Tuesday, June 28, 2016

மனித உறவுகளை பலப்படுத்திக்கிறது-Thanks to SakthiVikatan-26Jun2016


மனித உறவுகளை பலப்படுத்திக்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம், இல்லையா? ஆமாம், இங்கே யாரும் தனியா வாழ்ந்துட முடியாது. வீம்புக்கு வேணா சொல்லலாம், நான் யாரை நம்பியும் இல்லை; எனக்கு எவன் தயவும் தேவையில்லைன்னு! ஆனா, நல்லா யோசிச்சுப் பார்த்தோம்னா, நாம சாப்பிடற ஒவ்வொரு பிடி சோறும் பலருடைய உழைப்பினாலயும் உதவியினாலயும்தான் நமக்குக் கிடைக்குது!
அன்பால கட்டப்பட்டதாகவும் அக்கறையினால நெய்யப் பட்டதாகவும் இருக்கிற சமுதாயம்தான் நம்மோட பலம். உறவுச் சங்கிலிகள் வலுவா இருந்தாதான் ஒரு சமுதாயம் முன்னேறும். இங்கே நான் உறவுன்னு சொல்றது மாமன், மச்சான் உறவுகளை இல்ல. மனித உறவுகளை! ஒவ்வொரு சக மனிதனும் நம் சொந்தம்; நமது பந்தம்.


சக மனிதனுடனான உறவுகளை மேம்படுத்திக்க பாசாங்கு இல்லாத அன்பும், ஆத்மார்த்தமான அக்கறையும் வேணும்.

சமீபத்துல ஒரு நியூஸ் கேள்விப்பட்டிருப்பீங்க. கால் டாக்ஸி கூப்பிட்டாராம் ஒருத்தர். வந்த டிரைவர், கார் டயர் பஞ்சராகி நடுவழியில நின்னதாலதான் இவர் நம்மளைக் கூப்பிட்டிருக்காருன்னு தெரிஞ்சு, அங்கேயே அப்பவே டயரை மாத்திக் கொடுத்தாராம். “வேணாம்ப்பா! டயர் மாத்தணும்னா அரை மணி, முக்கா மணி ஆகும். இதை அப்புறமா பார்த்துக்கலாம்”னு இவர் சொல்லியும், “இல்ல சார், இதோ இப்ப மாத்திடலாம்”னு சொல்லி, இருபதே நிமிஷத்துல ஸ்டெப்னி டயரை மாத்திக் கொடுத்து, அவர் தன்னோட கார்லேயே ஆபீஸுக்குப் போகும்படியா பண்ணிட்டாராம். டயர் மாத்திக் கொடுத்ததுக்காகப் பணம் கொடுக்க இவர் முன்வந்தப்போகூட, “வேண்டாம் சார், இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் செய்துக்கற ஹெல்ப்தானே!”னு மறுத்துட்டாராம் அந்த டிரைவர். ‘இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷனா!’ன்னு ஃபேஸ்புக்ல கொண்டாடுறாங்க அவரை.

சில மாசங்களுக்கு முன்னால ஒரு நியூஸ் படிச்சேன். சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால்ல பார்க்கிங் பண்ணியிருந்த தன்னோட பைக்கை எடுக்க வரும்போது, அதன் டெயில் லைட் உடைஞ்சிருந்ததைப் பார்த்து ஷாக்காயிட்டார் ஒருத்தர். யாரோ தன் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது மோதி உடைச்சிருக்கணும்னு புரிஞ்சுடுச்சு. கடுப்பாகி, முகம் தெரியாத அந்த நபரைக் கன்னாபின்னானு திட்ட வாய் வரைக்கும் வார்த்தை வந்துடுச்சு இவருக்கு. அப்பத்தான் பார்த்தாரு, உடைஞ்ச லைட்டுக்குள்ளே ஏதோ பேப்பர் சுருட்டி வெச்சிருந்துது. 

எடுத்துப் பிரிச்சாரு. ‘ஸாரி சார், தெரியாம உங்க பைக் லைட்டை உடைச்சிட்டேன். ரொம்ப ஸாரி! இதுல 500 ரூபா வெச்சிருக்கேன். உங்க லைட்டை சரி பண்ணிக்குங்க!’ன்னு எழுதி, கூடவே 500 ரூபா நோட்டு ஒண்ணும் வெச்சிருந்தான் அவன். சட்டுனு இவரோட கோபம் தணிஞ்சிருச்சு. ரூபா பெரிசில்லை; நாம உடைச்சதை யாரும்தான் பார்க்கலையே, நமக்கென்னன்னு அப்படியே போகாம, ஸாரி கேட்டு அவன் ஒரு சின்ன குறிப்பு எழுதி வெச்சிருந்ததுதான் இவர் மனசைத் தொட்டுடுச்சு.

