Wednesday, June 24, 2015

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?-நன்றி விகடன் வாசகர் பக்கம்

http://www.vikatan.com/news/article.php?aid=48459

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?
ரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று வரும் ஜூன்-1 முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட்  சட்டம் அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விபத்துக்களை குறைக்காமல், ஹெல்மெட் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி, 'ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் ஆயுள் காக்கும்' என்ற போலீசின் பிரசாரம் இடைத்தேர்தலை விட சூடு பிடித்துள்ளது.

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி செலவழித்து போடப்படும் தரமற்ற சாலையின் அவல நிலையை பார்த்து நீதிமன்றம், அரசிடம் சாலையின் தரத்திற்கான தரச் சான்று கேட்காமல், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் சர்வதேச தரச் சான்றுடன் ரசீதுடன் உள்ளதா என சோதனை செய்யச் சொல்வதைபுரியாத புதிராக உள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

திரும்பிய இடமெல்லாம் ஹெல்மெட் கடைகள். தலைக்கு விலை வைக்கும் தலைக் கவசம், கடைகளில் தலை கீழாகத் கட்டித் தொங்க விடப்பட்டு, உயிரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஊழலில் ஊறிப்போன உயிரற்ற சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் காக்க சட்டம் போட்ட நீதிமன்றம், சாலையின் உயிருக்கு எந்த உத்தரவாதமும், கேள்வியும் கேட்காத நிலையில், சாலையை முழுவதுமாக தரமாக போடாமல் (கமிஷன் பிரச்னையோ? ) சாலைக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை அரசு துரிதமாக நடத்தி வருகிறது.

வண்டி ஓட்டுனர்  பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம் கண் முன்னாலிருக்கும் சாலையை தரமாக போடச் சொல்ல மறந்து விட்டதே?
 
மோட்டார்  வாகனச் சட்டம், நீதிமன்றம், போலீசாரால் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது  என்பதே  புரியாத நிலையில், விபத்தை கொடுக்கும் வாகன நெரிசல் பற்றியும், விடை தெரியாத இதர  சட்டம் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன...
1. காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட்  அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. முன்னணித் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் கூட சீட் பெல்ட் அணியாமல்தான் வாகனத்தில் வருகின்றனர். சட்டம் பேச முடியுமா?

போலீஸ் உயர் அதிகாரிகள் முன் இருக்கையில் அமர்ந்து செல்கையில் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? போக்குவரத்து போலீசார் சீட் பெல்ட் அணிந்து  வந்ததாக செய்தி உண்டா? வட்டாரப் போக்குவரத்து ஆய் வாளர் ஓட்டுனர், சீட் பெல்ட்  அணிந்து  வருகிறார்களா? சட்ட மேதைகளின் ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட்   அணிகின்றனரா?

2.
சக  பயணிகளை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்க  மோ.வா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திண்டுக் கல்லில் போலீஸ் உடையில் இருந்த எஸ் .ஐ.பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு என்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது??  .

3.
சட்டப்படி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் செல்வது தவறு தான்....அதற்காக  சென்னை கே.கே நகரில்  இரு சக்கர வாகனத்தில் சென்றவரின்  சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை கொன்றதை சட்டம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது நியாயமா?

4.
விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக ,மோசமாக பொறுப்பற்ற வகையில்  வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க சட்டமுள்ளது. சென்னையில் இருந்து 464 கிமீ தூரமுள்ள மதுரைக்குஇரவு 10 மணிக்கு கிளம்பும்  வண்டி, 5 மணி நேரம் 30  நிமிடத்தில்சராசரியாக 85 கிமீ  வேகத்தில்   மதுரைக்கு வரும் பட்சத்தில் அது வாகன சட்ட வேக வரைமுறைக்கு உட்பட்டதா?

இந்திய மோ.வா.  சட்டப்படி கனரக பயணிகள் போக்குவரத்து  வாகனம்மணிக்கு 65 கிமீக்கு மேல் செல்ல தடையும், அபராதமும் விதிக்க சட்டம் உள்ளது. தோராயமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில்  ஓடும்  வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளார்களா?
5. படிக்கட்டில் நின்றபடி, தொங்கியபடி  பயணம் செய்ய அனுமதித்தால் ரூ.100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. சென்னையில் அரசுப்பேருந்துகளில் படிக்கட்டில் தொங்காத மாணவர்களைப் பார்ப்பதே அரிது. எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

6.
குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ. 2000 அபராதம், 6 மாதம் சிறை  விதிக்க சட்டம் சொல்கிறது. சமீபத்தில் போதையுடன் பயணிகளிடம் பிடிபட்ட  தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனருக்கு சட்டம் என்ன தண்டனை அளித்துள்ளது? அப்பாவிகள் உயிரை எமனிடம் சேர்க்க முற்பட்ட குடிபோதை ஓட்டுனர் மீது  சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனரா?

