Friday, December 12, 2025

மாண்பு மிகு வணங்கத் தகு நீதிபதிகள்


face book ல் Lilly Arul Sheela பதிவிலிருந்து


உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த #மெகர்சந்த்மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். 

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். 

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார். 


'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். 


உடனே அந்த மாஜிஸ்திரேட் 

``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். 


``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன். 


``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. 

அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். 

மகாஜன் வெளியில் வந்தார்!

மெகர் சந்த் மகாஜன்


* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த #டிசத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. 

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.


அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. 

தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்

 `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். 

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 

6 வாரம் விடுமுறை எடுத்தார். 


அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!


* #குருபிரசன்னசிங். 

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

 ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. 

அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். 


குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, 

பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!

* நீதிபதி #கேபிசுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது. 

அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். 


இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் 

பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.


* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது! 


ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. 

அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `


`என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று 

வழக்கறிஞர்கள் சொன்னார்கள். 


உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக, 

ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.


* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் #சுப்பிரமணியஐயர். 

அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் 

சுப்பிரமணிய ஐயர். 

இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. 

பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். 


என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், 

ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.


- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள். 


அன்றும் இருந்தார்கள். 

இன்றும் இருக்கிறார்கள்.     

ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி... நீதிபதி.


Shasi Sulai அவர்களின் மீள் பதிவு...

Tuesday, June 24, 2025

மொபைல் ஆரம்பகாலம் நினைவுகள்

 Facebook : sathyamoorthy Ramanujam எழுதியது


டெல்லியில் இருந்தபோது, மொபைல் ஃபோன் வந்த புதிது. இந்தியா முழுக்க சர்கிள் - சர்கிள் என பிரித்து, மாநகரத்துக்கு ரெண்டு ஆபரேட்டர், மாநகரம் தாண்டி மாநில மொஃபஸலுக்கு ரெண்டு ஆபரேட்டர் என்று மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்.  


டெல்லியில் ஏர்டெல், ஏர்செல் இருந்தன. என் முதல் மொபைல் ஏர்டெல்லிடம் இருந்து. 1994 - 95 என்று நினைக்கிறேன்.  ஆஃபரில் ஃபிலிப்ஸ் கம்பெனி  மொபைல். அன்றைய தேதியில் அதன் விலை ரூ.17000/-


ஒரு நிமிஷத்துக்கு incoming ரூ.8, outgoing ரூ.16.  கால் நிமிடம் பேசினாலும் முழுதாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.   என் ப்ளானில் 100 நிமிடங்கள் ஃப்ரீ என்று இருந்தது என்று ஞாபகம்.


அந்த மொபைல் ரொம்ப நாள் உழைத்தது.  அப்போது அது ஒரு அரை அடி உயரம் இருக்கும்.  


அந்த சமயத்தில், பட்டன் மொபைல் ஆனாலும் சிறியதாக வைத்திருந்தால்தான் பெரிய ஆள். 


ஷர்ட் பாக்கெட்டில் வைத்தால் அதன் கொம்பு நுனி மட்டும் வெளியே தெரியும்.  என்னோட பாஸ் அதை வைத்திருந்தார்.


எரிக்ஸன் மொபைல். அதன் விளம்பரம் ஒன்று டிவியில் வரும், அதன் சிறுமையின் பெருமையைக் காட்ட என.


ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு அழகிய பெண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருப்பாள். எதிரே யாரும் இருக்கமாட்டார்.  தூரத்தில் ஒரு நடுத்தர வயது மனிதர் அமர்ந்திருப்பார். அவருக்கு இந்தப் பெண் இவருடன  பேசுவது போல இருக்கும். எழுந்து இந்தப் பெண்ணருகில் ஜொள்ளராக வருவார். சரியாக அந்த சமயத்தில் அந்தப் பெண் கன்னத்தில் இருந்து கையை எடுக்க, அவள் கையடக்கமாக எரிக்ஸன  மொபைல் இருக்கும். 


அந்த ஃபோன் வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் விலை அதிகம் என்பதால் நெருங்க முடியவில்லை.  பின்னர் மோட்டோரோலா, நோகியா என்று புது மாடல்கள் வாங்கியிருக்கிறேன். பெரிய ஃபீச்சரெல்லாம் இருக்காது. அதிக நேரம் பேட்டரி, நிறைய நம்பர் ஸ்டோர் செய்யலாம் என்று இருக்கும்.


படத்தில் இருப்பது அந்த ஃபோன்களில் ஒன்று.


அந்த காலத்துல இது லேட்டஸ்ட் மொபைல்.


கருங்கல் மாதிரி அதோட பேட்டரி. 


பக்கத்துல முழு விசிட்டிங் கார்ட் போல சிம். அந்த வி.கார்ட் சிம் நுழைக்க அந்த மோட்டோரோலா ஃபோன்ல ஸ்லாட் இருந்தது.

