Thursday, February 18, 2016

ஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு? thanks to Anmiga sangamam face book post


ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்ல்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போது. யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.
அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான்.
முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.
சற்று நிறம் கழித்து ஒரு ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.
சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.
இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.
அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.
இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினார்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தான். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.
“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”
இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான். இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.
சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.
“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.
————————————————-
வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.
அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

Tuesday, February 9, 2016

ஜகம் செழிக்க மகாமகத்தில் வேத பாராயணம்! - Thanks to Vikatan

ஜகம் செழிக்க மகாமகத்தில் வேத பாராயணம்!

http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=module&aid=115477
சாரமான வேத பண்டிதர் குடும்பத்தில் பிறந்தவர் பிரம்மஸ்ரீ எஸ்.ராமமூர்த்தி சாஸ்திரிகள். வயது 94. ஆனால், ஓர் இளைஞரைப் போல் சுறுசுறுப் பாகச் செயல்பட்டுக்கொண்டிருக் 
கிறார். ஸ்ரீசுக்ல யஜுர் வேதத்தை முறையாகப் பயின்று, அதில் கனம் என்னும் வேத பாடத்தையும் கற்றுத் தேர்ந்தவர். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்தும் தொழில் ரீதியாகச் செல்லாமல், வேத பாராயணத்துக்கு மட்டுமே தம்மைப் பூரணமாக அர்ப்பணித்து வாழ்கிறார். 

இதுவரை 6 மகாமகங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற சாஸ்திரிகள், இப்போது தரிசிக்கப்போவது ஏழாவது மகாமகம். எனில், இவரைத் தரிசிப்பதே நமக்கான பாக்கியம் அல்லவா?
‘வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ:’ என்று யஜுர் வேத சுவேதாஸ்வதர உபநிஷத மந்த்ரம் மென்மையாக ஒலிக்க, நாம் அவரைச் சந்தித்தோம். மகத்துவம் மிக்க மகா மகத்தின்போது இவர் தலைமையில் நிகழவுள்ள ஸ்ரீசுக்ல யஜுர் வேத பாராயணம் குறித்த விவரங்களை அறிந்து சிலிர்த்தோம்.

குலபதி பிரம்மஸ்ரீ இஞ்சிக்கொல்லை சிதம்பர கனபாடிகள் அவர்களால் 103 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் அபிமுக்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக வேத பாராயணம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாசி மகத்தின்போதும் மகாமகத்தின்போதும் தொடர்ந்து 10 நாட்கள் ஸ்ரீசுக்ல யஜுர் வேத பாராயணம் செய்வதைத் தொடங்கினார்.
 
அவருக்குப் பின் காஞ்சி காம கோடி பீடம் ஸ்ரீமஹா ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி அந்த மகத்தான புண்ணிய கைங்கர்யத்தைத் தொடரும் பாக்கியம் ராமமூர்த்தி சாஸ்திரிகளுக்குக் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து 60 வருட காலமாக மாசி மகம் மற்றும் 5 மகாமகங்களில் கலந்துகொண்டு 10 நாள் உற்ஸவத்தின்போதும் காலை மாலை இரண்டு வேளையும் சுக்ல யஜுர் சம்ஹிதை, க்ரம, உபநிஷத் மற்றும் கன பாராயணம் செய்து வருகிறார்.

கேட்பவர்க்குப் புண்ணியத்தையும், உலகத்துக்கு நன்மையையும் ஒன்றாகத் தரக்கூடியது வேத பாராயணம். இந்த மகத்தான கைங்கர்யத்தில் தம்மை ஆத்மார்த்தமாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பிரம்மஸ்ரீ எஸ்.ராமமூர்த்தி சாஸ்திரிகளை சந்தித்தபோது, தமக்கு இப்படி ஓர் அரிய பேற்றினை அருளிய காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகளின் கருணா கடாட்சத்தை நன்றியோடு நினைவு கூர்ந்ததுடன், மஹா ஸ்வாமிகளின் திருவடிகளில் தம்முடைய சரணாகதியைச் சமர்ப்பித்துக் கொள்வதாகவும் கூறினார்.