நம்ம ஜனங்ககிட்டே இந்த மாதிரியான மேன்மையான குணங்களெல்லாம் ஒரேயடியா காணாம போயிடலை; இன்னமும் இருக்கத்தான் செய்யுதுன்னு இந்த மாதிரியான சின்னச் சின்ன சம்பவங்கள் மூலமா தெரிய வர்றப்போ, உள்ளூர ஒரு சந்தோஷம் வருது; நம்ம சமூகத்து மேல ஒரு நம்பிக்கை வருது. இந்த குணங்களை இன்னும் வளர்த்தெடுக்கணும். தப்பு யார் மேல வேணா இருக்கட்டும், ஸாரி கேக்கறதுனால ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டோம்கிற எண்ணம் வரணும். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை.

பொம்மைகள் விக்கிற ஒரு கடை. எட்டு வயசுள்ள ஒரு சின்ன பெண்ணும், அவளோட அஞ்சு வயசு தம்பியும் அந்தக் கடையை கிராஸ் பண்ணிப் போனாங்க. அந்தப் பொண்ணு மட்டும் சட்டுனு நின்னு, ரெண்டு ஸ்டெப் பின்னாடி வந்து அந்தக் கடையையும், அதுல அலங்காரமா அடுக்கியிருந்த பொம்மைகளையும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்தா. அவ கண்ணுல ஏக்கமான ஏக்கம். அந்தக் குட்டிப் பையன் அதைக் கவனிச்சுட்டான். “என்ன, உனக்கு அந்த பொம்மை வேணுமா?”ன்னு பெரிய மனுஷன் மாதிரி கேட்டான். அவ ஆமான்னு தலையாட்டினா. “சரி, வா!”ன்னு அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போனான் அந்தப் பையன்.  

“உனக்கு என்ன பொம்மை வேணும், சொல்லு?”னு கேட்டான். அந்தப் பொண்ணு ஒரு பொம்மையைக் காண்பிக்க, அதை சுவாதீனமா எடுத்து அவகிட்டே கொடுத்துட்டு, கடைக்காரரைப் பார்த்து, “எவ்ளோ சார் இந்த பொம்மை விலை?”ன்னு கேட்டான் அந்தப் பையன். 

ஆரம்பத்துலேர்ந்தே அந்தக் குட்டிப் பையனோட பெரிய மனுஷ தோரணையைப் பார்த்து மனசுக்குள்ளே ரசிச்சுட்டிருந்தார் அவர். ஏதோ அவர் விலையைச் சொன்னதும் பர்ஸ்லேர்ந்து நோட்டு நோட்டா எடுத்துக் கொடுத்துடறவன் மாதிரி அவன் பெரிய மனுஷ தோரணையில் கேட்கவும், ஒரு புன்னகையோடு, “நீ எவ்வளவு தருவே?”ன்னு கேட்டார். 

அவன் தன் டிராயர் பைக்குள் கை விட்டு, கடற்கரை மணல்ல பொறுக்கின சின்னச் சின்ன கிளிஞ்சல்களை வெளியே எடுத்து, அவர் மேஜை மீது பரப்பினான். அவரும் சீரியஸா பணத்தை எண்ணுறவர் மாதிரியே அந்தக் கிளிஞ்சல்களை ஒவ்வொண்ணா எண்ணினார். அப்புறம் அவனைப் பார்த்தார்.

அவன் முகம் வாடிப் போச்சு. “என்ன சார், பணம் குறையுதா?”ன்னு கவலையோடு கேட்டான். “சேச்சே! அதெல்லாம் இல்லே. நிறையவே இருக்கு”ன்னவர், ஒரு ஐந்தாறு கிளிஞ்சல்களை மட்டும் தன் பக்கம் நகர்த்திக்கிட்டு, “இதுதான் இந்த பொம்மை யோட விலை. மீதிப் பணமெல்லாம் உனக்குதான்”னார். அந்தப் பையன் ரொம்ப குஷியா அந்தக் கிளிஞ்சல்களை எடுத்துத் தன் டிராயருக்குள்ளே போட்டுக்கிட்டு, அக்காவோடு நடையைக் கட்டினான்.

இதைப் பார்த்துட்டிருந்த கடைப் பணியாள் ஒருத்தனுக்கு ஆச்சரியம் ப்ளஸ் குழப்பம்! அவன் தன் முதலாளியைப் பார்த்து, “என்னங்க ஐயா, விலை உசத்தியான அந்த பொம்மையை அந்தப் பையனுக்கு வெறும் அஞ்சு கிளிஞ்சலுக்கு வித்துட்டீங்க?”ன்னு பொறுக்கமாட்டாம கேட்டான்.

