இன்னைக்கு ஒரு யு டியூப் வீடியோ பாத்தேன், பழைய வண்டிகள் 10 னு ஒருத்தர் போட்டிருந்தார், ஒடனே எல்லா வேலையையும் விட்டுபுட்டு என்னோட தூக்கத்தயும் விட்டுபுட்டு இத எழுத ஆரம்பிச்சுட்டேன், நான் ரமணன்
நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் கூட்டு முயற்சி தான் ஆரம்பத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை கொண்டு வந்தது. டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா (ஹீரோ சைக்கிள் கம்பெனி), எய்ச்சர் ராஜ்தூத், கவஸாகி பஜாஜ். இதில் பைக் செக்மென்ட்டில் பெட்ரோல் மைலேஜ் புரட்சி என்றால் அது ஹீரோ ஹோண்டா தான். அந்நாளில் அது ஹோண்டா சி டி 100 என முதலில் வந்தது. லிட்டருக்கு 80 கி மீ கொடுத்ததாக சொல்லப்பட்டது
இதுல சிறப்பு என்னனா இந்தியாவோட ராயல் என்பீல்ட் எய்ச்சர் வசம்தான் இப்போ இருக்கு
ஹீரோ ஸ்ட்ரீட் என ஒரு பைக் போட்டார்கள். அருமையான வண்டி. அதில் கிளட்ச் இல்லாமல் வடிவமைத்தார்கள். அது ஒரு புதுமை ஆனால் அதுவே வினையாகி போச்சுது. நமக்கு கிளட்ச் பிடித்தால் தான் அது வண்டி என ஒரு நினைப்பு. தவிரவும் பெட்ரோல் டேங்க் முன்னால இருக்கனும் அதையும் அதுல மாத்தி வெச்சாங்க. வண்டி காணாமலே போச்சு
ஸ்கூட்டிக்கு முன்னர் பஜாஜ் சன்னி என ஒரு வண்டி போட்டார்கள் அதுதான் பலரை ஈர்த்து ஒரு செக்மென்ட்டின் கேம் சேஞ்சர் என வழி வகுத்தது
அந்நாளில் பலர் ஸ்கூட்டர் வாங்க காரணம் ஸ்டெப்னி எனும் உபரி சக்கரம் இருக்கு, எங்கயாவது பஞ்சர் ஆனால் உடனே மாத்திக்கலாம் அப்டின்றதுதான். பின்னாளில் வந்த கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டரில் கூட இதை சேர்த்திருந்தார்கள். ஆமாம் கைனெடிக் ஹோண்டா முதலில் லாஞ்ச் ஆனதும் தோல்வி என தெரியுமா? பின்னர் ஓர் பெண்மணி அந்த வண்டியை இமய மலையில் எவரெஸ்ட்க்கு ஒட்டி சென்றதும் தான் அதற்கு ஒரு மவுசு வந்தது. நிற்க அது ஆட்டோமேட்டிக் கியர் என்பதை பலர் நம்பவே இல்லை. என்னுடைய +2 ஆசான் தெய்வத்திரு துரைராஜ் கண்ணன் (சோலைமலை மோட்டார்ஸ் அவர்களின் மாப்பிள்ளை) முதலில் இந்த வண்டியை பள்ளிக்கு கொண்டு வந்தார். ஆச்சரியமாக இருந்தது) அப்பொழுது அவர்கள் அதற்கு ஏஜென்சி எடுத்திருந்தார்கள்.
YEZDI பற்றி சொன்ன நீங்கள் JAWA பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். YEZDI யின் அப்பா இந்த JAWA. மலை ஏறுவதற்கு மிக பொருத்தமான வண்டி. விபத்தானதாக கேள்விப்பட்டதேயில்லை. இது தவிர ESCORT RAJDOOT பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்
என்பீல்ட் கம்பெனியின் புல்லட், பின்னாளில் கூடுதலாக மினி புல்லட். இதில் ஆச்சரியம் மிக சின்ன வண்டி mofa என்பதுவும் இவர்கள் தயாரிப்பே. வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் இந்த வண்டியை ஒட்டியிருப்பார்
ஸ்கூட்டரில் அந்நாளில் "எல் எம் எல் வெஸ்பா". இன்றைக்கும் வெஸ்பா புதிய ஸ்லிம் வடிவத்தில் வருகிறது. அதற்கும் முன்னர் விஜய், அப்புறம் லேம்பி லேம்பெர்ட்டா. இதில் வெஸ்பா வாங்க பதிவு பண்ணி வருடம் முழுவதும் காத்திருந்தோர் பல. பெயர் நினைவில் இல்லை, ஒரு ஸ்கூட்டர் கம்பெனி வண்டி விற்க முன் பணம் முழுவதுமாக வாங்கி அந்த பணத்தில் கம்பெனி ஆரம்பித்து அப்பறம் உற்பத்தி செய்து விற்றார்கள் என நினைவு
டிவிஎஸ் வண்டிகளுக்கு ஒரு வரலாறு உண்டு. டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸல், டிவிஎஸ் சாம்ப் , IND சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஷோகன், மாக்ஸ் 100 ஆர், சாமுராய், டிவிஎஸ் விக்டர், டிவிஎஸ் ஸ்கூட்டி, டிவிஎஸ் ஸ்கூட்டி இ எஸ்,
கொஞ்சம் மொபெட் பக்கமும் பார்வையை திருப்புங்க. டிவிஎஸ் 50, லூனா, ஹீரோ மெஜஸ்டிக், டிவிஎஸ் சாம்ப், ஹீரோ புக், சுவீகா
கொஞ்சம் வருத்தம். IND சுசுகி பத்தி சொல்லல்லேயே. புன்னகை மன்னன் படத்துல கமல் வருவாரில்லையா. அப்பறமா இந்த வண்டி டிவிஎஸ் சுசுகி அப்டினு மாறினாலும் ஒரிஜினல் IND சுசுகி இன்னிக்கும் ஒரு கிரேஸ் இருக்கு. அப்புறம் நம்ம ஊரு வண்டி, அஞ்சாத நிருபர் வீரபத்திரன் வண்டி M80 பத்தியும் சொல்லணும் என்ன ஒரு அருமையான வண்டி
இப்போதைக்கு இது போதும்.. வண்டிய சைடு ஸ்டாண்டு போட்டு சைடுல விடுவோம்
No comments:
Post a Comment