Saturday, July 16, 2016

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே-Thanks to Siripparangam Face Book

தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார்.
அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் ....
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...
ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு....
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்....
அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்....
அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது....
இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்....
" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்...
அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வேலையை ஆரம்பித்தார்...
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார்...
" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? "
இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

"நல்ல சந்தேகங்க சாமி .
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள்.
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.....
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற .
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.....
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " .
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்....
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்....
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது....
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்...
நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.
இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்....
பண்டிதருக்கு நேர்ந்த அவமானம் நமக்கு வேண்டாமே.

Friday, July 15, 2016

மனிதர்களின் சுவாசக்கணக்கு



ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய   'கந்த குரு கவசம்'
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே........ இப்படி துவங்குகிறது.  

சூலமங்கலம் சகோதரிகள் குரலில் இவற்றை கேட்காதவர்களும், கேட்டு உருகாதவர்களும்  இல்லை என்று கூறலாம்.   இதில் 226 வது வரி இப்படி வருகிறது. 

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
(Thanks to: http://www.kaumaram.com/text_new/kg_t_kavasam_u.html)

இடகலை பிங்கலை என்றால் என்ன.?   

சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் என்பது 294 வது வரி 
சுழுமுனை என்றால் என்ன.?

இது சுவாசம் பற்றிய ஒரு சொற்றோடர். இனி கீழே விரிவாக பார்ப்போம்.

மேலும் சுவாசத்தை சூரிய நாடி என்றும் சந்திர நாடி என்றும் பிரிப்பர். இதை புரிந்து கொள்ள உதவிய இயற்கை மருத்துவர் உயர்திரு ஹரிஷங்கர், மதுரை அவர்களுக்கு நன்றி. 
(Doctor Mr.Harishankar, Keep fit Hospital, Shenoy Nagar, Madurai)

Thanks to : http://spy.ind.in/
SPY = SCIENTIFIC PRANA YOGA
Following content is copied from this site.

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்
பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.  (இடகலை)

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

Wednesday, July 13, 2016

ஏந்திழை - இளையராஜாவின் அற்புதமான ஒரு சொல்லாடல்

நாடோடி தென்றல் என்ற ஒரு படம் (கார்த்திக் உடன் ரஞ்சிதா நடித்தது)

படம் : நாடோடி தென்றல் 
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ

இந்த படத்தில் வரும் மேற்சொன்ன பாடல்  மணியே மணிக்குயிலே.  மிக அற்புதமான இசையமைப்புடன் வந்த பாடல். எங்கு ஒலித்தாலும் நின்று கேட்க தோன்றும்.  அதில் ஒரு வரி

கண்ணிமையில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே


இந்த வரிகள் என்னுடைய மனதில் ரீங்கரித்துகொண்டே  இருந்தது. நாம் தான் தப்பாக கேட்டுவிட்டோமோ. ஏந்திழை என்றொரு வார்த்தை இருக்குமா என்று ஒரு தயக்கம்.

இருந்தாலும் பார்ப்போமே என்று கொஞ்சம் இணையத்தில் துழாவினேன். ஆச்சரியம். இது ஒரு அற்புதமான சொல்லாடல்.  அபூர்வமான இலக்கிய சொல் என்று தெரிந்துகொண்டேன்.

பாமரன் எழுதும் பாடல் என்று சொல்லி ஒரு பா-அமரன் (பாட்டுக்கே தேவன்) என்று சொல்லவைக்கும் அளவுக்கு சொல் தேர்ந்திடுத்திருக்கிறார் இளையராஜா.

சரிதான்  ஏந்திழை என்ற சொல்லுக்கு என்ன பொருள். அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்பதுவாகும்.  கதாநாயகன் ஒரு தங்க ஆபரணம் செய்யும் தட்டனாக இருந்ததால் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் போலும். .

சரி இந்த சொல்லாடல் இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று பார்ப்போம்.

பெரிய திருமொழி - நாலாயிர திவ்ய பிரபந்தம் 
(1110)
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
நன்றி : http://dravidaveda.org/

பிற்சேர்க்கை 23-அக்டோபர்-2019

தேன்கிண்ணம் மற்றும் டீப்லிரிக்ஸ் என்கிற வலைப்பூக்களுக்கு  நன்றி தெரிவித்து இந்த பிற்சேர்க்கை இடுகையை பதிவிடுகிறேன் 

http://thenkinnam.blogspot.com/2008/05/446.html#comment-8281358860975972799
https://deeplyrics.in/song/naan-erikkarai-melirunthu

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல

என்கிற பாடல் கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் இந்த ஏந்திழை என்கிற சொற்பதம் கிடைத்தது.