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6821. அங்கு வரும் வண்டிகளின் எண்ணிக்கையோ பல ஆயிரம். நாளொன்றுக்கு ஒரு கடைக்கு  வரும் போதை ஆசாமி ஒருவர் வீதம் 6821 வண்டிகள் மீது வழக்குப்போட முடியுமா? தமிழ்நாட்டின் அவலமே இதுதான். குடிக்காதவர்  ஹெல்மெட் மறந்து வைத்து விட்டு போனால் அபராதம்... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் கூட  அபராதம் போட  போலீசுக்கு  அதிகாரமில்லை. நீதிமன்றமே நேரடியாக டாஸ்மாக் கடை முன் வண்டிகளை நிறுத்த தடை விதிக்கலாமே?

7.
மோசமான டயர் கொண்ட வண்டிக்கு ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் சொல்கிறது. அரசுப்பேருந்துகளின் டயர் நிலைக்கு எவ்வளவு அபராதம் போடப்பட்டுள்ளது?

8. அதிவேகத்துடன் ஓட்டப்படும் வண்டிக்கு, அபராதம் ரூ. 1000 விதிக்க சட்டமுள்ளது. மோ.வா. ச  112 இன் படி ஒவ்வொரு வாகனத்திற்கும் வேகம் குறிப்பிடப்பட்டு இருக்கும்போது அதிவேகமாக செல்லும் வகையில், வாகனம் தயாரிக்க நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. உதாரணமாக  இரு சக்கர வண்டி 65 கி.மீ.க்குள்தான் செல்லவேண்டும் என்றால் 120 கி.மீ.க்கு ஓட்டும் அளவிற்கு வண்டி வடிவமைப்பை அனுமதிப்பதேன்?

9.
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், கருப்பு நிற ஸ்டிக்கர் நீக்காமல் ஓடும் பணக்கார கார்களை போலீசாரால் நிறுத்தி அபராதம் விதிக்க முடியுமா? இரு சக்கர வாகனச் சாவியை பிடுங்குவது போல காரை நெருங்கி பார்க்கும் தைரியம் உள்ளதா?

10.
பக்க கண்ணாடிசைகை  விளக்குஒலிப்பான் (ஹாரன்) இல்லாமை, அதி வேகத்துடன் முந்திச் செல்வது (over taking ) போன்றவற்றிற்கும் மோ.வா சட்டம் ரூ.100 அபராதம் விதிக்கச் சொல்கிறது. இன்றைக்குள்ள பெரும்பாலான ஆட்டோக்களில்  பக்க கண்ணாடி இருக்காது. இடதுகைப்  புறமாக முந்திச் செல்வதில் ஆட்டோக்கள் முதலிடம் பிடிக்கின்றன.  இதுவரை எத்தனை வாகனங்கள்  மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்?

11.
அனைத்து அரசு, தனியார் வாகனத்தின் ஹெட் லைட்டுகள் (முகப்பு விளக்குகள்)  கண்கள் கூசும் அளவிற்கு உள்ளது. கண்கள் கூசும் அளவிற்கு  ஹெட் லைட்டுகள், ஒரு வண்டிக்கு 10 விளக்குகள், பகலில் கூட விளக்கு வெளிச்சம் போட்டு கண்கள் கூசச் செவதற்கு இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. இதுவரை எத்தனை வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளார்கள்?

12.
இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம்காரில் பின் இருக்கையில் அமர்பவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் எனச் சொல்லாதது ஏன்?

