Sunday, August 23, 2020

எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் . யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் எதை கொடுக்க வேண்டும் என்று

 ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.


கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.


அங்கிள்... அங்கிள்....


என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....


அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள்


prescription கொண்டுவந்தாயா குழந்தை????


அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா????


எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.


"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.


சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????


குழந்தை மென்று விழுங்கி சொன்னது


" மெரிக்கள்"


கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.


நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????


மெரிக்கள் அங்கிள்...


அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????


குழந்தை கண்ணீருடன் சொன்னது....


டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது.


அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.


அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.


வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார்.


அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....


டாக்டர்....


நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர்அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கின்றேன் விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சோபனை இல்லையென்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா ??..மருத்துவ செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கின்றேன் . அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது


பெற்றவர்கள் கண்ணீர் மல்க கடவுள் தான் உங்கள் ரூபத்தில் வந்து காப்பாற்றினார் என்று கூற அதற்கு மருத்துவர் இதற்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான்


காரணம் டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை குழந்தை அந்த MIRACLE என்ற வார்த்தையை மருந்து தான் என நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்


எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் . யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் எதை கொடுக்க வேண்டும் என்று அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்.

நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.


பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.


வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.


அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.


பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.


அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .


" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.


" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.


" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். 


பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.


படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.


நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். 


கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.


உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது  சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.


நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது.  யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்.

 பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார் 

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

 படித்ததில் பிடித்தது...


ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 


அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.


இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.


ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.


அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.


குளத்து நீரில் தலையில் கிரீடம், காதல் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பணப்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.


அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.


நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

சும்மாவா சொன்னார்கள் :: கோபுர தரிசனம் கோடி புண்னியம் என்று

கடவுளைக் காண முடியுமா?

 கடவுளைக் காண முடியுமா?

திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து …

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?” என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள் “உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ….,

ஒரு கேள்வி, தம்பீ……!


🙏அ 

இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”


எனக்கென்ன கண் இல்லையா…….?


இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” …!!


🙏ஆ 

“தம்பீ……!


கண் இருந்தால் மட்டும் போதாது……!!


கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!!


காது இருந்தால் மட்டும் போதுமா…..?


காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!


🙏இ 

அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!!


அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!!


உடம்பை நீ பார்க்கின்றாய்….!!


இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?”


“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”


“அப்பா…! அவசரப்படாதே…..!!


எல்லாம் தெரிகின்றதா….?”


🙏ஈ 

“என்ன ஐயா….!


தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….?


எல்லாம்தான் தெரிகின்றது….?”


“அப்பா….!


எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?”


“ஆம்! தெரிகின்றன.”…..!!


“முழுவதும் தெரிகின்றதா…?”


🙏உ 

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,


“முழுவதும் தெரிகின்றது” என்றான்….!!


“தம்பீ…!


உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?”


மாணவன் விழித்தான்.


“ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” “என்றான்.


தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!!


🙏ஊ 

இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!!


சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?”


“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!!


நிதானித்துக் கூறு….!!.”


“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!!


எல்லாம் தெரிகின்றது.’…!!’


🙏எ 

“தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?


மாணவன் துணுக்குற்றான்.


பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,


“ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.


🙏ஏ 

“குழந்தாய்…!


இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!!


முன்புறம் முகம் தெரியவில்லை……!!


நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!!


இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!


🙏ஐ 

அன்பனே…!


இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,


இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.” …!!


🙏ஒ 

இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு,


இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,


ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”


ஒரு கண்ணாடி…..


திருவருள்….!!


மற்றொன்று….


குருவருள்…….!!


🙏ஓ 

திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால்,


“ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்”….!!


🙏ஔ 

“தம்பீ…..!


“திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்”……,


அதனைக் “குருவருள் மூலமே பெறமுடியும்”…..!!


” திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”…..!!!


அந்த மனிதன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்…..!!


இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் முக்கியம்

 ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில் ,கையில் தூக்கு வாளியுடன். ஒரு 10 வயது சின்னக் குழந்தை, "அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம் என்றது...


