Wednesday, December 19, 2018

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம் மனஉளைச்சல் தான்

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....

அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...

மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... 🙏🙏🙏
#மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம் #மனஉளைச்சல்  தான்!

Friday, July 6, 2018

ஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு

ஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு, அதை எல்லோரும் கற்றுகொள்வதில் தவறேதுமில்லை

அதாகபட்டது ரஷ்ய உலககோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்கள், கடைசி நேரத்தில் ஏற்பட்ட தோல்வி அது

போட்டி முடிந்தபின் கண்ணீர் விட்ட ஜப்பானிய வீரர்கள் அதன் பின் செய்ததுதான் இன்று ஹாட் டாபிக்

தோல்வியடைந்து மனம் வெறுத்த நிலையிலும் தங்கள் அறையினை சுத்தம் செய்து, கழிவறையினை தாங்களே சுத்தம் செய்து ஒப்படைத்திருக்கின்றார்கள்

எதற்கு என்றால், எந்நிலையில் அந்த அறை தங்கள் கையில் கிடைத்ததோ அதே நல்ல நிலையில் அடுத்து வருபவர்களுக்காக விட்டு செல்ல வேண்டுமாம்

இதை கேட்டு அறை நிர்வாகிகள் "இவர்கள் நாட்டிலா பூகம்பம் வருகின்றது, சுனாமி வருகின்றது?" ஆனந்த கண்ணீர் வடிக்க, அடுத்து ஜப்பானியர் செய்திருப்பது மகா அட்டகாசம்

(இந்நேரத்தில் நம்து விளையாட்டு வீரர்களை விடுங்கள், சில வேட்பாளர்கள் தேர்தலில் தோல்வி என்றால் எதை எல்லாமோ அடித்து நொறுக்குவார்களாம், அதெல்லாம் உங்கள் நினைவுக்கு வரகூடாது)

அந்த கால்பந்து விளையாட்டு அரங்கையும் சுத்த படுத்தியிருக்கின்றனர், ஏன் என கேட்டால் புன்னகை பூக்க  சொன்னார்கள்

"இந்த குப்பை ஏன் வந்தது? நாங்கள் ஆடுவதை பார்க்க வந்த  கூட்டத்தால் வந்தது, அவ்வகையில் நாங்களும் பொறுப்பு அல்லவா? அதனால் அதனை சுத்தபடுத்தவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது.."

ஜப்ப்பான் வீரர்கள் குப்பைகளை அகற்றும்பொழுது ஜப்பானிய ரசிகர்களும் களத்தில் இறங்கி இருகின்றார்கள்.

"அடேய் நீங்கள் எல்லாம் மனிதர்களே அல்ல, தெய்வங்கள்.."  என உலகம் ஜப்பானிய வீரர்களை கொண்டாடி கொண்டிருக்கின்றது

ஜப்பானின் இளம் தலைமுறை எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? அப்படி சமூக பொறுப்போடும் சுய கட்டுபாட்டோடும் உருவாக்கி இருக்கின்றார்கள்

பின்னர் ஏன் அந்நாடு உயரத்தில் ஜொலிக்காது,

உலக கோப்பையினை யாரும் வெல்லட்டும், ஆனால் மக்கள் மனங்களை வென்றுவிட்டது ஜப்பானிய வீரர்கள்தான்

Wednesday, July 4, 2018

வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.

இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.

இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.

உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை
 ‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.

சிறுவன் திரும்பினான். சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.

‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.

இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்… சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.

சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல. ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. எனவே தான் ஏழைகளால் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்த அளவுக்கு பணக்காரர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.
 அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.

Friday, June 29, 2018

'' நாடக காவலர் '' ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு

'' நாடக காவலர் '' ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு !  தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு. 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.                                                                                    சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரைஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்பவான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன. திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனாகவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திருக்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம்.  இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", வல்லவனுக்கு வல்லவன் , குழந்தைக்காக  போன்ற படங்களைச்
 சொல்லலாம்                                                                         1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.

அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.                                                                          இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன். அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு.

தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன. சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு.

தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள். அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார். 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார்.  திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார். இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார். சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும். . வாழ்க ஆர்.எஸ்.மனோகர் புகழ்!                                                                         நன்றி  பாரதி பயிலகம் வலைப்பூ .

Friday, June 22, 2018

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா

கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....

எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள்.

ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'......

ஓர் கண்ணோட்டம்.....

ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......

தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது.

பொறுமையாக இதைப்படியுங்கள்.

கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.

 அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது.

கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது.

 ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.

அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது.
ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார்.

அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள்.

அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.

அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள்.

கவுசிகனுக்கோ கோபமான கோபம்.

கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.

அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?' என்று கேலி பேசினாள்.

கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார்.

அவள் மேலும் சொன்னாள்.

"நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான்.

அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும்.

நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?

 கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்' என்றாள்.

இன்று எத்தனை பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம்.

வீட்டில் குழந்தைகள், தாய், தகப்பன், மாமன், மாமி,  கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?

கடமைகளைச் செய்வது தான் உண்மையான வழிபாடு என்றும் சாமியாரை விடு.. மாமியாரை மதி' என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா இந்த மகாபாரதக் கதை!

கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!

காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில்.

அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.

மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம், தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர். இறைச்சி வணிகர்.

கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும், முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?'' என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

கொஞ்சம் பொறுங்கள்.. மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார்.

பின்னர் வீடு போனதும், தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.

வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர். இது வழிவழியாக வந்த தொழில். நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.

இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன். மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன்.

 எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,'' என்று தர்மத்தை விளக்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள்.  இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன. ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள். அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,'' என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.