 படம்: க.சதீஷ்குமார்

Wednesday, February 3, 2016

அக்குவாஃபீனாவும்... அலற வைக்கும் ரகசியங்களும்!- ஒப்புக் கொண்டது பெப்ஸி!

அக்குவாஃபீனாவும்... அலற வைக்கும் ரகசியங்களும்!- ஒப்புக் கொண்டது பெப்ஸி!

Thanks to Vikatan Article
http://www.vikatan.com/news/india/58348-aquafina-bottled-water-is-just-tap-water.art

வீட்டிலுள்ள சமையலறைக் குழாய்களில் வரும் குடிநீரை, ஒரு லிட்டர் 20 ரூபாய் என்று எவரேனும் விற்றால் வாங்குவோமா? அவ்வாறு யாரேனும் வாங்கினால் கேலி செய்து சிரிப்போம்தானே? உலகப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் இந்த பாட்டில் தண்ணீரை வாங்கி குடிப்பவர்கள் அனைவருமே அத்தகைய கேலிக்குரியவர்கள்தான் என்பதே உண்மை.
பெப்ஸி நிறுவனத்தின் தயாரிப்பான, ’அக்குவாஃபீனா’, வெறும் சாதாரண பைப் தண்ணீரையே  சுத்திகரித்து மினரல் வாட்டர் எனற விற்பனை செய்து வருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இதேப் போல நெஸ்ட்லே நிறுவனத்தின் , ‘ப்யூர் லைஃப்’ மற்றும்  கோக் நிறுவனத்தின்  நிறுவனத்தின், ’தஸானி’ யும் இதே போல்தான்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, அமெரிக்க அரசின் ஒரு அங்கமான, பெருநிறுவன சோதனை வாரியம் (Corporate Accountability International),  அக்குவாஃபீனா வின் நீர் ஆதாரம்  குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, சாதாரண குழாய் நீரையே, சுத்திகரித்து விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டது பெப்ஸி நிறுவனம். அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளினால், தனது புதிய தயாரிப்புகளிலெல்லாம், ‘பொதுத்தண்ணீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவை (Public water source)’ என்று அச்சிடத் தொடங்கியது.
இந்நிறுவனம். ஆனால் பெப்ஸி பாட்டில்களில் எல்லாம் மலைகளுக்கிடையே தண்ணீர் ஓடி வருவது போல லேபிள்கள் ஒட்டப்பட்டிருக்கும். தங்கள் தயாரிப்பு இயற்கையானவை என்பதை காட்டவே இத்தகைய லேபிள்கள் அதில் ஒட்டப்பட்டு வந்தன. இந்த விவகாரத்தையடுத்து, அது போன்ற லேபிள்களையும் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து பல்வேறு சர்வதேச ஊடகங்கள் குடிநீர் தயாரிப்பின் பின்னணியிலுள்ள வணிக யுக்திகளைக் குறித்து ஆய்வு  மேற்கொண்டதில், வெளிவந்தத் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 

சுமார் 9.7 பில்லியன் கலன் நீரிலிருந்து 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டுவதே பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கம். இதில் ஒரு கலன் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர், 1.22 அமெரிக்க டாலர்கள். இதில் மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீர், 500 மிலி பாட்டில்களாக சந்தைப்படுத்தப்படுகிறது. அரை லிட்டர் குடிநீரின் விலை, 16.9 செண்ட்கள். 

மொத்தத்தில், சாதாரணக் குழாய் நீர், சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர் என்ற பெயரில் சுமார் 2000 மடங்கு விலையேற்றம் செய்யப்பட்டு மக்களிடம் சந்தைப்படுத்தப்படுகிறது.

