இந்தப் போளிக்குத்தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வைக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணுமாங்கேன்?”


“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடுபடாது. பைசாவாங்கிகிட்டாத்தான் இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணாசலம்.


”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அவ்வளவுதானே?”


“ஆமா”


“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.”


“என்ன வேணும்னாலும் கேளுங்க”, என்று அவசரப்பட்டார் அருணாசலம்.


“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தையுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.


“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”


“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங்காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ்வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”


இப்படி ஒரு வேண்டுகோளை அருணாசலம் எதிர்பார்க்கவில்லை.


“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”


”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.


அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணாசலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்துவிட்டது.


“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடைமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.


உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. “முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக்கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும்போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார்.


அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப்படத் துவங்கியது.


அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?


இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?


வேம்பு தனக்குத் தெரிந்த ஊர்காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.


சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.


’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்ற முடியும்,’ என்று வெதும்பியபடி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.


இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.


“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.


“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அதுதானே? அதைப் போய் வெக்கலாமா?”, என்று தழுதழுத்தார் வேம்பு.


“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்கமுடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.


வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக்கொண்டார்.


சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணாசலம், பெரும்பள்ளம் வெங்கடேசன், அம்பாசமுத்திரம் குழந்தைவேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். வேம்பு அருணாசலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.


பந்தலில் கூட்டம் அம்மியது. சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று பல ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.


அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடிகாட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல்! புரவிப்பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.


பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.


அருணாசலம் கர்நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.


“நேனெந்து வெதுகுதுரா”


”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது. ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.


“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”


வேம்புவுக்கு கண்கள் கலங்கின. தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார். அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது. சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனத்திலிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.


அன்றைய பிரதான ராகம் கரஹரப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தது.


‘சக்கனி ராஜமார்கமு’


அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.


கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்தபின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணாசலம்.


“நாளைக்கு ஈரோட்டிலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.


“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணாசலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.


பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணாசலம்.


வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணாசலத்தை மொய்த்துக் கொண்டனர். வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.


ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸிலிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொருவன் தயாராக நின்றிருந்தான்.


அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.


ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.


“ஐயர்வாள்! திருப்திதானே?”, என்று கேட்டார் அருணாசலம்.


“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்றபடி ஒரு பையை நீட்டினார் வேம்பு.


துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.


அருணாசலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.


வண்டி கிளம்ப ஆயத்தமானது.


”ஐயர்வாள்! நான் நேற்றைக்கு திருச்செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”, என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.


வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணாசலத்துக்கு விடை கொடுத்தார்.


வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். திருச்செந்தூர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.


அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.


அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.


சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.


*Smt. Lalitha Ramachandran*