இந்தக்கதையை இளம்பிள்ளைகள் ஒரு முறைக்கு நூறுமுறை படிக்க வேண்டும்.

பெற்றோரைக் கடுஞ்சொல் பேசி ஏசி நோகடித்து விட்டு முதியோர் இல்லங்களில் அநாதை போல அலைய விட்டு விட்டு கோயில் கோயிலாகப் போய் கும்மியடிக்கிறார்கள்.

இந்தப்பக்தி வெறும் வேஷமில்லையா?

இன்று எத்தனை சாமியார்களின் கார்ப்பரேட் கம்பெனிகளில், உயர வேண்டிய இளைஞர்கள்  வேலைக்காரர்களாக, இலவச (பரவச!) ஊழியர்களாக வலம் வருகிறார்கள் தெரியுமா?

மரணத்திற்கு முன்பே பெற்றோர் வயிற்றில் கொள்ளி வைத்துவிட்டு  பகவான்கள் பின்னாலும், அல்ப ஆனந்தாக்கள் பின்னாலும் ஆடிப்பாடிக் கொண்டு அலையும் அசட்டு ஆத்மாக்களைக் கண்டு என் நெஞ்சு பதறுகிறது!....

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்                                 
                                          வாழ்கவளமுடன்

Wednesday, June 6, 2018

விஞ்ஞானியும் பாமரனும்

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
 பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.

 அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,

 கால் தடுக்கிக் கீழே விழ ,

கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்

 ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,

 " இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??

 எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!

அதற்கு வழிப்போக்கன்

"இதுதான் உங்கள் பிரச்னையா......?

 அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!

மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி

 இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார்
செய்து கொள்ளுங்கள்.......!!!

வண்டியை ஓட்டிச் சென்று,

 அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,

 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது.......!!!

 நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்,

 இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே.........!!!

இவரைப்போய் ,

குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ........
என்று
தலை குனிந்தார் விஞ்ஞானி......!

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.........!!!!!!!

உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு.........!!!!!

நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!!

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
படித்ததில் பிடித்தது...
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

பரமனும் பக்தனும் விதியும்

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.

 "கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி".......!!

 "அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார்"......!!

 "கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம்"......!!

"இதை தவிர வேறொன்றும் தெரியாது".......!!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

  "இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே".....…!!

"அவனுக்கு கஷ்டமாக இருக்காதா"......?
.என்று எண்ணிய அவர்....

  ஒரு நாள் இறைவனிடம்....,

  “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே….....,

 "உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன்".......!!

 "நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா".......?
  என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க,

அதற்கு பதிலளித்த இறைவன்.....,

“எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை"......!!

"எனக்கு பதிலாக நீ நிற்கலாம்".....!!

ஆனால்..,
." ஒரு முக்கிய நிபந்தனை" ..!

"நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும்"......!!

 வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும்.

"யார் என்ன சொன்னாலும்"....,

" கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது".......

"நீ ஒரு சாமி விக்ரகமாக இருக்கிறாய் என்பதை மறந்துவிடக்கூடாது".........!!
 என்று கூற,

 அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள்.....,
  "இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு".......,

 "கோவில் மூலஸ்தானத்தில் இவர் நின்று கொள்ள".......,

  இறைவனோ.......,
 " இவரைப் போல தோற்றத்தை ஏற்று"......,

  "கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார்"......!!

 முதலில், 

 "ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான்".....!!

 "தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று"......,

  இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு......,

 "ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான்".......!!

 செல்லும்போது.....,

  "தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான்"........!!

  இதை " இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாள் பார்க்கிறார்".......!!

 ஆனால், .
 "இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை"....!!

 "அப்படியே அசையாது நிற்கிறார்"......!!

சற்று நேரம் கழித்து......,

  "ஒரு பரம ஏழை அங்கு வந்தான்".......!!

 "அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது"........!!

 “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது".......!!

 " என்னை மன்னித்துவிடு இறைவா"........!!

 "என்னை ரட்சிக்கவேண்டும்"....!!

  என் குடும்பத்தில் ரொம்ப வறுமை.....!!

"மிக கஷ்டமாக இருக்கிறது இறைவா"......!!

  "உன்னை நம்பியே வாழ்கிறேன் ஐயனே".......!!

  எனக்கு ஒரு வழி காட்டு இறைவா” ......

 என்று மனமுருக  கண்கள் மூடி பிரார்த்தனை செய்தான்.

 கண்ணை திறந்தவனுக்கு எதிரே,

 " அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது"........!!

 " உள்ளே பணத்தை தவிர".....

 " தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன"........!!

 " இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி".........,

 "அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொண்டான்"......!!

"இறைவன் வேடத்தில் நின்றிருந்த  சேவகர் இதை கவனித்தார்" ......!!
.
"வாய் விட்டு  எதுவும் சொல்ல முடியவில்லை"......!!

சிறிது நேரம் கழித்து......,

 "வேறு ஒரு கப்பல் வியாபாரி வந்தான்"......!!

 "ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில்  அவன் செல்லவிருப்பதால்".....,

 "இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான்"......!!

  "இறைவனிடம் பிரார்த்தனை செய்தான்"......!!

 அந்த நேரம் பார்த்து......,

 "பணப் பையை தொலைத்த செல்வந்தன்".......,

 "காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்"......!!

"கப்பல் வியாபாரி  பார்த்து".....
   “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும்".......!!

 "இவரை பிடித்து விசாரியுங்கள்”......,
 என்று காவலர்களிடம் கூற,

 காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள்.

 “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி......!!”

  என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல,

  இறைவன் வேடத்தில் இருந்த பணியாள் ....,

 இறைவனை நினைத்து..., “இது நியாயமா".....?
 "அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா"......?

