Saturday, October 26, 2024

அட்ரஸ் அட்ராசிட்டி

 நன்றி: https://www.facebook.com/mahadevanchandrasekaran.c.9?mibextid=ZbWKwL

பல வருசமா மார்கெட்டிங் வேலைல இருந்ததால அட்ரஸ் சொல்றது, கண்டுபிடிக்கறது ரெண்டுமே நல்லாவே வரும். இப்ப கூகிள் மேம் இருக்கறதால எல்லாருக்குமே ஈசியா இருக்கு. ஆனா சில வருசங்களுக்கு முன்னால அந்த மாதிரி இல்ல. 


ஒரு கஸ்டமரை போய் பார்க்கனும். போன் பண்ணுவோம், ஒரு மெயின் ஏரியா வந்துட்டு கூப்பிடுங்கனு சொல்லிருப்பாரு. அதை நம்பிட்டு கிளம்பிடுவோம். அங்க போய்ட்டு கூப்ட்டா, "சார் நீங்க என்ன பண்றிங்க, அங்கிருந்து அப்படியே நேரா வாங்கனு சொல்லுவான்" 


அந்த ரோட்டுல நின்னு சுத்தி பார்த்தா நாலு ரோடு இருக்கும். இதுல ரோடுனு சொல்லவே மாட்டாங்க. 

"சார் நால் ரோடு இருக்கு சார், எந்த ரோட்ல வரனும். "


சார் நீங்க இருக்கற இடத்துக்கு நேர் எதிரான ரோட்ல வாங்க சார்.னு சொல்லுவானே தவிர எந்த ரோடுனு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டாங்க. 


இன்னும் சிலரு மேக்க போற ரோட்ல வந்தீங்கன்னா, அரை பர்லாங்ல வடக்கு பக்கமா ஒரு மண் ரோடு வரும்ங்க, அதுல நேரா வாங்கனு சொல்லுவாங்க. 


நமக்கு நல்ல நாள்ளேயே திசை தெரியாது. இதுல எங்க போய் கிழக்கும், மேற்கும். 


ஒரு சில சமயம் கஸ்டமர் சொன்ன இடத்துக்கு போய்ருவோம். ஆனா அவன் சொன்ன அடையாளம் எதையுமே கண்டுபிடிக்க முடியாது. மளிகை கடை இருக்கும், போன் பூத் இருக்கும், பேக்கரி இருக்கும், ஆனா அந்த பக்கி இது எதையும் சொல்லாது. "சார் ஒரு பொறிக்கடை இருக்கும் பாருங்க," னு சொல்லுவாங்க. ஆனா அதை மட்டும் நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது. கடைசில பார்த்தா அது ஒரு ஓரமா சந்துக்குள்ள இருக்கும். நாம போன நேரம் மத்தியான சாப்பாட்டுக்கு கடையை பூட்டிருப்பாங்க. 


"சார் இந்த இடத்துக்கு வந்துட்டு என் பேரை சொல்லுங்க, அவங்களே என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்ருவாங்கனு" கெத்தா சொல்லிட்டு போவாரு. சரினு அங்க போய் அந்த கஸ்டமர் பேர் சொன்னா யாருக்கும் தெரியாது. சுத்தி சுத்தி யார்கிட்ட கேட்டாலும் அவங்களுக்குள்ள பேசிப்பாங்களே ஒழிய நமக்கு பதிலே சொல்ல மாட்டாங்க. அப்புறமா ஒருத்தன் வந்து "அட நம்ம குட்டான் தான் இது, அவன் பேரு தான் ஜெகந்நாதன்னு சொல்லிட்டு போவான். அப்புறமா ஊருக்குள்ள நம்ம ஒரிஜினல் பேரு யாருக்கும் தெரியாது சார்னு இளிச்சிட்டே சொல்லுவாங்க. நமக்கு பத்திட்டு வரும். 


ஆனா ஒரு சிலர் கன் மாதிரி வழி சொல்லுவாங்க. "அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து ரைட் திரும்புங்க, மூணு ஸ்பீட் பிரேக்கரை தாண்டுங்க, அடுத்து லெப்ட் சைடு ஒரு மளிகை கடை வரும். அதை தாண்டின உடனே பாருங்க ஒரு ரைட் வரும். அதுலேர்ந்து கணக்கு வைங்க, அஞ்சாவது ரைட்டு திரும்புங்க. உள்ள வந்தீங்கன்னா, ரெண்டாவது லெப்ட், மூணாவது வீடு, கருப்பு கலர் கேட் இருக்கும் பாருங்க சார்னு சொல்லுவாங்க." அவங்க வீட்டு முன்னால போய் நிக்கலாம். அவ்வளவு கரெக்டா இருக்கும். 


சில பேர் நாம வழி சொன்னாலும் சரியா வரமாட்டாங்க. ஒரு ஏரியாக்கு வந்துட்டு கூப்பிடுவாங்க. அங்கிருக்கற பெரிய பெரிய லேண்ட்மார்க் சொல்லுவோம், எதுவுமே இல்லைனு சொல்லுவான். கடைசில பார்த்தா நாம சொன்ன இடத்துக்கு வந்துருக்கவே மாட்டாங்க. 


இப்ப கூகிள் ஆண்டவர் துணை இருக்கறதால எல்லா இடத்துக்கும் அவரே வழி காட்டறாரு. 


திரைப்படங்களில் எத்தனையோ அட்ரஸ் கேட்கும் காட்சிகள் வந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற இந்த சீனை மறக்க முடியாது. "கும்ப்டுக்கடா கழித" என்று பாலு சொல்ல, பக்தி சிரத்தையாக மனோகரும் கும்பிடுவார். 


வழி சொல்றது கூட ஒரு கலை தான்.


மீள் பதிவு

No comments:

Post a Comment