Saturday, February 16, 2019

நாடக காவலர் ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு

'' நாடக காவலர் '' ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு !  தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு. 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.                                                                                    சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரைஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்பவான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன. திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனாகவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திருக்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம்.  இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", வல்லவனுக்கு வல்லவன் , குழந்தைக்காக  போன்ற படங்களைச்
 சொல்லலாம்                                                                         1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.

அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.                                                                          இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன். அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு.

தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன. சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு.

தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள். அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார். 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார்.  திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார். இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார். சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும். . வாழ்க ஆர்.எஸ்.மனோகர் புகழ்!                                                                         நன்றி  பாரதி பயிலகம் வலைப்பூ .

தப்பு கணக்கு போடாதீங்க

*தப்பு கணக்கு போடாதீங்க*

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

நான் பொறுமையாக காத்திருந்தேன்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*

*நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்...*

நன்றி...

✨வாழ்க வளமுடன், நலமுடன்✨

நேர்மையை விதையுங்கள்


'' நேர்மையை விதையுங்கள்''..
...........................................

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்,

உங்களுக்கு ஒரு போட்டி வைக்கபோகிறேன். யார் வெற்றி அடைகிறார்களோ, அவர்தான் அடுத்த மேலாளர் என்றார்.என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ, அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்னதை சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கிவிட்டேனா? என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல வில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.

மனைவி அவனை சமாதானம் செய்து, நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியது இல்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் வித விதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள். உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகறீர்கள் என்றார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்று இருந்தான். அவனை அருகே வருமாறு அழைத்தார்.

ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலா வாரியாக சொன்னான்.
முதலாளி ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டு கொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.

ரபீக்கிற்க்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பி போனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா, அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.

ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்.ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

ஆம்.,நண்பர்களே..,

நாம் சொல்லும் சொல், பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம்தான்..உண்மையும் நேர்மையும் உங்களை பாதுகாக்கும்..

நேர்மை ஒரு போதும் வீண் போகாது.. நேர்மையை விதையுங்கள் ; பதவியும் பணமும் தேடிவரும்....💐🌹🌺

கண்ணா… எனக்குக் கவலைகள் வேண்டும். கஷ்டங்கள் வேண்டும்

நன்றி : ஆனந்த விகடன்

அன்பே தவம் - 13

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன் - ஓவியம்: பாலகிருஷ்ணன்

பாரதப் போர் முடிவுற்றது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூரண அமைதி! தர்மன் அரியணை ஏறிவிட்டான்; அறம், ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டது. கண்ணன், பாண்டவர்களிடமிருந்து விடைபெறுகிற தருணம். அப்போது ஓர் உருவம் தயங்கித் தயங்கி கண்ணனை நோக்கி வந்தது. `யார் அது?’ கண்ணன் உற்றுப் பார்த்தான். அது, பாண்டவர்களின் தாய் குந்தி. வந்தவள், கண்ணனைப் பார்த்துக் கைகூப்பினாள்.

``அத்தை, என்னிடம் வர ஏன் இவ்வளவு தயக்கம்? எதையோ கேட்க வேண்டும் என்று நினைக்கிறாய், எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்.’’

``எனக்கு ஒரு வரம் வேண்டும்.’’

``என்ன வரம்?’’

``கண்ணா… எனக்குக் கவலைகள் வேண்டும். கஷ்டங்கள் வேண்டும்…’’ சட்டென்று தயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளிவந்தன குந்தியின் வார்த்தைகள்.

பதறிப்போனான் கடவுள் கண்ணன். ``என்ன அத்தை இது! நீ படாத கஷ்டங்களா? உன் தலைமகன் கர்ணனைக்கூட அவன் இறந்த பிறகுதான் ஊரறிய மடியில் கிடத்தி, உன்னால் அழ முடிந்தது. உன் மற்ற பிள்ளைகளும் பல ஆண்டுகள் காட்டில்தான் வாழ்ந்தார்கள். பேரப் பிள்ளைகளைத் தொலைத்தாய். தீய பிள்ளைகளைப் பெற்றவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நல்ல பிள்ளைகளைப் பெற்றிருந்தும், வாழ்நாள் முழுவதும் நீ துன்பப்பட்டாய். வெயிலில் அலைந்து களைத்த உனக்கு இளைப்பாற இப்போதுதான் நிழல் கிடைத்திருக்கிறது. இப்போது ஏன் கஷ்டத்தை வேண்டுகிறாய்?’’

