Friday, November 15, 2019

மனதாரச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.

#கண்ணதாசன்அனுபவங்கள்

“நான் சொன்னால் பலிக்கும்; என் வாக்குப் பலிக்கும்” என்று தங்களைப் பற்றிச் சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது என் விஷயத்திலும் உண்மையாக நடக்கிறது.

யாரையும் வஞ்சிக்காத ஒருவன், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன், மனதாரச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.

அந்த உயிர் தன் சக்தியைக்காட்டி விடுகிறது.

ஆத்திரத்தில் சொல்லும் வார்த்தைகள் மட்டுமின்றி இயற்கையாக வந்து விழும் வார்த்தைகளும் பலித்து விடுகின்றன.

எல்லாவற்றுக்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம்.

‘கவிஞன் பாடினான், நகரம் எறிந்தது’ என்றும், ‘கலம்பகப்பாட்டினால் நந்திவர்மன் இறந்தான்’ என்றும் நாம் கேட்கிறோம்.

நான் கவிஞனோ இல்லையோ கடவுள் நம்பிக்கையுடையவன்.

என்னையறியாமலேயே வந்து விழுந்த சில வார்த்தைகள் என் வாழ்விலும் நண்பர்கள்  வாழ்விலும் எப்படிப் பலித்திருகின்றன என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எனது நெருங்கிய நண்பர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக, 1960,- ல் ஒரு படத்தில் ஒருபாடல் எழுதினேன்.

‘பாடமாட்டேன் - நான்
பாடமாட்டேன்’

என்பது பாடலின் பல்லவி.

ஆம்; அதுதான் அவர் சினிமாவில் கடைசியாகப் பாடிய பாடல். அதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை.

எனது சொந்தப் படம் ஒன்றில் ஒரு சோகப் பாடல் எழுதினேன்.

‘விடியும் விடியும் என்றிருந்தோம்
முடியும் பொழுதாய் விடிந்ததடா! கொடியும் முடியும் தாழ்ந்ததடா நம்
குடியும் குலமும் ஓய்ந்ததடா!”

-எவ்வளவு அறம் நிறைந்த சொற்கள்!
எழுதும்போது எனக்கு அந்த உணர்ச்சி தோன்றவில்லை.

ஆனால், அந்தப் படத்தில் விழுந்த அடி, என்னைப் பத்து ஆண்டுகள் கலங்க வைத்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு ஸ்டூடியோவில்,
அந்த ஸ்டூடியோ கிண்டியில் இருந்தது.

மறுநாளைப் படப்பிடிப்புக்ககாக, அந்த ஸ்டூடியோ நிர்வாகியிடம் பத்தாயிரம் ரூபாய் நான் அச்சாரம் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.

மறநாள் நடிகர்களெல்லாம் ஸ்டூடியோவிற்குப் போன பிறகு, அவசரமாக வரும்படி எனக்கு டெலிபோன் வந்தது.

நான் போனேன்.

எங்களுக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் ஒரு மாய மந்திரப் படத்திற்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விட்டதாகவும் நிர்வாகி சொன்னார்.

அப்போது இசையமைப்பாளர் விசுவநாதனும் என் கூட இருந்தார்.

எனக்கு ஆத்திரமா வந்தது.

கோபத்தில், அந்த ஸ்டூடியோ நிர்வாகியைத் திட்டிவிட்டு, “உன் ஸ்டூடியோ எரிந்து சாம்பலாகத்தான் போகும்” என்று கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்தேன்.

அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் வந்தது.

“ஸ்டூடியோவில் படப்பிடிப்பு மண்டபம் நெருப்புப்பிடித்து எரிகிறது” என்ற என் தயாரிப்பு நிர்வாகி கூறினார்.

அந்த மாய மந்திர செட்டில், சிங்கத்தின் வாயில் நெருப்பு வருவது போல படம் பிடித்தார்கள் என்றும், அந்த நெருப்பு மேலேயிருந்த சாக்கிலே பற்றி,மண்டம் எரிகிறது என்னும் அவர் சொன்னார்.

என்குத்தூக்கி வாரிப்போட்டது.

கூட இருந்த தம்பி விசுவநாதன் என் கையைப் பிடித்துக்கொண்டார்.

“அண்ணே, இனி யாரையும் ஏதும் சொல்லாதீர்கள்!” என்று கெஞ்சினார்.

என் சக்தியை உங்களுகுச் சொல்லிப் பயமுறுத்த இவற்றை  நான் சொல்லவில்லை.

“வஞ்சகமிலாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்” என்பது இந்துக்கள் நம்பிக்கை.

முனிவர்களின் சாபங்களையும், பத்தினிகளின் சாபங்களையம் நாம் புராணங்களில் படிக்கிறோம்.

நல்லது செய்தால் நல்லது வருகிறது. சொன்னது பலிக்கிறது.

நான் என் உறவினர்களி சிலருக்குத் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.

அப்போ தெல்லாம் என் குழந்தைகளின் திருமணங்களைப்பற்றி நான் சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்ற இந்துக்களின் பழமொழிகயில் எனக்கு நம்பிக்கை உண்டு.

என் மூத்த பெண்ணுக்கு அப்போது பதினாறு வயது. திருமணதிற்கு அவசரப்படத் தேவை இல்லாத வயது.

அப்போது ஒரு படத்தில் , ” பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் எழுதினேன்.

அந்தப் படம் வெளியாயிற்று; பாடலும் பிரபலமாயிற்று.

ஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.

“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா?” என்றார்கள்.

“இந்த வயதில் என்ன கல்யாணம்?” என்றேன் நான்.

“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்க்.
“சரி, பேசுங்கள்” என்றேன்.

கிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்கள்.

அதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

என் சகோதர்ரும், “அந்தச் சகோதரி வீட்டில்தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

அன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.

அப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.

செட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே!” என்று நான் கலங்கினேன்.

எங்கிருந்தெல்லாம் எனக்கு ஆறுதல் வந்தது தெரியுமா?

யாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா?”

நான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக் கை கொடுத்தன.

நான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.

என் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்து விட்டான்.

திருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,

‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாண மாக’

-என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.

அப்படியேதான் இரண்டாவது பெண்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.

“காசி விசாலாட்சி” என்றொரு கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கியிருந்தேன்.

பாதிவரை எழுதிவிட்டேன்.

கிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால் பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய்தகப்பனாக வந்திருந்து, ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.

அதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.

அதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.

“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.

நான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.

அவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா?” என்றார்கள்.

பேசினார்கள்; மறுநாள் பெண்பார்க வந்தார்கள்.

“மாலையிலேயே நான் பெங்களூர் போக வேண்டும் ” என்றேன்.

பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.

திருமணம் பேசி முடிந்து விட்டது.

அப்போதும் பணம் இல்லாத நிலைதான்.

கண்ணன் எனக்கு வழி காட்டினான்.

தேவர் எனக்குக் கைகொடுத்தார்.

கேட்ட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.

திருமணம் மங்கலமாக முடிந்துவிட்டது.

“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதன் சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.

நன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.

“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை,நான்கு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.

விதையைப்போட்டுவிட்டுக் கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.

விதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்த போது மரங்கள் பழுத்துக் குலுங்கின.

என்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது?

கண்ணனை நினைக்கிறேன்.

சொன்னதுபலிக்கிறது!

கண்ணனை நானும் நினைக்கிறேன்.

Saturday, October 5, 2019

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது...
விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி நாம் உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

வாரியார் சுவாமிகள் வாரினார்

ஒரு சமயம் #வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.

வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.

வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது.
காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்.
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.
மன்னனால் தூங்க முடியவில்லை.
உணவும் குறைந்து விட்டது.
மன்னன் பொலிவு இழந்தான்.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி வந்து சேர்ந்தார.
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.
எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.
அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும் கவலைப்படாதீர்கள் என்றார்.
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது.
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.
நன்றாக உண்டான்.
பழைய பொலிவு திரும்பி விட்டது.
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்.
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
""குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''
''துறவி புன்னகை பூத்தார். ""பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?, மன்னனின் செவிக்குள், ''அதுதான் இல்லை, மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம், சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை, உடனே வெளியே வந்திருக்கும்,
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.
அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே?''"
"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."
''அந்த மூலிகை?''
"நம் ஊரில் சாதாரணமாக விளையும் செடியின் இலைகள்தான்.
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்.
பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டுஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.
மன்னன் நம்பி விட்டான். அவன் மனநோயும் தீர்ந்தது."
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி வெளியேறி விட்டது.
மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"எங்கப்பா மட்டும் பொறுப்பா சம்பாதித்திருந்தா, பெரிய படிப்பு படிக்க வச்சிருந்தா, பணம் கொடுத்திருந்தா, யாராவது உதவி செய்திருந்தா நான் பெரிய ஆளாயிருப்பேன்'' என்று எத்தனை பேர் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள்தான்.
பெரிய படிப்பு படிக்காதவர்கள்தான்.
பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி, கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.
அது நம் மனதில் இருக்கிறது.
பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது.
ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்!.

Wednesday, September 18, 2019

கர்மாஎன்பதுஎன்ன?

கர்மா!!

* 🍁 கர்மாஎன்பதுஎன்ன?  🍁*

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!
அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!
இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்.

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!
அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்.

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!
அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்.

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது.

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்.

பல சீடர்கள்
அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே.. “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

* 🌸 நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.*
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
*எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்.

Thanks to: Divine Thoughts whatsapp

இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான்

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவன் இருந்தான். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவனது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தான். கோவில், மற்றும் தன் வீடு , இரண்டும் தான் அவனது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறாரே… அவருக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டான்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் பணியாளன்  நிற்க, இறைவனோ இவனைப் போல பணியாளர் தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார். முதலில்,  ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பணியாளன் பார்க்கிறான். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறான்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா, எப்போதும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறார் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த பணியாளரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ பணியாளர் உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில்  நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உங்க வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.  என்னடா இது, கடவுள் நம்மை பாராட்டுவார் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறாரே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானார்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை  தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றார், இறைவன் கோபத்துடன்..
உடனே சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றார் இறைவன் புன்னகைத்தபடி.

நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறுபடுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

#ஓம்நமோநாராயணா..!

Tuesday, September 17, 2019

நேர்மையை விதையுங்கள்

நகரத்தாரின் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும்
நகரத்தாரான இராமசாமி செட்டியாருக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் வீட்டு ஆச்சியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

ஆச்சியும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமி செட்டியாரின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமி செட்டியாரும் தன் வீட்டு ஆச்சியிடம் : காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த ஆச்சி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார்.
செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமி செட்டியார் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.
அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி செட்டியார் மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி செட்டியார்.

முதலாளி இராமசாமி செட்டியாரிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி செட்டியார்.

முதலாளி இராமசாமி செட்டியாரைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமி செட்டியாரை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு:
நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி.
தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?

அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி செட்டியார் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கை நகரத்தார்களுக்கே உரியது. அதனை நீருபித்த இராமசாமி செட்டியாருக்கு கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!