அறுபதுகளில் கொடி கட்டிப்பறந்த ஒரு நாடகக் குழு சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ். நாடகங்களுக்கு காலைக் காட்சி நடத்திய முதல் நாடகக் குழு அதுதான். அதேபோன்று சென்னை அண்ணா சாலையில் அப்போது அமைந்திருந்த சபையர் தியேட்டரில் நாடகம் நடத்திய முதல் நாடகக் குழுவும் அதுதான். அப்போதெல்லாம் எல்லா வார இறுதி நாட்களிலும் சோவின் நாடகங்கள் சென்னையில் தவறாமல் நடக்கும். தன்னுடைய எல்லா நாடகங்களிலும் அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் சோ விமர்சித்ததால் அவரது நாடகங்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக நடைபெற்றன.
அவருடைய நாடகத்தைப் பார்க்க ஒரு முறை வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா சோவின் துணிச்சலைப் பாராட்டிவிட்டு ”நான் போடவேண்டிய நாடகத்தை நீங்கள் போடுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் பச்சையாகப் பேசுவேன். நீங்கள் நாசுக்காகபேசுகிறீர்கள். ஆனால் இப்படி பேசினால் அரசியல் வாதிகளுக்கு உறைக்காது”என்றார்
சமூக நாடகங்களிலேயே அரசியல்வாதிகளை வறுத்தெடுக்கக் கூடிய சோ முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து “முகம்மது பின் துக்ளக்” நாடகத்தை நடத்துகிறார் என்ற செய்தி பரவியதும் அவரது அந்த நாடகத்துக்கு கூட்டம் அலைமோதத் தொடங்கியது. நாடகமாக நடந்தபோதே முன்னணி அரசியல் தலைவர்கள் அத்தனை பேரின் எதிர்ப்பையும் ஒட்டு மொத்தமாக சம்பாதித்த அந்த “முகம்மது பின் துக்ளக்” நாடகத்தைப் படமாக தயாரிக்க முன்வந்தார் நாராயணன்.
மூதறிஞர் ராஜாஜி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பலரிடமும் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த நாராயணன் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணி புரிந்தவர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருந்த மல்லிகார்ஜுன் என்பவரோடு இணைந்து “முகம்மது பின் துக்ளக்” நாடகத்தைப் படமாகத் தயாரிக்க முடிவு செய்த அவர் படத்தை இயக்குகின்ற வாய்ப்பை சோவுக்கே தந்தார். அதுதான் சோ இயக்கத்தில் உருவான முதல் படம்.
பிரதம மந்திரியை முக்கிய பாத்திரமாகக் கொண்ட அந்தக் கதையில் இந்திராகாந்தியில் அரசியல் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பாணி ஆகியவற்றை கிண்டல் செய்யும் காட்சிகள் பல இடம் பெற்றிருந்தன. அதனால் அந்தப் படத்தின் வளர்ச்சியைத் தடுக்க தி.மு.க.பல வழிகளில் முயன்றது. அப்போது எம்.ஜி.ஆருக்கும் சோவுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்ததால் அவரது தரப்பிலிருந்தும் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
அப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த கலைஞர் மு.கருணாநிதி, சினிமா உலகில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து கொண்டிருந்த
எம். ஜி. ஆர் ஆகிய இருவரின் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் திண்டாடினார்கள். காலையில் படப்பிடிப்பிற்கு வரும் ஒளிப்பதிவாளர் மாலையில் வர மாட்டார். முதல் நாள் படப்பிடிப்பிற்கு வரும் கேமிரா அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு வராது.அது மட்டுமின்றி “முகம்மது பின் துக்ளக்” படம் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே மிரட்டல்கள் விடப்பட்டன. அந்த கடுமையான மிரட்டல்களுக்கு நடுவே யார் கிடைத்தார்களோ அவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார் சோ
“முகம்மது பின் துக்ளக்” படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன். அந்தப் படத்திற்கு இசையமைக்கக் கூடாது என்று அவரும் மிரட்டப்பட்டார். ஆனால் அந்த மிரட்டலைக் கண்டு அஞ்சாமல் இரும்பு போல நின்றார் அவர்.
“எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படத்தில் கூட சோ என்ன கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நீங்க சோ வின் அரசியல் கருத்துக்களை விமர்சித்து ஒரு படம் எடுத்து அதுக்கு என்னை இசையமைக்கக் கூப்பிட்டால் கூட நான் நிச்சயமாக அதுக்கு இசையமைத்துத் தருவேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை இதற்கு இசையமைக்க நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டேன். ஆகவே அதிலிருந்து என்னால் பின் வாங்க முடியாது” என்று தன்னை மிரட்டியவர்களிடம் அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர்
மிரட்டல்கள் எல்லாவற்றையும் தாண்டி சோ வின் பக்கம் சிலர் துணிந்து நின்றதால் திட்டமிட்டபடி “முகம்மது பின் துக்ளக்” படப்படிப்பை நடத்தி முடித்தார் சோ. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாரானபோது 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்னால் அந்தப் படம் வெளி வரக்கூடாது என்று எண்ணிய சிலர் அந்தப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோது அங்கும் தங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தினர். அதனால் தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்க்காமல் நாட்களைக் கடத்தினர்.
ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சோ “முகம்மது பின் துக்ளக்” படத்தை விரைந்து தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைக் குழுவிற்கு தந்தி அடிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்ளவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தந்திகளை தணிக்கைக் குழுவிற்கு சோவின் வாசகர்களும் பொதுமக்களும் அனுப்பினார்கள். அதற்குப் பிறகு அந்த படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் பல வெட்டுக்களுடன் படத்தைத் திரையிட அனுமதித்தனர்
ஆனால் போராட்டம் அதோடு நின்று விடவில்லை. அடுத்த படியாக “முகம்மது பின் துக்ளக்” படத்தை திரையிடக்கூடாது என்று பல தியேட்டர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அப்படி இருந்தும் அந்த மிரட்டல்களை எல்லாம் மீறி சில தியேட்டர் அதிபர்கள் அந்தப் படத்தைத் தங்களது தியேட்டரில் வெளியிட்டனர்
பல தடைகளைக் கடந்து 1971 மார்ச் மாதம் ஐந்தாம் தேதி ஒரு வழியாக. “முகம்மது பின் துக்ளக்” படம் திரைக்கு வந்தது. படப்பிடிப்பில் தகராறு, தணிக்கையில் தகறாறு , தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை என்று ஆரம்பம் முதல் பல பிரச்னைகளை அந்த படம் சந்தித்ததால் அந்தச் செய்திகளே படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. அதன் காரணமாக ஐம்பது நாட்களைக் கடந்து ஓடிய அந்தத் திரைப்படம் தயரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் லாபகரமான ஒரு படமாக அமைந்தது
படம் வெளியான சில நாட்களில் தனது குருவான இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களுக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி எம். ஜி. ஆர், சிவாஜி ஆகிய இருவரையும் அழைத்தார். அவர்கள் இருவருமே விழாவிற்கு வர ஒப்புக் கொண்டனர். அப்போது எம். ஜி. ஆருக்கும் சோவிற்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லை என்பதை அறியாமல் அந்த விழாவை தொகுத்துத் தருகின்ற பொறுப்பை சோ விடம் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒப்படைத்தார்.
விழாவிற்கான அழைப்பிதழ்கள் தயாரானவுடன் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக எம்.ஜி.ஆரை எம்.எஸ். விஸ்வநாதன் சந்தித்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அழைப்பிதழில் சோவின் பெயரைப் பார்த்த எம்.ஜி.ஆர். ”எதற்காக சோவைக் கூப்பிட்டிருக்கே ?அந்த ஆள் பத்திரிகையில் பண்ணும் கலாட்டா போதாதா?” என்று அவரிடம் கோபமாகக் கேட்டார். அவர் அப்படி கேட்டதும் பதறிப் போன எம்.எஸ்.விஸ்வநாதன்“அப்போ ஒண்ணு செய்கிறேன். இப் போதே போய் சோவைப் பார்த்து நீங்க விழாவுக்கு வருவது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. அதனால் நீங்க விழாவிற்கு வராதீங்க என்று சொல்லி விட்டு வந்து விடுகிறேன்”என்று அப்பாவியாக எம்.ஜி.ஆரிடம் சொன்னார் .
உடனே தலையில் அடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் ”உனக்கு பாட்டைத் தவிர வேற எதுவுமே தெரியாதா?நீ போய் சோவிடம் அப்படி சொன்னால் என் பேருதானே கெட்டுப் போகும். சரி சரி, விழாவை நடத்து. அங்கே வந்து அவர் என்ன ரகளை பண்ணப்போகிறாரோ “ என்றபடி விஸ்வநாதனை வழியனுப்பி வைத்தார்.
அடுத்து சோ வை சந்தித்து எம்.ஜி.ஆர் சொன்னது எல்லாவற்றையும் அப்படியே அவரிடம் சொன்ன விஸ்வநாதன் “விழாவில் அரசியல் எதுவும் பேசி விட வேண்டம்”என்று அவரிடம் கேட்டுக் கொள்ள சிரித்தபடியே "சரி"என்று ஒப்புக் கொண்டார் சோ .
அந்த விழா மேடைக்கு எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்ததும் "இது வாத்தியார் விழா”என்று சோ மைக்கில் அறிவிக்க அங்கே கூடியிருந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் எல்லோரும் அந்த அரங்கமே அதிரும்படி பலமாக கை தட்டினார்கள். அடுத்து "நான் சொன்னது எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் களின் வாத்தியார் எஸ்.எம் சுப்பையா நாயுடுவைப் பற்றி. அந்த வாத்தியார் விழா இது ”என்று சோ சொன்னதும் மீண்டும் பலத்த கைதட்டல் ஒலி எழுந்தது. உடனே எம்.ஜி.ஆரைப் பார்த்து “என்ன வாத்தியாரே நான் சொன்னது சரிதானே”என்று கேட்டார் சோ.அவர் அப்படிக் கேட்டவுடன் ரசிகர்கள் மட்டுமின்றி எம்.ஜி.ஆரும் எழுந்து நின்று சிரித்தபடி கை தட்ட விழா களை கட்டத் தொடங்கியது.
எல்லா அரசியல் தலைவர்களையும் சோ விமர்சித்த போதிலும் அந்த விமர்சனங்களை எல்லாம் மீறி அவர்கள் எல்லோரும் அவரை விரும்பியதற்குக் காரணம் அவரது விமர்சனங்களில் இழைந்தோடிய நகைச்சுவை உணர்வுதான்.
No comments:
Post a Comment