படம் : சின்னதாயீ 
நடிப்பு : விக்னேஷ் உடன் பத்மஸ்ரீ 
வருடம் : 1992
பாடியவர் : K  j  யேசுதாஸ்,  ஸ்வர்ணலதா 
எழுதியவர் : வாலி 
இசை : இளையராஜா 


ஒரு ஒற்றுமை .. நாடோடி தென்றல் திரைப்படமும் 1992 ல் வெளிவந்த படமே ... எனவே வாலியிடமிருந்து இளையராஜாவுக்கு இந்த சொல்லில் ஒரு ஈர்ப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.  அதே சமயம் வாலி அவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் அத்துப்படி எனவே அவர்தான் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தினார் என நான் நம்புகிறேன் 




இந்த பதிவு நானே சொந்தமாக எழுதியது - ரமணன்






Tuesday, June 28, 2016

மனித உறவுகளை பலப்படுத்திக்கிறது-Thanks to SakthiVikatan-26Jun2016


மனித உறவுகளை பலப்படுத்திக்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம், இல்லையா? ஆமாம், இங்கே யாரும் தனியா வாழ்ந்துட முடியாது. வீம்புக்கு வேணா சொல்லலாம், நான் யாரை நம்பியும் இல்லை; எனக்கு எவன் தயவும் தேவையில்லைன்னு! ஆனா, நல்லா யோசிச்சுப் பார்த்தோம்னா, நாம சாப்பிடற ஒவ்வொரு பிடி சோறும் பலருடைய உழைப்பினாலயும் உதவியினாலயும்தான் நமக்குக் கிடைக்குது!
அன்பால கட்டப்பட்டதாகவும் அக்கறையினால நெய்யப் பட்டதாகவும் இருக்கிற சமுதாயம்தான் நம்மோட பலம். உறவுச் சங்கிலிகள் வலுவா இருந்தாதான் ஒரு சமுதாயம் முன்னேறும். இங்கே நான் உறவுன்னு சொல்றது மாமன், மச்சான் உறவுகளை இல்ல. மனித உறவுகளை! ஒவ்வொரு சக மனிதனும் நம் சொந்தம்; நமது பந்தம்.


சக மனிதனுடனான உறவுகளை மேம்படுத்திக்க பாசாங்கு இல்லாத அன்பும், ஆத்மார்த்தமான அக்கறையும் வேணும்.

சமீபத்துல ஒரு நியூஸ் கேள்விப்பட்டிருப்பீங்க. கால் டாக்ஸி கூப்பிட்டாராம் ஒருத்தர். வந்த டிரைவர், கார் டயர் பஞ்சராகி நடுவழியில நின்னதாலதான் இவர் நம்மளைக் கூப்பிட்டிருக்காருன்னு தெரிஞ்சு, அங்கேயே அப்பவே டயரை மாத்திக் கொடுத்தாராம். “வேணாம்ப்பா! டயர் மாத்தணும்னா அரை மணி, முக்கா மணி ஆகும். இதை அப்புறமா பார்த்துக்கலாம்”னு இவர் சொல்லியும், “இல்ல சார், இதோ இப்ப மாத்திடலாம்”னு சொல்லி, இருபதே நிமிஷத்துல ஸ்டெப்னி டயரை மாத்திக் கொடுத்து, அவர் தன்னோட கார்லேயே ஆபீஸுக்குப் போகும்படியா பண்ணிட்டாராம். டயர் மாத்திக் கொடுத்ததுக்காகப் பணம் கொடுக்க இவர் முன்வந்தப்போகூட, “வேண்டாம் சார், இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் செய்துக்கற ஹெல்ப்தானே!”னு மறுத்துட்டாராம் அந்த டிரைவர். ‘இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷனா!’ன்னு ஃபேஸ்புக்ல கொண்டாடுறாங்க அவரை.

சில மாசங்களுக்கு முன்னால ஒரு நியூஸ் படிச்சேன். சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால்ல பார்க்கிங் பண்ணியிருந்த தன்னோட பைக்கை எடுக்க வரும்போது, அதன் டெயில் லைட் உடைஞ்சிருந்ததைப் பார்த்து ஷாக்காயிட்டார் ஒருத்தர். யாரோ தன் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது மோதி உடைச்சிருக்கணும்னு புரிஞ்சுடுச்சு. கடுப்பாகி, முகம் தெரியாத அந்த நபரைக் கன்னாபின்னானு திட்ட வாய் வரைக்கும் வார்த்தை வந்துடுச்சு இவருக்கு. அப்பத்தான் பார்த்தாரு, உடைஞ்ச லைட்டுக்குள்ளே ஏதோ பேப்பர் சுருட்டி வெச்சிருந்துது. 

எடுத்துப் பிரிச்சாரு. ‘ஸாரி சார், தெரியாம உங்க பைக் லைட்டை உடைச்சிட்டேன். ரொம்ப ஸாரி! இதுல 500 ரூபா வெச்சிருக்கேன். உங்க லைட்டை சரி பண்ணிக்குங்க!’ன்னு எழுதி, கூடவே 500 ரூபா நோட்டு ஒண்ணும் வெச்சிருந்தான் அவன். சட்டுனு இவரோட கோபம் தணிஞ்சிருச்சு. ரூபா பெரிசில்லை; நாம உடைச்சதை யாரும்தான் பார்க்கலையே, நமக்கென்னன்னு அப்படியே போகாம, ஸாரி கேட்டு அவன் ஒரு சின்ன குறிப்பு எழுதி வெச்சிருந்ததுதான் இவர் மனசைத் தொட்டுடுச்சு.