மேலும் இந்த பாட்டில்களைத் தயாரிக்கப் பயன்படுத்தபடும் பிளாஸ்டிக்குகளும் , அவற்றைப் பதப்படுத்தப் பயன்படும் பல்வேறு இரசாயனங்களும், மனித உடலிலுள்ள நரம்புகளையும், சுரப்பிகளையும் பாதிக்கும் தன்மை வாய்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது  (Endocrine disrupting chemicals).

இது மட்டுமன்றி பாலியல் உறவுக்கு அடிப்படைத் தேவையான முக்கியச் சுரப்பிகளான  ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆண்ட்ரோஜென் ஆகியவற்றையும் இது பாதிக்கிறது என்கிறது ஆய்வுத் தகவல்.மேலும் அதிரடிச் சோதனைகளுக்கோ, நேரடி ஆய்வுக்கோ இந்நிறுவனங்களை ஆட்படுத்த முடியாத சட்டப் பாதுகாப்பு இருப்பதால், இவர்களின் செயல்முறை விளக்கங்களும் மர்மமாகவே உள்ளன.

இத்தகைய நிறுவனங்கள்தான் நம் தாமிரபரணிக்குக் குறி வைக்கின்றன என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

-ச.அருண்
மாணவப் பத்திரிக்கையாளர்.

பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள்

Thanks to Ambjua Simi , cheif reporter in Asianet News. (Through face book sharing)
இன்றைக்கு செயற்கைகோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார், வானிலை எச்சரிக்கையை சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. ஆனால், தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக்கொண்டார்கள். அதுதான் வெள்ள அபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்கு கல் மண்டபம்.
தாமிரபரணி ஆற்றின் மையத்தில் சங்கு கல்மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்வார்கள்.
சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது; ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்துவிட்டது என்று அர்த்தம். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.
நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டோம். வெள்ளம் வடியத் தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். சங்கின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ள அபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்..
பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்கு கல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ஒரு சில இடங்களில் மட்டும் இந்த மண்டபங்கள் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம் வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலை செய்கிறதா என்று தெரியவில்லை..

'டோல்கேட்' கட்டணம் தடை கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க அவகாசம் Thanks to Dinamalar

'டோல்கேட்' கட்டணம் தடை கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க அவகாசம் Thanks to Dinamalar
http://www.dinamalar.com/news_detail.asp?id=1447781

மதுரை: நான்குவழிச் சாலைகளில் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ.,வெங்கட்ரமணா தாக்கல் செய்த மனு:
மத்திய அரசின் சாலை போக்குவரத்துத்துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 60 கி.மீ., இடைவெளிக்கும் 'டோல்கேட்' மூலம், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கின்றனர். 'டோல்கேட்' மூலம் ஆண்டுக்கு 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு சாலை வரியாக 6 ரூபாய் வசூலிக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 25ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இந்தியாவில் 1980 க்கு முன், வாகன உற்பத்தி ஆண்டுக்கு 2 லட்சமாக இருந்தது. தற்போது 6 கோடியாக உயர்ந்துள்ளது. வாகன விற்பனை மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதனால் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க வேண்டிய அவசியமில்லை.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் (மதுரை உட்பட 13 மாவட்டங்கள்) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) அல்லது ஏஜன்ட் மூலம் 'டோல்கேட்' கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். 'தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008 (டோல் கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல்) செல்லாது' என உத்தரவிட வேண்டும். இவ்வாறு, வெங்கட்ரமணா மனு செய்திருந்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர், ''இவ்வழக்கு 2015 செப்டம்பரில் தாக்கல் செய்தும், இதுவரை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை,'' என்றார். மத்திய அரசு பிப்.,18ல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். 

