Wednesday, September 18, 2019

கர்மாஎன்பதுஎன்ன?

கர்மா!!

* 🍁 கர்மாஎன்பதுஎன்ன?  🍁*

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!
அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!
இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்.

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!
அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்.

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!
அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்.

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது.

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்.

பல சீடர்கள்
அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே.. “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

* 🌸 நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.*
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
*எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்.

Thanks to: Divine Thoughts whatsapp

இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான்

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவன் இருந்தான். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவனது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தான். கோவில், மற்றும் தன் வீடு , இரண்டும் தான் அவனது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறாரே… அவருக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டான்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் பணியாளன்  நிற்க, இறைவனோ இவனைப் போல பணியாளர் தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார். முதலில்,  ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பணியாளன் பார்க்கிறான். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறான்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா, எப்போதும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறார் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த பணியாளரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ பணியாளர் உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில்  நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உங்க வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.  என்னடா இது, கடவுள் நம்மை பாராட்டுவார் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறாரே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானார்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை  தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றார், இறைவன் கோபத்துடன்..
உடனே சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றார் இறைவன் புன்னகைத்தபடி.

நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறுபடுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

#ஓம்நமோநாராயணா..!

Tuesday, September 17, 2019

நேர்மையை விதையுங்கள்

நகரத்தாரின் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும்
நகரத்தாரான இராமசாமி செட்டியாருக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் வீட்டு ஆச்சியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

ஆச்சியும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமி செட்டியாரின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமி செட்டியாரும் தன் வீட்டு ஆச்சியிடம் : காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த ஆச்சி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார்.
செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமி செட்டியார் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.
அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி செட்டியார் மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி செட்டியார்.

முதலாளி இராமசாமி செட்டியாரிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி செட்டியார்.

முதலாளி இராமசாமி செட்டியாரைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமி செட்டியாரை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு:
நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி.
தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?

அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி செட்டியார் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கை நகரத்தார்களுக்கே உரியது. அதனை நீருபித்த இராமசாமி செட்டியாருக்கு கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும்

நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருவர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார்.

சுகி சிவமும் போக ஒப்புக் கொண்டார்.

எவ்வளவு சன்மானம் தர வேண்டும் என்று செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார்.

"உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்க" என்று சுகி சிவம் சொல்லிவிட்டார்.

நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும்,
அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன்,
ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார்.
(கவரில் ரூ 10,000/- இருந்தது)

மேலும் "மறு வாரம்  ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும்,
நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்க" என்று சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார்.

சுகி சிவமும் தனக்கு தெரிந்த,
நல்ல பாடக் கூடிய,
ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார்.

அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்க வேண்டும் என்று செட்டியார் கேட்க,

"உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" என்று சுகி சிவம் வழமை போல சொன்னார்.

"இல்ல....!!!இல்ல....!!!!!
தொகையை சொல்லுங்கன்னு" செட்டியார் வற்புறுத்தி கேட்கிறார்.

சுகி சிவமும் சரி ஒரு 2000/- ரூபாய் கொடுங்கலேன்னு சொன்னார்.

செட்டியாரும் நேரடியாக பாடகரிடம் தொடர்பு கொண்டு அவரையே பாட ஏற்பாடு செய்தார். 

அடுத்த வாரம், விழா சிறப்பாக முடிந்ததும் செட்டியார் 2 கவர்களில் பணம் போட்டு ஒட்டி பாடகரிடம் எடுத்து வந்தார்.

ஒரு கவர்ல பாடகராகிய நீங்கள் என்னிடம் நிகழ்ச்சிக்குப் கேட்ட பணம் இருக்கு.

இன்னொரு கவர்ல சுகி சிவம் உங்களுக்காக தரச் சொன்ன பணம் இருக்கு.

உங்களுக்கு எந்த கவர் வேணுமோ அதை எடுத்துக்கோங்க என்றாராம்.

பாடகர் திகைச்சுப் போயி முழிச்சாராம்.

நாம கேட்ட பணத்தைவிட,
சுகி சிவம் சொன்ன தொகை குறைவா இருந்தா,
சிக்கலாயிடுமேன்னு யோசிக்கிறார்.

தன் கவரை விட, நம்மை சிபாரிசு செய்த சுகி சிவத்தை மதிக்க எண்ணி,
கடைசில சுகி சிவம் சொன்ன கவரையே வாங்கிகிட்டாராம்.

கவரை திறப்பதற்கு முன்னால் சுகி சிவம் பாடகரிடம் கேட்டார்:

நீங்கள் எவ்வளவு பணம் செட்டியார் கிட்ட கேட்டீங்க?

நான் முதலில் ஆயிரம் ரூவா கேட்டேன்.

அதற்கு அவர் ஆயிரமான்னு? கேட்டாரு.

பயந்து போய் நான் ஐநூறு தந்தா கூட போதும்னு சொன்னேன்.
என்றார் பாடகர்.

சரி, இப்போ கவரை திறந்து பாருங்க என்றார்  சுகி சிவம்.

கவரின் உள் ரூ:5,500/- இருந்ததைப் பார்த்து பாடகர் அசந்துட்டார்.
(2 கவரிலும் செட்டியார் அய்யா அதே தொகையை தான் வைத்திருந்தார்)

பாடகர் கேட்ட ஐநூறையும் + சுகி சிவம் சொன்ன 2,000/- ஐயும் + செட்டியார் தன் தகுதிக்காக ரூ:3,000/- சேர்த்தே செட்டியார் கொடுத்திருந்தார். 

இது 30 வருஷத்துக்கு முன்னால் நடந்தது.