நம்ம ஜனங்ககிட்டே இந்த மாதிரியான மேன்மையான குணங்களெல்லாம் ஒரேயடியா காணாம போயிடலை; இன்னமும் இருக்கத்தான் செய்யுதுன்னு இந்த மாதிரியான சின்னச் சின்ன சம்பவங்கள் மூலமா தெரிய வர்றப்போ, உள்ளூர ஒரு சந்தோஷம் வருது; நம்ம சமூகத்து மேல ஒரு நம்பிக்கை வருது. இந்த குணங்களை இன்னும் வளர்த்தெடுக்கணும். தப்பு யார் மேல வேணா இருக்கட்டும், ஸாரி கேக்கறதுனால ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டோம்கிற எண்ணம் வரணும். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை.

பொம்மைகள் விக்கிற ஒரு கடை. எட்டு வயசுள்ள ஒரு சின்ன பெண்ணும், அவளோட அஞ்சு வயசு தம்பியும் அந்தக் கடையை கிராஸ் பண்ணிப் போனாங்க. அந்தப் பொண்ணு மட்டும் சட்டுனு நின்னு, ரெண்டு ஸ்டெப் பின்னாடி வந்து அந்தக் கடையையும், அதுல அலங்காரமா அடுக்கியிருந்த பொம்மைகளையும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்தா. அவ கண்ணுல ஏக்கமான ஏக்கம். அந்தக் குட்டிப் பையன் அதைக் கவனிச்சுட்டான். “என்ன, உனக்கு அந்த பொம்மை வேணுமா?”ன்னு பெரிய மனுஷன் மாதிரி கேட்டான். அவ ஆமான்னு தலையாட்டினா. “சரி, வா!”ன்னு அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போனான் அந்தப் பையன்.  

“உனக்கு என்ன பொம்மை வேணும், சொல்லு?”னு கேட்டான். அந்தப் பொண்ணு ஒரு பொம்மையைக் காண்பிக்க, அதை சுவாதீனமா எடுத்து அவகிட்டே கொடுத்துட்டு, கடைக்காரரைப் பார்த்து, “எவ்ளோ சார் இந்த பொம்மை விலை?”ன்னு கேட்டான் அந்தப் பையன். 

ஆரம்பத்துலேர்ந்தே அந்தக் குட்டிப் பையனோட பெரிய மனுஷ தோரணையைப் பார்த்து மனசுக்குள்ளே ரசிச்சுட்டிருந்தார் அவர். ஏதோ அவர் விலையைச் சொன்னதும் பர்ஸ்லேர்ந்து நோட்டு நோட்டா எடுத்துக் கொடுத்துடறவன் மாதிரி அவன் பெரிய மனுஷ தோரணையில் கேட்கவும், ஒரு புன்னகையோடு, “நீ எவ்வளவு தருவே?”ன்னு கேட்டார். 

அவன் தன் டிராயர் பைக்குள் கை விட்டு, கடற்கரை மணல்ல பொறுக்கின சின்னச் சின்ன கிளிஞ்சல்களை வெளியே எடுத்து, அவர் மேஜை மீது பரப்பினான். அவரும் சீரியஸா பணத்தை எண்ணுறவர் மாதிரியே அந்தக் கிளிஞ்சல்களை ஒவ்வொண்ணா எண்ணினார். அப்புறம் அவனைப் பார்த்தார்.

அவன் முகம் வாடிப் போச்சு. “என்ன சார், பணம் குறையுதா?”ன்னு கவலையோடு கேட்டான். “சேச்சே! அதெல்லாம் இல்லே. நிறையவே இருக்கு”ன்னவர், ஒரு ஐந்தாறு கிளிஞ்சல்களை மட்டும் தன் பக்கம் நகர்த்திக்கிட்டு, “இதுதான் இந்த பொம்மை யோட விலை. மீதிப் பணமெல்லாம் உனக்குதான்”னார். அந்தப் பையன் ரொம்ப குஷியா அந்தக் கிளிஞ்சல்களை எடுத்துத் தன் டிராயருக்குள்ளே போட்டுக்கிட்டு, அக்காவோடு நடையைக் கட்டினான்.

இதைப் பார்த்துட்டிருந்த கடைப் பணியாள் ஒருத்தனுக்கு ஆச்சரியம் ப்ளஸ் குழப்பம்! அவன் தன் முதலாளியைப் பார்த்து, “என்னங்க ஐயா, விலை உசத்தியான அந்த பொம்மையை அந்தப் பையனுக்கு வெறும் அஞ்சு கிளிஞ்சலுக்கு வித்துட்டீங்க?”ன்னு பொறுக்கமாட்டாம கேட்டான்.

