Tuesday, November 1, 2016

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்? பகிரிக்கு நன்றி

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான்.  அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.

இவ்வாறிருக்க
ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு  படிப்படியாக குறைவடையத் தொடங்கியது.  அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.

ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி  அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.

நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.

அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.

தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.

அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர்   அவனை அழைத்து
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.

அதற்கு அவன்
நான் குருடன் இல்லை.  எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.

"அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள், அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து *இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்"
எனப் பதிலளித்தான்.

🌸🌷🌷🌷🌸🌷🌷🌷🌸

எடைபோடுதலும் மதிப்பீடு செய்தலும் உறவுகளில் துயரத்தை ஏற்படுத்துகிறது.
- ஸ்ரீ  பகவான்.
இந்நாளில் விழிப்புணர்வு கிட்டட்டும்

Friday, October 21, 2016

நம் எண்ணமே தான் நமக்குச் சிறை-Thanks to Whatsup

எந்த ஒன்றினால் மனம் வருத்தப் படுகிறதோ அதில் நாம் சிறை பட்டு உள்ளோம் என்று அர்த்தம். (பணம், புகழ், அதிகாரம், உறவு தொழில் .....)

எதுவும் நமக்கு சிறை இல்லை நம் எண்ணமே தான் நமக்குச் சிறை.

ஒரு பிச்சைக்காரன் ஒரு தகரப்பெடியின் மேல் அமர்ந்து கொண்டு ரொம்ப நாளாக பிச்சை எடுக்கிறான்.

ஒரு நாள் அவன் இறந்து விடுகிறான்.

அப்போ முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து அவனை தூக்கி செல்லும் போது அவன் அமர்ந்திருந்த பெட்டியை திறந்து பார்கிறார்கள்.

அதில் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதாய் கண்டு வியந்து போனார்கள்.

இது தெரியாமல் அவன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்தான்.

 இது தான் தொழிலில் சிறை.

அவனுடைய தொழில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல், சிந்திக்க முடியாமல் செய்துவிட்டது

இன்னொரு மனிதர் நிறைய பணம் சேர்த்து வீட்டுக்கு கீழ் பாதாளம் அமைத்து அதில் சேர்த்து வைத்திருந்தார்.

ஆனால் அவர் ஒரு நாள் கூட அதை சரி பார்கவே இல்லை.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட வீட்டின் வேலை ஆள் அந்த அறையின் அடுத்தப் பக்கத்தை ஓட்டை போட்டு எடுத்து செல்கிறார்.

அது இவருக்கு தெரியாமலேயே பணம் பத்திராமாக இருப்பதாக மகிழ்ச்சியாக  இருக்கிறார்.

எப்படி இருக்கிறது பாருங்கள் மனிதனின் மனம்.

ஒருவன் இருப்பது தெரியாமல் பிச்சை எடுக்கிறான்.

மற்றொருவன் இல்லாததை இருப்பதாக நினைத்து கொண்டு வாழ்கிறான்.

இப்படித் தான் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருப்பதாகவும் நினைத்து வாழும் கலையை தெரிந்து கொள்ளாமலே வாழ்வின் பயணம் முடிந்து போகும் நிலையும் நிலவுகிறது.

இதுவும் மாயையே

இருப்பது ஆன்மாவில் நிலை கொண்டுள்ள ஆனந்தம் என்னும் இறைநிலை.  அந்த ஆனந்தம் நம்மிடம் இல்லை என்று வெளியே தேடி அலைகிறோம்.

இல்லாதது "நான்" என்ற மாயை.  அதை இருப்பதாக பாவித்து இன்னலுக்கு ஆட்பட்டு அழிந்து போகிறோம்.

இது நன்றி சொல்லும் நேரம்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதை-Thanks to Whatup

மனசை தொட்ட பதிவு. ..!
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
°•○●
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
°•○●
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,
♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
°•○●
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,
அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°•○●
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!!!***

வரம் எதுவும் வேண்டாம் - Thanks to Whatsup

சிவனிடம் வரம் வேண்டாம் என்ற  முனிவர்.
படித்ததில் பிடித்தது.

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும்
வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என
வணங்கினர் அம்மையும் அப்பனும்.

முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் 'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார்.

வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது
வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

நீதி!
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர் களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.

கடவுள் தூங்குவதும் இல்லை.. துயரப்படுத்துபவரும் இல்லை..Thanks to Whatup

இந்த மான் கதை என்னைக் கவர்ந்தது

ஒரு கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..

அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.

அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன.

மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.

மான் தன் இடப்பக்கம் பார்த்தது..
அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?

மகவும் பிழைக்குமா?

இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?

வேடனின் அம்புக்கு இரையாகுமா?

புலியின் பசிக்கு புசியாகுமா?

மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது..
* ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.

அப்போது நடந்த நிகழ்வுகள்.......

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..

அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது

நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது..
 வரும்..அச்சூழலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்...

நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..

எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?

வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.

கடவுள் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை..
உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்...

நன்றி

🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻
🙏🏻வாழ் நாளெல்லாம் 🙏🏻
💐💐💐💐🌺🌸🌸

வார்த்தையின் சக்தி-Thanks to Whastup

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.

"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குணிந்தான்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.