“அடேய், நமக்குத்தான் அது வெறும் கிளிஞ்சல். அந்தப் பையனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய பொக்கிஷம். இந்த வயசுல அந்தப் பையனுக்குப் பணம்னா என்னன்னு தெரியாது; அதோட மதிப்பு புரியாது. பெரியவனாகும்போது கண்டிப்பா புரிஞ்சுப்பான். அப்போ, சின்ன வயசுல நாம நம்ம அக்காவுக்குப் பணத்துக்குப் பதிலா வெறும் அஞ்சே அஞ்சு கிளிஞ்சல்களைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தோமேனு அவனுக்கு ஞாபகம் வரும். அப்போ, இந்தக் கடையைப் பத்தியும் என்னைப் பத்தியும் நினைப்பான். இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியதுதான்னு அவன் மனசுல ஓர் அழுத்தமான எண்ணம் விழும். அந்த பாஸிட்டிவ் எண்ணத்தை அவன் மத்தவங்களுக்கும் பரப்புவான். எனக்கு அதுதான் வேணும்!”னு சொல்லிட்டுப் புன்னகைச்சார் அந்தக் கடைப் பெரியவர்.
உண்மைதானே? மேலே சொன்ன அந்த டாக்ஸி டிரைவரும், ஸாரி கேட்டு லைட் ரிப்பேர் செலவுக்குப் பணம் வெச்சுட்டுப் போன முகம் தெரியாத அந்த நபரும் அப்படியான பாஸிட்டிவ் எண்ணங்களைத்தானே பரப்பிட்டுப் போயிருக்காங்க! அதுக்காக அவங்களுக்கு என்னோட மகிழ்ச்சியையும், மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவிச்சுக்கறேன். 

‘ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒரு சேதி கொண்டு வருகிறது; கடவுள், மனித இனத்தை இன்னும் வெறுக்கத் தொடங்கவில்லை என்கிற சேதியே அது’ன்னு புகழ்பெற்ற ஒரு வசனம் உண்டு. அது மாதிரி, இந்த பொம்மைக் கடைக்காரர், டாக்ஸி டிரைவர் மாதிரியான நபர்களைப் பத்தின செய்திகள் வெளியாகுறபோதெல்லாம், மனித நேயம் முற்றிலுமாகத் தொலைஞ்சு போயிடலை; இன்னும் பல இடங்கள்ல அது உயிர்ப்புடன் தான் உலவிக்கிட்டிருக்கு என்கிற நம்பிக்கை விதை தூவப்படுதுன்னு நினைக்கிறேன்.  

Friday, June 17, 2016

சாமானியனின் சாதனை!-இளம்பகவத் - IAS -சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில்

சாமானியனின் சாதனை!

Thanks to Vikatan
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=119551&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1
அதிஷா
ளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?' எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை. 

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத். 

ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.
அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை. 

தன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது. 

‘`வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.
ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார். 

‘`நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது'. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை’’ என்கிறார் இளம்பகவத்.
அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில்  குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத். 

2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்' என நினைத்தார்.  

`இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்’ எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலமாக நிறைவேறிவிடவில்லை. 

‘`என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.
2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில் 
குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல... ஐ.ஏ.எஸ்! 

2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத். 

இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர். 

 தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

‘`அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்’’ என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். 

‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்'’ எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்!

Thursday, June 16, 2016

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! #ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்


Thanks to Vikatan
http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/65252-actirulokchandar-memorial-article.art

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! #ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்

'அவருக்கு பதில் இவர்' என்று டிவி சீரியல்களில் சர்வ சதாரணமாக கதாபாத்திரங்களுக்கு ஃபிரேம் போட்டு மாட்டிவிடுகிறார்கள் இன்று. ஆனாலும் அது கதையோட்டத்தில் சிறு கீறலையாவது ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் சுமார் 35 வருடங்களுக்கு முன் திரைப்படம் ஒன்றில் அந்த விஷப்பரீட்சையை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தம் ஒரு பிரபல இயக்குனருக்கு உருவானது. அந்த திரைப்படம்தான் 'அவருக்கு பதில் இவர் ' கலாச்சாரத்தை துவக்கி வைத்த முதல் திரைப்படம்.
பெரிய இயக்குனரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான அந்தத் திரைப்படம் முக்கால் பாகம் முடிந்திருந்த நிலையில், வெளிநாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றிற்கு புறப்பட்டுச் சென்ற கதாநாயகி மறுநாள் விமான விபத்தில் மரணமடைந்த தகவல் வந்து சேர்ந்தது. பழகிய ஒரு பெண் மரணமடைந்த சோகம் ஒரு பக்கம். இனி படத்தின் நிலை என்ன என்ற குழப்பம் ஒரு பக்கம்.  லட்சங்களில் படமெடுத்துவந்த அந்தக்காலத்தில் பல லட்சம் முதலீடு முடங்கிப்போனால் அது ஒரு தயாரிப்பாளரின் வாழ்வை முடித்துவிடும். சோர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர்.