மனிதனும் தெய்வமாகலாம்! - 35 - Thanks to Vikatan


http://www.vikatan.com/article.php?module=magazine&aid=115490

மனிதனும் தெய்வமாகலாம்! - 35

நீயும் பிரம்மம்... நானும் பிரம்மம்!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்
னிதனின் மனம் மிகவும் விசித்திரமானது. அது ஒரு சமயம் இருந்ததைப் போல, அடுத்த விநாடி இருப்பது இல்லை. 

ஒருவன் நடந்துபோய்க் கொண்டிருந்தான். கைகளில் காசு எதுவும் இல்லை.இவன் வறுமையைத் தீா்ப்பதைப்போல, இவனுக்கு முன்னால் ஐம்பதடி தூரத்தில் ஒரு பண மூட்டை இருந்தது. ஆனால்...
அது தெரியாத அந்த மனிதனோ, ‘வீதியோ இப்போது காலியாக இருக்கிறது. ஒரு ஐம்பதடி தூரம் நாம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பார்க்கவேண்டும். கண்ணை மூடிக் கொண்டு வீதியில் நடந்தேன் என்று நண்பா்களிடம் பெருமையாகச் சொல்லலாம்’ எனத் தீா்மானித்து, கண்ணை மூடிக்கொண்டு நடந்தான். பணமூட்டை இருந்த இடத்தைத் தாண்டி சற்று தூரம் போனதும் கண் ணைத் திறந்தான். மகிழ்ச்சி தாங்கவில்லை அவனுக்கு. ‘ஹ! கண்ணை மூடிக்கொண்டு வீதியில் நடப்பேனாக்கும்’ என்று தற்பெருமை பேசியபடியே போய்விட்டான்.

இது கதையில்லை. நடப்பு உண்மை இது. இதைச் சொல்கிறது கைவல்லிய நவநீதம். 

“வினைகள் அனைத்தையும் வேரோடு வீழ்த்தும் ஞான வழியிருந்தும், தேவா்கள் உட்பட அனைவரும் படுகுழியில் விழுந்து மறைகின்றாா்களே. இது ஏன்?” எனச் சீடன் கேட்கிறான். குரு பதில் சொல்கிறார்.

அழிவிலாத தற்பதந்தனை மைந்தனே!
    அக முகத்தவர் சேர்வார்
வழி நடப்பவர் பராமுகம் ஆகினால்
    மலர்ந்த கண் இருந்தாலும்
குழியில் வீழ்வர் காண் அப்படி வெளிமுகம்
    கொண்டு காமிகள் ஆனோர்
பழி தரும் பிறவிக்கடல் உழலுவார்
    பரகதி அடையாரே!

(சந்தேகம் தெளிதல் படலம்-53)


அகக்கண் கொண்டு பார்ப்பவா் பரப்பிரம்ம நிலை அடைவார்; அது இல்லாதவா்கள், கண்கள் திறந்து இருந்தாலும் குழியில்தான் விழுவா். அவ்வாறு புறக்கண்களால் உலகத்தைப் பார்த்து, உலகத்தில் உள்ள பொருட்களை அனுபவிப்பதே வாழ்க்கை என்ற நோக்கம் உடையவா்கள், மறுபடியும் மறுபடி யும் பிறந்துதான் ஆகவேண்டும். பழிபாவங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்கிறார் குருநாதா்.
இப்பாடலில் ‘வெளிமுகம் கொண்டு காமிகள் ஆனோர்’ எனும் வார்த்தைகள் மிகவும் பொருள் பொதிந்தவை. அதாவது... பலவற்றையும் பார்ப்பது தவறு இல்லை. அவை அனைத்தின் மீதும் விருப்பம் கொண்டு, எப்படியாவது அவற்றை அடைந்தே தீருவது என வெறிபிடித்து அலைவதுதான் தவறு. 

துயரங்களில் இருந்து தப்பிப் பிழைக்கமுடியாது என எச்சரிக்கிறது கைவல்லியநவநீதம். ‘காமிகள்’என்ற சொல்லின் பொருள் இதுவே. 

