Thursday, May 3, 2018

அன்பும் அறமும் பற்றி வள்ளுவன்


திருக்குறள் 77

8 அன்புடைமை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

அன்பில்லாதவன், நியாயமாக செயல்பட முடியாது. எனவே, வெயிலில் புழு துடிப்பது போல், அன்பில்லாதவனை அறம் படுத்தும்.
Above is from Rangataj pandey in his post

Thanks to FB pkt Sami in pandey,s post.
வள்ளுவர் சொன்ன இந்தக் குறளைக் கேட்ட
ஒரு இளைஞன் வள்ளுவனிடம் போய் அய்யா
அன்போடு அறம் செய்ய விரும்புகிறேன் ஆனால் அதற்கான வழிதான் தெரிய வில்லை எப்படி    அன்புடன்  அறம் செய்வது
என்று கேட்டான்
           உடனே வள்ளுவ௫ம் தயங்காமல்
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்  இன்னான்கும்
இழுக்கா இயன்றதறம் "அதாவது மனதில்
அழுக்கில்லாமல் பேராசைப் படாமல் கோபம் கொள்ளாமல் கடுஞ் சொற்களைப் பேசாதி௫ப்பதே அன்போடு கூடிய அறம் என்றாா்
             இளைஞனும் வள்ளுவ௫க்கு நன்றி தொிவித்து விட்டு சென்றான் இவற்றைக் கடைப்பிடிக்க முயற்சித்தான்
முடியவில்லை மீண்டும் வள்ளுவனிடம் வந்து
வள்ளுவரே நீங்கள் அன்புடன் கூடிய அறத்தைக் கடைப்பிடிக்க சொன்ன வழி மிகவும் கடுமையாக இ௫க்கிறது எனவே
எளிமையான வழி ஒரே வழி இ௫ந்தால்
சொல்லுங்கள் அதுவும் எளிமையான வழியாக இ௫க்கவேண்டு  மென்று கேட்டான்
                 வள்ளுவ௫ம் சளைக்காமல் அப்படியா சாி எனச் சொல்லி
"மனத்துக்கண் மாசிலன்ஆதல்அனைத்தறன்
ஆகுல நீர பிற"
என்று சொன்னா் இளைஞன் சந்தோஷமாகச் சென்று கடைப் பிடிக்க முயற்சித்தான் முடியவில்லை மிகுந்த கோபத்தோடு வள்ளுவாிடம் வந்தான் வள்ளுவரே நீங்கள்
பொிய குசும்புக்காரராக இ௫க்கிறீா்களே
நான் ஒரேவழி எளிமையான வழியாகக் கேட்டால் நீங்கள் மீண்டும் மிகக் கடுமையான
வழியையே சொல்லியி௫க்கிறீா்கள் எளிமையான வழி ஒரே வழி சொல்லுங்கள்
என்றான்
          வள்ளுவ௫ம் சிாித்தபடி தி௫மணம்
செய்து கொள்அதுதான் அன்பான அறமென்றாா்  ஆம்
"அறன்எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று"
என்று சொல்லி விட்டு இளைஞனே நில்
மீண்டும் என்னிடம் வந்து நிற்காதே கேள்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது"
போய்வா என்றாா் இளைஞனும் மகிழ்வாகச்
சென்றான்

இறை நம்பிக்கையும் முயற்சியும்

Thanks to what's up by GSC
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று

"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,

"இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,

எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.

ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது

''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'

இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய்,
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.

"கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்

ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை.
*முயற்சி திருவினையாக்கும்