13.
நிறுத்தக்கூடாத இடத்தில்ஆட்களை ஏற்றி அனைத்து வாகனத்திற்கும் இடையூறு செய்யும் மினி பஸ், ஆடோக்கள் மீது சட்டப்படி எவ்வளவு அபராதம் இது வரை விதிக்கப்பட்டுள்ளது? போக்குவரத்திற்கு இம்சை செய்யும் கார்கள், அரசியல் கட்சிக் கொடியுடன் நிறுத்தப்படும் வண்டிகளுக்கு போலீசாரால் அபராதம் விதிக்க முடியுமா? அப்பளம் போல நொறுங்கிப்போகும் நான்கு சக்கர வண்டிகளின் விபத்தின் விகிதம் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
14. சென்னையில் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் வாரம் ஒருநாள் சென்னையின் முக்கிய இடங்களில் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவது போக்குவரத்துப் போலீசாருக்கு தெரியுமா...சமீபத்தில் சென்னையில் அப்பாவி உயிர்கள் பலியான சம்பவங்கள் அதன் விளைவுதான் என தெரிந்தும், அதற்கான உரிய சட்டப்பிரிவுகளில்தான் காவல்துறை வழக்குப்பதிந்ததா? காலம் காலமாக நடந்துவரும் இந்த பந்தயத்தினால் முக்கிய சாலைகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சுகின்றனரே அது காவல்துறைக்கு தெரியுமா?

சட்டப்படிதான் நடக்க வேண்டும் எனச்  சொல்லும் காவல் துறை மீது லஞ்சப்புகாரும், பாலியல் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. சட்டப்படி யார் நடவடிக்கை எடுக்க முடியும்? ஏற்கனவே லஞ்சப்புகாரில்  முதலிடம் வகிக்கும் போலீசார்ஹெல்மெட் மூலம் தொடர்ந்து முதலிடம் பெறுவார்கள் என்ற (அவ) நம்பிக்கையை தகர்க்க லஞ்ச ஒழிப்பு போலீசார், " சட்டப்படி" நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள்  நம்புகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில் உடன்பாடுதான். ஆனால் ஹெல்மெட் மட்டுமே முக்கியம் எனக் கருதாமல் இதர போக்குவரத்து சட்ட விதிமுறைகளை போலீசார் முறையாக அமல்படுத்தினால் விபத்திற்கு விடுதலை கட்டாயம் உண்டு.

- எஸ். அசோக்  


Tuesday, June 23, 2015

வாடகை பாக்கி செலுத்த ஜூலை 10 வரை கெடு-நன்றி தினமலர்


"நான் என்னத்த சொல்றது.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனாளாம் அங்க நாலு கொடுமை வந்து ஆடுச்சாம" என்கிற சொலவடைக்கு பொருந்துவது போலே... என் வாடகைய வசூலிச்சு தாங்க சாமின்னு கோர்டுக்கு போனா அங்க கோர்ட்டே வக்கீலுங்ககிட்ட பாக்கி வசூலிக்கலயாம் படிங்க இந்த செய்திய

Advertisement
சென்னை : வழக்கறிஞர்கள் அறைக்கான வாடகை பாக்கி செலுத்த, ஜூலை, 10ம் தேதி வரை, உயர் நீதிமன்ற நிர்வாகம் கெடு விதித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கான அறைகள், 500க்கும் மேல் உள்ளன. அறைகளுக்கான வாடகையை, உயர் நீதிமன்ற பதிவு துறையில், வழக்கறிஞர்கள் செலுத்த வேண்டும்.அறையின் அளவைப் பொறுத்து, வழக்கறிஞர்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒரு வழக்கறிஞருக்கு, மாத கட்டணம் என பார்த்தால், 250 ரூபாய் அளவுக்கு வரும்.அறைகளுக்கான வாடகையை, வழக்கறிஞர்கள் பலர் செலுத்தாமல் உள்ளனர். வாடகையை செலுத்தும்படி, அவ்வப்போது, பதிவு துறையும், வழக்கறிஞர்களை அறிவுறுத்தி வருகிறது.தற்போது, 3,000 ரூபாய்க்கு மேல், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை, வழக்குப் பட்டியலில், பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், உயர் நீதிமன்றத்தில் உள்ள, பிரபலமான வழக்கறிஞர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.வாடகை கட்டணத்தை, ஜூலை, 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், 'நோட்டீஸ்' கொடுக்காமல், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என, பதிவுத் துறை எச்சரித்துள்ளது.

அதிகரித்த ஏடிஎம் கட்டணம். (என்றோ நான் எழுதியது)

அதிகரித்த ஏடிஎம் கட்டணம்.