``எனக்குக் கவலைகள், துன்பங்கள், துயரங்கள் வந்த நேரத்திலெல்லாம்  `கண்ணா…’ என்று உன்னை அழைப்பேன்.  நீ உடனே ஓடி வருவாய். என் அருகிலிருப்பாய். என் இன்னல் தீரும். ஆக, கஷ்டங்கள் என்னோடிருந்தால் நீயும் என் அருகிலிருப்பாய். அதற்காகத்தான் அந்த வரம் கேட்கிறேன்’’ என்றாள் குந்தி.

கஷ்டங்கள், கவலைகள் எதற்கு? திருவள்ளுவர் சொல்கிறார்...

`தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.’

நம் கவலை விடைபெற வேண்டும்; நீங்க வேண்டும்; கண்ணீர் மாற வேண்டும். அதற்கு என்ன வழி? தனக்கு உவமை இல்லாத, பிறப்பு இறப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பணிய வேண்டும்.

நம் உடல் எடை குறைவதற்கு மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்,  நடக்கச் சொல்கிறார்கள். ஆனால், நம் இதயத்தின் சுமையான கவலைகளைக் குறைக்க என்ன செய்வது? நம் மூளைப்புலமும் சிந்தனைப்புலமும் அறத்தின் பாதையில் நடந்தால், கவலைகள் நம்மை அணுகாது.

நமக்கு நிறைய ஆசைகள். உதாரணத்துக்கு ஒன்று... கடைவீதி வழியே போகிறோம். ஒரு கடையில், நறுமணத்தோடு இனிப்பு மிகுந்த அல்வா காத்திருக்கிறது; நம் கண்ணைப் பறிக்கிறது; சுண்டியிழுக்கிறது; `வா… வா...’ என்றழைக்கிறது. நாம் கடைக்குள் நுழைகிறோம். அல்வாவை வாங்கிச் சாப்பிடுகிறோம். திரும்ப அடுத்த நாள் அந்த வழியே போகிறபோது, அதே அல்வா அழைக்கும். `பணம் இருக்கிறதா?’ என்று பையைத் தடவிப் பார்ப்போம். உள்ளே நுழைவோம். ஒரு கட்டத்தில் அது பழக்கமாகவே ஆகிவிடும். முதல் நாள் அல்வாவை நாம் சாப்பிட்டோம். பிறகு அல்வா நம்மைச் சாப்பிட ஆரம்பித்துவிடும். இப்படித்தான் ஆசை என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறபோது நாம் சிரமங்களைத்தான் சந்திக்கவேண்டியிருக்கும்.

தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள்.  எதற்காக? இறவாமையைத் தருகிற, முதுமையை ஒத்திப் போடுகிற மருந்தான அமுதம் தங்களுக்கே வேண்டும் என்பதற்காக. ஒருபுறம் தேவர்கள்; மறுபுறம் அசுரர்கள். பாற்கடலைக் கடைந்தபோது முதலில் அமுதம் கிடைக்கவில்லை. ஆலகால விடம்தான் கிடைத்தது. உலகத்தை, உயிர்க்குலத்தை அழிக்கிற அந்த நஞ்சு பெரிய பிரளயமாக, பொங்கிப் பெருகிப் பரவியது. அமுதத்தைப் பெறுவதற்கு ஆலாய்ப் பறந்தவர்கள், ஆலகால விடத்தைக் கண்டவுடன் காணாமல் போனார்கள்.