சில மாத ஓய்வுக்குப்பின் படத்தின் கதாநாயகன் சிவகுமார் அந்த இயக்குனரை தேடி வந்தார். தான் ஒரு நடனக்குழு பெண்ணைக் கண்டதாகவும் அவர் ஒரு சாயலில்  கதாநாயகிபோல இருப்பதாகச் சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர். அந்தப் பெண்ணை வைத்து மீதிப்படத்தை முடித்தார். படத்தைப் பார்த்தவர்கள் இரண்டு பெண்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 6 வித்தியாசங்களைக் காணக் கூடத் திணறினர். அத்தனை தத்ரூபம். பாராட்டு முழுவதும் அந்த இயக்குனரை போய்சேர்ந்தது. காரணம் வித்தியாசம் தெரியாதபடி திட்டமிட்ட கேமிரா கோணங்கள், வசன பாணி, நடை, உடை பாவனை என அத்தனையும் மாற்றி பழைய கதாநாயகியாகவே அந்தப் பெண்ணை உலவ விட்டிருந்தார் திரையில்.
அந்த இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர். ஆற்காடு செங்கல்வராய முதலியார் திருலோகசந்தர்தான், ஏ.சி.டி என அந்நாளில் அழைக்கப்பட்ட ஏ.சி.திருலோகசந்தர். நெடுநெடு உயரம், கம்பீரத் தோற்றம், பின்னோக்கி வாரப்பட்ட படர்ந்த தலைமுடி, இதுதான் ஏ.சி.டி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் 60 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.சி திருலோகசந்தர் தனது 86 வயதில் நேற்று காலமானார்.
சென்னை புரசைவாக்கத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த திருலோகசந்தரை ஐ.ஏ.எஸ். ஆக்க விரும்பியது அவரது குடும்பம். ஆனால் விதி வேறுவிதமாக அவரது வாழ்க்கையை மாற்றியது. ஆங்கில நாவல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்ட அவரது தாயார் சிறுவயதில் ஏ.சி.டியை படிக்கச் சொல்லிகேட்பது வழக்கம். இந்த பழக்கம் திருலோகசந்தரையும் வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாக்கியிருந்தது. படிக்க ஆரம்பித்தவர் எழுத ஆர்வம் கொண்டார். பள்ளிவயதிலேயே சந்திரா என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை எழுத ஆரம்பித்தார். அந்நாளில் எழுதி அகில இந்திய வானொலியில் அவர் பெற்ற சம்பளம் பத்து ரூபாய். அன்று இதில் சில சவரன் நகைகளை வாங்கிவிடலாம்.
எழுத்தார்வத்தோடு படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார் ஏ.சி.டி. பள்ளிப்படிப்புக்குப்பின் கல்லுாரிப்படிப்பை முடித்து  ஐ.ஏ.எஸ் தயாரானவருக்கு வயது காரணமாக அந்த வருடம்  ஐ.ஏ.எஸ் எழுத முடியவில்லை.
பக்கத்து தெருவில் வசித்துவந்த பள்ளி நண்பன் ராஜகோபாலின் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவரது தந்தை பத்மநாப ஐயர் அப்போது திரைப்படம் தயாரித்துவந்தார். குமாரி என்ற அந்த படம் துவங்கும் தருவாயில் இருந்தது. படத்தின் இயக்குனரும் அவரேதான். எழுத்தார்வம் உள்ள தன் நண்பனை பற்றி ராஜகோபால் தன் தந்தையிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்ததால் ஒருநாள், 'என் படத்தில் பணியாற்றச்சொல்' என அவர் கூப்பிட்டனுப்பினார். தனக்கு ஐ.ஏ.எஸ் படிக்கவே ஆசை என அந்த வாய்ப்பை மறுத்தார் ஏ.சி.டி. 'இன்னும் ஒரு வருடம் இருக்கிறதல்லவா அதற்குள் படம் முடிந்துவிடும். பிறகு படிக்கப்போகலாம்' என நண்பன் வற்புறுத்த,  படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவராக சேர்ந்தார் ஏ.சி.டி.