 

ஒரு நிமிஷம் பேச ரூ.16 சார்ஜ் என்பதால், ஃபோன் பெருமைக்குதான். மிஸ்ட் காலிலேயே காலம் தள்ளுவோம்.  


ஒத்தனும் ஃபோன் பண்ணமாட்டான். 


அதாலயே, ஒரு முறை சார்ஜ் போட்டால் ஒரு வாரம் வரும். 


இந்த ஃபோன் கால்ல விழுந்தா ஃபோன் ஒடையாது. கால் ஒடையும்.


நான் உபயோகித்து அப்புறம் ரொம்ப நாள் என்னுடைய அப்பா அதை உபயோகித்தார்.  இன்னும் பத்திரமாக பீரோவில் இருக்கிறது.


யாராவது பீரியட் படம் எடுத்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று இருக்கிறேன்.

Saturday, October 26, 2024

அட்ரஸ் அட்ராசிட்டி

 நன்றி: https://www.facebook.com/mahadevanchandrasekaran.c.9?mibextid=ZbWKwL

பல வருசமா மார்கெட்டிங் வேலைல இருந்ததால அட்ரஸ் சொல்றது, கண்டுபிடிக்கறது ரெண்டுமே நல்லாவே வரும். இப்ப கூகிள் மேம் இருக்கறதால எல்லாருக்குமே ஈசியா இருக்கு. ஆனா சில வருசங்களுக்கு முன்னால அந்த மாதிரி இல்ல. 


ஒரு கஸ்டமரை போய் பார்க்கனும். போன் பண்ணுவோம், ஒரு மெயின் ஏரியா வந்துட்டு கூப்பிடுங்கனு சொல்லிருப்பாரு. அதை நம்பிட்டு கிளம்பிடுவோம். அங்க போய்ட்டு கூப்ட்டா, "சார் நீங்க என்ன பண்றிங்க, அங்கிருந்து அப்படியே நேரா வாங்கனு சொல்லுவான்" 


அந்த ரோட்டுல நின்னு சுத்தி பார்த்தா நாலு ரோடு இருக்கும். இதுல ரோடுனு சொல்லவே மாட்டாங்க. 

"சார் நால் ரோடு இருக்கு சார், எந்த ரோட்ல வரனும். "


சார் நீங்க இருக்கற இடத்துக்கு நேர் எதிரான ரோட்ல வாங்க சார்.னு சொல்லுவானே தவிர எந்த ரோடுனு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டாங்க. 


இன்னும் சிலரு மேக்க போற ரோட்ல வந்தீங்கன்னா, அரை பர்லாங்ல வடக்கு பக்கமா ஒரு மண் ரோடு வரும்ங்க, அதுல நேரா வாங்கனு சொல்லுவாங்க. 


நமக்கு நல்ல நாள்ளேயே திசை தெரியாது. இதுல எங்க போய் கிழக்கும், மேற்கும். 


ஒரு சில சமயம் கஸ்டமர் சொன்ன இடத்துக்கு போய்ருவோம். ஆனா அவன் சொன்ன அடையாளம் எதையுமே கண்டுபிடிக்க முடியாது. மளிகை கடை இருக்கும், போன் பூத் இருக்கும், பேக்கரி இருக்கும், ஆனா அந்த பக்கி இது எதையும் சொல்லாது. "சார் ஒரு பொறிக்கடை இருக்கும் பாருங்க," னு சொல்லுவாங்க. ஆனா அதை மட்டும் நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது. கடைசில பார்த்தா அது ஒரு ஓரமா சந்துக்குள்ள இருக்கும். நாம போன நேரம் மத்தியான சாப்பாட்டுக்கு கடையை பூட்டிருப்பாங்க. 


"சார் இந்த இடத்துக்கு வந்துட்டு என் பேரை சொல்லுங்க, அவங்களே என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்ருவாங்கனு" கெத்தா சொல்லிட்டு போவாரு. சரினு அங்க போய் அந்த கஸ்டமர் பேர் சொன்னா யாருக்கும் தெரியாது. சுத்தி சுத்தி யார்கிட்ட கேட்டாலும் அவங்களுக்குள்ள பேசிப்பாங்களே ஒழிய நமக்கு பதிலே சொல்ல மாட்டாங்க. அப்புறமா ஒருத்தன் வந்து "அட நம்ம குட்டான் தான் இது, அவன் பேரு தான் ஜெகந்நாதன்னு சொல்லிட்டு போவான். அப்புறமா ஊருக்குள்ள நம்ம ஒரிஜினல் பேரு யாருக்கும் தெரியாது சார்னு இளிச்சிட்டே சொல்லுவாங்க. நமக்கு பத்திட்டு வரும். 