யார் இந்த விடத்திடமிருந்து உலகத்தையும் உயிர்க்குலத்தையும் காப்பது? எல்லோரும் திகைத்து நின்றார்கள். உலகத்தின் தலைவன், `தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்’ என்பவனான இறைவன்தான் அந்த விடத்தை உண்டான். உலக உயிர்க்குலத்தைக் காப்பாற்றுவதற்காக நஞ்சை உண்டான். அந்த விடம், அவன் தொண்டையிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அவனுக்கு `திருநீலகண்டன்’ என்று பெயர். கருத்திருக்கிற கண்டத்துக்கு உரியவன். அந்த வடிவம், தியாகத்தின் வடிவம். அது, தலைமைப் பண்புக்குரிய ஒட்டுமொத்த அடையாளம். 

உலகத்தையே வெல்லப் புறப்பட்டான் அலெக்ஸாண்டர். பாலைவனப் பகுதியில் அவன் படை பயணம் செய்துகொண்டிருந்தது. கொளுத்தும் வெயில்; சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று.  இந்தச் சூழலில் அலெக்ஸாண்டரின் நா வறண்டு போனது. தண்ணீருக்குத் தவித்தது அவன் நாக்கு. அவன் தாகத்தை உணர்ந்த வீரர்கள், பல மைல் தூரம் பயணம் செய்து, ஒரே ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். அதை ஆவலோடு வாங்கிய அலெக்ஸாண்டர், கொஞ்சம் திரும்பிப் பார்த்தான். அவனைப்போலவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தாகத்தில் தவித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவ்வளவுதான்... தன் கையிலிருந்த குவளையைப் பாலைவன மணலில் வீசி எறிந்தான்.

``வீரர்களே… புறப்படுங்கள்...’’ என்று ஆணையிட்டான்.

படை வீரர்கள் தண்ணீர் அருந்தியவர்கள்போல, தாகமெல்லாம் தீர்ந்ததுபோல உற்சாகமாகப் புறப்பட்டார்கள். தன் தொண்டர்களுக்குக் கிடைக்காத எதுவும் தனக்குக் கிடைத்தால், அது வேண்டாம் என்று நினைப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு. தனக்கு, தனக்கு என வைத்துக்கொள்வதல்ல, மனிதர்களை அடிமைப்படுத்துவதல்ல, அதிகாரத்தை ஏவி ஏவல் செய்வதற்கான ஆட்களை வைத்துக்கொள்வதல்ல தலைமைப் பண்பு. அன்பால் மனிதகுலத்தோடு பின்னிப் பிணைந்து, தன் கீழே இருக்கிற தொண்டர்களையெல்லாம் அரவணைப்பதுதான் தலைமைப் பண்பு. அதுதான் இன்றைய சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. கருணையும் அன்பும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.

மெய்ப்பொருள் நாயனார் என்ற அடியவர். சிவனடியார் திருவேடத்தைக் கண்டாலே, நெருப்பிலிட்ட மெழுகைப்போல மனம் கரைந்து உருகுபவர். திருவெண்ணீறு தரித்த கோலத்தவரைக் கண்டால், `அவர்கள்தாம் சிவபெருமான்’ என்று விழுந்து விழுந்து வணங்குவார். அவர் வீரத்தில் வல்லவர்; நெஞ்சின் ஈரத்திலும் நல்லவர்.

முத்தநாதன் என்பவனால் மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் வெல்ல முடியவில்லை.   `எப்படி இவரை வெல்வது?’ எனச் சிந்தித்து ஒரு தந்திரம் செய்தான். உடைவாளை ஏடுகள்போல் ஒரு துணியில் சுற்றிக்கொண்டு, அவரைச் சந்திப்பதற்குச் சிவவேடப் பொலிவோடு போனான். நீண்ட சடை, நல்ல வெண்ணீற்றுக்கோலம், உருத்திராட்சம் அணிந்து போனான். சிவனே, சிவனடியார் வேடம் தரித்துவிட்டானோ என எண்ணி, விழுந்து வணங்கத் தோன்றும் தோற்றம்.

முத்தநாதன் அரண்மனைக்குள் நுழைந்தான். காவலர்கள் தடுத்தார்கள். ``இப்போது மன்னர் மெய்ப்பொருள் நாயனார் ஓய்வில் இருக்கிறார். செல்லக் கூடாது’’ என்றார்கள்.