“அடேய், நமக்குத்தான் அது வெறும் கிளிஞ்சல். அந்தப் பையனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய பொக்கிஷம். இந்த வயசுல அந்தப் பையனுக்குப் பணம்னா என்னன்னு தெரியாது; அதோட மதிப்பு புரியாது. பெரியவனாகும்போது கண்டிப்பா புரிஞ்சுப்பான். அப்போ, சின்ன வயசுல நாம நம்ம அக்காவுக்குப் பணத்துக்குப் பதிலா வெறும் அஞ்சே அஞ்சு கிளிஞ்சல்களைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தோமேனு அவனுக்கு ஞாபகம் வரும். அப்போ, இந்தக் கடையைப் பத்தியும் என்னைப் பத்தியும் நினைப்பான். இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியதுதான்னு அவன் மனசுல ஓர் அழுத்தமான எண்ணம் விழும். அந்த பாஸிட்டிவ் எண்ணத்தை அவன் மத்தவங்களுக்கும் பரப்புவான். எனக்கு அதுதான் வேணும்!”னு சொல்லிட்டுப் புன்னகைச்சார் அந்தக் கடைப் பெரியவர்.
உண்மைதானே? மேலே சொன்ன அந்த டாக்ஸி டிரைவரும், ஸாரி கேட்டு லைட் ரிப்பேர் செலவுக்குப் பணம் வெச்சுட்டுப் போன முகம் தெரியாத அந்த நபரும் அப்படியான பாஸிட்டிவ் எண்ணங்களைத்தானே பரப்பிட்டுப் போயிருக்காங்க! அதுக்காக அவங்களுக்கு என்னோட மகிழ்ச்சியையும், மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவிச்சுக்கறேன். 

‘ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒரு சேதி கொண்டு வருகிறது; கடவுள், மனித இனத்தை இன்னும் வெறுக்கத் தொடங்கவில்லை என்கிற சேதியே அது’ன்னு புகழ்பெற்ற ஒரு வசனம் உண்டு. அது மாதிரி, இந்த பொம்மைக் கடைக்காரர், டாக்ஸி டிரைவர் மாதிரியான நபர்களைப் பத்தின செய்திகள் வெளியாகுறபோதெல்லாம், மனித நேயம் முற்றிலுமாகத் தொலைஞ்சு போயிடலை; இன்னும் பல இடங்கள்ல அது உயிர்ப்புடன் தான் உலவிக்கிட்டிருக்கு என்கிற நம்பிக்கை விதை தூவப்படுதுன்னு நினைக்கிறேன்.  

Friday, June 17, 2016

சாமானியனின் சாதனை!-இளம்பகவத் - IAS -சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில்

சாமானியனின் சாதனை!

Thanks to Vikatan
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=119551&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1
அதிஷா
இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?' எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை. 

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத். 

ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.
அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை. 

தன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது. 

‘`வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.
ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார். 

‘`நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது'. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை’’ என்கிறார் இளம்பகவத்.
அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில்  குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத். 

2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்' என நினைத்தார்.  

`இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்’ எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலமாக நிறைவேறிவிடவில்லை. 

‘`என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.
2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில் 
குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல... ஐ.ஏ.எஸ்! 

2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத். 

இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர். 

 தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

‘`அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்’’ என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். 

‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்'’ எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்!

Thursday, June 16, 2016

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! #ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்


Thanks to Vikatan
http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/65252-actirulokchandar-memorial-article.art

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! #ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்

'அவருக்கு பதில் இவர்' என்று டிவி சீரியல்களில் சர்வ சதாரணமாக கதாபாத்திரங்களுக்கு ஃபிரேம் போட்டு மாட்டிவிடுகிறார்கள் இன்று. ஆனாலும் அது கதையோட்டத்தில் சிறு கீறலையாவது ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் சுமார் 35 வருடங்களுக்கு முன் திரைப்படம் ஒன்றில் அந்த விஷப்பரீட்சையை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தம் ஒரு பிரபல இயக்குனருக்கு உருவானது. அந்த திரைப்படம்தான் 'அவருக்கு பதில் இவர் ' கலாச்சாரத்தை துவக்கி வைத்த முதல் திரைப்படம்.
பெரிய இயக்குனரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான அந்தத் திரைப்படம் முக்கால் பாகம் முடிந்திருந்த நிலையில், வெளிநாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றிற்கு புறப்பட்டுச் சென்ற கதாநாயகி மறுநாள் விமான விபத்தில் மரணமடைந்த தகவல் வந்து சேர்ந்தது. பழகிய ஒரு பெண் மரணமடைந்த சோகம் ஒரு பக்கம். இனி படத்தின் நிலை என்ன என்ற குழப்பம் ஒரு பக்கம்.  லட்சங்களில் படமெடுத்துவந்த அந்தக்காலத்தில் பல லட்சம் முதலீடு முடங்கிப்போனால் அது ஒரு தயாரிப்பாளரின் வாழ்வை முடித்துவிடும். சோர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர்.