ஆனா ஒரு சிலர் கன் மாதிரி வழி சொல்லுவாங்க. "அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து ரைட் திரும்புங்க, மூணு ஸ்பீட் பிரேக்கரை தாண்டுங்க, அடுத்து லெப்ட் சைடு ஒரு மளிகை கடை வரும். அதை தாண்டின உடனே பாருங்க ஒரு ரைட் வரும். அதுலேர்ந்து கணக்கு வைங்க, அஞ்சாவது ரைட்டு திரும்புங்க. உள்ள வந்தீங்கன்னா, ரெண்டாவது லெப்ட், மூணாவது வீடு, கருப்பு கலர் கேட் இருக்கும் பாருங்க சார்னு சொல்லுவாங்க." அவங்க வீட்டு முன்னால போய் நிக்கலாம். அவ்வளவு கரெக்டா இருக்கும். 


சில பேர் நாம வழி சொன்னாலும் சரியா வரமாட்டாங்க. ஒரு ஏரியாக்கு வந்துட்டு கூப்பிடுவாங்க. அங்கிருக்கற பெரிய பெரிய லேண்ட்மார்க் சொல்லுவோம், எதுவுமே இல்லைனு சொல்லுவான். கடைசில பார்த்தா நாம சொன்ன இடத்துக்கு வந்துருக்கவே மாட்டாங்க. 


இப்ப கூகிள் ஆண்டவர் துணை இருக்கறதால எல்லா இடத்துக்கும் அவரே வழி காட்டறாரு. 


திரைப்படங்களில் எத்தனையோ அட்ரஸ் கேட்கும் காட்சிகள் வந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற இந்த சீனை மறக்க முடியாது. "கும்ப்டுக்கடா கழித" என்று பாலு சொல்ல, பக்தி சிரத்தையாக மனோகரும் கும்பிடுவார். 


வழி சொல்றது கூட ஒரு கலை தான்.


மீள் பதிவு

Monday, September 25, 2023

கோரஸ் பாடும் பெண் கொடுத்த ஐடியா

 Reproduction from Face book

Thanks to mahalingam lingam


#இளையராஜா

------------------------------

கோரஸ் பாடும் பெண் கொடுத்த ஐடியா


கையில் காசில்லாமல் 8 கிமீ கால்நடையாக நடந்த இளையராஜா


வாழ்க்கையில் உயர்வு என்ற விஷயம் யார் மூலம் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கணிக்க முடியாது. இதற்கு இசைஞானி இளையராஜா வாழக்கையையே உதாரணமாகக் கூறலாம். இன்றைக்கு நாம் அண்ணாந்து பார்க்கக்கூடிய இடத்தில் இருக்கும் இளையராஜாவிற்கு ஆரம்பக்காலத்தில் சரியான பாதையைக் காட்டியவர் கோரஸ் பாடக்கூடிய கமலா என்ற பெண்தான்.


இளையராஜா, அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், அவரது தம்பி கங்கை அமரன் மூவரும் சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதற்காக பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தனர். சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில், ஓ.ஏ.கே. தேவர் தயாரித்த ஒரு நாடகத்திற்கு மூவரும் இசையமைக்கின்றனர். அந்த நாடகத்திற்காக பாட வந்தவர்தான் கமலா. அவர் பாடகி என்பதால் வந்தவுடனேயே இவர்களது இசைத்திறமை மற்றும் இசைக்கருவிகளை கையாளும் விதத்தைப் பார்த்து அசந்துவிட்டார். உடனே, இளையராஜவை அழைத்து ஏதும் படங்களுக்கு இசையமைத்துள்ளீர்களா என்று கேட்கிறார். சினிமாக்கு இசையமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரில் இருந்து கிளம்பி வந்தோம், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இளையராஜா கூறுகிறார்.


இந்தக் கமலா எச்.எம்.வி நிறுவனம் உருவாக்கும் தனிப்பாடல்களிலும் பாடுவார். இசை உலகத்தில் அவரது பெயரே எச்.எம்.வி. கமலாதான். கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசையெல்லாம் தெரியுமா என்று கமலா இளையராஜாவிடம் கேட்க, அவர் தெரியாது எனக் கூறுகிறார். மேலும், எங்களுக்கு அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை. உங்களுக்குத் தெரிந்த ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்கிறார்.


நிறைய மேடைகளில் தன்ராஜ் மாஸ்டரை தன்னுடைய குரு என்று இளையராஜா கூறுவார். அந்த தன்ராஜ் மாஸ்டரை இளையராஜாவிற்கு பரிந்துரைத்தவர் எச்.எம்.வி. கமலாதான். கமலாவின் பரிந்துரையைத் தொடர்ந்து, தன்ராஜ் மாஸ்டரிடம் சென்று இசை கற்க ஆரம்பித்தார் இளையராஜா. அங்குதான் கர்நாடக இசை, மேற்கத்திய இசையை அவர் கற்றார். சில நாட்களில் கையில் காசில்லை என்றால் வடபழனியில் இருந்து மைலாப்பூருக்கு 8 கிமீ கால்நடையாகவே நடந்து செல்வாராம். அவரிடம் இசை கற்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய ஜீனியஸிடம் நாம் இசை கற்கிறோம் என்பது இளையராஜாவிற்கு தெரிந்துவிட்டது.


தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட இப்போது இசை நோட்ஸ் கொடுப்பார் இளையராஜா. ஆனால், தன்ராஜ் மாஸ்டரை சந்திக்கும்வரை இளையராஜாவிற்கு இசை நோட்ஸ் எழுதவே தெரியாதாம். ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷ் என்று ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்க தன்ராஜ் மாஸ்டர் செல்கிறார். அப்போது இளையராஜாவையும் உடன் அழைத்துச்செல்கிறார். அன்று பணிகள் முடிந்த பிறகு தன்னுடைய மாணவனை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார். அதன் பிறகு, ஜி.கே.வெங்கடேஷிடன் உதவியாளராக பொன்னுக்கு தங்க மனசு படத்தில் இளையராஜா வேலை செய்கிறார். அதன் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய தேவராஜ் மோகனின் அடுத்த படமான அன்னக்கிளி மூலமாக இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். பஞ்சு அருணாச்சலம்தான் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினார். கமலா மூலமாக தன்ராஜ் மாஸ்டரின் அறிமுகம், அவர் மூலமாக ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம், அவர் மூலமாக தேவராஜ் மோகன் அறிமுகம், அவர் மூலமாக பஞ்சு அருணாச்சலம் அறிமுகம், அவர் மூலமாக பட வாய்ப்பு, அதன் மூலம்தான் மாபெரும் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார்.


இன்று இசை தேவதை போற்றும் ஞானி

Monday, August 28, 2023

யார் கடவுள் புரிகிறதா.

 யார் கடவுள் ?👇


இன்று வேலைக்காரியும் வரல. சமையற்காரியும் லீவு. எனக்கோ சமைக்க அலுப்பு. ஸ்விக்கில ஆர்டர் பண்ற மூடும் இல்ல.


வெளியே போனால் என்ன ? 


கொஞ்சம் பழைய மாடல். ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ண  உதைத்தேன்‌. சில நாட்கள் எடுக்கல என என் மேல் அதற்கு கோபம் போல... எனது உதை...

பயனற்று போனது...


ஒரு நல்ல டிபன் சாப்பிட 

வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்... 


சின்னதாக ஒரு உரத்த சிந்தனை.... பிறகு...

ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...👨🏼‍🦯


இன்று ஏன் எனக்கு  இப்படியெல்லாம்  நடக்க வேண்டும்?


வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?


இரவு 8  மணிக்கு ...

ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.

சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம். 


அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும் .


எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது . 


இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?


கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது.  


அருகில் சென்றதும் தான் தெரிந்தது....


அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று..


4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை.... அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது. 


கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்.... 


இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது....


என் மனதில் தோன்றியவைகளைத் தான்,

நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 


உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ...

உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன். 


உனக்குள்ளே இவ்வுலகம்...

ஆனால்...

நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே... 


*எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா... 


என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை. 


கம்பிக்குள் சிறை  வைக்கப்பட்ட  நீ,யாருக்கு உதவப் போகிறாய்? 


நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்? 


சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.


என்னைப் பற்றி பேசுகிறேன்.

இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?


இந்தக்  கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?


என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.


அந்த மதில் சுவரின் மூலையில்....

பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன். 


அது  துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி.


பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக  வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.


யாரைப் பெற்ற தாயோ...


ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே  அடைக்கலம் வந்து இருக்கிறார் ...


அவர் ஏதோ  முனகுவது  போல் இருந்தது.


உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது. 


என்னமா வேணும்?

பணிவுடன் நான். 


ஐயா.. சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா


அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது. 


அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது. 


இந்த  மழையில்...

இந்த இரவில் ...

ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன் ) நானே இவ்வளவு  தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது... 


இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி. 


இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு...


நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன். 


*கிருஷ்ணா  நல்லாருப்பா* 


என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள். 


என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள் ...


*அவள் கிருஷ்ணரிடத்தில் உணவை கேட்டிருப்பால் போலும்... ஆதலால் யார் கொடுத்தாலும் கொடுப்பவன் கிருஷ்ணன் தான் என்ற நம்பிக்கை போலும் அவளுக்கு என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்..


இப்போது எனக்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது...


எனக்கு எந்த ரூபத்தில் வந்து நீ உதவி செய்யப் போகிறாய் என்று  நான் உன்னை கேட்டேன்...


