Tuesday, April 24, 2018

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
(Thanks to Whastup)

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)
நன்றி ராஜப்பா தஞ்சை

ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்

ஜோதிடம் - கிடைத்தது  பாதி, எரிந்தது பாதி.

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.

உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான்.

அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப் படவில்லை.

எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.

துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.

பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

'அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.

''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான்.

ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.

ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.

''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான்.

''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான்.

''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன்.
ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.

கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.

கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர்.

ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.

''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான்.

அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின.

அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்!

தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்



*காளையார் கோவில் தேர் பவனி*

(Thanks to Whastup)

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில்

 இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று *மருது சகோதரர்களுக்கு* எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த *குப்பமுத்து ஆசாரி* என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் *சிற்பி.*

புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து *தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.*

 எனது தலைமையில் தேர் செய்யப் படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.

தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு *தைப்பூசத் திருநாளில்*
முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார்.

இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது *தேர் அசைய மறுத்து விட்டது.*

 அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது.
தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.

இதன்பின் அவரை அழைத்தனர்.

பெரிய மருது *தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்* என்றார்.

அதற்கு சிற்பி

*உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.*

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.

தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த *சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.*

பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

*அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.*

*மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.*

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.
 வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். *மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.*

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி

சாதாரண பிரஜைக்காக  சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த  மாமன்னர் மருது பாண்டியர்கள்

இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்..

*வரலாற்றை மறந்தும் விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும்...*

பள்ளத்தூர் சாரதி. 

அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!

📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?! 
வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!

சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?

“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்!”

ஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி! அவன் கழல் பற்றுவோர் பாக்கியசாலிகள்!!

‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்!

செயற்கரிய செய்வார் பெரியர்

!!ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட தானம்!!

இந்திர பிரஸ்தத்தின் மன்னன் யுதிஷ்டிரன் ..

ரத்னபுரி அரசன் மயூரத்வஜன் ....

இவ்விருவரும் , ஒரே சமயத்தில் யாகம் செய்யத் தீர்மானித்தனர் ; ஆனால் ஒருவர் தீர்மானித்தது மற்றவர்க்கு தெரியாது அதன் படி யாகக்குதிரையை தக்க காவலோடு நாடு சுற்ற தீர்மானம் செய்யப்பட்டது

அவ்வகையில் யுதிஷ்டிரனின் குதிரைக்கு கிருஷ்ணரும் , அர்ஜுனனும் மயூரத்வஜனின் குதிரைக்கு அவனது மகனான தாம்ரத்வஜனும் அனுப்பி வைக்கப்பட்டனர்(மயூரத்வஜனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் மேல் அதீத பிரேமை உண்டு )
இரு தரப்பினரும் இடையில் சந்தித்து ஒருவர் குதிரையை ஒருவர் பிடிக்க முற்பட ......கடும் சண்டை நடந்தது !

( கண்ணனின் திருவுளப்படி ) அர்ஜுனன் மயங்கி விழ ........தாம்ரத்வஜன் இரு குதிரைகளோடு நாடு திரும்பினான் ; நடந்ததையறிந்த மயூரத்வஜன் வருந்தி ,
" மகனே ....ஸ்ரீக்ருஷ்ணர் அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்துமா சண்டையிட்டாய் ? இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப்போகிறோம் "
என்று நொந்து கொண்டான்....

.இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன் , தன் தோல்வியை எண்ணி கொதித்துப்போய் புலம்பி தீர்த்தான்

ஆனால் , ஸ்ரீக்ருஷ்ணரோ அமைதியாக ,
" அர்ஜுனா ...பொறுமையாக இரு !...நாம் இருவரும் ரத்னபுரி செல்வோம் ...ஆனால் ஒரு நிபந்தனை ! நீ அங்கே என்ன நடந்தாலும் வாயே திறக்கக்கூடாது !...எந்த கேள்வியும் கேட்ககூடாது !"என்று கூற , அர்ஜுனனும் அதற்கு சம்மதித்தான் ; இருவரும் ரத்னபுரியை அடைந்தார்கள்

 மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றான் மயூரத்வஜன் ; பின் பணிவுடன்
" தவறு நடந்து விட்டது !....என் மகன் ஏதோ அறியாமல் பிழை செய்து விட்டான் ! தயை கூர்ந்து எங்களை மன்னித்தருள வேண்டும் "....

குற்றஉணர்ச்சியில் தலை குனிந்தவாறு கம்மிய குரலில் பேசிய மயூரத்வஜனை மந்தஹாச புன்னகையுடன் ஏறிட்டார் பரந்தாமன்

" மயூரத்வஜா ....அபராதத்தை சும்மா மன்னிக்க முடியாது .....ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டும் !"
என்றார்

" கண்டிப்பாக ...பரிகாரம் எதுவாயினும் அடியேன் செய்ய தயாராயிருக்கிறேன் ...கூறுங்கள் !"..