சில மாத ஓய்வுக்குப்பின் படத்தின் கதாநாயகன் சிவகுமார் அந்த இயக்குனரை தேடி வந்தார். தான் ஒரு நடனக்குழு பெண்ணைக் கண்டதாகவும் அவர் ஒரு சாயலில்  கதாநாயகிபோல இருப்பதாகச் சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர். அந்தப் பெண்ணை வைத்து மீதிப்படத்தை முடித்தார். படத்தைப் பார்த்தவர்கள் இரண்டு பெண்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 6 வித்தியாசங்களைக் காணக் கூடத் திணறினர். அத்தனை தத்ரூபம். பாராட்டு முழுவதும் அந்த இயக்குனரை போய்சேர்ந்தது. காரணம் வித்தியாசம் தெரியாதபடி திட்டமிட்ட கேமிரா கோணங்கள், வசன பாணி, நடை, உடை பாவனை என அத்தனையும் மாற்றி பழைய கதாநாயகியாகவே அந்தப் பெண்ணை உலவ விட்டிருந்தார் திரையில்.
அந்த இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர். ஆற்காடு செங்கல்வராய முதலியார் திருலோகசந்தர்தான், ஏ.சி.டி என அந்நாளில் அழைக்கப்பட்ட ஏ.சி.திருலோகசந்தர். நெடுநெடு உயரம், கம்பீரத் தோற்றம், பின்னோக்கி வாரப்பட்ட படர்ந்த தலைமுடி, இதுதான் ஏ.சி.டி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் 60 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.சி திருலோகசந்தர் தனது 86 வயதில் நேற்று காலமானார்.
சென்னை புரசைவாக்கத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த திருலோகசந்தரை ஐ.ஏ.எஸ். ஆக்க விரும்பியது அவரது குடும்பம். ஆனால் விதி வேறுவிதமாக அவரது வாழ்க்கையை மாற்றியது. ஆங்கில நாவல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்ட அவரது தாயார் சிறுவயதில் ஏ.சி.டியை படிக்கச் சொல்லிகேட்பது வழக்கம். இந்த பழக்கம் திருலோகசந்தரையும் வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாக்கியிருந்தது. படிக்க ஆரம்பித்தவர் எழுத ஆர்வம் கொண்டார். பள்ளிவயதிலேயே சந்திரா என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை எழுத ஆரம்பித்தார். அந்நாளில் எழுதி அகில இந்திய வானொலியில் அவர் பெற்ற சம்பளம் பத்து ரூபாய். அன்று இதில் சில சவரன் நகைகளை வாங்கிவிடலாம்.
எழுத்தார்வத்தோடு படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார் ஏ.சி.டி. பள்ளிப்படிப்புக்குப்பின் கல்லுாரிப்படிப்பை முடித்து  ஐ.ஏ.எஸ் தயாரானவருக்கு வயது காரணமாக அந்த வருடம்  ஐ.ஏ.எஸ் எழுத முடியவில்லை.
பக்கத்து தெருவில் வசித்துவந்த பள்ளி நண்பன் ராஜகோபாலின் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவரது தந்தை பத்மநாப ஐயர் அப்போது திரைப்படம் தயாரித்துவந்தார். குமாரி என்ற அந்த படம் துவங்கும் தருவாயில் இருந்தது. படத்தின் இயக்குனரும் அவரேதான். எழுத்தார்வம் உள்ள தன் நண்பனை பற்றி ராஜகோபால் தன் தந்தையிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்ததால் ஒருநாள், 'என் படத்தில் பணியாற்றச்சொல்' என அவர் கூப்பிட்டனுப்பினார். தனக்கு ஐ.ஏ.எஸ் படிக்கவே ஆசை என அந்த வாய்ப்பை மறுத்தார் ஏ.சி.டி. 'இன்னும் ஒரு வருடம் இருக்கிறதல்லவா அதற்குள் படம் முடிந்துவிடும். பிறகு படிக்கப்போகலாம்' என நண்பன் வற்புறுத்த,  படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவராக சேர்ந்தார் ஏ.சி.டி.

பெயருக்குதான் உதவி இயக்குனர் வேலை. ஆனால் படத்தின் எல்லா வேலைகளையும் அவர் செய்யவேண்டியிருந்தது. திரைப்படம் என்ற கவர்ச்சி மீடியத்தை அவர் புரிந்துகொள்ள அந்த பணிகள் உதவியாக இருந்தது அவருக்கு.
படத்தின் கதாநாயகன் அப்போது வளர்ந்துவந்துகொண்டிருந்த நடிகர் எம்.ஜி.ராம்சந்தர். ஆம் அப்போது எம்.ஜி.ஆரின் பெயர் அதுதான். படப்பிடிப்பில் ராஜ உடையில் நடிக்கவேண்டிய எம்.ஜி.ஆர் தன் வழக்கமான உடை மற்றும் தான் அணிந்திருந்த நகைகளை ஏ.சி.டியிடம்தான் கழற்றிகொடுப்பார். ஏ.சிடியின் ஏதோ ஒரு குணம் எம்.ஜி.ஆரை கவர்ந்திருந்தது. ஓய்வின்போது ஏ.சி.டியின் வாசிப்பு ஆர்வத்தை கேட்டு ஆச்சர்யமாவார் எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏ.வி.எம் மின் 50 வது படமாக, குறிப்பாக அந்நிறுவனத்தின் முதல் கலர்ப்படமாக வெளிவரப்போகும் படத்தின் இயக்குனர் ஏ.சி.டி என்பதும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் என்பதும் இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இருவருக்கும் அது ஆரம்பகாலம். அதுதானே வாழ்வின் சுவாரஸ்யம்.
குமாரி படத்திற்குப்பின் ஏ.சி.டிக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாகியிருந்தது. இப்போது ஐ.ஏ.எஸ் கனவை மூட்டை கட்டி வைத்திருந்தார். பத்மநாப ஐயர் படத்தயாரிப்பை நிறுத்தியபின் சற்று இடைவெளியில் ஏ.சி.டி, பச்சையப்பன் கல்லுாரியில் முதுகலை முடித்திருந்தார். திரைத்துறையில் இன்னொரு நண்பரான அபிபுல்லா மூலம் மீண்டும் சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. அபிபுல்லா பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸ் நிர்வாகியின் மகன். ஏ.சி.டிக்கு நெருங்கிய நண்பன். ஏற்கனவே குமாரி அனுபவத்தை கேள்வியுற்றிருந்த அபிபுல்லா தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற ஏ.சி.டிக்கு அழைப்பு விடுத்தார்.
பெரிய நிறுவனம், நண்பனின் அழைப்பு... தட்டாமல் வேலைக்கு சேர்ந்தார் ஏ.சி.டி...கதை விவாதக்குழுவில் வேலை. அக்காலத்தில் பிரபல நிறுவனங்கள் கதை விவாதத்திற்காக தேர்ந்த கதை ஞானமுள்ளவர்களை கொண்ட குழுவை வைத்திருந்தது. தொடர்ந்து அந்நிறுவனங்களில் படங்களில் பணியாற்றி தன் இயக்குனர் ஆர்வத்திற்கு தேவையான அடிப்படைய விஷயங்களை கற்றுத்தேர்ந்த ஏ.சி.டி, சினிமா தொழில்நுட்பம் தொடர்பான நுால்களை தேடித்தேடிப் படித்து அதிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