இப்பொழுது புரிகிறது... 


உதவி தேவைப்பட்டது எனக்கல்ல...

அந்த மூதாட்டிக்கு என்று... 


உதவியதும் நான் அல்ல...

 *என் ரூபத்தில் நீ* என்று... 


இப்போது கிருஷ்ணரை பார்க்கிறேன்... 


*இத் தருணத்தில் மூதாட்டிக்கு  நீ தான் நான்....*

*கம்பிக்குள் இருக்கிற நான் .*.


*கம்பிக்கு வெளிய இருக்கிற உன்னை வைத்து பாட்டிக்கு எப்படி உணவை வர வைத்தேன் பார்த்தாயா* என்று அவர் கேட்பது போல் இருந்தது..


*யார் கடவுள் புரிகிறதா...*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Tuesday, August 22, 2023

சுந்தர பாஹூ ஸ்தவம் என்கின்ற நூலை இயற்றினார் கூரத்தாழ்வான்

 ஸ்ரீமதே ராமாநுஜாய நம :


அழகரின் அற்புத லீலைகள்.....!!!


கூரத்தாழ்வான் கண்களை இழந்தார். அன்றைக்கு இருந்த அரசியல் நிலையால், இராமானுஜர் சோழதேசத்தில் இருக்க முடியாமல், மேல்நாடு என்று சொல்லப்படும் திரு நாராயணபுரம் சென்றார். கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல், திருமாலிருஞ்சோலைக்கு வந்தார். திருக்கோட்டியூரிலிருந்து பல யாதவர்களை அழைத்துக்கொண்டு சென்று நந்தவனம் ஏற்படுத்தி புஷ்ப கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருந்தார்.

அது ஒரு மார்கழி மாதம். தினசரி திருப்பாவை நடக்கும். ஐந்தாவது பாட்டு ‘‘மாயனை மன்னு வடமதுரை”. எம்பெருமான் ஆயர்குலத்தில் வந்து அவதரித்த சீர்மையும், எளிய ஆயர்குல பிள்ளைகளோடு கலந்து பழகிய எளிமையும், ஆழ்வார் மனதில் படம் போல் ஓடிக்கொண்டிருந்தது. கூரத்தாழ்வான் திரும்பத் திரும்ப “மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.”

 இதென்ன இந்தத் திருப்பாவை, இன்று நம்மை இப்படிப் பாடாய்ப்படுத்துகிறது...ஓ....அதனால்தான் நம்முடைய ஆசாரியன் இராமானுஜர், திருப்பாவையின் சுவையிலேயே மூழ்கியதால், அதையே வாழ்வின் ஒளியாகக் கொண்டதால், அதிலேயே மூழ்கிக் கிடந்ததால், ‘‘திருப்பாவை ஜீயர்” என்று அழைக்கப்பட்டாரோ... உண்மைதான்..திருப்பாவை எப்பேர்ப்பட்ட வரையும் கரைத்துக்  கொண்டு வந்து சேர்த்து விடும். சரி...சற்று கரையேறுவோம் என்று திருவாய்மொழியை நினைத்தார். ஆனால், அவருக்கு நினைவுக்கு வந்த பாசுரம், மற்றொரு பள்ளம்.


பத்துடை அடியவர்க்கு எளியவன்

பிறர்களுக்கு அரிய

வித்தகன் மலர் மகள் விரும்பும் நம்

அரும் பெறல் அடிகள்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு

எத்திறம்! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவேஇந்தப் பாசுரத்தில் அல்லவா நம்மாழ்வார் 18 மாதம் மோகித்து, மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். “வேண்டாம்…வேண்டாம்… இதற்கு திருப்பாவையே பரவாயில்லை. என்று நினைத்துக்கொண்டு, அதே சிந்தனையில் தன் குடிலுக்குத் திரும்பினார். பூக்கூடையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார். மறுபடி மறுபடி ‘‘மாயனை மன்னு வடமதுரை” என்கின்ற பாசுரம் மனதைச் சுற்றிச்சுற்றி வந்து அழுத்தியது. ஏதோ இழந்தது போல நெஞ்சு தவித்தது.


ஏக்கம் பிறந்தது. கண்களில் கண்ணீர் சுரந்தது. இதே சமயம் திருமாலிருஞ்சோலை அழகர் கருவறையில் ஒரு காட்சி. அழகர் ஆனந்தமாக பட்டாடை உடுத்திக் கொண்டு அற்புத தேஜஸ்ஸோடு சேவை தந்து கொண்டிருந்தார். எதிரே அருமையான நிவேதனங்கள். நெய் மணக்கும் அக்கார அடிசில் என்ன... வெண்ணெய் என்ன... மணக்கும் புளியோதரை என்ன... அவருக்கே

உரித்தான தோசை என்ன!