உண்மை நிகழ்வு. கதையல்ல நிஜம்.

சுகி சிவம் சொல்ல வந்த நீதி என்னன்னா:

இறைவன் கிட்ட நாம கேக்கறப்போ,
நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கிறோம்.

அது தப்பு.

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும். 

அப்படிக் கேட்டா,
நாம கேட்பதைவிட,
அவன் தருவது அதிகமாக இருக்கும்.

எப்போவுமே நம்மை மட்டுமல்ல,
இந்த உலகையே படைத்து,
பரிபாளிக்கும் இறைவனிடம் நாம கேட்கும் போது,
நமது தேவை குறைவாகவே இருந்தாலும்,
பெருசு,பெருசா கேட்கனும். 

அவனுக்கு தெரியும் நம் தேவை.
நமக்கு தெரியும் அவனின் தாராள குணம். 

பின்ன எதுக்கு கொரச்சி கேட்டுக்கிட்டு?

அதுபோலவே,
நம் தேவை அறிந்து நமக்கு அவன் கொடுத்ததை,
நம்முடைய தேவைக்கு போக மீதத்தை,
அவன் சொல்லிய வகையில் செலவு செய்வதும்,

அடுத்தவர்களுக்கு உதவுவதும்,

மென் மேலும் அவன் அள்ளி அள்ளி நமக்கு தருவதற்கு ஏதுவாகும்.
🙏🙏🙏🙏

உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடு

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

 அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

 தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள்

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

அடியவர் வாட, அமுது செய்கிறீரோ

கூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.

கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)

அன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை!
வீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்!
திருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்!

வேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும்! அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வையில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா!
அதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்! பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல! அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? வயிற்றில் கிள்ளாதா?

நேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது! இன்னும் சாப்பிடலை! ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார்...

அங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்! வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை! கூரேசன் சற்று மெலிந்தவர்! அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது! ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்!

பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!

அரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்! ஸ்ரீரங்கநாத அரவணாம்ருதம் நிவேதயாமி...
கோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது! ஆண்டாள் காதிலும் விழுகிறது! அவளோ விரக்திச் சிரிப்பில்...
"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"

அதிர்ந்தான் அரங்கன்! நைவேத்தியம் செல்லவில்லை! வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது! கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது!

திருமார்புத் தாயார்: "என்னங்க சாப்பிடலையா? என்ன அப்படிப் பலமான யோசனை?"

பெருமாள்: "கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ?-என்று நம்மைச் சிரித்து விட்டாள்!"

தாயார்: "சாப்பிட்டாச்சா? என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான்! அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்!
அவன் இல்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது! ஆனால் கேட்கவில்லை! நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்!"

பெருமாள்: (மெளனம்)

தாயார்: "சுவாமி, ஞாபகம் இருக்கா? காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் "தடங்"-கென்று மூடிய சப்தம் கேட்டதே?"

பெருமாள்: "ஆமாம்! அவன் அப்போது பெரும் செல்வந்தன்! அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான்! அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே?"

தாயார்: "ஆமாங்க! அப்பேர்ப்பட்ட செல்வன்! இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான்! நீர் அல்லவோ கேட்கக் கடவது? உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு?
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

பெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)

கண்ணா! நான் முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள்! பசி ஆவது ஒன்றில்லை! ஓவாதே நமோ நாரயணா என்று
எண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே!!!

வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்!

அம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்?
நாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள்! ="கண்டு"+அருளப்+பண்ணுதல்! :)
நைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு"+அருளப்+பண்ணுதல்! :)

அர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார்! சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார்! அவர் பேரு உத்தம நம்பி! வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்!

"சாமிக்கு நைவேத்தியம் காட்டினோமே! அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ? அணைக்கலியா? ஐயோ! நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....

உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை!
என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! இப்போதே போம்! நான் சொன்னதாகப் போம்! நடை திறந்து போம்! நடை திறப்பு தோஷமாகாது! தாயிடத்தில் குழந்தைக்குத் தோஷமேது?

நடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம்! தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம்! துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்!
துளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும்! இது நம் ஆக்ஞை!"

உத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது! அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்!
தான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார்! கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்!
கொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார்! மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது!

நடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...
ஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு! அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...

என்னடா இது? திருவிழா கூட இல்லை! இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...
உத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார்! துளசி-சடாரி சார்த்துகிறார்! அவர் கை நடுங்குகிறது! மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்!

ஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது! கூரேசன் கண்களில்...!
"அடியேன் நாயேனைப் பார்த்தா, "குழந்தைக்குத் தோஷமேது?" என்று கேட்டார்? ரங்கா, ரங்கா, ரங்கா!... "
தனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார்! மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்!

ஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: "நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா?"

"ஆமாங்க! நைவேத்திய மணி அடிச்சாங்க! அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை! சும்மா நினைத்தேன்!"

"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு! அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்?
இனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே!"

"என்னை மன்னிச்சிருங்க!"

சரி! பரவாயில்லை! உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்! இப்போ நீ சாப்பிடு"

தாயார்: "என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது? அதுவும் கூடையில்? நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா?"

பெருமாள்: "ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல? அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும்? எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது!"

தாயார்: "ஆமாங்க!"

பெருமாள்: "பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு! நீ முன்பு சொன்னது தாம்மா!
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

அந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின!

* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர்! தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்!
* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது!
கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!

எங்கள் கூரேசா!

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
 இல்லையில்லை.....இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

ஓம் நமோ நாராயணாய !