இயல்பில் நல்ல பின்னணி, மெத்தப்படிப்பு இந்த குணங்களால் சினிமாவில் சில விஷயங்களில் தனித்த குணத்துடன் இயங்கினார் ஏ.சி.டி. அவரது குணத்தை சோதிக்கும்படி, ஜூபிடர் பிக்சர்ஸின் படமொன்றின் தயாரிப்பின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. அது உண்மையிலேயே அவரது வாழ்க்கையை முடிவு செய்கிற விஷயமும் கூட. படம் துவங்கி நடந்துவந்த நிலையில் பிரபலமான அந்த இயக்குனருக்கும் நிறுவனத்திற்கும் முட்டல் மோதல் எழுந்தது. நவீனத்தை விரும்பும் அந்த இயக்குனரின் சில காட்சியமைப்புகளை நிறுவனம் விரும்பவில்லை. இயக்குனரும் விடாப்பிடியாக நின்றார் தன் விஷயத்தில். பனிப்போர் முற்றிய நிலையில் இயக்குனர் சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதிருப்தியடைந்த தயாரிப்பாளர்கள் ஏ.சி.டியிடம் வந்தனர். “இனி அவருடன் ஒத்துபோகமுடியாது.  தொடர்ந்து இந்த படத்தை நீங்களே இயக்குங்கள்” எனக் கூறினர்.
உண்மையிலேயே இப்படி ஒரு சந்தர்ப்பம் உதவி இயக்குனர் வாழ்வில் பெரும் அதிர்ஷ்டம். பிரபல நிறுவனம், பெரிய பட்ஜெட் படம் நல்ல கதை...வேறுயாராக இருந்தாலும் ஒப்புக்கொண்டு படத்தை தொடர்ந்திருப்பர். ஆனால் ஏ.சி.டி நிதானத்துடன் அதை மறுத்துவிட்டார். 'இது நாகரிகமில்லை. உங்களுக்குள்ள பிரச்னையில் நான் இப்படி வாய்ப்பு பெற்றால் நம்பிக்கையுடன் சென்றுள்ள அவர் எத்தனை வேதனைப்படுவார். அவருடன் கலந்துபேசி படத்தை இயக்கவையுங்கள். நான் உதவியாளராகவே தொடர்கிறேன்' -தீர்க்கமான சொன்னார் ஏ.சி.டி.

சினிமாத்துறையில் அரிதான இந்த குணம் கண்டுபிரமித்துப் போனார்கள் தயாரிப்பாளர்கள். முடியும் தருவாயில் இந்த விஷயம் தெரியவந்து ஏ.சி.டியை சந்தித்து கட்டித்தழுவி உருகினார் அந்த பிரபல இயக்குனர். 'நீ நல்லா வருவே திருலோக்...சினிமாவில் உனக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு' என ஆசிர்வதித்தார் அந்த மேதை. அடுத்த 10 ஆண்டுகளில் அது நிகழ்ந்தது. நிற்க நேரமின்றி  தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி என அத்தனை மொழி கதாநாயகர்களை ஆட்டுவித்தார் ஏ.சி.டி
இத்தனை இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் பணிபுரிந்தாலும் ஏ.சி.டி பிரமித்து மிரண்டுபோயிருந்தது அந்நாளில் பிரபல இயக்குனரான எல்.வி. பிரசாத்த்தின் இயக்கத்தை பார்த்துதான். சினிமாத்துறையில் சில வருட அனுபவங்களோடு அவரது வீட்டுக்கதவை தட்டினார் ஒருநாள். நான் உங்களிடம் உதவியாளராக சேரவேண்டும்...அது என் பாக்கியம் என்றார். 'என்னிடம் தேவையான ஆட்கள் இருக்கிறார்கள் தம்பி. உன்னை வேலைக்கு எடுத்துக்கொண்டால் இன்னொருவர் வேலை இழக்கவேண்டிவருமே... பரவாயில்லையா' என்றார் எல்.வி. பிரசாத் வழக்கம்போல் தன் சன்னமான குரலில்.