நண்பர்களே இது அநியாயம் ... RBI மக்களுக்கு இழைக்கும் அநீதி. இதனை எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.  எப்படி?.. வங்கியில் கவுன்டரில் பணம் எடுப்பதற்கு ஒன்றும் தடை இல்லை. அதிலும் எவ்வளவு என்று நிர்ணயம் இல்லை. எனவே எல்லாரும் ஏதேனும் ஒரு நாளில் ஒன்று கூடி வரிசையில் நின்று ருபாய் நூறு எடுக்க வேண்டும். இப்படி செய்வதனால் வங்கிகளுக்கு புரியும் ATM மூலமாக எவ்வளவு சேமிப்பு என்று..   சரி ஆர் பி ஐ முடிவில் எனக்கு ஏன் இந்த ஆதங்கம் என்று கேட்கிறார்கள? கொஞ்சம் கீழே படியுங்கள். 

1. எல்லா நிறுவனங்களுமே தங்களுடைய ஊழியர்களுக்கான மாதந்திர சம்பளத்தை வங்கி மூலமாக கொடுக்க துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதிலும் ஒரு கொடுமை அந்த நிறுவனம் சொல்லும் வங்கியின் ஒரு குறிப்பிட்ட வங்கி கிளையில் மட்டுமேய்ய்ய்யி நமது கணக்கு துவங்கப்படும். அவர்கள் ஏ டி எம் அட்டை கொடுப்பார்கள். இது சவுகரியம் தான்.. ஆஆனால் நம்முடைய சண்முகம் அண்ணாச்சி வாங்கும் சம்பளம் ரூ 10,000... கூலிக்கு வேலை செய்யும் கழிவறை சுத்தம் செய்பவர். அவாரலே எல்லா தொகையும் ஒரே நாளில் எடுத்து கையில் வைத்துகொள்ள முடியுமா. அவர் இரண்டு நாளுக்கு ஒரு முறை ரூ 100 ரூ 200 ரூ  500 எடுக்கும் வசதியினால் மட்டுமே கொஞ்சமாவது பணம் சேர்க்கிறார். கையில் காசு இருந்தால் செலவாகிவிடும். இனி அவர் பிழைப்பில் மண் போடுவார்களோ ?

2. பெரும்பாலான ....ஆஆம் பெரும்பா....லான வங்கிகள் தங்களுடைய ஏ டி எம் மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை.  பாதி நேரம் கனெக்டிவிட்டி பிரச்சினை.. மீதி நேரம் பணம் இருக்காது.. அப்படியே இருந்தாலும் அதில் சரியான டினாமிநேஷன் இருக்காது.. என்னுடைய அனுபவம் ஒரிஎண்டல் பேங்க்  டவுன் ஹால் ரோடு மதுரை. சரி பக்கத்தில் வேறு ஒரு பாங்கின் ATM இருக்கிறது என்று எடுத்தால் ...அய்யோடா அதுக்கு ஒரு சார்ஜ் போடுவாங்க. இல்லையா அதே வங்கியின் இன்னொரு இடம் தேடி ஓட வேண்டும். அதுக்கு ஆட்டோ அல்லது வேறு வகையில் ருபாய் 50 செலவழிக்க வேண்டும். அவசரத்துக்கு வேற வழி தண்டம் அழ வேண்டும். (அப்பவே சொன்னேனே கேட்டியா என்று மைவியிடம் ஒரு இடி வேறு) இன்னொரு உதாரணம் இந்தியன் பேங்க்-மதுரையின் பெரும்பாலான கிளைகள். 

3. மேலே சொன்ன வகையில் (எண் 1).. என்னுடைய நிறுவனம் தனது தலைமை அலுவலகம் டில்லியில் இருப்பதால் தனக்கு வசதியாக எல்லா ஊழியர்களுக்கும் அங்கே இருக்கும் ஒரு வங்கி கணக்கில் ஆரம்பிக்க வற்புறுத்துகிறது .. ஆனால் அந்த வங்கிக்கு சென்னை தவிர வேறு எங்கும் ATM கிடையாது.. இந்த நிலையில் என் நிலைமை ஒவ்வூர் மாதமும் தனியாக என்னுடைய பட்ஜெட்டில் ரூ ௨௦௦ எடுத்து வைக்க வேண்டும்..

