Tuesday, May 18, 2021

இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட

 அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே

மாமன் அடித்தாரோ மல்லிப்பூ செண்டாலே

மறந்து போச்சு இந்த பாட்டு – இல்லை

மறைந்து போச்சு நம்ம தாலாட்டு


அத்தை என்று சொன்னேன் நான்

அழகு மகளுக்கு புரியவில்லை

மாமன் என்று சொன்னேன் – நல்ல

மகனுக்கும் தெரியவில்லை – உறவை


என்ன சொல்லி புரிய வைப்பேன்

எப்படி நான் கற்க வைப்பேன்

இன்றைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை

எப்படி நான் எடுத்துரைப்பேன்.


இரண்டு பெற்றால் சுமை என்று

இந்நாளின் இடர்நிறை பொருளியலை

இயல்பாக புரிந்து கொண்ட பெற்றோர்

பெற்றது ஒன்றுமட்டும் – எனக்கு மட்டுமல்ல

என் மனைவியின் நிலையிதுவே


இத்தகைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை

என்ன சொல்லி புரிய வைப்பேன்


கூட்டு குடும்பம் என்பது போய்

கூட்டில் குடும்பம் என சுருங்கி

கூடி வாழ யாரும் இன்றி

தனி குடும்பம் ஆகி போச்சு


அக்கம் பக்கம் எல்லாம் அன்று

அக்கா அண்ணா என்று இருந்த

அழகான காலம் போய் – இன்று

ஆண்டி அங்கிள் ஆயாச்சு


அம்மா அப்பா என்பது போய்

டாடி மம்மி ஆகி இப்போ

டாட் மம் என சுருங்கி

வேற்றுலகம் ஆயாச்சு – ஆம்


இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல

உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட

11.5.2014 written by S.Ramanan

Wednesday, March 24, 2021

நல்ல எண்ணங்கள் மட்டுமே, ஒரு மனுஷன நல்லவனாவே வெச்சிருக்கும்.

 இன்னைக்கு காலைல 8-th படிக்குற ஒரு சின்ன பையனும், 10-th படிக்குற அவனோட அக்காவும்... லூஸ்ல இட்லி அரிசி வாங்குறதுக்காக நம்மகடைக்கு வந்தாங்க. பையன், நல்லா கொழுக் மொழுக்குனு அரிசிமூட்ட மாதிரியே இருந்தான். லீவுன்றதால, கும்பகோணத்திலிருந்து அவங்க பெரியம்மா வீட்டுக்கு வந்திருக்காங்க. "என்ன கிளாஸ் படிக்குறீங்க ?. எந்த ஸ்கூல் ?. ஆன்லைன் கிளாஸ் போகுதா ?..." எல்லாம் கேட்டுட்டு, அரிசியும் போட்டு குடுத்தாச்சு. அரிசிபைய வாங்கிட்டு, இரண்டாயிரம் ரூவா நோட்ட நீட்டுறான். "எங்கிட்ட சில்ற இல்லடா... அப்புறமா இந்த பக்கம் வரும்போது குடு" ன்னேன். "சரி அங்கிள், அரிசி இங்கையே இருக்கட்டும். அப்புறமா வந்து காசு குடுத்துட்டு வாங்கிக்கறேன்" னான். 