பெயருக்குதான் உதவி இயக்குனர் வேலை. ஆனால் படத்தின் எல்லா வேலைகளையும் அவர் செய்யவேண்டியிருந்தது. திரைப்படம் என்ற கவர்ச்சி மீடியத்தை அவர் புரிந்துகொள்ள அந்த பணிகள் உதவியாக இருந்தது அவருக்கு.
படத்தின் கதாநாயகன் அப்போது வளர்ந்துவந்துகொண்டிருந்த நடிகர் எம்.ஜி.ராம்சந்தர். ஆம் அப்போது எம்.ஜி.ஆரின் பெயர் அதுதான். படப்பிடிப்பில் ராஜ உடையில் நடிக்கவேண்டிய எம்.ஜி.ஆர் தன் வழக்கமான உடை மற்றும் தான் அணிந்திருந்த நகைகளை ஏ.சி.டியிடம்தான் கழற்றிகொடுப்பார். ஏ.சிடியின் ஏதோ ஒரு குணம் எம்.ஜி.ஆரை கவர்ந்திருந்தது. ஓய்வின்போது ஏ.சி.டியின் வாசிப்பு ஆர்வத்தை கேட்டு ஆச்சர்யமாவார் எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏ.வி.எம் மின் 50 வது படமாக, குறிப்பாக அந்நிறுவனத்தின் முதல் கலர்ப்படமாக வெளிவரப்போகும் படத்தின் இயக்குனர் ஏ.சி.டி என்பதும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் என்பதும் இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இருவருக்கும் அது ஆரம்பகாலம். அதுதானே வாழ்வின் சுவாரஸ்யம்.
குமாரி படத்திற்குப்பின் ஏ.சி.டிக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாகியிருந்தது. இப்போது ஐ.ஏ.எஸ் கனவை மூட்டை கட்டி வைத்திருந்தார். பத்மநாப ஐயர் படத்தயாரிப்பை நிறுத்தியபின் சற்று இடைவெளியில் ஏ.சி.டி, பச்சையப்பன் கல்லுாரியில் முதுகலை முடித்திருந்தார். திரைத்துறையில் இன்னொரு நண்பரான அபிபுல்லா மூலம் மீண்டும் சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. அபிபுல்லா பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸ் நிர்வாகியின் மகன். ஏ.சி.டிக்கு நெருங்கிய நண்பன். ஏற்கனவே குமாரி அனுபவத்தை கேள்வியுற்றிருந்த அபிபுல்லா தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற ஏ.சி.டிக்கு அழைப்பு விடுத்தார்.
பெரிய நிறுவனம், நண்பனின் அழைப்பு... தட்டாமல் வேலைக்கு சேர்ந்தார் ஏ.சி.டி...கதை விவாதக்குழுவில் வேலை. அக்காலத்தில் பிரபல நிறுவனங்கள் கதை விவாதத்திற்காக தேர்ந்த கதை ஞானமுள்ளவர்களை கொண்ட குழுவை வைத்திருந்தது. தொடர்ந்து அந்நிறுவனங்களில் படங்களில் பணியாற்றி தன் இயக்குனர் ஆர்வத்திற்கு தேவையான அடிப்படைய விஷயங்களை கற்றுத்தேர்ந்த ஏ.சி.டி, சினிமா தொழில்நுட்பம் தொடர்பான நுால்களை தேடித்தேடிப் படித்து அதிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

இயல்பில் நல்ல பின்னணி, மெத்தப்படிப்பு இந்த குணங்களால் சினிமாவில் சில விஷயங்களில் தனித்த குணத்துடன் இயங்கினார் ஏ.சி.டி. அவரது குணத்தை சோதிக்கும்படி, ஜூபிடர் பிக்சர்ஸின் படமொன்றின் தயாரிப்பின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. அது உண்மையிலேயே அவரது வாழ்க்கையை முடிவு செய்கிற விஷயமும் கூட. படம் துவங்கி நடந்துவந்த நிலையில் பிரபலமான அந்த இயக்குனருக்கும் நிறுவனத்திற்கும் முட்டல் மோதல் எழுந்தது. நவீனத்தை விரும்பும் அந்த இயக்குனரின் சில காட்சியமைப்புகளை நிறுவனம் விரும்பவில்லை. இயக்குனரும் விடாப்பிடியாக நின்றார் தன் விஷயத்தில். பனிப்போர் முற்றிய நிலையில் இயக்குனர் சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதிருப்தியடைந்த தயாரிப்பாளர்கள் ஏ.சி.டியிடம் வந்தனர். “இனி அவருடன் ஒத்துபோகமுடியாது.  தொடர்ந்து இந்த படத்தை நீங்களே இயக்குங்கள்” எனக் கூறினர்.
உண்மையிலேயே இப்படி ஒரு சந்தர்ப்பம் உதவி இயக்குனர் வாழ்வில் பெரும் அதிர்ஷ்டம். பிரபல நிறுவனம், பெரிய பட்ஜெட் படம் நல்ல கதை...வேறுயாராக இருந்தாலும் ஒப்புக்கொண்டு படத்தை தொடர்ந்திருப்பர். ஆனால் ஏ.சி.டி நிதானத்துடன் அதை மறுத்துவிட்டார். 'இது நாகரிகமில்லை. உங்களுக்குள்ள பிரச்னையில் நான் இப்படி வாய்ப்பு பெற்றால் நம்பிக்கையுடன் சென்றுள்ள அவர் எத்தனை வேதனைப்படுவார். அவருடன் கலந்துபேசி படத்தை இயக்கவையுங்கள். நான் உதவியாளராகவே தொடர்கிறேன்' -தீர்க்கமான சொன்னார் ஏ.சி.டி.

