Wednesday, February 3, 2016

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள்

Thanks to Ambjua Simi , cheif reporter in Asianet News. (Through face book sharing)
இன்றைக்கு செயற்கைகோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார், வானிலை எச்சரிக்கையை சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. ஆனால், தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.
சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது; ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.
நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..
பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை..

1 comment:

  1. நமது முன்னோர் அனைவரும் மகான்கள்

    ReplyDelete