‘பளிச்’சென்று சொல்வதானால், பழங்களை விட்டுப் பாஷாணத்தை விரும்பி ஓடிக் கொண்டிருக்கிறோம். அதாவது, பழங்களின் இனிமையைப் பாஷாணத்தில்-விஷத்தில் தேடிக்கொண்டிருக்கிறோம். கண்களைத் திறந்து கொண்டே குழியில் விழுகிறோம்.

பாா்ப்பது எல்லாம் பரமனின் வடிவம் என்று, எவ்வளவுதான் படித்தாலும்-கேட்டாலும் பக்கு வம் முளைக்கமாட்டேன் என்கிறது. 

இதற்காக வருந்த வேண்டாம்! ‘எத்தனை விதங் களில் கற்கினும் கேட்கினும் என் இதயம்தான் ஒடுங்கவில்லையே’ எனத் தாயுமான ஸ்வாமிகளே கதறியிருக்கும்போது, நாம் எந்த மூலை?
“அதெல்லாம் சாரி ஸார்! நல்லது கெட்டது எல்லாம் கடவுள் படைப்புதானே? அந்த சாமி ஏன் அப்படிப் படைத்தது?” - தலைசிறந்த அறிவாளி களாக நம்மை நினைத்துக் கொண்டிருக்கும் நாம் அனைவரும் அகப்பட்டுக் கொள்வது இந்த இடத்தில்தான்.

நல்லது-கெட்டது என்று தெரிகிறது. இதன் மூலம் பகுத்தறியும் உண்மை புலப்படுகிறது. அடுத்தது, அவை எல்லாம் கடவுள் சிருஷ்டி என்றும் தெரிகிறது. இதன்மூலம் வேதாந்தம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதும் வெளிப் படுகிறது. இவ்வளவு தெரிந்திருந்தும், பிரச்னை ஏன் வருகிறது? விளக்கும் இருக்கிறது; மின்சாரமும் இருக்கிறது. பிறகு ஏன் வெளிச்சம் வரவில்லை? ஸ்விட்சைப் போடவில்லை. அதுதான் காரணம். அதுபோல...

நல்லது-கெட்டது தெரிகிறது. அவையெல்லாம் கடவுளின் சிருஷ்டி என்றும் தொிகிறது. ஆனால், அனுபவத்தில் வரமாட்டேன் என்கிறது. கடவுளைப் பற்றிய அடிப்படை உண்மையை உணா்ந்துகொள்ள இயலவில்லை. 

ஸ்வாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸா் இதற்கு ஓா்அற்புதமான உதாரணக் கதை சொல்லுவார்.

அனைத்தும் பிரம்மம் என்று பாடம் படித்த ஒரு மாணவன் வீதியில் போய்க்கொண்டிருந்தான். எதிரில் பட்டத்து யானை மதம்பிடித்து சீறியபடி வந்துகொண்டிருந்தது. 

யானையின் மேலிருந்த மாவுத்தன், வீதியின் நடுவில் போய்க்கொண்டிருந்த சிறுவனைப் பார்த்தார்.
``ஏய்! ஏய்! யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடு! ஓடு! ஓரமாக ஓடு!” எனக் கத்தினார்.
பிரம்மத்தைப் பற்றிப் பாடம் படித்திருந்த மாணவனோ, ‘நானும் பிரம்மம். யானையும் பிரம்மம். நான் ஏன் பயந்து ஓடவேண்டும்?’ என எண்ணி ஓடாமல் இருந்தான். ஆனால், யானை; சிறுவனை நெருங்கி, துதிக்கையால் பிடித்துத் தூர வீசி எறிந்தது.