அருமையான ராகத்தில் பட்டர், சகஸ்ரநாம அர்ச்சனை செய்துகொண்டு இருந்தார். இதோ ஆரத்தி நடக்க இருக்கிறது. ஆனால், அழகர் மனதில் ஒரு காட்சி.

அட...இதென்ன இந்த கூரத்தாழ்வான் தன் குடிசையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். இப்பொழுது தானே நமக்கு மாலை சமர்ப்பித்துவிட்டுச் சென்றார். இப்பொழுது என்ன அழுகை? என்ன வருத்தம் அவருக்கு? அழகருக்கு மனம் கொள்ளவில்லை. என் பக்தன்... என் குழந்தை... என் உயிர்... (மச் சித்தா; மத் கத பிராணா;)


நம்மையே நம்பி வந்த அவருடைய வருத்தத்தை உடனே தீர்க்க வேண்டும் என்று துடித்தார். பூஜையில், அவர் மனம் லயிக்கவில்லை. அயோத்தியில் யாரோ ஒருவர் வீட்டில் துக்கம் நடந்தால், அது தன் வீட்டில் நடந்ததாக ராமன் நினைப்பானாமே. உடனே தீர்க்கத் துடிப்பானாமே. உடனே கூரத்தாழ்வான் வருத்தத்தின் காரணம் அறிய வேண்டும்.அடுத்த நிமிடம் ஒரு முதியவராக வேடம் கொண்டார். கூரத்தாழ்வான் குடில் நோக்கிச் சென்றார்.

யாரோ முதியவர் நம்மைத்தேடி வருகிறார். இத்தனை நாளாக நம்மைத் தேடி யாரும் இங்கு வந்தது இல்லையே... ஓ... அழகர் சேவைக்கு வந்திருப்பார் போலும். சிரமப்பரிகாரம் செய்து கொள்ள இந்த குடிலுக்கு வந்து விட்டார். “சரி... இன்று ஒரு அதிதி வந்துவிட்டார்...கவனிப்போம்” என்று அவருக்கு ஒரு ஆசனத்தை இட்டார். ‘‘வாருங்கள் வாருங்கள்” என வரவேற்றார். முதியவர், சுற்றி வளைக்காமல் கூரத்தாழ்வானைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ‘‘உம்மைப் பார்த்தால் பரம சாது போல் தெரிகிறது. எல்லா சாஸ்திரங் களிலும் கரை கண்டவராக உமது முகம் வித்வத் தேஜஸோடு தெரிகிறது. ஆயினும், இன்றைய தினம் நீர் துக்கப்படக் காரணம் என்ன?” என்று கேட்டதும் கூரத்தாழ்வான் பதில் சொன்னார்.


‘‘அதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏதோ என்னுடைய விசாரம். நான் அழுகிறேன். நீங்கள் வந்ததற்கு அழகரை சேவித்துவிட்டுச் செல்லுங்கள்”.  ‘‘அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்? உன்னுடைய அழுகையின் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நான் போகமாட்டேன்” ‘‘சுவாமி... உமக்கு வயது அதிகமாகிவிட்டது. இதில் என் கஷ்டத்தை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்?” ‘‘உன்னுடைய துன்பத்தை நீக்குவதற்கு முயற்சி செய்யப் போகிறேன்”.

கூரத்தாழ்வான் விரக்தியாகச் சிரித்தார்.‘‘பெரியவரே, என் துன்பம் என்னோடு இருக்கட்டும். ஏன் மேலே மேலே பேசிக் கொண்டு போக வேண்டும்? என் துன்பத்தை நீக்குவதற்கு உம்மால் முடியாது?” ‘‘சரி நீர் சொல்ல வேண்டாம்.

உம்முடைய துன்பத்தை யூகிக்கிறேன்”

‘‘என்னுடைய துன்பத்தை யூகிக்க

முடியுமா?”

‘‘ஏன் யூகிக்க முடியாது?”

‘‘சரி சொல்லுங்கள்”.

‘‘இவ்வளவு பேர் இந்த அழகனை சேவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவரை சேவிப்பதற்கு கண்ணில்லை என்று நீர் வருந்துகிறீர். அதுதானே?”

‘‘எதைப் பார்க்கக் கூடாதோ அதை பார்க்காமல் இருப்பதற்காகத்தான் இந்த கண் போனது. நான் எப்பொழுதுமே எம்பெருமானை மனதிலே தியானிப்பவன். அதனால் எனக்கு இந்தப் புறக்கண் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது தேவையில்லாத விஷயத்தை எல்லாம் இந்த கர்ம உலகத்தில் பார்க்க வைக்கும். அழகர் என் நெஞ்சிலே இருக்கின்றார். ஆகையினால் எனக்கு புறக்கண் வேண்டிய அவசியமில்லை. அதனால் அதை இழந்ததற்கான வருத்தமும் எனக்கு இல்லை” என்று அதிரடித்தார்  கூரத்தாழ்வான்.