Wednesday, May 2, 2018

மல்லாரிகளின் கம்பீரம்


Thanks to THE HINDU 
http://tamil.thehindu.com/general/art/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article5204119.ece
இன்று மேடைகளில் அரங்கேறும் எல்லா செவ்வியல் இசை வடிவங்களின் தொடக்கமும் கோயில்களே. நிலவுடைமை உடைந்து, கோயில்களின் முக்கியத்துவம் சமூகத்தில் குறைந்தபோது பல இசை வடிவங்களும் கோயில்களை விட்டு வெளியேறின. சென்னை நகரில் தோன்றிய இசையரங்குகள் இக்கலைகளின் பாதுகாவலனாகத் தம்மை நிலைநிறுத்திக்கொண்டன. இசைக் கலைஞர்களும் நகரங்களில் குடியேறினர்.
ஆனால் நாகசுரம்-தவில் ஆகிய இரண்டு வாத்தியங்களும் தொடர்ந்து கோயில்களிலேயே ஒலித்தன. பரம்பரையாகத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தை வைத்துக்கொண்டு அக்கலைஞர்கள் தத்தம் ஊரிலேயே தங்கிவிட்டனர். அதிகபட்சமாக ஊருக்கு அருகில் உள்ள நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை எனப் பல கலைஞர்கள் தங்கள் ஊரிலேயே இருந்தனர். திருவாவடுதுறை ஆதினத்துடன் பிணக்கு வரும்வரை இராஜரத்தினம் பிள்ளையும் திருவாவடுதுறையில்தான் தங்கியிருந்தார். தவில் கலைஞர்களுக்கும் இது பொருந்தும்.
அப்படி ஊரிலேயே தங்கிவிட்ட கலைஞர்தான் ஆச்சாள்புரம் ச. சின்னத்தம்பியா பிள்ளை. தில்லை நடராஜர் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாசிக்கப்படும் நாகசுர இசை மரபை முழுவதும் அறிந்தவர் இவர் ஒருவரே. பல்லவி வாசிப்பதில் ஈடு இணையற்றவரான இராதாகிருஷ்ண பிள்ளையின் மாணாக்கரான சின்னத்தம்பியா பிள்ளை, அவருடன் சேர்ந்து வாசித்து சிதம்பரம் கோயிலில் இசைப் பணி ஆற்றிவந்தார். இன்று 88 வயது நிறைவடைந்திருக்கும் அவரைக் கொண்டு, சிதம்பரம் கோயிலில் வாசிக்கப்படும் நாகசுர இசை மரபைப் படமாக்கியிருக்கிறார் இசையறிஞர் பி.எம். சுந்தரம். நாதமும் நாதனும் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் நாகசுரம் - தவில் குறித்த முழுமையான தகவல்களைத் தருவது மட்டுமின்றி, திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் சிதம்பரம் ஆலயத்தில் வாசிக்கப்படும் பல்வேறு மல்லாரிகளையும் இராகங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறது. 88 வயதிலும் சற்றும் பிசிறடிக்காமல் மல்லாரிகளையும் இராகங்களையும் வாசித்து பிரமிக்க வைக்கிறார் சின்னத்தம்பியா பிள்ளை.
"வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தைத் தயாரித்திருக்கிறேன். பெரும்பாலான கோயில்களில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த இசைமரபுகள் முற்றிலுமாக மறைந்துவிட்டன. விதிவிலக்காக சிதம்பரம் கோயிலிலும் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயிலிலும் மட்டுமே இந்த மரபுகள் தொடர்ந்து பேணப்படுகின்றன,” என்றார் சுந்தரம்.
பண்டைக் காலத்தில் கோயில் திருவிழாவுக்குக் கொடியேற்றுவதற்கு முதல் நாள் தவிலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று பூசை செய்யும் முறை வழக்கத்தில் இருந்தது. ருத்ர பூமியான சுடுகாட்டில் எம பேரிகை என்று அழைக்கப்படும் தவிலுக்குப் பூசை செய்து தவில் வாசிப்பவரிடம் வேதியர் அளிப்பார். இன்று வழக்கொழிந்துபோன இம்முறையை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
"தவில் பக்க வாத்தியம். இருப்பினும் நாகசுர மரபில் கச்சேரி தொடங்குவதற்கு முன்னதாகத் தவில்தான் ஒலிக்கும். மற்ற இசை நிகழ்ச்சிகளில் பக்க வாத்தியங்கள் முதலில் வாசிக்க அனுமதிக்கப்படுவில்லை. தவிலின் முக்கியத்துவத்தை இந்த வழக்கம் தெளிவாக்குகிறது,” என்று விளக்கினார் சுந்தரம்.
பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக நீர் எடுத்து வரும்போது வாசிக்கப்படும் தீர்த்த மல்லாரி ஒலிக்கிறது. அதைத் தொடர்ந்து மடப்பள்ளியில் இருந்து சுவாமிக்குப் படைப்பதற்கு தளிகை எடுத்து வருகையில் தளிகை மல்லாரி ஒலிக்கிறது. தேரோட்டம் அன்று தேர் மல்லாரி.
மல்லாரிகளின் பல வகைகள் இந்த ஆவணப்படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்படுகின்றன. மல்லாரி என்பது வெறும் சொற்கட்டுகளே. நாகசுர வித்வானின் கற்பனைக்கு தகுந்தாற்போல் அதன் மெருகு ஏறும். வீரச்சுவை நிரம்பிய கம்பீர நாட்டை இராகத்திலேயே மல்லாரி வாசிப்பது மரபு. "குந்த குந்த” என்று தவில் முழங்க மல்லாரி ஒலிக்கத் தொடங்கியதும் ஊர் மக்களுக்கு சுவாமி புறப்பாடு தொடங்கியது தெரிந்துவிடும்.
"சிதம்பரம் ஆலயத்தில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பட்டதும் மல்லாரி வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இராகம் விரிவாக வாசிக்கப்படு இராகம்-தானம்-பல்லவி தொடரும்,” என்று சுந்தரம் கூறினார்.
முதல் நாள் சங்கராபரணம், இரண்டாம் நாள் ரீதிகௌளை, மூன்றாம் நாள் சக்கரவாகம், நான்காம் நாள் ஹம்சபிரமரி, ஐந்தாம் நாள் ஐந்து தாளத்தில் மல்லாரி, ஆறாம் நாள் சண்முகப்பிரியா, எழாம் நாள் காம்போதி.
எட்டாம் நாள் வாசிக்கப்படும் ஒடக்கூறு சிறப்பு வாய்ந்தது. உடற்கூறு என்பது சிதைந்து ஒடக்கூறு என்றாகிவிட்டது. தன் மேல் மோகம் கொண்ட தாருகா வனத்து ரிஷிகளுக்கு நிலையற்ற உடம்பின் இரகசியத்தை சிவபெருமான் விவரித்ததை இந்த உடற்கூறு வெளிப்படுத்தும். பெரும்பாலும் நாதநாமக்கிரியா இராகத்திலேயே ஒடக்கூறு வாசிப்பார்கள்.
ஒன்பதாம் நாளன்று தேர் மல்லாரி. பத்தாம் நாளில் தில்லைக்கூத்தன் மேல் முத்துத்தாண்டவர் இயற்றிய கீர்த்தனைகள் வாசிக்கப்படும். பதினொன்றாம் நாள் உசேனி இராகம் மட்டுமே.
"ஒவ்வொரு நாளும் சுவாமி வலம் வந்து முடித்ததும் கோயில் பிரகாரத்தில் வைத்து தேவதாசிகள் தட்டு சுற்றி, திருஷ்டி கழிப்பார்கள். அந்தப் பழக்கம் முடிவுக்கு வந்ததும், தவில்காரர்கள் மூன்று சுற்றுகள் வாத்தியத்தைத் தட்டிக் கொண்டே சுற்றுவார்கள். இன்று அந்த முறையும் பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை,” என்றார் சுந்தரம்.
மாபெரும் இசைமரபுகள் இடம் தெரியாமல் போய்க்கொண்டிக்கின்றன என்பதை இப்படத்தைப் பார்க்கும் இசை ஆர்வலர் உணர்வார். திருவாருர் கோயிலில் பாரி நாகசுரம் வாசிக்கும் செல்வகணபதியும் இன்று எண்பதுகளைத் தாண்டிவிட்டார். இன்று பெரும்பாலான கோயில்களில் மின்கருவியால் இயங்கும் வாத்தியங்கள் முழங்குகின்றன. கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செண்டை மேளம் பல கோயில் விழாக்களை ஆக்கிரமித்துக்கொண்டது. செண்டை மேளத்துக்கான நடை எதையும் அறியாதவர்கள் நையாண்டி மேளம் போல் வாசிக்கிறார்கள். பொருத்தமாக சிங்காரி மேளம் என்று பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. 