 "இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது"…...!!
 என்று கூறி,

  “கப்பல் வியாபாரி திருடவில்லை".......!!

 " தவறு அவர் மீது இல்லை"....!!.

  என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த  பணியாள்....,

  "நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார்".......!!

  அந்த ஏழையிடம் பணப்பையை வாங்கி கொண்டு செல்வந்தர் சென்றார்......!!

 "கப்பல் வியாபாரி விடுவிக்கப்பட்டார் "......!!

"இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது"......!!

 "இறைவன் வருகிறார்"....!!

  இறைவனுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த  பணியாளிடம்........,

 " இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார்"........!!

 “மிகவும் கடினமாக இருந்தது".......!!

 " உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்"........!!

 "ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….”......

  என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். 

“நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை"...….?

 "என்ன நடந்தாலும் பேசக்கூடாது"......, "அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை".......,

" நீ ஏன் மீறினாய்"..….?

 "உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை"........!!!

 "இங்கு வருபவர்களது சூழ்நிலையை அறியாதவனா நான்".....!!

 “செல்வந்தன் அளித்த காணிக்கை".......,

 "தவறான வழியில் சம்பாதித்தது"......!!

  "அது அவனோட மொத்த  செல்வத்தில் ஒரு சிறு துளி தான்".......!!

 "ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு".......,

 "நான் பதிலுக்கு அவனுக்கு நிறை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்"......!!

 ஆனால்....,
  "அந்த ஏழை கொடுத்ததோ".....,

   "அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான்".........!!

  இருப்பினும்....
  " என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான்".......!!

இந்த சம்பவத்தில்,

 " கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை"......!!

  இருந்தாலும்......,

இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால்......,

 "விபத்தை சந்திக்க நேரிடும்"........!!

 " புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்"........!!

 அதிலிருந்து அவனை காக்கவே ......,

 "அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமத்தி"......,

 " சிறைக்கு அனுப்ப நினைத்தேன்".......!!

 "அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான்"........!!

 "அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்".......!!

இதன் மூலம்......,
 "அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்".....!!

 "அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்"......!!

 இப்படி.....,
  "ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன்"....!!

 ஆனால்,

 "நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து"...,

 "உன் எண்ணங்களை செயல்படுத்தி"......,

" அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.....!

 சேவகன்,
 "இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்:.....!!

“இப்போது புரிந்துகொள்".....!!

  "நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும்"......!!

அது ஒவ்வொன்றையும்....,

 "மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது"......!!

 "அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்"......!!

 "நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது"......!!

 "கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.”.......!!

 என்றான் இறைவன் புன்னகைத்தபடி.....!!

Thursday, May 3, 2018

அன்பும் அறமும் பற்றி வள்ளுவன்


திருக்குறள் 77

8 அன்புடைமை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

அன்பில்லாதவன், நியாயமாக செயல்பட முடியாது. எனவே, வெயிலில் புழு துடிப்பது போல், அன்பில்லாதவனை அறம் படுத்தும்.
Above is from Rangataj pandey in his post

Thanks to FB pkt Sami in pandey,s post.
வள்ளுவர் சொன்ன இந்தக் குறளைக் கேட்ட
ஒரு இளைஞன் வள்ளுவனிடம் போய் அய்யா
அன்போடு அறம் செய்ய விரும்புகிறேன் ஆனால் அதற்கான வழிதான் தெரிய வில்லை எப்படி    அன்புடன்  அறம் செய்வது
என்று கேட்டான்
           உடனே வள்ளுவ௫ம் தயங்காமல்
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்  இன்னான்கும்
இழுக்கா இயன்றதறம் "அதாவது மனதில்
அழுக்கில்லாமல் பேராசைப் படாமல் கோபம் கொள்ளாமல் கடுஞ் சொற்களைப் பேசாதி௫ப்பதே அன்போடு கூடிய அறம் என்றாா்
             இளைஞனும் வள்ளுவ௫க்கு நன்றி தொிவித்து விட்டு சென்றான் இவற்றைக் கடைப்பிடிக்க முயற்சித்தான்
முடியவில்லை மீண்டும் வள்ளுவனிடம் வந்து
வள்ளுவரே நீங்கள் அன்புடன் கூடிய அறத்தைக் கடைப்பிடிக்க சொன்ன வழி மிகவும் கடுமையாக இ௫க்கிறது எனவே
எளிமையான வழி ஒரே வழி இ௫ந்தால்
சொல்லுங்கள் அதுவும் எளிமையான வழியாக இ௫க்கவேண்டு  மென்று கேட்டான்
                 வள்ளுவ௫ம் சளைக்காமல் அப்படியா சாி எனச் சொல்லி
"மனத்துக்கண் மாசிலன்ஆதல்அனைத்தறன்
ஆகுல நீர பிற"
என்று சொன்னா் இளைஞன் சந்தோஷமாகச் சென்று கடைப் பிடிக்க முயற்சித்தான் முடியவில்லை மிகுந்த கோபத்தோடு வள்ளுவாிடம் வந்தான் வள்ளுவரே நீங்கள்
பொிய குசும்புக்காரராக இ௫க்கிறீா்களே
நான் ஒரேவழி எளிமையான வழியாகக் கேட்டால் நீங்கள் மீண்டும் மிகக் கடுமையான
வழியையே சொல்லியி௫க்கிறீா்கள் எளிமையான வழி ஒரே வழி சொல்லுங்கள்
என்றான்
          வள்ளுவ௫ம் சிாித்தபடி தி௫மணம்
செய்து கொள்அதுதான் அன்பான அறமென்றாா்  ஆம்
"அறன்எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று"
என்று சொல்லி விட்டு இளைஞனே நில்
மீண்டும் என்னிடம் வந்து நிற்காதே கேள்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"
போய்வா என்றாா் இளைஞனும் மகிழ்வாகச்
சென்றான்

இறை நம்பிக்கையும் முயற்சியும்

Thanks to what's up by GSC
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று

"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,

"இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,

எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.

ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது

''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'

இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய்,
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.

"கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்

ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை.
*முயற்சி திருவினையாக்கும்

Wednesday, May 2, 2018

மல்லாரிகளின் கம்பீரம்


Thanks to THE HINDU 
http://tamil.thehindu.com/general/art/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article5204119.ece
இன்று மேடைகளில் அரங்கேறும் எல்லா செவ்வியல் இசை வடிவங்களின் தொடக்கமும் கோயில்களே. நிலவுடைமை உடைந்து, கோயில்களின் முக்கியத்துவம் சமூகத்தில் குறைந்தபோது பல இசை வடிவங்களும் கோயில்களை விட்டு வெளியேறின. சென்னை நகரில் தோன்றிய இசையரங்குகள் இக்கலைகளின் பாதுகாவலனாகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. இசைக் கலைஞர்களும் நகரங்களில் குடியேறினர்.
ஆனால் நாகசுரம்-தவில் ஆகிய இரண்டு வாத்தியங்களும் தொடர்ந்து கோயில்களிலேயே ஒலித்தன. பரம்பரையாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை வைத்துக்கொண்டு அக்கலைஞர்கள் தத்தம் ஊரிலேயே தங்கிவிட்டனர். அதிகபட்சமாக ஊருக்கு அருகில் உள்ள நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை எனப் பல கலைஞர்கள் தங்கள் ஊரிலேயே இருந்தனர். திருவாவடுதுறை ஆதினத்துடன் பிணக்கு வரும்வரை இராஜரத்தினம் பிள்ளையும் திருவாவடுதுறையில்தான் தங்கியிருந்தார். தவில் கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படி ஊரிலேயே தங்கிவிட்ட கலைஞர்தான் ஆச்சாள்புரம் ச. சின்னத்தம்பியா பிள்ளை. தில்லை நடராஜர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாசிக்கப்படும் நாகசுர இசை மரபை முழுவதும் அறிந்தவர் இவர் ஒருவரே. பல்லவி வாசிப்பதில் ஈடு இணையற்றவரான இராதாகிருஷ்ண பிள்ளையின் மாணாக்கரான சின்னத்தம்பியா பிள்ளை, அவருடன் சேர்ந்து வாசித்து சிதம்பரம் கோயிலில் இசைப் பணி ஆற்றிவந்தார். இன்று 88 வயது நிறைவடைந்திருக்கும் அவரைக் கொண்டு, சிதம்பரம் கோயிலில் வாசிக்கப்படும் நாகசுர இசை மரபைப் படமாக்கியிருக்கிறார் இசையறிஞர் பி.எம். சுந்தரம். நாதமும் நாதனும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் நாகசுரம் - தவில் குறித்த முழுமையான தகவல்களைத் தருவது மட்டுமின்றி, திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் சிதம்பரம் ஆலயத்தில் வாசிக்கப்படும் பல்வேறு மல்லாரிகளையும் இராகங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறது. 88 வயதிலும் சற்றும் பிசிறடிக்காமல் மல்லாரிகளையும் இராகங்களையும் வாசித்து பிரமிக்க வைக்கிறார் சின்னத்தம்பியா பிள்ளை.
"வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். பெரும்பாலான கோயில்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இசைமரபுகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. விதிவிலக்காக சிதம்பரம் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலிலும் மட்டுமே இந்த மரபுகள் தொடர்ந்து பேணப்படுகின்றன,” என்றார் சுந்தரம்.
பண்டைக் காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள் தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது. ருத்ர பூமியான சுடுகாட்டில் எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலுக்குப் பூசை செய்து தவில் வாசிப்பவரிடம் வேதியர் அளிப்பார். இன்று வழக்கொழிந்துபோன இம்முறையை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
"தவில் பக்க வாத்தியம். இருப்பினும் நாகசுர மரபில் கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாகத் தவில்தான் ஒலிக்கும். மற்ற இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்கள் முதலில் வாசிக்க அனுமதிக்கப்படுவில்லை. தவிலின் முக்கியத்துவத்தை இந்த வழக்கம் தெளிவாக்குகிறது,” என்று விளக்கினார் சுந்தரம்.
பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும்போது வாசிக்கப்படும் தீர்த்த மல்லாரி ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து மடப்பள்ளியில் இருந்து சுவாமிக்குப் படைப்பதற்கு தளிகை எடுத்து வருகையில் தளிகை மல்லாரி ஒலிக்கிறது. தேரோட்டம் அன்று தேர் மல்லாரி.
மல்லாரிகளின் பல வகைகள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. மல்லாரி என்பது வெறும் சொற்கட்டுகளே. நாகசுர வித்வானின் கற்பனைக்கு தகுந்தாற்போல் அதன் மெருகு ஏறும். வீரச்சுவை நிரம்பிய கம்பீர நாட்டை இராகத்திலேயே மல்லாரி வாசிப்பது மரபு. "குந்த குந்த” என்று தவில் முழங்க மல்லாரி ஒலிக்கத் தொடங்கியதும் ஊர் மக்களுக்கு சுவாமி புறப்பாடு தொடங்கியது தெரிந்துவிடும்.
"சிதம்பரம் ஆலயத்தில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பட்டதும் மல்லாரி வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இராகம் விரிவாக வாசிக்கப்படு இராகம்-தானம்-பல்லவி தொடரும்,” என்று சுந்தரம் கூறினார்.
முதல் நாள் சங்கராபரணம், இரண்டாம் நாள் ரீதிகௌளை, மூன்றாம் நாள் சக்கரவாகம், நான்காம் நாள் ஹம்சபிரமரி, ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி, ஆறாம் நாள் சண்முகப்பிரியா, எழாம் நாள் காம்போதி.
எட்டாம் நாள் வாசிக்கப்படும் ஒடக்கூறு சிறப்பு வாய்ந்தது. உடற்கூறு என்பது சிதைந்து ஒடக்கூறு என்றாகிவிட்டது. தன் மேல் மோகம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற உடம்பின் இரகசியத்தை சிவபெருமான் விவரித்ததை இந்த உடற்கூறு வெளிப்படுத்தும். பெரும்பாலும் நாதநாமக்கிரியா இராகத்திலேயே ஒடக்கூறு வாசிப்பார்கள்.
ஒன்பதாம் நாளன்று தேர் மல்லாரி. பத்தாம் நாளில் தில்லைக்கூத்தன் மேல் முத்துத்தாண்டவர் இயற்றிய கீர்த்தனைகள் வாசிக்கப்படும். பதினொன்றாம் நாள் உசேனி இராகம் மட்டுமே.
"ஒவ்வொரு நாளும் சுவாமி வலம் வந்து முடித்ததும் கோயில் பிரகாரத்தில் வைத்து தேவதாசிகள் தட்டு சுற்றி, திருஷ்டி கழிப்பார்கள். அந்தப் பழக்கம் முடிவுக்கு வந்ததும், தவில்காரர்கள் மூன்று சுற்றுகள் வாத்தியத்தைத் தட்டிக் கொண்டே சுற்றுவார்கள். இன்று அந்த முறையும் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை,” என்றார் சுந்தரம்.
மாபெரும் இசைமரபுகள் இடம் தெரியாமல் போய்க்கொண்டிக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்க்கும் இசை ஆர்வலர் உணர்வார். திருவாருர் கோயிலில் பாரி நாகசுரம் வாசிக்கும் செல்வகணபதியும் இன்று எண்பதுகளைத் தாண்டிவிட்டார். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்கருவியால் இயங்கும் வாத்தியங்கள் முழங்குகின்றன. கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளம் பல கோயில் விழாக்களை ஆக்கிரமித்துக்கொண்டது. செண்டை மேளத்துக்கான நடை எதையும் அறியாதவர்கள் நையாண்டி மேளம் போல் வாசிக்கிறார்கள். பொருத்தமாக சிங்காரி மேளம் என்று பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. 