‘சரி.. ஆனால் என்றைக்கும் நீங்கள்தான் என் துரோணாச்சாரியார். நான் உங்கள் ஏகலைவன். நன்றி வருகிறேன்” என்று கிளம்பிவிட்டார் ஏ.சி.டி.  இதுதான் அந்நாளைய தமிழ்சினிமா. நேர்மை, நம்பிக்கை, நாணயம் என இயங்கிவர்கள் நிரம்பியிருந்த காலகட்டம்!

ஏ.சி.டியின் தன்னம்பிக்கை வழிந்த அந்த வார்த்தைகள் பின்னாளில் பலித்தது. தன் படப்பிடிப்பிற்கு அருகே ஏ.சி.டியின் படப்பிடிப்பு நடந்தால் எல்.வி பிரசாத் மறக்காமல் அங்கு வந்து ஏ.சி.டியின் இயக்கத்தை பார்த்து ரசிப்பார். 'சொன்னதை நிரூபிச்சிட்டியே' என தட்டிக்கொடுத்துவிட்டு செல்வார்.
ஜூபிடர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் நடிகர் அசோகனின் நட்பு கிடைத்தது ஏ.சி.டிக்கு. அசோகனும் அந்நாளில் டிகிரி படித்தவர். மணிக்கணக்கில் உலக விஷயங்களை பேசும் நட்பு அவர்களுடையது. அறிவாளிகளை அணைத்துக்கொள்ளும் சுபாவம் கொண்ட ஏ.வி.எம் சரவணனுக்கு ஏ.சி.டியை அசோகன் அறிமுகப்படுத்தி வைக்க ஏ.வி.எம் பேனரில் ஏ.சி.டியின் முதல்படம் விஜயபுரிவீரன் வெளிவந்தது. வாள்வீச்சில் எம்.ஜி.ஆருக்கு இணையான திறமைபெற்ற ஆனந்தன் கதாநாயகன்.
விஜயபுரிவீரன் வெற்றிக்குப்பின் திரையுலகில் ஏ.சி.டி காலம் தொடங்கியது. ஏ.வி.எம் பேனரில் தொடர்ந்து ஏ.சி.டியின் படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டன. குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவரானார் ஏ.சி திருலோகசந்தர். 'உருக்கமான சம்பவங்கள்', 'நேர்த்தியான திரைக்கதை, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்புகள் இவற்றின் ஒரு கலவையாக ரசிகர்களுக்கு படங்களை தந்தார் ஏ.சி.டி.

வீரத்திருமகன் விஜயபுரிவீரன், நானும் ஒரு பெண், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தான், இருமலர்கள், பாபு, பாரதவிலாஸ், அன்பே வா, பத்ரகாளி, எங்க மாமா போன்ற அவரது படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாதவை. ஏ.வி.எம் பேனரில் முதல் கலர்ப்படம் எடுக்க நினைத்தபோது மெய்யப்ப செட்டியாருக்கு நினைவுக்கு வந்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். இயக்குனராக நினைவுக்கு வந்தவர் ஏ.சி.டி...எம்.ஜி.ஆருக்கான கதை ஏ.சி.டி யிடமே கைவசம் இருக்க எம்.ஜி.ஆர் பாணி படங்களுக்கான எந்த அடையாளங்களுமின்றி அன்பே வா வெளியானது.
படத்தின் கதாநாயகி கதாநாயகனை தேடிவந்து காதலிக்கவில்லை...கதாநாயகன்தான் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலித்து உருகுகிறான். அம்மா...என்ற உரக்க குரலெடுத்து சுவரில் சாய்ந்து கதாநாயகன் கண்ணீர் விட்டு கதறவில்லை. அப்பாவை கொன்றவனை பழிவாங்க புறப்படவில்லை.மொத்தத்தில் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்பா அம்மா கதாபாத்திரங்களே இல்லை. படத்தில் வரிசைகட்டி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடவில்லை...மாறாக திட்டிப் பாடினர்.
இதைவிட அதிசயம் இதில் கதாநாயகன் ஏழை எளியவர்களுக்கு குரல்கொடுக்கும் ஏழைப்பங்காளன் இல்லை; பெரும்பணக்காரன்! எம்.ஜி.ஆர் ஃபார்மூலாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட  விஷயங்கள் இருந்தும் படம் சூப்பர் ஹிட்.
தனது படங்களின் வெற்றி ஃபார்முலா எதுவும் இல்லாதபோதும் எம்.ஜி.ஆர் இந்த படத்தினை ஒப்புக்கொள்ள ஒரே காரணம் ஏ.சி.திருலோகசந்தர் என்ற திறமையாளர். படத்தின் வெற்றி அதை உறுதிப்படுத்தியது. படத்தின் வெற்றிவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர், 'என்னை நான் ஏ.சி.டியிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடத்தயாராக இருந்தேன்' என மனம்விட்டு பாராட்டினார்.
ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் அடுத்தடுத்து வெளிப்படங்களின் வாய்ப்பு வந்தன. சிவாஜி படங்களை தொடர்ந்து இயக்கி புகழடைந்தார் ஏ.சி.டி. அத்தனையும் ரசிகர்களை கட்டிப்போட்ட வெற்றிப்படங்கள். தெய்வமகன் படத்தில் மூன்று சிவாஜிகளைப் பேச வைத்து ரசிகர்களை உருக வைத்திருப்பார் ஏ.சி.டி.