‘‘கண்ணிழந்த வருத்தம் உமக்கு இல்லையா?”

‘‘இல்லை” ‘‘சரி ஒருவேளை உன்னுடைய வருத்தத்திற்கு காரணம் இப்படி இருக்குமா?”

‘‘எப்படி?”

‘‘அரங்கனின் அடிவாரத்தில் கிடந்தவர்கள் நீங்கள். அங்கே அரசாங்க எதிர்ப்புக்கு அஞ்சி இங்கே வந்து இருக்கும்படியாகிவிட்டதே, நாம் எப்பொழுது அரங்கனை சென்று சேவிப்பது என்கின்ற வருத்தமா?” ‘‘அதுவும் இல்லை. என்னுடைய ஆசாரியன் ராமானுஜர் அரங்கனை சேவிக்க முடியாத நிலை இருக்கும் பொழுது, நான்மட்டும் அரங்கனை சேவிப்பதால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ராமானுஜரை அங்கே இருந்து பிரிய அரங்கன் மனம் ஒப்பி விட்டான்.

என்னுடைய ஆசாரியனை பிரித்த அரங்கனை நான் சேவிப்பதை விட சேவிக்காமல் இருப்பது தான் நல்லது. அதனால், அரங்கனை சேவிக்காத வருத்தம் எனக்கு கொஞ்சமும் இல்லை” இதனை கேட்ட பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது.‘‘இதோபார். உனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்தேன். என்னால் உன்னுடைய வருத்தத்தைத் தீர்க்க முடியும்? எந்த வருத்தமாக இருந்தாலும் என்னால் போக்க முடியும்.”மீண்டும் கூரத்தாழ்வான் சிரித்து விட்டார்.

‘‘உம்மால் போக்க முடியாது என்று சத்தியம் செய்கின்றேன். பிறகு “என்னால் வருத்தத்தைத் தீர்க்க முடியும்” என்று திரும்பத் திரும்ப சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? நீங்கள் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான். ‘‘நான் யார் தெரியுமா? நான் யார் என்று தெரிந்தால், நீ போகச் சொல்ல மாட்டாய். நான் யார் என்று தெரிந்து விட்டால், என்னால் உன்னுடைய துன்பத்தைப் போக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டு நீ பதில் சொல்வாய்” என மிகுந்த கோபம் வந்தது அந்த பெரியவருக்கு. ‘‘சுவாமி...நீர் யாராக இருந்தாலும் சரி, உம்மால் என்னுடைய துன்பத்தை போக்க முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. நீர் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான் ‘‘என்னை யார் என்று தெரிந்து கொண்டு போகச் சொல்கிறாயா?”


‘ஆம்...தெரிந்துகொண்டுதான் போகச் சொல்லுகிறேன்”.

‘‘ நான் யார் என்று சொல். என்னுடைய பெயரைச் சொல்.”

‘‘நீர்தான் அந்த திருமாலிருஞ்சோலை அழகன். சுந்தர பாஹூ. சுந்தரத் தோளுடையான்” என்று கம்பீரமாக கூரத்தாழ்வான் சொன்னார். ‘‘எம்மை எப்படி தெரிந்து கொண்டீர்?”‘‘நாற்றத் துழாய் முடி நாரயணனை” தெரிந்து கொள்ளவா முடியாது? காலையில், திருப்பாவை ஐந்தாம் பாசுரம். அடியேன் திருமாலையைச் சமர்ப்பித்துவிட்டு நின்ற பொழுது, தேவரீர் சூடிய மாலையின் மணம் அறிந்து கொண்டேன். அதே மணம் தான் இப்பொழுதும் இங்கே இருக்கிறது. அப்படியானால், வந்தது யார் என்று தெரிந்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?” என பொன்சிரிப்போடு கூரத்தாழ்வான் சொன்னார்.

‘‘சரி, நான் யார் என்பதை தெரிந்து கொண்டு விட்டாய் அல்லவா. நான் சர்வசக்தன் அல்லவா! இப்பொழுது சொல், உனக்கு என்ன குறை? ஏன் அழ வேண்டும்? என்ன வருத்தம்?”


‘‘திருமாலிருஞ் சோலைப் பெருமானே! இந்த அடியவனைத் தேடி தேவரீர் வந்தது குறித்து மகிழ்ச்சி. அது போதும். என்னுடைய வருத்தம் குறித்து தேவரீர்

கவலைப்பட வேண்டாம்.”

‘‘ இல்லை, சொல்.”

‘‘வருத்தத்தை நீக்க உம்மால் முடியாது. நீர் தேவாதிதேவனாக இருந்தாலும்...”

‘‘என்ன இந்த ஒரு விஷயத்தை செய்ய நமக்கு சக்தி இல்லையா?”