Tuesday, April 24, 2018

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
(Thanks to Whastup)

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)
நன்றி ராஜப்பா தஞ்சை

ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்

ஜோதிடம் - கிடைத்தது  பாதி, எரிந்தது பாதி.

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.

உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான்.

அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப் படவில்லை.

எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.

துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.

பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

'அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.

''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான்.

ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.

ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.

''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான்.

''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான்.

''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன்.
ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.

கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.

கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர்.

ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.

''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான்.

அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின.

அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்!

தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்



*காளையார் கோவில் தேர் பவனி*

(Thanks to Whastup)

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில்

 இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று *மருது சகோதரர்களுக்கு* எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த *குப்பமுத்து ஆசாரி* என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் *சிற்பி.*

புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து *தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.*

 எனது தலைமையில் தேர் செய்யப் படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.

தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு *தைப்பூசத் திருநாளில்*
முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார்.

இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது *தேர் அசைய மறுத்து விட்டது.*

 அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது.
தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.

இதன்பின் அவரை அழைத்தனர்.

பெரிய மருது *தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்* என்றார்.

அதற்கு சிற்பி

*உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.*

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.

தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த *சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.*

பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

*அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.*

*மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.*

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.
 வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். *மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.*

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி

சாதாரண பிரஜைக்காக  சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த  மாமன்னர் மருது பாண்டியர்கள்

இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்..

*வரலாற்றை மறந்தும் விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும்...*

பள்ளத்தூர் சாரதி. 

அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!

📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?! 
வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!

சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?

“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்!”

ஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி! அவன் கழல் பற்றுவோர் பாக்கியசாலிகள்!!

‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்!

செயற்கரிய செய்வார் பெரியர்

!!ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட தானம்!!

இந்திர பிரஸ்தத்தின் மன்னன் யுதிஷ்டிரன் ..

ரத்னபுரி அரசன் மயூரத்வஜன் ....

இவ்விருவரும் , ஒரே சமயத்தில் யாகம் செய்யத் தீர்மானித்தனர் ; ஆனால் ஒருவர் தீர்மானித்தது மற்றவர்க்கு தெரியாது அதன் படி யாகக்குதிரையை தக்க காவலோடு நாடு சுற்ற தீர்மானம் செய்யப்பட்டது

அவ்வகையில் யுதிஷ்டிரனின் குதிரைக்கு கிருஷ்ணரும் , அர்ஜுனனும் மயூரத்வஜனின் குதிரைக்கு அவனது மகனான தாம்ரத்வஜனும் அனுப்பி வைக்கப்பட்டனர்(மயூரத்வஜனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் மேல் அதீத பிரேமை உண்டு )
இரு தரப்பினரும் இடையில் சந்தித்து ஒருவர் குதிரையை ஒருவர் பிடிக்க முற்பட ......கடும் சண்டை நடந்தது !

( கண்ணனின் திருவுளப்படி ) அர்ஜுனன் மயங்கி விழ ........தாம்ரத்வஜன் இரு குதிரைகளோடு நாடு திரும்பினான் ; நடந்ததையறிந்த மயூரத்வஜன் வருந்தி ,
" மகனே ....ஸ்ரீக்ருஷ்ணர் அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்துமா சண்டையிட்டாய் ? இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப்போகிறோம் "
என்று நொந்து கொண்டான்....

.இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன் , தன் தோல்வியை எண்ணி கொதித்துப்போய் புலம்பி தீர்த்தான்

ஆனால் , ஸ்ரீக்ருஷ்ணரோ அமைதியாக ,
" அர்ஜுனா ...பொறுமையாக இரு !...நாம் இருவரும் ரத்னபுரி செல்வோம் ...ஆனால் ஒரு நிபந்தனை ! நீ அங்கே என்ன நடந்தாலும் வாயே திறக்கக்கூடாது !...எந்த கேள்வியும் கேட்ககூடாது !"என்று கூற , அர்ஜுனனும் அதற்கு சம்மதித்தான் ; இருவரும் ரத்னபுரியை அடைந்தார்கள்

 மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றான் மயூரத்வஜன் ; பின் பணிவுடன்
" தவறு நடந்து விட்டது !....என் மகன் ஏதோ அறியாமல் பிழை செய்து விட்டான் ! தயை கூர்ந்து எங்களை மன்னித்தருள வேண்டும் "....

குற்றஉணர்ச்சியில் தலை குனிந்தவாறு கம்மிய குரலில் பேசிய மயூரத்வஜனை மந்தஹாச புன்னகையுடன் ஏறிட்டார் பரந்தாமன்

" மயூரத்வஜா ....அபராதத்தை சும்மா மன்னிக்க முடியாது .....ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டும் !"
என்றார்

" கண்டிப்பாக ...பரிகாரம் எதுவாயினும் அடியேன் செய்ய தயாராயிருக்கிறேன் ...கூறுங்கள் !"..

.என்றான் மயூரத்வஜன் பரபரப்பாக ;
" நல்லது !...தவறு செய்த உன் மகனை மனப்பூர்வமாக நீயும் உன் மனைவியும் சேர்ந்து இரண்டாக அறுத்து வலது பாகத்தை அடியேனுக்கு தானமாக தரவேண்டும் ...உங்கள் மூவரில் யார் சோகமாக இருந்தாலும் , கண்ணீர் சிந்தினாலும் தானத்தை ஏற்க மாட்டேன் !...சம்மதமா ?"....

கேட்ட பரந்தாமனை அமைதியாய் ஏறிட்டான் மயூரத்வஜன் ; அவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை;
" கிருஷ்ணா .....எனக்கு பரி பூரண சம்மதம்.என்னிடம் இருப்பதை கேட்டதற்காக ஆனந்தபடுகிறேன்

 உங்களுக்கு தானம் செய்ய நங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்",....
உணர்ச்சி பொங்க கூறிய மயூரத்வஜன் , அடுத்தக்கணம் மகனுக்கு தைல ஸ்நானம் செய்து வைத்து கிழக்கு திசை பார்த்து மணை பலகையில் அமர்ந்தான்.

மனைவி ஆடாத படி மகன் உடலை பிடித்து கொள்ள மயூரத்வஜன் கத்தியால் பிள்ளையை அறுக்க தொடங்கினான்.
தாம்ரத்வஜனின் இடது கண்ணிலிருந்து நீர் வழிந்தது இப்போது

மறு கணம் கிருஷ்ணர் பரபரப்புடன்,
" நிறுத்துங்கள் !.. அவன் வலி பொறுக்க முடியாமல் அழுகிறான் ....அழுது கொண்டே தரப்படும் தானம் பாபத்தையே தரும் "...

கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனனுக்கு தூக்கிவாரி போட்டது !
' இதென்ன ...கிருஷ்ணன் ஏன் இப்படி இரக்கமின்றி நடந்து கொள்கிறார் ?' ..இந்த ரீதியில் அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே தாம்ரத்வஜனின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது

" பரந்தாமா ......பெரியவர்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் ....கண்ணீர் வழிவது என் இடது கண்ணில் !...தாங்கள் தானம் கேட்டது என் உடலின் வலது பாகத்தை !...ஒரே உடம்பாயிருந்தும் தானம் போக நான் அருகதையற்றுப் போனேனே என்று இடது பக்கம் அழுகிறது சுவாமி !..இரு கரங்களும் சேர்ந்து தானே இறைவனை வணங்குகின்றன ?....அப்படியிருக்கும் போது நான் எவ்விதத்தில் தாழ்வு ஆனேன் என்று எனது இடது கண் வருந்தி கண்ணீர் விடுகிறது ! மற்றபடி ..சத்ரியனை ரத்தமும் , கத்தியும் பயப்படுத்தாது பரந்தாமா

.அவன் பேசி முடிக்க ....இப்போது அர்த்தபுஷ்டியுடன் அர்ஜுனை பார்த்தார் கிருஷ்ணர்
அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் தலை குனிந்த அர்ஜுனனின் மனதில் இப்போது ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !
' பார்த்தாயா ?...இப்படிப்பட்ட தேக சமர்ப்பணத்தை செய்த இவன் உன்னை வெற்றி கண்டது பொருத்தமானது தானே ? உன் அகந்தை அழிந்ததா ?'

.கிருஷ்ணன் கேட்பது போலிருக்க ......
.மறு கணம் அர்ஜுனன் வாயிலிருந்து அனிச்சையாய் வார்த்தைகள் வெளி வந்தன

" மன்னா .....தாம்ரத்வஜா .....அடியேன் உங்கள் முன் கூனிக் குறுகி சிறுமைப்பட்டு நிற்கிறேன் !...செயற்கரிய செயலை செய்து நீவிர் இருவரும் மலையளவு உயர்ந்து நிற்கிறீர்கள் !....

..குரல் கம்ம பேசிய அர்ஜுனனை புன்னகையோடு ஏறிட்டார் பரந்தாமன் ; .
..பின்னர் அவனருளால் தாம்ரத்வாஜன் பூரண தேஜஸோடு மீள .......விருந்துண்டு விடைபெற்றனர் ஸ்ரீக்ருஷ்ணரும் , அர்ஜுனனும்

" செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"(விளக்கம்: செய்வதற்கரிய செயல்களை செய்ய வல்லவர் பெரியவர்; செய்வதற்கரிய செயல்களை செய்ய முடியாதவர் சிறியவர்)

மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த சம்பவம் இந்த திருக்குறளை நினைவூட்டுகிறதல்லவா?