காவலாளிகளைத் தள்ளிவிட்டு, ``உங்கள் மன்னருக்கு நான் ஆகமத்தை உணர்த்த வந்திருக்கிறேன்…’’ என்று துணியில் சுற்றிவைத்திருந்த உடைவாளை `ஆகமம்’ என்று காட்டிவிட்டு முத்தநாதன் உள்ளே போனான். மெய்ப்பொருள் நாயனார், தன் வாழ்க்கைத்துணையோடு இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்ததும் மன்னர், ``என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்.

``உங்கள் நாயகன் எடுத்துச் சொன்ன ஆகமப் பொருளை உங்களுக்கு உணர்த்த வந்திருக்கிறேன்.’’

“நான் செய்த பெரும்பாக்கியம். அமருங்கள்’’ என்று சொல்லி, அந்தப் போலித் துறவியை  பீடத்தில் அமர்த்திவிட்டு, அவன் காலடியில் அமர்ந்தார் மன்னர். ``ஆகமப் பொருளை உணர்த்துங்கள்’’ என்று கைகட்டி, வாய் பொத்தி, தலைகுனிந்து நின்றார்.

அப்போது முத்தநாதன் என்ன காரியம் செய்தான்? வாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனார் உடலில் செருகினான். ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தக் காட்சியை சேக்கிழாரால் வார்த்தைகளால் கூற முடியவில்லை. `வன்முறை’ என்ற அந்தச் செயல்பாட்டை, சொல்லாமல் தவிர்க்கிறார் சேக்கிழார். இந்தக் காட்சியைப் பெரியபுராணத்தில் அப்படியே அவர் எழுதவில்லை. `நினைந்த அப்பரிசே செய்ய…’ என்று குறிப்பிடுகிறார். ஒரு படுகொலை நடந்துவிட்டது. அதை, அந்த வன்முறையை `நினைத்ததை அப்படியே செய்துவிட்டான்’ என்கிறார். ஆனால், மெய்ப்பொருள் நாயனாரை, `மெய்த்தவ வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்’ என்று சுட்டிக்காட்டுகிறார். தன்மீது ஆயுதத்தைச் செருகி, உயிரை எடுத்தவனைத் தொழுது வென்றார் மெய்ப்பொருள் நாயனார். சேக்கிழார் வார்த்தைகளின் இனிமையைப் பாருங்கள்.

ஆக, வெற்றி யாருக்கு? வாளை எடுத்துச் செருகியவனுக்கா… செருகப்பட்ட வாளை உள்வாங்கிக்கொண்டு, சிரித்துக்கொண்டே அவனை மன்னித்தவருக்கா? இங்கே தோற்றவர், வென்றவர் ஆகிறார். அகிம்சைக்குக் கிடைத்த வெற்றி.

உலகத்தின் முதல் அகிம்சாவாதியாக மெய்ப்பொருள் நாயனார் நமக்குக் காட்சி தருகிறார். `சிவவேடப் பொலிவோடு இருப்பவர்தான் நமக்குக் கடவுள்’ என்ற அவரது கொள்கையின் வெளிப்பாடு நமக்குப் புரிகிறது.

அந்த நேரத்தில், தத்தன் என்ற மெய்க்காவலாளி உள்ளே நுழைய, ``தத்தா… இவர் நமர்.  நம்மவர். இவரைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் ஊர் எல்லையில் சேர்த்துவிடு…’’ என்று முத்தநாதனைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்து, தத்தன் அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டதை வந்து சொன்ன பிறகு, தன் உயிரை விட்டார் மெய்ப்பொருள் நாயனார். எவ்வளவு பெரிய பெருந்தன்மை; தோற்றவர், வென்றவர் ஆவது எவ்வளவு பெரிய நிலைப்பாடு!