சினிமாத்துறையில் அரிதான இந்த குணம் கண்டுபிரமித்துப் போனார்கள் தயாரிப்பாளர்கள். முடியும் தருவாயில் இந்த விஷயம் தெரியவந்து ஏ.சி.டியை சந்தித்து கட்டித்தழுவி உருகினார் அந்த பிரபல இயக்குனர். 'நீ நல்லா வருவே திருலோக்...சினிமாவில் உனக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு' என ஆசிர்வதித்தார் அந்த மேதை. அடுத்த 10 ஆண்டுகளில் அது நிகழ்ந்தது. நிற்க நேரமின்றி  தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி என அத்தனை மொழி கதாநாயகர்களை ஆட்டுவித்தார் ஏ.சி.டி
இத்தனை இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் பணிபுரிந்தாலும் ஏ.சி.டி பிரமித்து மிரண்டுபோயிருந்தது அந்நாளில் பிரபல இயக்குனரான எல்.வி. பிரசாத்த்தின் இயக்கத்தை பார்த்துதான். சினிமாத்துறையில் சில வருட அனுபவங்களோடு அவரது வீட்டுக்கதவை தட்டினார் ஒருநாள். நான் உங்களிடம் உதவியாளராக சேரவேண்டும்...அது என் பாக்கியம் என்றார். 'என்னிடம் தேவையான ஆட்கள் இருக்கிறார்கள் தம்பி. உன்னை வேலைக்கு எடுத்துக்கொண்டால் இன்னொருவர் வேலை இழக்கவேண்டிவருமே... பரவாயில்லையா' என்றார் எல்.வி. பிரசாத் வழக்கம்போல் தன் சன்னமான குரலில்.

‘சரி.. ஆனால் என்றைக்கும் நீங்கள்தான் என் துரோணாச்சாரியார். நான் உங்கள் ஏகலைவன். நன்றி வருகிறேன்” என்று கிளம்பிவிட்டார் ஏ.சி.டி.  இதுதான் அந்நாளைய தமிழ்சினிமா. நேர்மை, நம்பிக்கை, நாணயம் என இயங்கிவர்கள் நிரம்பியிருந்த காலகட்டம்!

ஏ.சி.டியின் தன்னம்பிக்கை வழிந்த அந்த வார்த்தைகள் பின்னாளில் பலித்தது. தன் படப்பிடிப்பிற்கு அருகே ஏ.சி.டியின் படப்பிடிப்பு நடந்தால் எல்.வி பிரசாத் மறக்காமல் அங்கு வந்து ஏ.சி.டியின் இயக்கத்தை பார்த்து ரசிப்பார். 'சொன்னதை நிரூபிச்சிட்டியே' என தட்டிக்கொடுத்துவிட்டு செல்வார்.
ஜூபிடர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் நடிகர் அசோகனின் நட்பு கிடைத்தது ஏ.சி.டிக்கு. அசோகனும் அந்நாளில் டிகிரி படித்தவர். மணிக்கணக்கில் உலக விஷயங்களை பேசும் நட்பு அவர்களுடையது. அறிவாளிகளை அணைத்துக்கொள்ளும் சுபாவம் கொண்ட ஏ.வி.எம் சரவணனுக்கு ஏ.சி.டியை அசோகன் அறிமுகப்படுத்தி வைக்க ஏ.வி.எம் பேனரில் ஏ.சி.டியின் முதல்படம் விஜயபுரிவீரன் வெளிவந்தது. வாள்வீச்சில் எம்.ஜி.ஆருக்கு இணையான திறமைபெற்ற ஆனந்தன் கதாநாயகன்.
விஜயபுரிவீரன் வெற்றிக்குப்பின் திரையுலகில் ஏ.சி.டி காலம் தொடங்கியது. ஏ.வி.எம் பேனரில் தொடர்ந்து ஏ.சி.டியின் படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டன. குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவரானார் ஏ.சி திருலோகசந்தர். 'உருக்கமான சம்பவங்கள்', 'நேர்த்தியான திரைக்கதை, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்புகள் இவற்றின் ஒரு கலவையாக ரசிகர்களுக்கு படங்களை தந்தார் ஏ.சி.டி.