ஹோட்டல் நடத்துபவர், "ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா.... இப்போ வாங்கிட்டுப்போ... தூக்கு வாளியை தா , சாம்பார் ஊத்தி தாரேன் என்றார் ...


இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.


குழந்தை, "சரி... அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... " என்றபடியே குழந்தை கிளம்பிவிட்டாள்.


அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்... "நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....?"


ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார்.... நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்... அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? 🤔குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார், அந்த அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி தான் சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்" நான் உணவு தரவில்லை என்றால் , அந்த குழந்தை , தன் தாயுக்காக திருட போவான் அல்லது அந்த தாய் , தன் குழந்தை பசிக்காக , தவறான பாதைக்கு செல்வாள் ... ஆனால், என்னால் _ நான் நஷ்டபட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளை தடுக்க முடிந்திருக்கிறது என்றார்...

பாசப் போராட்டம் - கொரோனா கால நிகழ்வு


என்னங்க மூட்டை?

ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்

ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார்

ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு

ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க

இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன்

அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல அதானே

வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன்

அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. 1000 வா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க

எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி போவீங்க.

சைக்கிள் ல போவேன்

ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா

நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ

இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம்

இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன்

போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் வரப் போறீங்க

நல்ல வார்த்தையே பேச மாட்டியா

அய்யய்யோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும்.

சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு

அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் சாப்பிட்டு வாங்க

சரி நான் கிளம்புறேன்

சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும்

அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் வைத்துக் கொண்டு கிளம்பினார்

ஒரு ஐந்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே சாலையில் தடுப்பு அமைத்து ஜீப்போடு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ.

பயம் தொற்றிக் கொண்டது.

அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார்

என்னா பெருசு எங்க கிளம்பிட்டே

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

சைக்கிளை ஓரமாக நிறுத்து.  அந்த மூட்டைய தூக்கிட்டு வா

அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது

மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே வைத்தார்

யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் பாரு

அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார்

என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க

ஐயா அயனாவரம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு.  மாப்பிள்ளை டிரைவரா இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா

ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே

தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா

என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு

63 வயசு ஆகுதுங்கய்யா

அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது.

கான்ஸ்டபிள் வந்தார்.

சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார்

உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற

சாரி சார்

அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

இல்லீங்க சார்

கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு  எடுத்து குடு

ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன்

சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல,

சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார்

அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க.  இது சும்மா பிரிஞ்ஜி தான்.  சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க

சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ

ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது.

நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்.

கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் பாட்டிலையும் வாங்கிக்கொண்டார்.

பெரியவரே அதோ ரூம் இருக்குல்ல. அங்க உக்காந்து சாப்பிடுங்க.

இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்

பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா

இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார்.

சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம்.

பெரியவரே சாப்பிட்டீங்களா

சாப்பிடங்கய்யா

ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா

ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா

சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது வாலண்டியர்ஸ்  போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர்.

 இந்த பனியனை  போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க.

அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார்.

இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார்.

சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.

அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. 

பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார்.

மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு

என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல

இல்லம்மா. இன்னொரு நாளைக்கு  கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா தனியா இருக்கும்.

அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா

நான் சாப்பிட்டேன்மா

ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா

நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார்

பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார்

மகள் ஒரு பையோடு வந்தாள்.

அப்பா  பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா.  அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம குடுத்துடுங்கப்பா.

பையை வாங்கிக்கொண்டார்.

மாப்பிள்ளை எங்கம்மா

அப்பா அரசாங்கத்துல  காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா

இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு

போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா

அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் சட்டைப்பையில்  இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்

அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா.

சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா.

அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்.

பகவான் கண்ணனின் மனதில் யார்

 அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.

அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.