"அடேய்... உன்ன அரிசிய வெச்சுட்டு போகச்சொல்லல. எடுத்துட்டு போய்ட்டு, வேற எதாவது வேலையா இந்த பக்கம் வரும்போது, பணத்தை கொண்டாந்து குடு" ன்னேன். அக்காவும் தம்பியும், ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறாங்க. அந்த பையன் தயங்கித் தயங்கி... "எங்கள யாருன்னே தெரியாது. எங்க பெரியம்மா வீடும் உங்களுக்கு தெரியாது. எப்படி அங்கிள் எங்கள நம்பி... " ன்னு, இழுத்தான். "நீ கொண்டு வந்து குடுப்பேன்னு எனக்கு தெரியும்டா தம்பி... இதுக்காக, இந்த வெய்யில்ல உடனே ஓடி வரவேணாம். வேற வேலையா இந்த பக்கம் வரும்போது வந்தா போதும். கிளம்புங்க. வீட்ல தேடப்போறாங்க" ன்னதும், ரெண்டுபேர் மூஞ்சிலயும் அப்படி ஒரு பெருமிதம். ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துட்டாங்க. ரெண்டுபேரும் வண்டிய நிப்பாட்டின வேகத்துல, "நாந்தான் குடுப்பேன், நாந்தான் குடுப்பேன்"னு ஓடி வர்றாங்க. பையன் முந்திட்டான். "நீ கொண்டாந்து குடுத்துடுவேன்னு, நாந்தான் அப்பவே சொன்னனே !." ன்னதும், அவன் மூஞ்சில தெரிஞ்ச அந்த பூரிப்பு, கெத்து, சந்தோஷம்... 


"அங்கிள்... எங்க பெரிம்மா, 'உள்ளூர்காரி எனக்கே சிலகடைகள்ல கடன் தரமாட்டாங்க. முன்னப்பின்ன தெரியாத உங்கள நம்பி எப்படி குடுத்தாங்க' ன்னு, கேக்குறாங்க" ன்னான். "உங்க பெரிம்மாட்ட போய்... 'அதுக்கு பேர்தான் பாஸிட்டிவ் தாட்ஸ்' ன்னு, அங்கிள் சொல்லச் சொன்னாரு' ன்னு சொல்லு. உங்க ரெண்டு பேரோட நேர்மைய பாராட்டி,

 என் நன்பர் குடுத்த கோயில் பட்டி கடலைமிட்டாய 

உங்களுக்கு தர்றேன், ஆளுக்கு ரெண்டுபீஸ் டேக் இட்... ". தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. 


இதுல ஒரு நுட்பமான விஷயமிருக்கு. ஒருவேள முதல்வாட்டி, 'சில்ற வாங்கிட்டு வந்து குடுத்துட்டு, அரிசிய எடுத்துட்டு போ' ன்னு, சொல்லியிருந்தா... 'பண விஷயத்துல இந்த உலகம் யாரையும் நம்பாது' ன்ற, வழக்கமான எண்ணம்தான், இன்னொரு முறையும் அவங்க மனசுல பதிவாயிருக்கும். இல்ல, அரிசிய குடுத்துட்டு, 'ஏமாத்திடாதடா. ஒழுங்கா கொண்டாந்து குடுத்துட்டு போ' ன்னு, சொல்லியிருந்தா... அந்த 'ஏமாத்தி' ன்ற எதிர்மறையான வார்த்தை, 'ஓ... அப்படிக்கூட நமக்கொரு வாய்ப்பு இருக்கா ?' ன்னு... அந்த பிஞ்சு மனசுல நஞ்சை கலக்குற சிந்தனை துளிர்விடும். 


"நீ வருவேன்னு, எனக்கு தெரியும்டா கண்ணா" எப்பேர்ப்பட்ட நம்பிக்கை குடுக்குற வார்த்தை !. 'முன்னப் பின்ன பார்த்திராத, யாருன்னே தெரியாத ஒரு நபர், நம்மள நம்புறாரு. என்ன விலை கொடுத்தாலும், அந்த அங்கிளோட நம்பிக்கைய காப்பாத்தணும்' ன்னு தோணும். அடிக்கடி அந்த குழந்தைங்களோட மனசுல இதுமாதிரி பாஸிட்டிவான விஷயங்கள் பதிவாகும்போது, நல்ல எண்ணங்கள் கிளைபரப்பி வளரும். நல்ல எண்ணங்கள் மட்டுமே, ஒரு மனுஷன நல்லவனாவே வெச்சிருக்கும்.


'குழந்தைகள் தெய்வத்துக்கு சமம்'னு சொல்லுவாங்க. தெய்வத்துக்கு அபிஷேக பூஜைகள்தான் செய்யணுமே தவிர, உக்காரவெச்சு பேய் ஓட்டுற மாதிரி வேப்பிலை அடிக்கக்கூடாது. !!!❣👦👩‍🦰❣

Friday, March 19, 2021

EB விலைப்பட்டியல் (Tariff) ஒரு ஆதங்கம்

 ஒரு Electricity Board Office வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் விற்றுக் கொண்டு இருக்கிறார்.! அவரிடம்.