கீழே விழுந்த சிறுவன் ஒருவழியாகச் சமாளித்து, குருநாதரிடம் போய், ‘‘பிரம்மம் பிரம்மத்தைத் தாக்கியது ஏன்?” என விரிவாகக் கூறி முறை யிட்டான். குருநாதரோ, ‘‘சரியப்பா! பாகன் என்ற பிரம்மம் உன்னை விலகச் சொல்லி எச்சாித்தது அல்லவா?அந்தப் பிரம்மத்தின் வார்த்தையை நீ ஏன் கேட்கவில்லை?”என்றார்.

பிரம்ம தத்துவத்தை அந்த மாணவன் விபரீதமாகப் புரிந்துகொண்டு, ஞானம் போதித்த குருநாதரிடமே விபரீதமாக வாதம் செய்ததைப் போலத்தான், நாமும் ஏதோ படித்துவிட்டு, யார் என்ன நல்லது சொன்னாலும் வாதம் செய்வதில் முனைகிறோமே தவிர, அடிப்படை உண்மையை உணரவில்லை. அறியாமை என்கின்ற யானை, நம்மைத் தூக்கிப் போட்டுவிடுகிறது. 

ஆகையால், `நல்லது-கெட்டது எல்லாமே கடவுளின் சிருஷ்டிதானே' என்ற வாதம், வாதத்துக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர,  வாழ்க்கைக்கு உதவாது. இத்தகவலை அடுத்த பாடலில் சொல்கிறது கைவல்லிய நவநீதம்.

சிறந்த நன்மையும் தீமையும் ஈசனார் 
    செய்விக்கும் செயல் அன்றோ?
பிறந்த சீவர்கள் என் செய்வார்?அவர்கள் மேல்
    பிழை சொலும் வகை ஏதோ?
துறந்த தேசிக மூர்த்தியே என்றிடில்
    சுருதி நூல் பொருள் மார்க்கம்
மறந்த மூடா்கள் வசனிக்கும் பிராந்தி காண்!
    மைந்தனே! அது கேளாய்!

(சந்தேகம் தெளிதல் படலம்-54)


நன்மையும் தீமையும் இறைவன் படைப்பு அல்லவா? அப்படியிருக்க ஜீவா்கள் செய்யும் செயல்களுக்காக, அவா்களைக் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? - எனும் கேள்விக்குக் குருநாதா் பதில் சொல்லத் தொடங்குகிறார்.

திகழ்ந்த ஈசனார் சிருட்டியும் சீவனார்
    சிருட்டியும் வெவ்வேறே
சகந்தனில் பொது ஈசனார் சிருட்டிகள்
    சராசரப் பொருள் எல்லாம்
அகந்தையாம் அபிமானங்கள் கோபங்கள் 
    ஆசைகள் இவை எல்லா(ம்)
நிகழ்ந்த சீவனார் சிருட்டிகள் ஆகும் காண்!
    நிமலனார் செயல் அன்றே.

    (சந்தேகம் தெளிதல் படலம்-55)


ஈசனுக்கு விருப்பு-வெறுப்பு என்று எதுவும் கிடையாது. ஆனால், நமக்கோ அகந்தை, வெறுப்பு-விருப்பு, கோபம் - என அனைத்துமே மண்டிக் கிடக்கின்றன.  அதாவது... தெய்வமாகத் திகழவேண்டிய நாம், அகந்தை முதலான தீய குணங்களால், கீழான நிலைக்குப் போய் விட்டோம் என்பது பொருள். 

தீமையை விளக்கி நன்மையை உணா்த்து வதற்காக உண்டானவற்றை, முறையில்லாமல் உபயோகித்துக்கொண்டு, முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம்! 

விளக்கை வைத்துக்கொண்டு இருளில் தேடிக் கொண்டிருக்கிறோம். இதில் விசேஷம்... எதைத் தேடுகிறோம் என்பதே தொியாமல் தேடிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான்.

இதையும்விட வருத்தப்பட வேண்டிய விஷயம், நினைவுகளே மனிதனைக் கொல்லும். நமக்குப் புரிகிறதோ இல்லையோ இதுதான் உண்மை!