மறைந்த இசை மாமேதை எம் எஸ் விசுவநாதன் அவர்களும் அரசியல் மேதை சோவும்

 அறுபதுகளில் கொடி கட்டிப்பறந்த ஒரு நாடகக் குழு சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ். நாடகங்களுக்கு காலைக் காட்சி நடத்திய முதல் நாடகக் குழு அதுதான். அதேபோன்று சென்னை அண்ணா சாலையில் அப்போது அமைந்திருந்த சபையர் தியேட்டரில் நாடகம் நடத்திய முதல் நாடகக் குழுவும் அதுதான். அப்போதெல்லாம் எல்லா வார இறுதி நாட்களிலும்  சோவின் நாடகங்கள் சென்னையில் தவறாமல் நடக்கும். தன்னுடைய எல்லா நாடகங்களிலும்  அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் சோ விமர்சித்ததால் அவரது நாடகங்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக நடைபெற்றன.


அவருடைய நாடகத்தைப்  பார்க்க ஒரு முறை வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா சோவின் துணிச்சலைப் பாராட்டிவிட்டு ”நான் போடவேண்டிய நாடகத்தை நீங்கள் போடுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் பச்சையாகப் பேசுவேன். நீங்கள் நாசுக்காகபேசுகிறீர்கள். ஆனால் இப்படி பேசினால் அரசியல் வாதிகளுக்கு உறைக்காது”என்றார்


சமூக நாடகங்களிலேயே அரசியல்வாதிகளை வறுத்தெடுக்கக் கூடிய சோ முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து “முகம்மது பின் துக்ளக்” நாடகத்தை நடத்துகிறார் என்ற செய்தி பரவியதும் அவரது அந்த நாடகத்துக்கு கூட்டம் அலைமோதத்  தொடங்கியது. நாடகமாக நடந்தபோதே முன்னணி அரசியல் தலைவர்கள் அத்தனை பேரின் எதிர்ப்பையும் ஒட்டு மொத்தமாக சம்பாதித்த அந்த “முகம்மது பின் துக்ளக்” நாடகத்தைப் படமாக தயாரிக்க முன்வந்தார் நாராயணன். 

மூதறிஞர் ராஜாஜி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற பலரிடமும் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த  நாராயணன் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணி  புரிந்தவர்.


திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருந்த மல்லிகார்ஜுன் என்பவரோடு இணைந்து “முகம்மது பின் துக்ளக்” நாடகத்தைப் படமாகத் தயாரிக்க முடிவு செய்த அவர் படத்தை இயக்குகின்ற  வாய்ப்பை சோவுக்கே தந்தார். அதுதான் சோ இயக்கத்தில் உருவான முதல் படம்.


பிரதம மந்திரியை முக்கிய பாத்திரமாகக் கொண்ட அந்தக் கதையில் இந்திராகாந்தியில் அரசியல் போக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பாணி ஆகியவற்றை கிண்டல் செய்யும் காட்சிகள் பல இடம் பெற்றிருந்தன. அதனால் அந்தப் படத்தின் வளர்ச்சியைத் தடுக்க தி.மு.க.பல வழிகளில் முயன்றது. அப்போது எம்.ஜி.ஆருக்கும் சோவுக்கும் இடையே  பனிப்போர் நடந்து கொண்டிருந்ததால் அவரது தரப்பிலிருந்தும் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

 

அப்போது ஆட்சிப் பொறுப்பிலே  இருந்த கலைஞர் மு.கருணாநிதி, சினிமா உலகில் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து  கொண்டிருந்த

எம். ஜி. ஆர் ஆகிய இருவரின்  எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் திண்டாடினார்கள். காலையில் படப்பிடிப்பிற்கு வரும் ஒளிப்பதிவாளர் மாலையில் வர மாட்டார். முதல் நாள் படப்பிடிப்பிற்கு வரும் கேமிரா அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு வராது.அது மட்டுமின்றி “முகம்மது பின் துக்ளக்” படம் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே மிரட்டல்கள் விடப்பட்டன. அந்த கடுமையான மிரட்டல்களுக்கு நடுவே யார் கிடைத்தார்களோ அவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தார் சோ 


“முகம்மது பின் துக்ளக்” படத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர் மெல்லிசை மன்னர்  எம். எஸ். விஸ்வநாதன். அந்தப் படத்திற்கு இசையமைக்கக் கூடாது என்று அவரும் மிரட்டப்பட்டார். ஆனால் அந்த மிரட்டலைக் கண்டு அஞ்சாமல் இரும்பு போல நின்றார் அவர்.


“எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படத்தில் கூட சோ என்ன கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. நீங்க சோ வின் அரசியல் கருத்துக்களை விமர்சித்து ஒரு படம் எடுத்து அதுக்கு என்னை இசையமைக்கக் கூப்பிட்டால் கூட நான் நிச்சயமாக அதுக்கு இசையமைத்துத் தருவேன். இந்தப் படத்தைப் பொறுத்தவரை இதற்கு  இசையமைக்க நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டு விட்டேன். ஆகவே அதிலிருந்து என்னால் பின் வாங்க முடியாது” என்று தன்னை மிரட்டியவர்களிடம் அழுத்தம் திருத்தமாக   சொன்னார் அவர் 


மிரட்டல்கள் எல்லாவற்றையும் தாண்டி சோ வின் பக்கம் சிலர்  துணிந்து நின்றதால் திட்டமிட்டபடி “முகம்மது பின் துக்ளக்” படப்படிப்பை நடத்தி முடித்தார் சோ. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாரானபோது 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்னால் அந்தப் படம் வெளி வரக்கூடாது என்று எண்ணிய சிலர்  அந்தப்படம்  தணிக்கைக்கு அனுப்பப்பட்டபோது அங்கும்  தங்கள் செல்வாக்கைப் பயன் படுத்தினர். அதனால் தணிக்கை அதிகாரிகள் படத்தைப் பார்க்காமல் நாட்களைக் கடத்தினர்.


ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சோ “முகம்மது பின் துக்ளக்” படத்தை விரைந்து தணிக்கை செய்ய வேண்டும் என்று தணிக்கைக் குழுவிற்கு தந்தி அடிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்ளவே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தந்திகளை  தணிக்கைக் குழுவிற்கு சோவின் வாசகர்களும் பொதுமக்களும்  அனுப்பினார்கள். அதற்குப் பிறகு அந்த  படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் பல வெட்டுக்களுடன் படத்தைத்  திரையிட அனுமதித்தனர்


ஆனால் போராட்டம் அதோடு நின்று விடவில்லை. அடுத்த படியாக “முகம்மது பின் துக்ளக்” படத்தை திரையிடக்கூடாது என்று பல தியேட்டர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அப்படி இருந்தும் அந்த மிரட்டல்களை எல்லாம்  மீறி சில தியேட்டர் அதிபர்கள் அந்தப் படத்தைத் தங்களது தியேட்டரில்  வெளியிட்டனர்


பல தடைகளைக் கடந்து 1971 மார்ச் மாதம் ஐந்தாம் தேதி ஒரு வழியாக. “முகம்மது பின் துக்ளக்” படம் திரைக்கு வந்தது. படப்பிடிப்பில் தகராறு, தணிக்கையில் தகறாறு , தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை என்று ஆரம்பம் முதல் பல பிரச்னைகளை அந்த படம் சந்தித்ததால் அந்தச் செய்திகளே படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. அதன் காரணமாக ஐம்பது நாட்களைக் கடந்து ஓடிய அந்தத் திரைப்படம் தயரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும்  லாபகரமான ஒரு படமாக அமைந்தது 


படம் வெளியான சில நாட்களில் தனது குருவான இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களுக்கு மிகப் பெரிய பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் அந்த விழாவில் கலந்து கொள்ளும்படி எம். ஜி. ஆர், சிவாஜி ஆகிய இருவரையும் அழைத்தார். அவர்கள் இருவருமே விழாவிற்கு வர ஒப்புக் கொண்டனர். அப்போது எம். ஜி. ஆருக்கும் சோவிற்கும் இடையே பேச்சுவார்த்தையே இல்லை என்பதை அறியாமல்  அந்த விழாவை தொகுத்துத் தருகின்ற பொறுப்பை சோ விடம் எம்.எஸ்.விஸ்வநாதன்  ஒப்படைத்தார். 