4. வங்கிகளின் பெரும்பாலான ATM மையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை .. வழுக்கும் படிக்கட்டுகள்.. நாற்றம் பிடித்த உள்அறைகள் .. பாதுகப்பற்ற முறையில் தளம் ..காவலர் இல்லாத நிலை.. அப்படியே இருந்தாலும் ஒரு திடமற்ற ஒப்புக்கு ஒரு 60 வயது அப்பாவி .. அவருக்கான பணி என்ன தெரியுமா? சார் பணமில்லீங்க வேற ATM பாருங்க என்று சொல்வது.. என்னுடைய அனுபவம் ஒரியன்டல் பேங்க் டவுன் ஹால் ரோடு மதுரை.. 

5. முறையான கையேடுகள் இல்லாதது .. உதாரணமாக நீங்கள் சென்னை நங்கநல்லூர் செல்கிறீர்கள் அங்கே நீங்கள் தில்லை கங்கா நகர் செல்கிறீர்கள் AXIS பேங்க் atm எங்கேங்க இருக்கு என்ற ஒவ்வொரு நண்பரிடமும் கேட்க வேண்டும்.. சோதனை நம்ம நண்பரின் வீடு கொல்லைப்பக்கம் தான் இருக்கும்.. ஆனாலும் விதி நம்மை விடாது மேலே சொன்ன வகையில் அங்கே பணம் எடுக்க விடாமல் சதி செய்யும். வேறென்ன அதுக்கு ஒரு சார்ஜ் போடுவார்கள் 

6. இதில் இன்னொரு கொடுமை .. ICICI மாதிரியான சில வங்கிகள் இரண்டு அல்லது மூன்று மெஷின் வைத்திருப்பார்கள்.. ஒன்று ரூ 5௦௦௦ க்கு கீழே எடுப்பதற்கு இன்னொன்று அதுக்கு மேலே ஆனால் வேகமான முறையில் எடுப்பதற்கென்று ஸ்டாண்டர்ட் தொகைகளில் .. இன்னொன்று நீங்கள் கேட்கும் முறையில் ஆனால் ரூ 5௦௦௦ க்கும் மேலே எடுப்பதற்கு .. நம்ம ஷனுமகம் அண்ணாச்சிக்கு என்ன தெரியும்.. அவரும் ஒவ்வொன்றாக போட்டு பார்பார்.. பாவம் அவருக்கு தேவை ரூ ௨௦௦ மட்டுமே .. விதி அவரை விடாது போலே இன்னிமே அதுக்கும் இப்படி எதாவது சார்ஜ் போடுவாங்களோ. 

7.  நம்மளை எல்லாம் விடுங்க.. சில பென்ஷேன் வாங்கும் பெரியோர்களின் கொடுமை சொல்லில் மாளாது.. அவர்களின் அப்போ அப்போ தேவை என மருந்து மாத்திரை செலவளுகளுக்கு பணம் எடுத்தால் அதோ கதி.. அவர்களுடைய ஒரு வேளை டிபன் காசு கானாமாக போகும். 

இன்னும் ஒரு பத்து பாயிண்டு சொல்ல முடியும் .. ஆனாலும் ஒங்க இலகுவான மனசை புண் படுத்த மனசு வல்ல 

இப்போ சொல்லுங்க நண்பர்களே என்னுடைய ஆதங்கம் நியாயமா இல்லையான்னு .. சொன்னால் பத்தாது இதை எல்லோருக்கும் சொல்லுங்க .. ஒரு தேதிய குறிங்க.. போராடுவோம். புரிய வெப்போம் நம்ம அவஸ்தைய..

எஸ் ரமணன் 
11-Nov-2014

கட்டாய ஹெல்மெட் உத்தரவில் விதி விலக்கு வருமா - நன்றி தினமலர்

கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
நன்றி : தினமலர் 23 Jun 2015

'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் எதிரொலியே இந்த அறிவிப்பு.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. 
'எக்ஸ்ட்ரா லக்கேஜ்':

இனிமேல் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும், 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' ஆக, கூடுதலாக ஒரு, ஹெல்மெட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், மனைவி, உறவினர், நண்பர் என, யாரையும் பின் இருக்கையில் அமர்த்த முடியாது.மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 129ல், இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பயணிப்பவர், பாதுகாப்பு தலைக்கவசம் - 'ஹெல்மெட்' அணிய வேண்டும். அந்த தலைக்கவசம், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்துள்ள தரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த பிரிவு, அதாவது, கட்டாய தலைக்கவசம் அணிவது, சீக்கியர்களுக்கு பொருந்தாது. மாநில அரசு விரும்பினால், விதிவிலக்கு அளிக்கலாம் எனவும், சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.தமிழக அரசைப் பொறுத்தவரை, விதிவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