புத்தரை ஒருவர் தன் வீட்டுக்கு உணவருந்த வரச் சொல்லிப்  பலமுறை அழைத்தார். ஒருநாள் புத்தர் அவர் இல்லத்துக்குச் சென்றார். அன்று அவர் விஷக்காளான் செடியை உணவாக சமைத்து அவருக்குப் பரிமாறினார். உணவருந்துவதற்கு முன்னர், தான் சாப்பிடப் போவது விஷம் நிறைந்தது என்பதை உணர்ந்த புத்தர், தன் சீடர்களிடம், ``இவன்தான் புத்தருக்கு கடைசியாக உணவளித்த பாக்கியவான் என்று உலகுக்கு அறிவியுங்கள்’’ என்று சொன்னார்.

`பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்’ என்கிறார் திருவள்ளுவர். நண்பன் நஞ்சை, விஷத்தைத் தருகிறான். குடிப்பதா... வேண்டாமா? திருவள்ளுவர் சொல்கிறார்... `உறவா... நட்பா... உயிரா என்ற கேள்வி வைக்கப்பட்டால், நட்புக்காக, உறவுக்காக விஷத்தை அருந்தி உன் உயிரைத் தியாகம் செய்.’

பகைவரை வெல்வது எளிது, இயல்பு. ஆனால், துரோகத்திடம் தோற்றுப்போவதுதான் இயல்பினும் இயல்பு. துரோகம் வென்றதாகத் தெரியும். ஆனால், வரலாற்றில் பதிவு செய்யப்படாது.

அந்த வகையில், தியாகத்தின் வடிவமாக, அகிம்சையின் இருப்பிடமாக, கருணையின் இருப்பிடமாக இருந்த மெய்ப்பொருள் நாயனார், திருநீலகண்டராக உலகத்தை வாழவைப்பதற்காக ஆலகாலத்தை உண்ணச் சித்தமாக இருந்த உலகத்தின் தலைவன் சிவபெருமானின் திருவடிகளில் சரணடைந்தார்.  அந்த அன்புநெறி, அகிம்சை நெறி இந்த மண்ணில் தழைக்க வேண்டும்.

(புரிவோம்...)

இது வரலாற்று வெற்றி!

அது 1988-ம் வருடம். தென் கொரியாவின் பூசன் (Busan) நகரத்தில் ஒலிம்பிக் படகுப் போட்டி. படகுகள் புயலெனச் சீறிப் போய்க்கொண்டிருந்தன. அந்தப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த லாரன்ஸ் லெமியக்ஸ் (Lawrence Lemieux) என்ற இளைஞரும் கலந்துகொண்டார்.  வெற்றிக்கோட்டைத் தொடும் இடத்தை அவருடைய படகு நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் எல்லைக் கோட்டைத் தொடுவதற்கான இடத்தருகே வந்தபோது அது நடந்தது. வெற்றிக் கோட்டைத் தொட சில விநாடிகளே (Fraction of Seconds) இருந்தன. அந்த நேரத்தில் அடித்த சூறைக்காற்றில், அவருக்கு அடுத்து வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த படகோட்டியும் அவருடனிருந்த இன்னொருவரும்  தடுமாறி, தண்ணீரில் விழுந்தார்கள். லாரன்ஸ் லெமியக்ஸ் ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. தன் படகிலிருந்து தண்ணீரில் குதித்தார். இருவரையும் நீரிலிருந்து இழுத்துக் காப்பாற்றினார். அன்றைக்கு ஒலிம்பிக் படகுப் பந்தயத்தில் பதக்கம் பெறவேண்டிய லாரன்ஸ் லெமியக்ஸ் தோற்றுப்போனார். ஆனால், ஒலிம்பிக் வரலாற்றில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்டார். இதுதான் தோல்வியை வெற்றியாக மாற்றுகிற வரலாறு.   

நகை நகையாம் புன்னகையாம் - நகைச்சுவை

*மனைவிக்கு எல்லாம் தெரியும்!*

வெளியே போய் இரவு வீடு திரும்பினர்  கணவனும் மனைவியும்..

கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர்.

 "இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.

அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.

அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து  கோபமாகச் சொன்னா  "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !

---------------------------------------------------------------------------------------------------