EB ஆபிஸர் :: வாழைப்பழம் என்னப்பா விலை..?


வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குறீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை சொல்ல முடியும்.?


EB ஆபிஸர் :: என்னப்பா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??


வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழைப்பழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்🍌.!

குழந்தைகளுக்குனு வாங்கினா  ஒரு பழம்🍌 20 ரூபா..!! தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா🍌 விலை 25 ரூபா..!!!

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு🍌 பழம் 30 ரூபா சார்.!!!!


EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்.??

வியாபாரி :: This is my tariff plan.நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு...வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க..கேட்ட tariffனு சொல்லூவீங்க..

நெகிழ்வான கதை இது. நன்றி முகநூல் பக்கம்

 வாட்ஸ் அப் மெஸ்ஸேஜ்லாம் சிலர் ஸ்ரர்த்தையா அனுப்பரா? நான் சின்ன வயசுல இந்த மகானின் இசை நிகழ்ச்சிக்கு எங்கம்மாவோட போய் கேட்ட ஞாபகம் வருது


*நேனெந்து வெதுகுதுரா* 


*By Smt Lalitha Ramachandran*


வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.


ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்கு அருகில் வைத்தார். மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து, அதன்மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார். அதன்பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக எடுத்து இலைகளின்மேல் அடுக்கி வைத்தார்.


அவர் வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக்கொண்டது. அத்தனை போளிகளையும் எடுத்து வைத்தவுடன், வெறும் கூடையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இன்னும் ரயில் வர அரைமணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தார்.


ஆள் நெருங்கியதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். இரண்டு அருணாசலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாகஸ்வரக் குழுவுமே இந்தப் போளிகளுக்கு அடிமை.


அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும்போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு. ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுடே! ஓடுடே!”, என்று பையனை விரட்டுவார்.


ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப்பிடித்துச் சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியாவில்லை என்றாலும் அருணாசலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு. அவரைப் பொருத்தமட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திருநெல்வேலி ஜில்லாவில் அவதாரம் செய்த கந்தர்வன் அருணாசலம் என்பது அவர் துணிபு.


திருச்செந்தூர் பச்சைசாற்றி, திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணாசலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்புவை நிச்சயம் பார்க்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணாசலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்புவை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். ’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம்மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு.


என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.


“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணியாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”


வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.


அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.


“ஒட்டபிடாரத்துல கச்சேரினு தெரியாமப் போச்சே! ராத்திரி வந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.


“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணாசலம்.


வேம்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அதை வாங்காமல் அருணாசலம் தொடர்ந்தார்.


“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும்போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுறதீய, அவம் பணத்தை நீட்டக்கூட விடமாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”


வேம்பு லேசாகப் புன்னகைத்தார்.


“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்லை”


வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.


“ஏ! நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கிறது இந்தப் போளிக்குத்தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வைக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணுமாங்கேன்?”


“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடுபடாது. பைசாவாங்கிகிட்டாத்தான் இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணாசலம்.


”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அவ்வளவுதானே?”


“ஆமா”


“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.”


“என்ன வேணும்னாலும் கேளுங்க”, என்று அவசரப்பட்டார் அருணாசலம்.


“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தையுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.


“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”


“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங்காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ்வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”


இப்படி ஒரு வேண்டுகோளை அருணாசலம் எதிர்பார்க்கவில்லை.


“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”


”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.


அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணாசலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்துவிட்டது.


“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடைமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.


உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. “முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக்கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும்போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார்.


அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப்படத் துவங்கியது.


அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?


இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?


வேம்பு தனக்குத் தெரிந்த ஊர்காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.


சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.


’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்ற முடியும்,’ என்று வெதும்பியபடி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.


இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.


“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.