Tuesday, April 24, 2018

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
(Thanks to Whastup)

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)
நன்றி ராஜப்பா தஞ்சை

ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்

ஜோதிடம் - கிடைத்தது  பாதி, எரிந்தது பாதி.

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.

உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான்.

அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப் படவில்லை.

எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.

துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.

பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

'அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.

''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான்.

ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.

ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.

''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான்.

''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான்.

''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன்.
ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.

கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.

கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர்.

ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.

''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான்.

அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின.

அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்!

தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்



*காளையார் கோவில் தேர் பவனி*

(Thanks to Whastup)

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில்

 இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று *மருது சகோதரர்களுக்கு* எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த *குப்பமுத்து ஆசாரி* என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் *சிற்பி.*

புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து *தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.*

 எனது தலைமையில் தேர் செய்யப் படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.

தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு *தைப்பூசத் திருநாளில்*
முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார்.

இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது *தேர் அசைய மறுத்து விட்டது.*

 அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது.
தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.

இதன்பின் அவரை அழைத்தனர்.

பெரிய மருது *தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்* என்றார்.

அதற்கு சிற்பி

*உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.*

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.

தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த *சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.*

பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

*அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.*

*மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.*

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.
 வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். *மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.*

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி

சாதாரண பிரஜைக்காக  சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த  மாமன்னர் மருது பாண்டியர்கள்

இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்..

*வரலாற்றை மறந்தும் விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும்...*

பள்ளத்தூர் சாரதி. 

அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!