புத்திரசோகம்

புத்திரசோகம்
------------------------
(Thanks to Whastsup)

"" பெரியவாளிடமோ, மஹான்களிடமோ பக்தியும், ஶ்ரத்தையும்கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டமே வராது என்று அர்த்தமில்லை. நம்முடைய ப்ராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்.""

ஶ்ரீ பரணீதரனின் உறவுக்காரப் பையன் ஒருவன் அழகு, குணம், அறிவு என்று எல்லாவற்றிலும் உயர்வாக இருந்தான். I.A.S பரிக்ஷையில் நன்றாக ஶோபித்து, அரஸாங்கத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினான்.

யாருடைய கண் பட்டதோ! க்ஷணத்தில் ஒரு கொடூரமான கார் விபத்தில், அத்தனை பேரையும் ஶோகத்தில் ஆழ்த்திவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டான்!

பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றமும் அந்த பேரிடியிலிருந்து மீளவே முடியாமல் தவித்தனர். யாருடைய ஆறுதலான வார்த்தைகளும் அங்கு ஒரு க்ஷணத்துக்கு கூட எடுபடவில்லை!

தங்கமாக பொத்தி பொத்தி வளர்த்த தலைச்சனை இழந்து அந்த தாயார் கதறிய போது, அத்தனை பேருமே அந்த துக்கத்தை அனுபவித்தனர். துக்கம் அதிகமாகும் போது, உலகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட உயர்ந்த ஸுக போகங்களும், துச்சமாகத்தான் தெரியும்.

ஆனால்….. அந்த துக்கம், அதுவும் “புத்ர ஶோகம்” என்னும் பெருந்துக்கத்தையும் ஸமனப்படுத்தி, மனஸை அமைதிப்படுத்தும் ஶக்தி…. மஹான்கள், தெய்வம்… இந்த ஸந்நிதானத்துக்கு மட்டுந்தான் உண்டு.

ஏனென்றால்….. நமக்கெல்லாம் ‘மனஸ்’ என்ற ஒன்று இருப்பதால்தான், அத்தனை அர்த்தமும், அதனால் வரும் அனர்த்தமும்! அதனால்தான், பந்தம், பாஶம், ஸுகம், துக்கம், இத்யாதிகள்…

பகவானின் ஸந்நிதியில், மஹான்கள் ஸந்நிதியில் மட்டுந்தான், இந்த மனஸால், தன்னுடைய கைவரிஸையை காட்ட முடியாது.

அதுவும் ஸந்தோஷமாக இருக்கும் நேரத்தை விட, நம்முடைய துக்கத்தில், கஷ்டத்தில்… நாம் பகவானை பிடித்துக் கொள்ளும் பிடிக்கு, [மர்கட கிஶோரம்-குரங்குப்பிடி] அதிக பலம் உண்டு! அவனும், அந்த ஸமயத்தில் நம்மை அணைத்துக் கொள்ளும் அணைப்புக்கு [மார்ஜாரம்-பூனையம்மா] அதிக வாஞ்சை உண்டு!

இந்த அம்மாவும், தன் புத்ரஶோக ரணத்துக்கு, மாமருந்தை நாடி, தேனம்பாக்கம் ஶிவாஸ்தானம் சென்றாள்.

பெரியவா அன்று அதிக கூட்டமில்லாமல், ஏகாந்தமாக இருந்தார். ஶ்ரீ பரணீதரன் அந்த பையனின் பெற்றோரை அழைத்துச் சென்று, பெரியவாளிடம் அவர்களுடைய துக்கத்தைச் சொன்னார்.

பெற்றவர்களுக்கும், அந்த லோக ஜனனியைப் பார்த்ததும், துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கதறி விட்டார்கள்!

பெரியவா எதுவுமே பேசவில்லை. பிறகு பரணீதரனிடம் கேட்டார்….

“எம்பிள்ளை ஆக்ஸிடென்ட்ல போய்ட்டானே!…. ஒனக்குத் தெரியுமோ?…”

என்னது? கோடானுகோடி ஜீவன்களின் தாயும், தந்தையுமான நம் ஸ்வாமி, தன்னுடைய எந்தப் பிள்ளையைப் பற்றி சொல்கிறார்!

பரணீதரன் முழித்தார்!

“அதாண்டா…! என் [பூர்வாஶ்ரம] அண்ணாவோட பிள்ளை…! மணி ஶாஸ்த்ரி….! அவனை நீ பாத்திருக்கியோன்னோ?..”

“ஆமா… மடத்ல பாத்திருக்கேன்….”

“அவன்… கொஞ்ச நாள் முன்னாடி, பெங்களூர்கிட்ட, ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல போய்ட்டான்! விடிகார்த்தால, நாலஞ்சு பேரோட, கார்ல வந்துண்டிருந்திருக்கான்! ரயில்வே லெவல் க்ராஸிங்ல நொழையறப்போ, ரயில் வந்து மோதி, காரைத் தூக்கியடிச்சுடுத்து! ரெண்டு, மூணு பேர்… on the spot செத்துப் போய்ட்டா! அதுல, மணியும் ஒர்த்தன்! தலை ஒரு பக்கம், கை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம்-னு ஒடம்பு செதறிப் போச்சு!….”

“பெரியவாளுக்கே பிள்ளையை பறிகுடுத்த ஶோகமா?…”

அங்கிருந்தோர் திகைத்தனர்.

அப்போது அம்மாக்காரி பெரியவாளிடம் அழுதாள்.