.என்றான் மயூரத்வஜன் பரபரப்பாக ;
" நல்லது !...தவறு செய்த உன் மகனை மனப்பூர்வமாக நீயும் உன் மனைவியும் சேர்ந்து இரண்டாக அறுத்து வலது பாகத்தை அடியேனுக்கு தானமாக தரவேண்டும் ...உங்கள் மூவரில் யார் சோகமாக இருந்தாலும் , கண்ணீர் சிந்தினாலும் தானத்தை ஏற்க மாட்டேன் !...சம்மதமா ?"....

கேட்ட பரந்தாமனை அமைதியாய் ஏறிட்டான் மயூரத்வஜன் ; அவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை;
" கிருஷ்ணா .....எனக்கு பரி பூரண சம்மதம்.என்னிடம் இருப்பதை கேட்டதற்காக ஆனந்தபடுகிறேன்

 உங்களுக்கு தானம் செய்ய நங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்",....
உணர்ச்சி பொங்க கூறிய மயூரத்வஜன் , அடுத்தக்கணம் மகனுக்கு தைல ஸ்நானம் செய்து வைத்து கிழக்கு திசை பார்த்து மணை பலகையில் அமர்ந்தான்.

மனைவி ஆடாத படி மகன் உடலை பிடித்து கொள்ள மயூரத்வஜன் கத்தியால் பிள்ளையை அறுக்க தொடங்கினான்.
தாம்ரத்வஜனின் இடது கண்ணிலிருந்து நீர் வழிந்தது இப்போது

மறு கணம் கிருஷ்ணர் பரபரப்புடன்,
" நிறுத்துங்கள் !.. அவன் வலி பொறுக்க முடியாமல் அழுகிறான் ....அழுது கொண்டே தரப்படும் தானம் பாபத்தையே தரும் "...

கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனனுக்கு தூக்கிவாரி போட்டது !
' இதென்ன ...கிருஷ்ணன் ஏன் இப்படி இரக்கமின்றி நடந்து கொள்கிறார் ?' ..இந்த ரீதியில் அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே தாம்ரத்வஜனின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது

" பரந்தாமா ......பெரியவர்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் ....கண்ணீர் வழிவது என் இடது கண்ணில் !...தாங்கள் தானம் கேட்டது என் உடலின் வலது பாகத்தை !...ஒரே உடம்பாயிருந்தும் தானம் போக நான் அருகதையற்றுப் போனேனே என்று இடது பக்கம் அழுகிறது சுவாமி !..இரு கரங்களும் சேர்ந்து தானே இறைவனை வணங்குகின்றன ?....அப்படியிருக்கும் போது நான் எவ்விதத்தில் தாழ்வு ஆனேன் என்று எனது இடது கண் வருந்தி கண்ணீர் விடுகிறது ! மற்றபடி ..சத்ரியனை ரத்தமும் , கத்தியும் பயப்படுத்தாது பரந்தாமா

.அவன் பேசி முடிக்க ....இப்போது அர்த்தபுஷ்டியுடன் அர்ஜுனை பார்த்தார் கிருஷ்ணர்
அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் தலை குனிந்த அர்ஜுனனின் மனதில் இப்போது ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !
' பார்த்தாயா ?...இப்படிப்பட்ட தேக சமர்ப்பணத்தை செய்த இவன் உன்னை வெற்றி கண்டது பொருத்தமானது தானே ? உன் அகந்தை அழிந்ததா ?'

.கிருஷ்ணன் கேட்பது போலிருக்க ......
.மறு கணம் அர்ஜுனன் வாயிலிருந்து அனிச்சையாய் வார்த்தைகள் வெளி வந்தன

" மன்னா .....தாம்ரத்வஜா .....அடியேன் உங்கள் முன் கூனிக் குறுகி சிறுமைப்பட்டு நிற்கிறேன் !...செயற்கரிய செயலை செய்து நீவிர் இருவரும் மலையளவு உயர்ந்து நிற்கிறீர்கள் !....

..குரல் கம்ம பேசிய அர்ஜுனனை புன்னகையோடு ஏறிட்டார் பரந்தாமன் ; .
..பின்னர் அவனருளால் தாம்ரத்வாஜன் பூரண தேஜஸோடு மீள .......விருந்துண்டு விடைபெற்றனர் ஸ்ரீக்ருஷ்ணரும் , அர்ஜுனனும்

" செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"(விளக்கம்: செய்வதற்கரிய செயல்களை செய்ய வல்லவர் பெரியவர்; செய்வதற்கரிய செயல்களை செய்ய முடியாதவர் சிறியவர்)

மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த சம்பவம் இந்த திருக்குறளை நினைவூட்டுகிறதல்லவா?