வாகன ஓட்டிகளுக்கு, இன்னும் ஒரு பிரச்னை உள்ளது. வாகனத்தை ஓட்டுபவர், ஹெல்மெட் அணிந்து, பின்னால் உட்கார்ந்திருப்பவர் அணியவில்லை என்றால், ஆணவங்கள் பறிமுதல் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.ஆவணங்கள் பறிமுதல் செய்வது என்பது, வாகனத்தை முடக்கி வைப்பது போல் தான். ஏனென்றால், ஓட்டுனர் உரிமம், வாகன ஆவணங்கள் இல்லாமல், வாகனத்தை ஓட்ட முடியாது. அப்படி ஓட்டினால், அது, சட்டப்படி குற்றம். அதனால், இந்த குற்றத்துக்காக, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும்.எந்தெந்த குற்றங்களுக்காக,
ஆவணங்களை முடக்கி வைக்க போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை, மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 206 விளக்குகிறது. 
ஆவணங்களை முடக்கலாம்...:

இந்தப் பிரிவில், ஹெல்மெட் அணியாததற்காக, ஆவணங்களை முடக்கலாம் என, கூறப்படவில்லை.ஹெல்மெட் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்க தான், சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தவறு செய்தால், 100 ரூபாய், தொடர்ந்து செய்தால், ஒவ்வொரு முறையும், 300 ரூபாய், அபராதம் விதிக்கலாம்.ஹெல்மெட் அணியாததால், 10 ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, 1,670ல் இருந்து, 6,419 ஆக உயர்ந்துள்ளது. 'இந்த அசாதாரண சூழ்நிலையால் தான், சட்டத்துக்கு அப்பாற்பட்டு, உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை உள்ளது' என, நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

அதற்கு முன்னுதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த,பிரிதிபால் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதி கிருபாகரன் மேற்கோள் காட்டியுள்ளார்.ஆவணங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடுவதன் நோக்கம், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக தான் எனவும், நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். அதேநேரத்தில், 'நீதிமன்ற உத்தரவு மூலம், வாகன ஓட்டிகளை தேவையின்றி இடையூறு செய்யக் கூடாது' என, போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
உற்பத்தியாளர்கள் பொறுப்பு!

மோட்டார் வாகன விதிகளின்படி, வாகன உற்பத்தியாளர்கள், ஹெல்மெட் வழங்க வேண்டும். இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, வாகன உற்பத்தியாளர்கள், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்துள்ளபடி, ஹெல்மெட் வழங்க வேண்டும்.விதிகளில் இது இடம் பெற்றிருந்தாலும், வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்கள், இதை அமல்படுத்துவதில்லை. எனவே, வாகன உற்பத்தியாளர்கள், இதை கண்டிப்புடன் அமல்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கேரளாவிலும் இதே பிரச்னை!

கேரள மாநிலத்திலும், மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தும் விதமாக, வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிய வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அந்த உத்தரவில், 'வாகன ஓட்டிகள், பயணிப்பவர்கள் அணியும், ஹெல்மெட், ஐ.எஸ்.ஐ., தரத்தில் இருக்க வேண்டும்' என, கூறப்பட்டது. அதை எதிர்த்து, கேரளா ஆட்டோ டூ வீலர் சங்கம், மேல்முறையீடு செய்தது.மனுவை, நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், சங்கரசுப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 129ல், கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்து, தனி நீதிபதியின் கவனத்துக்கு, மனுதாரரோ, மாநில அரசோ, கொண்டு வரவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை பார்க்கும் போது, கேரள மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்துவது போலாகும். அந்த விதியில், 'ஐ.எஸ்.ஐ., தரம் உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த விதியை, அமல்படுத்த முடியாது. ஏனென்றால், பிரிவு 129ல், திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டது. அதன்படி, ஹெல்மெட் குறித்து, 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' அமைப்பு நிர்ணயித்த தரத்தை தான், கேரள அரசு பின்பற்ற வேண்டும். பிரிவு, 129ல் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை கவனிக்காமல், வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிடுவதை தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை.தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்கிறோம். மனுவை தள்ளுபடி செய்வதால், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்த தரத்தை, கேரள அரசு அமல்படுத்துவதில் இந்த உத்தரவு குறுக்கே நிற்காது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, 2000, ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்றவர்.

-
நமது நிருபர் -