சிவாஜி பத்மினி நடித்து வெளியான இருமலர்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார். 'காக்கும் கரங்கள்' படத்தின்மூலம் கோவையைச் சேர்ந்த ஓர் ஓவியக்கலைஞனை, நாயகனாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பின்னாளில் சிவகுமார் எனப் புகழ்பெற்ற நடிகரானார். நகைச்சுவை நடிகை 'சச்சு'வை கதாநாயகியாக்கியதும் ஏ.சி.டிதான்.
குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்து புகழ்பெற்ற ஏ.சி.டி, 60 களின் இறுதியில் ஹிட்ச்சாக் பாணியில் த்ரில்லர் கதை ஒன்றை இயக்கினார். அதே கண்கள் என்ற அப்படம் தமிழின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று.
 
ஏ.சி.டியின் திரைப்பட பட்டியலில் இன்னுமொரு முக்கியமான படம் பத்ரகாளி. தமிழ் பிராமண பெண்ணிற்கும் அவளது கணவனுக்குமிடையேயான பந்தத்தை உருக்கத்துடன் சொன்ன படம். எதிர்பாராதவிதமாக மனப்பிறழ்வு அடையும் அவள் அதற்குப்பின்னால் நடந்துகொள்ளும் முறையினால் தன் குழந்தையையே இழக்க நேரிடுகிறது. விவாகரத்து வரை சென்றபின்னுமான தம்பதிகளின் அழுத்தமான உறவை  உணர்ச்சிகரமான குடும்ப வாழ்வைச் சொன்ன பத்ரகாளி படத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான் கட்டுரையின் முதலில் குறிப்பிட்ட நிகழ்ச்சி. அந்தப்படத்தின் வெற்றி ஏ.சி.டியின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரது சினிமா தொழில்நுட்ப திறமையையும் நிரூபித்தது தமிழ்த்திரைலகில்.
தன் விருப்பத்திற்கு எதிராக உள்ள படங்களை ஏ.சி.டி எத்தகைய விலைகொடுத்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏ.சி.டியிடம் இருந்த அரிய குணம் இது. தன்னை வளர்த்தெடுத்த ஏ.வி.எம். நிறுவனத்திடமே இப்படி ஒரு விஷயத்தில் முரண்பட்டார் அவர். அந்தக்கதையை ஏ.சி.டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் என ஏ.வி.எம் நிறுவனம் விருப்பம் தெரிவிக்க அது தன்னால் முடியாது என திட்டவட்டமாக மறுத்தவர் ஏ.சி.டி.

80களின் மத்தியில் படம் எடுப்பதை குறைத்துக்கொண்ட ஏ.சி.டி தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றை இயக்கினார். வயதும் உடல்நிலையும் இடம்கொடுக்காதபோது கண்ணியமாக திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது இறுதிக்காலத்தை கழித்தார். சில வருடங்களுக்கு முன் அவரது மனைவி இறந்துவிட துக்கத்தில் இறுதிநாட்களை கழித்து வந்தார். கடந்த வாரத்திற்கு முன் அவரது மூத்த மகன் அமெரிக்காவில் மரணமடைந்தார். மிகுந்த உடல்நல பாதிப்பில் இருந்த ஏ.சி.டிக்கு இந்த தகவல் சொல்லப்படவில்லை. அந்தளவிற்கு நினைவு தவறியிருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார். தெய்வமாகிவிட்ட தனது செல்ல மகனை பார்க்க நேரிலேயே சென்றுவிட்டாரோ என்னவோ இந்த தெய்வ மகன்.

ஏ.சி.டிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. தமிழகத்திலிருந்து முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அவர் இயக்கத்தில் வெளியான தெய்வமகன் திரைப்படம்தான்! தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஏ.சி.டி அண்ணாவிடம் தமிழகத்தின் ராஜா சாண்டோ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரசிகர்கள் கேட்கிறார்கள் கொடுக்கிறோம்'...என ஒழுக்கக்கேடான விஷயங்களை திரையிட்டு காரணம் சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் 'ரசிகர்களுக்கு இதைத்தான் கொடுப்பேன்' என்ற சினிமாவையும் ரசிகர்களையும் கண்ணியமாக அணுகிய இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர் என்றும் திரையுலகில் மறக்கமுடியாதவர் !

Wednesday, June 15, 2016

இனியது, கொடியது-திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வை பாடுவதாக


திருவிளையாடல் திரைப்படத்தில் அவ்வை பாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டது 

இனியது

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவினும் நனவினும் காண்பதுதானே.

பொருள் :-ஆதி - இறைவன்
ஏகாந்தம் - தொல்லையில்லாத தனிமை

கொடியது

கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்
அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் உண்பது தானே.