வீரத்திருமகன் விஜயபுரிவீரன், நானும் ஒரு பெண், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தான், இருமலர்கள், பாபு, பாரதவிலாஸ், அன்பே வா, பத்ரகாளி, எங்க மாமா போன்ற அவரது படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாதவை. ஏ.வி.எம் பேனரில் முதல் கலர்ப்படம் எடுக்க நினைத்தபோது மெய்யப்ப செட்டியாருக்கு நினைவுக்கு வந்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். இயக்குனராக நினைவுக்கு வந்தவர் ஏ.சி.டி...எம்.ஜி.ஆருக்கான கதை ஏ.சி.டி யிடமே கைவசம் இருக்க எம்.ஜி.ஆர் பாணி படங்களுக்கான எந்த அடையாளங்களுமின்றி அன்பே வா வெளியானது.
படத்தின் கதாநாயகி கதாநாயகனை தேடிவந்து காதலிக்கவில்லை...கதாநாயகன்தான் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலித்து உருகுகிறான். அம்மா...என்ற உரக்க குரலெடுத்து சுவரில் சாய்ந்து கதாநாயகன் கண்ணீர் விட்டு கதறவில்லை. அப்பாவை கொன்றவனை பழிவாங்க புறப்படவில்லை.மொத்தத்தில் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்பா அம்மா கதாபாத்திரங்களே இல்லை. படத்தில் வரிசைகட்டி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடவில்லை...மாறாக திட்டிப் பாடினர்.
இதைவிட அதிசயம் இதில் கதாநாயகன் ஏழை எளியவர்களுக்கு குரல்கொடுக்கும் ஏழைப்பங்காளன் இல்லை; பெரும்பணக்காரன்! எம்.ஜி.ஆர் ஃபார்மூலாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட  விஷயங்கள் இருந்தும் படம் சூப்பர் ஹிட்.
தனது படங்களின் வெற்றி ஃபார்முலா எதுவும் இல்லாதபோதும் எம்.ஜி.ஆர் இந்த படத்தினை ஒப்புக்கொள்ள ஒரே காரணம் ஏ.சி.திருலோகசந்தர் என்ற திறமையாளர். படத்தின் வெற்றி அதை உறுதிப்படுத்தியது. படத்தின் வெற்றிவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர், 'என்னை நான் ஏ.சி.டியிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடத்தயாராக இருந்தேன்' என மனம்விட்டு பாராட்டினார்.
ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் அடுத்தடுத்து வெளிப்படங்களின் வாய்ப்பு வந்தன. சிவாஜி படங்களை தொடர்ந்து இயக்கி புகழடைந்தார் ஏ.சி.டி. அத்தனையும் ரசிகர்களை கட்டிப்போட்ட வெற்றிப்படங்கள். தெய்வமகன் படத்தில் மூன்று சிவாஜிகளைப் பேச வைத்து ரசிகர்களை உருக வைத்திருப்பார் ஏ.சி.டி.

சிவாஜி பத்மினி நடித்து வெளியான இருமலர்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார். 'காக்கும் கரங்கள்' படத்தின்மூலம் கோவையைச் சேர்ந்த ஓர் ஓவியக்கலைஞனை, நாயகனாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பின்னாளில் சிவகுமார் எனப் புகழ்பெற்ற நடிகரானார். நகைச்சுவை நடிகை 'சச்சு'வை கதாநாயகியாக்கியதும் ஏ.சி.டிதான்.
குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்து புகழ்பெற்ற ஏ.சி.டி, 60 களின் இறுதியில் ஹிட்ச்சாக் பாணியில் த்ரில்லர் கதை ஒன்றை இயக்கினார். அதே கண்கள் என்ற அப்படம் தமிழின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று.
 
ஏ.சி.டியின் திரைப்பட பட்டியலில் இன்னுமொரு முக்கியமான படம் பத்ரகாளி. தமிழ் பிராமண பெண்ணிற்கும் அவளது கணவனுக்குமிடையேயான பந்தத்தை உருக்கத்துடன் சொன்ன படம். எதிர்பாராதவிதமாக மனப்பிறழ்வு அடையும் அவள் அதற்குப்பின்னால் நடந்துகொள்ளும் முறையினால் தன் குழந்தையையே இழக்க நேரிடுகிறது. விவாகரத்து வரை சென்றபின்னுமான தம்பதிகளின் அழுத்தமான உறவை  உணர்ச்சிகரமான குடும்ப வாழ்வைச் சொன்ன பத்ரகாளி படத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான் கட்டுரையின் முதலில் குறிப்பிட்ட நிகழ்ச்சி. அந்தப்படத்தின் வெற்றி ஏ.சி.டியின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரது சினிமா தொழில்நுட்ப திறமையையும் நிரூபித்தது தமிழ்த்திரைலகில்.
தன் விருப்பத்திற்கு எதிராக உள்ள படங்களை ஏ.சி.டி எத்தகைய விலைகொடுத்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏ.சி.டியிடம் இருந்த அரிய குணம் இது. தன்னை வளர்த்தெடுத்த ஏ.வி.எம். நிறுவனத்திடமே இப்படி ஒரு விஷயத்தில் முரண்பட்டார் அவர். அந்தக்கதையை ஏ.சி.டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் என ஏ.வி.எம் நிறுவனம் விருப்பம் தெரிவிக்க அது தன்னால் முடியாது என திட்டவட்டமாக மறுத்தவர் ஏ.சி.டி.