“எங்களால இந்த துக்கத்தை தாங்கவே முடியல.. பெரியவா! எதுக்காக இப்டியொரு தண்டனைன்னே புரியல! என் பஸங்க.. பெரியவா மேல உஸுரையே வெச்சிருக்கா…! காமாக்ஷி மேல, அபாரபக்தியும், நம்பிக்கையும் வெச்சிண்டிருக்கா! இப்டி நடந்ததுக்கு அப்றம், அவாளுக்கு எல்லாத்துலயும் நம்பிக்கை போய்டுத்து பெரியவா…! “நமக்கு ஏம்மா இப்டி நடந்துது? ஸாமியாவுது! பூதமாவுது!..”ன்னு ரொம்ப விரக்தியா பேசறா.! அவாளுக்கு என்ன ஸமாதானம் சொல்றதுன்னு எனக்குப் புரியல…! பெரியவாதான்.. எங்களுக்கு நல்ல வழி காட்டணும்”

பெரியவா கொஞ்ச நேரம் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். பிறகு மயில்தோகையைக் காட்டிலும் ம்ருதுவாக வருடும் குரலில், பெற்றுப் பறிகுடுத்த மனங்களை ஆற்றிக் கொடுக்கும் வகையில் சொன்னார்……

“நமக்கு ரொம்ப துக்கமோ, கஷ்டமோ வரச்சே, அம்பாள் பேர்ல கோபம் வர்றது ஸஹஜம். அம்பாள் நம்மள தண்டிச்சு கஷ்டம் குடுக்கற மாதிரி தோணினாலும், அவ மேல இருக்கற பக்தியை மட்டும் விட்டுடக்கூடாது! இன்னும் ஜாஸ்தியா நம்பிக்கை வெக்கணும். செல ஸமயம் அம்மா கொழந்தையை கோவிச்சுக்கறா.! ஓங்கி ரெண்டு அடி கூட வெக்கறா ! அப்போ, கொழந்தை நெஜமா துக்கப்படறது!… ‘ஓ’!-ன்னு அழறது…! ஆனா, ஒடனே எந்த அம்மா அடிச்சாளோ… அவகிட்டயேதான் அது போறது… அடிச்ச கையையே பிடிச்சிக்கறது. அவளோட காலையே கட்டிண்டு அழறது…

….அதுமாதிரி, அம்பாளோட கொழந்தேளான நாமளும், துக்கம் வந்தா… அம்பாள்தான் அந்தக் கஷ்டத்தை குடுத்தா-ன்னு நெனச்சா… “எனக்கேம்மா இந்த தண்டனையைக் குடுத்தே? என்னால தாங்க முடியலியே ! ஒன்னை விட்டா… எனக்கு வேற யாரு இருக்கா?..” ன்னு அவ பாதத்தையே பிடிச்சிண்டு அழணும்.! மறுபடியும் அவகிட்டதான் போயாகணும்! வேற வழியே இல்ல!…”

அத்தனை நாட்கள் பலரது தேறுதல் வார்த்தைகள் தராத ஒரு வகை அமைதியை, அன்று அந்தப் பெற்றோர், ஶ்ரீ மாதாவின் தெய்வீக வார்த்தைகளில் உணர்ந்தார்கள்.

கண்டிப்பதற்காக அடித்தபின், தன் காலையே கட்டிக்கொண்டு அழும் குழந்தையிடம் ஸாதாரண அம்மாவுக்கே, அன்பு பல மடங்கு பெருகும் எனும் போது, லோகமாதாவின் அன்பு எப்பேர்ப்பட்டதாக இருக்கும்!

“பெரியவா அந்தக் குழந்தையை ஸ்மரித்ததாலேயே, அந்தக் குழந்தைக்கும் நல்ல கதியை குடுத்துவிட்டார்! இனி அவன் அம்பாளுடைய குழந்தை” என்ற பேருண்மையை உணர்ந்த க்ஷணமே, அவர்களுடைய மலையளவு துக்கம்…. சிறு மருவைப் போல் சிறுத்தது.

ஜகத்குருவான, பகவான் க்ருஷ்ணனின் ஸஹோதரி, ஸுபத்ரையின் மகன் அபிமன்யு பாரதப் போரில் 16 வயதே நிரம்பியவனாக இருந்தும், ஸொந்த பெரியப்பா, சிற்றப்பாக்களால் கொடூரமாக கொல்லப்பட்டான்.

க்ருஷ்ணன் நினைத்திருந்தால், தன்னுடைய மருமகனை, அதுவும் குழந்தையிலிருந்தே தன் மார் மேலும், தோள் மேலும் தூக்கிக் கொஞ்சிய ப்ரியமான குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாதா?

அர்ஜுனன்தான், ஆப்த நண்பனாயிற்றே! தன்னுடைய ஆப்தர்களாக இருந்தாலும், விதிப்படி இன்னதுதான் நடக்கவேண்டும் என்று இருந்தால், அதை தனக்கு ஸாதகமாக செய்து கொள்ள மாட்டான் பகவான்!

க்ருஷ்ணனின் யாதவ குலத்துக்கே நாஶத்தை [அழிவை] கொண்டு வந்தது வேறு யாருமில்லையே! ஸாக்ஷாத் க்ருஷ்ணனின் புத்ரனான ஸாம்பன்தான்!

பெரியவாளிடமோ, மஹான்களிடமோ பக்தியும், ஶ்ரத்தையும் கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டமே வராது என்று அர்த்தமில்லை. நம்முடைய ப்ராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்.

பகவானை, குருவை ஆஶ்ரயித்தவர்களுக்கு, எந்தவித கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு, அதை அப்படியே குருவின் பாதங்களில் ஸமர்ப்பித்து விட்டு, நிஶ்சிந்தையாக, அமைதியாக இருக்கும் வல்லமை வந்து சேரும்.

பகவானின், குருவின் சரணத்தில் நம்முடைய ஸுக துக்கங்களை போட்டுவிட்டு, இனியாவது அமைதியை அடைவோம்.
Nib
ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Compiled & penned by Mr.Gowri Sankar.