Tuesday, September 17, 2019

அடியவர் வாட, அமுது செய்கிறீரோ

கூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.

கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)

அன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை!
வீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்!
திருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்!

வேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும்! அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வையில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா!
அதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்! பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல! அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? வயிற்றில் கிள்ளாதா?

நேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது! இன்னும் சாப்பிடலை! ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார்...

அங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்! வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை! கூரேசன் சற்று மெலிந்தவர்! அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது! ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்!

பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!

அரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்! ஸ்ரீரங்கநாத அரவணாம்ருதம் நிவேதயாமி...
கோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது! ஆண்டாள் காதிலும் விழுகிறது! அவளோ விரக்திச் சிரிப்பில்...
"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"

அதிர்ந்தான் அரங்கன்! நைவேத்தியம் செல்லவில்லை! வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது! கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது!

திருமார்புத் தாயார்: "என்னங்க சாப்பிடலையா? என்ன அப்படிப் பலமான யோசனை?"

பெருமாள்: "கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ?-என்று நம்மைச் சிரித்து விட்டாள்!"

தாயார்: "சாப்பிட்டாச்சா? என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான்! அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்!
அவன் இல்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது! ஆனால் கேட்கவில்லை! நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்!"

பெருமாள்: (மெளனம்)

தாயார்: "சுவாமி, ஞாபகம் இருக்கா? காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் "தடங்"-கென்று மூடிய சப்தம் கேட்டதே?"

பெருமாள்: "ஆமாம்! அவன் அப்போது பெரும் செல்வந்தன்! அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான்! அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே?"

தாயார்: "ஆமாங்க! அப்பேர்ப்பட்ட செல்வன்! இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான்! நீர் அல்லவோ கேட்கக் கடவது? உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு?
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

பெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)

கண்ணா! நான் முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள்! பசி ஆவது ஒன்றில்லை! ஓவாதே நமோ நாரயணா என்று
எண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே!!!

வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்!

அம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்?
நாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள்! ="கண்டு"+அருளப்+பண்ணுதல்! :)
நைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு"+அருளப்+பண்ணுதல்! :)

அர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார்! சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார்! அவர் பேரு உத்தம நம்பி! வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்!

"சாமிக்கு நைவேத்தியம் காட்டினோமே! அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ? அணைக்கலியா? ஐயோ! நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....

உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை!
என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! இப்போதே போம்! நான் சொன்னதாகப் போம்! நடை திறந்து போம்! நடை திறப்பு தோஷமாகாது! தாயிடத்தில் குழந்தைக்குத் தோஷமேது?

நடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம்! தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம்! துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்!
துளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும்! இது நம் ஆக்ஞை!"

உத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது! அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்!
தான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார்! கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்!
கொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார்! மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது!

நடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...
ஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு! அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...

என்னடா இது? திருவிழா கூட இல்லை! இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...
உத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார்! துளசி-சடாரி சார்த்துகிறார்! அவர் கை நடுங்குகிறது! மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்!

ஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது! கூரேசன் கண்களில்...!
"அடியேன் நாயேனைப் பார்த்தா, "குழந்தைக்குத் தோஷமேது?" என்று கேட்டார்? ரங்கா, ரங்கா, ரங்கா!... "
தனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார்! மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்!

ஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: "நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா?"

"ஆமாங்க! நைவேத்திய மணி அடிச்சாங்க! அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை! சும்மா நினைத்தேன்!"

"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு! அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்?
இனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே!"

"என்னை மன்னிச்சிருங்க!"

சரி! பரவாயில்லை! உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்! இப்போ நீ சாப்பிடு"

தாயார்: "என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது? அதுவும் கூடையில்? நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா?"

பெருமாள்: "ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல? அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும்? எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது!"

தாயார்: "ஆமாங்க!"

பெருமாள்: "பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு! நீ முன்பு சொன்னது தாம்மா!
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

அந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின!

* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர்! தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்!
* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது!
கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!

எங்கள் கூரேசா!

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
 இல்லையில்லை.....இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

ஓம் நமோ நாராயணாய !

No comments:

Post a Comment