80களின் மத்தியில் படம் எடுப்பதை குறைத்துக்கொண்ட ஏ.சி.டி தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றை இயக்கினார். வயதும் உடல்நிலையும் இடம்கொடுக்காதபோது கண்ணியமாக திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது இறுதிக்காலத்தை கழித்தார். சில வருடங்களுக்கு முன் அவரது மனைவி இறந்துவிட துக்கத்தில் இறுதிநாட்களை கழித்து வந்தார். கடந்த வாரத்திற்கு முன் அவரது மூத்த மகன் அமெரிக்காவில் மரணமடைந்தார். மிகுந்த உடல்நல பாதிப்பில் இருந்த ஏ.சி.டிக்கு இந்த தகவல் சொல்லப்படவில்லை. அந்தளவிற்கு நினைவு தவறியிருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார். தெய்வமாகிவிட்ட தனது செல்ல மகனை பார்க்க நேரிலேயே சென்றுவிட்டாரோ என்னவோ இந்த தெய்வ மகன்.

ஏ.சி.டிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. தமிழகத்திலிருந்து முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அவர் இயக்கத்தில் வெளியான தெய்வமகன் திரைப்படம்தான்! தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஏ.சி.டி அண்ணாவிடம் தமிழகத்தின் ராஜா சாண்டோ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரசிகர்கள் கேட்கிறார்கள் கொடுக்கிறோம்'...என ஒழுக்கக்கேடான விஷயங்களை திரையிட்டு காரணம் சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் 'ரசிகர்களுக்கு இதைத்தான் கொடுப்பேன்' என்ற சினிமாவையும் ரசிகர்களையும் கண்ணியமாக அணுகிய இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர் என்றும் திரையுலகில் மறக்கமுடியாதவர் !

Wednesday, June 15, 2016

இனியது, கொடியது-திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வை பாடுவதாக


திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வை பாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டது 

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவினும் நனவினும் காண்பதுதானே.

பொருள் :-ஆதி - இறைவன்
ஏகாந்தம் - தொல்லையில்லாத தனிமை

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்
அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் உண்பது தானே.

நாலு கோடி பாடல் Thanks to Thirattu.blogspot.in

http://thirattu.blogspot.in/

நாலு கோடி பாடல் 
சோழ மன்னன் தனது புலவர்களை அழைத்து, நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் என்று ஆணையிட்டான். புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்;  ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார்.  இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள். 

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

பொருள் : நாக்கோடாமை   -- வாக்கு தவறாமை

இந்த வலைப்பூவை கொஞ்சம் பாருங்க

http://tamilkkalvi.blogspot.in

நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்-Thanks to whatsup

நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்

1. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

2.சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள்.காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.

21.எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.

நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று-Thanks to Whatsup

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

⚁ "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .

⚂ "அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை.

⚄ "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.

⚁ "ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

⚄ "வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.

⚀ "ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.

⚁ "அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?

⚁ "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .

⚀ "இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.

⚃ "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.

⚄ "அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.

⚂ "இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

⚀ "அதே வீடு தான் ",

⚁ "அதே நெருப்பு தான் ",

⚃ "ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.

⚀ "" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
 நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.

⚃ "வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .

⚁ "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.

⚀ "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.

⚃ "சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.

⚃ "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

⚀ "ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

⚀ "இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.

⚀ "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.

⚀ "மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

⚀ "இங்கு எதுவுமே மாறவில்லை " ,

⚀ "அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

⚀ "இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

⚀ "இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

⚀ "நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.

⚀ "உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

⚀ "ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

⚂ "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை

என்ன கற்றுக் கொண்டோம்?... என்ன கற்றுக் கொடுக்கிறோம்?...ஜெயகாந்தன்-Thanks to Whastsup

 "என்ன கற்றுக் கொண்டோம்?...
என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.

ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான்.  அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

நல்லதையே கற்றுத் தருவோம்...
அர்த்தமுள்ள வாழ்வுக்கு...🌷

கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் - Thanks to Whatsup

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.

ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.

“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”

“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”

“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.

அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.

மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள். சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.

“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”

“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”

“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம்.

பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம். “ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது. ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.

“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து.

அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.

சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.

கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.

பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல👏

ரிலாக்ஸாக இருங்கள்.- Thanks to Whatsup

ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே!

இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை.

வெற்றிக்கான சூத்திரம்❗-Success formula - Thanks Whatsup

வெற்றிக்கான சூத்திரம்❗
Success Formula

● ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

● காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

● அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

● ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

● இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

● கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.
விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

● வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

● நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும்

எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும்.. “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன?

எல்லாத்தையும் உதறிட்டு, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்