விழாவிற்கான அழைப்பிதழ்கள் தயாரானவுடன் அழைப்பிதழைக்  கொடுப்பதற்காக எம்.ஜி.ஆரை   எம்.எஸ். விஸ்வநாதன்  சந்தித்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அழைப்பிதழில் சோவின் பெயரைப் பார்த்த எம்.ஜி.ஆர். ”எதற்காக சோவைக் கூப்பிட்டிருக்கே ?அந்த ஆள் பத்திரிகையில் பண்ணும் கலாட்டா போதாதா?” என்று அவரிடம் கோபமாகக் கேட்டார்.  அவர் அப்படி கேட்டதும் பதறிப் போன எம்.எஸ்.விஸ்வநாதன்“அப்போ ஒண்ணு செய்கிறேன். இப் போதே போய் சோவைப் பார்த்து நீங்க  விழாவுக்கு வருவது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை. அதனால் நீங்க விழாவிற்கு வராதீங்க என்று சொல்லி விட்டு வந்து விடுகிறேன்”என்று அப்பாவியாக  எம்.ஜி.ஆரிடம்  சொன்னார் . 


உடனே தலையில் அடித்துக் கொண்ட எம்.ஜி.ஆர் ”உனக்கு பாட்டைத் தவிர வேற எதுவுமே தெரியாதா?நீ போய் சோவிடம் அப்படி சொன்னால் என் பேருதானே கெட்டுப் போகும். சரி சரி, விழாவை நடத்து. அங்கே வந்து அவர் என்ன ரகளை பண்ணப்போகிறாரோ “ என்றபடி விஸ்வநாதனை வழியனுப்பி வைத்தார்.


அடுத்து சோ வை சந்தித்து எம்.ஜி.ஆர் சொன்னது எல்லாவற்றையும் அப்படியே அவரிடம் சொன்ன விஸ்வநாதன் “விழாவில் அரசியல் எதுவும் பேசி விட வேண்டம்”என்று அவரிடம் கேட்டுக் கொள்ள சிரித்தபடியே "சரி"என்று ஒப்புக் கொண்டார் சோ .


அந்த விழா மேடைக்கு எம்.ஜி.ஆர் வந்து அமர்ந்ததும் "இது வாத்தியார் விழா”என்று சோ  மைக்கில் அறிவிக்க அங்கே  கூடியிருந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் எல்லோரும் அந்த அரங்கமே அதிரும்படி பலமாக கை தட்டினார்கள். அடுத்து "நான் சொன்னது எம்.எஸ்.விஸ்வநாதன் அவர் களின் வாத்தியார் எஸ்.எம் சுப்பையா நாயுடுவைப் பற்றி. அந்த வாத்தியார் விழா இது ”என்று சோ சொன்னதும் மீண்டும் பலத்த கைதட்டல் ஒலி  எழுந்தது. உடனே எம்.ஜி.ஆரைப் பார்த்து “என்ன வாத்தியாரே நான் சொன்னது சரிதானே”என்று கேட்டார் சோ.அவர் அப்படிக் கேட்டவுடன் ரசிகர்கள் மட்டுமின்றி எம்.ஜி.ஆரும் எழுந்து நின்று சிரித்தபடி கை தட்ட  விழா களை  கட்டத்  தொடங்கியது.


எல்லா அரசியல் தலைவர்களையும் சோ விமர்சித்த போதிலும் அந்த விமர்சனங்களை எல்லாம் மீறி அவர்கள்  எல்லோரும் அவரை விரும்பியதற்குக் காரணம் அவரது விமர்சனங்களில் இழைந்தோடிய நகைச்சுவை உணர்வுதான்.


சத்தியம் வத -உண்மையே பேசு-என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை

 ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான்.... அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்.... அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார்....


 சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான்.... நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்....


ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது... பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான்.... அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார்.... அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?


திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான்... மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது...

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன்... இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன்... அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்...


திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.

சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்....


மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான்....அவளுக்கு ஒரே சிரிப்பு... இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்...

அது என்னடி கதை? என்றான்....

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான்.... அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது.... அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்...

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்....


இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்....

இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டும் என்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான்... நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு....அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார்... இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு....


ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.


ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?


திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார்....அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்....


மறு நாள் அரசவை கூடியது....

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்....

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம்.... அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை....இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்....

அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார்....திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்....

அரசவைக்கு ஓடோடி வந்தார்....


நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள்... அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன....

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல... இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்..

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள்.. ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்....

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்....

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.

திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)...

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)

நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்...


ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.


முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!

புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

என்று வள்ளுவனும் செப்பினான்.... 

அடுத்த முறை சந்திக்கும்போது 

உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்று சொன்னார்.