‘‘ஆம்”.

‘‘ காரணம்?”

‘‘நீர்தான் காரணம். நீர் கொடுத்த வாக்கு தான் காரணம்.”

‘‘முதலில் உன்னுடைய துயரத்தைச் சொல்”.

‘‘விட மாட்டீர் போலிருக்கிறதே. சரி சொல்கிறேன். நீர் ஆயர்குலத்து அணி விளக்காகத் தோன்றினீர் அல்லவா”.

‘‘ஆமாம் கண்ணனாக தோன்றினோம்”.

‘‘அப்பொழுது உம்மோடு எத்தனை எத்தனை ஆயர்குல பிள்ளைகள்

விளையாடினார்கள்?”

‘‘ஆமாம்…

 “தன்னேராயிரம் பிள்ளைகளோடு

தளர் நடை இட்டு... 

அன்னே உன்னை அறிந்து கொண்டேன்

என்று  பெரியாழ்வார் தான் இதையெல்லாம் பிள்ளைத் தமிழாகப் பாடியிருக்கிறாரே”.


‘‘அதைக் கேட்கும் பொழுதுதான் அடியேனுக்கு அந்த ஏக்கம் வந்தது. தாங்கள் அவதரித்த போது, ஒரு பிறவி வாய்க்கப் பெற வில்லையே என்கிற வருத்தம் தான் அடியேனை துன்புறுத்துகிறது. அப்படி பிறந்திருந்தால், ஆழ்வார் சொன்னதையெல்லாம் நேரில் அனுபவித்திருக்கலாமே என்கிற ஏக்கம் தான் காரணம்”.‘‘இவ்வளவுதானே, உன்னுடைய ஏக்கத்தை நிறைவேற்றி வைப்போம். உனக்கு வேண்டியது ஆயர்குல பிறவி. கொடுத்து மகிழ்விப்போம்.” என்று மகிழ்ச்சியோடு அழகர் சொன்னார். ‘‘தேவரீரால் முடியாது” என்று பலத்த சிரிப்புடன் கூரத்தாழ்வான் சொன்னார்.

‘‘ஏன் முடியாது? நான் சர்வ சக்தன்”.

‘‘அதனால்தான் சொல்லுகின்றேன். அடியேன் ராமானுஜர் சீடன். ராமானுஜருக்கு யாரெல்லாம் சீடர்களோ அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நீர் தானே வாக்கு தந்தீர். “புனர் ஜென்ம ந வித்யதே ந

ச புனர் ஆவர்த்ததே ந

சபுனர் ஆவர்த்ததே” என்பது தானே உண்மை. சத்தியம். உம்மாலும் மீற முடியாத சத்தியம். பிறவி இல்லாத ஒருவரை எப்படி மறுபடியும் பிறக்க வைப்பீர்? எனவே ராமானுஜர் அடியாராய் ஆனபிறகு நான் நினைத்தாலும் பிறக்க முடியாது. நீர் நினைத்தாலும் பிறக்க வைக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது, ஒரு பிறவி எடுத்து, ஆயர் குலத்தில் பிறக்க வேண்டும் என்கின்ற அடியேன் எண்ணத்தை, ஆசையை, எப்படி உம்மால் நிறைவேற்ற முடியும்?” என கூரத்தாழ்வான் சொன்னதும், அழகர் வாய் பேச முடியாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.


“அதனால்தான் சொன்னேன். அந்த எம்பெருமான் ஆனாலும் அடியேன் துக்கத்தைப் போக்க முடியாது.

நாமே தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூரத்தாழ்வான் சொன்னதும், அழகரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.‘‘ஆழ்வான்.. உம்மிடம் நாம் தோற்றோம். நீர் சொன்ன வார்த்தை சத்திய வார்த்தை” என்று சொல்லி  விட்டு அழகர் அங்கிருந்து தன்னுடைய ஆஸ்தானத்துக்கு சென்றார். இந்த அழகரின் அழகின் மீது தான் 132 பாடல்களால் சுந்தர பாஹூ ஸ்தவம் என்கின்ற நூலை இயற்றினார் கூரத்தாழ்வான். இப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை திருமாலிருஞ்சோலை சுந்தரராஜன் நடத்தி இருக்கின்றான். நம்முடைய மனமும் அவரிடத்தில் ஈடுபட்டால் நம்மையும் அவன் ஆட் கொள்வான்.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Friday, March 31, 2023

சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்

 நன்றி: வாட்சப்


ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂 


அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 

நேரம் போய்க்கொண்டே இருந்தது. 

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். 


இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ? இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில்  சோர்வாக அமர்ந்தான்.


ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.


அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.


குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...


நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...🗣 


மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...


இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 


குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...


இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.


அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க,


 "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...


 *கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான்* என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....🗣 


 *நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்......*