“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அதுதானே? அதைப் போய் வெக்கலாமா?”, என்று தழுதழுத்தார் வேம்பு.


“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்கமுடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.


வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக்கொண்டார்.


சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணாசலம், பெரும்பள்ளம் வெங்கடேசன், அம்பாசமுத்திரம் குழந்தைவேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். வேம்பு அருணாசலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.


பந்தலில் கூட்டம் அம்மியது. சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று பல ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.


அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.


அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடிகாட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல்! புரவிப்பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.


பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.


அருணாசலம் கர்நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.


“நேனெந்து வெதுகுதுரா”


”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது. ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.


“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”


வேம்புவுக்கு கண்கள் கலங்கின. தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார். அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது. சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனத்திலிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.


அன்றைய பிரதான ராகம் கரஹரப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தது.


‘சக்கனி ராஜமார்கமு’


அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.


கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்தபின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணாசலம்.


“நாளைக்கு ஈரோட்டிலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.


“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணாசலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.


பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணாசலம்.


வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணாசலத்தை மொய்த்துக் கொண்டனர். வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.


ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸிலிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொருவன் தயாராக நின்றிருந்தான்.


அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.


ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.


“ஐயர்வாள்! திருப்திதானே?”, என்று கேட்டார் அருணாசலம்.


“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்றபடி ஒரு பையை நீட்டினார் வேம்பு.


துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.


அருணாசலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.


வண்டி கிளம்ப ஆயத்தமானது.


”ஐயர்வாள்! நான் நேற்றைக்கு திருச்செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”, என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.


வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணாசலத்துக்கு விடை கொடுத்தார்.


வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். திருச்செந்தூர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.


அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.


அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.


சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.


*Smt. Lalitha Ramachandran*

Sunday, August 23, 2020

எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் . யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் எதை கொடுக்க வேண்டும் என்று

 ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள்.


கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.


அங்கிள்... அங்கிள்....


என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்....


அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள்


prescription கொண்டுவந்தாயா குழந்தை????


அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா????


எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள்.


"காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது.


சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன?????


குழந்தை மென்று விழுங்கி சொன்னது


" மெரிக்கள்"


கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார்.


நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு?????


மெரிக்கள் அங்கிள்...


அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது?????


குழந்தை கண்ணீருடன் சொன்னது....


டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது.


அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார்.


அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார்.


வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார்.


அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்.....


டாக்டர்....


நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர்அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கின்றேன் விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சோபனை இல்லையென்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா ??..மருத்துவ செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கின்றேன் . அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது


பெற்றவர்கள் கண்ணீர் மல்க கடவுள் தான் உங்கள் ரூபத்தில் வந்து காப்பாற்றினார் என்று கூற அதற்கு மருத்துவர் இதற்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான்


காரணம் டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை குழந்தை அந்த MIRACLE என்ற வார்த்தையை மருந்து தான் என நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம்


எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும் . யார் யாருக்கு எந்தெந்த நேரத்தில் எதை கொடுக்க வேண்டும் என்று அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்.

நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.


அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.


பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை  கவனித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.


வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.


அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிபு மிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.


பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.


அதற்கு உரிமையாளர் . இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் .


" இல்லை சார்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.


" நண்பரே... உங்களுக்கு விசயம் புரியவில்லை. நடந்த விசயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.


" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன். 


பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.


படகில் ஓட்டை இருந்த விசயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு  இருக்கவுமில்லை.


நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விசயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன். 


கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.


உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது  சிறியதொரு வேலையா?  நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்?  உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.


நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது.  யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம்.

 பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார் 

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

 படித்ததில் பிடித்தது...


ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 


அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.


இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான். குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.


ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.


அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா...ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.


குளத்து நீரில் தலையில் கிரீடம், காதல் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பணப்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.


அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.


நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

சும்மாவா சொன்னார்கள் :: கோபுர தரிசனம் கோடி புண்னியம் என்று