Tuesday, January 26, 2016

ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு....

THANKS TO VIKATAN http://www.vikatan.com/news/article.php?module=news&aid=23749&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
ஜனவரி 26: sony - புகழ் ஆகியோ மோரிடா பிறந்த தினம் சிறப்பு பகிர்வு....

புதிய பாதையில் பயணி :
sony ஆகியோ மோரிடாவிடம் இருந்து பத்து பாடங்கள் :
இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம், சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப பிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி !
முயன்றால் எதுவும் சாத்தியம் :
375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள்.  டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் அவர். பள்ளிகளில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்து இறங்கி கலக்கினார்கள். லட்சங்கள் குவிய ஆரம்பித்தது.
ஆய்வு செய் ! அற்புதம் நிகழும் :
லட்சங்கள் குவிய ஆரம்பித்தாலும் பத்து சதவிகிதத்தை ஆய்வுகளில் யோசிக்காமல் முதலீடு செய்தார்கள். npn என்று டயோட் இருந்தால் இன்னமும் சிறப்பாக ட்ரான்சிஸ்டர் வேலை செய்யும் என்று புரிந்தது. அதை தயாரிக்கஉரிய பொருளைத்தேடி அலைந்த பொழுது பாஸ்பரஸ் நல்லபடியாக சொன்னதை கேட்டது. அப்பொழுதைய ஜாம்பாவன் பெல் லேப்ஸ் நிறுவனமோ பாஸ்பரஸ் வேஸ்ட் என்றிருந்தது. ஆனாலும்,நம்பிக்கையோடு ஆய்வுகளை தொடர்ந்தார்கள். துல்லியமான ட்ரான்சிஸ்டர்கள் உருவாகின. அந்த ஆய்வின் பொழுது எழுந்த 'double tunneling effect' ஒரு நோபல் பரிசை கூடுதல் போனஸாக தந்தது
பெயரும் முக்கியம் ஜெயிக்க :
ஏழை நாடாக இருந்த ஜப்பானை விட அடித்துக்கிளப்பும் அமெரிக்கா நல்ல சாய்ஸ் என்று பட்டது மோரிடாவுக்கு. அங்கே போய் கம்பெனி நடத்தலாம் என்று முடிவு செய்த பொழுது ஈர்க்கும் ஒரு பெயருக்கு அலைந்தார்கள். இலத்தீனில் ஒலியை குறிக்கும் சோனஸ் தாக்கத்தில் சோனியை வார்த்தார்கள். தரமும் சேர்ந்து கொள்ள சோனி சாதித்தது !
குறைத்து எடை போடாதே உன்னை :
அமெரிக்காவின் ஸ்டாக் மார்க்கெட்டில் நுழைந்திருந்தார்கள் சோனி. அன்றைக்கு ஷேர்களின் விலை என்ன என்று அறிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அமெரிக்க ஆள் ரூமில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். விலையை
அறிவிக்காமல் கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் நிலவரம் என்ன என்று விசாரித்தால் அதிர்ச்சி ! பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் ஓயாமல் அழைத்து விலையென்ன என்று கேட்கிறார்கள். மதிப்பு
வெகு உச்சத்தில் இருக்கிறது என்று சொன்னதும் டாப் விலை சொன்னார்கள் !
தேவைகளில் இருந்து புதிதைத்தருக :
பீச்சுகள் வரை டேப் ரெக்கார்டர்களை கொண்டு போய் மக்கள் சிரமப்பட்டு பாடல் கேட்பதை பார்த்தார் இவர். பெல் லேப்ஸின் தொழில்நுட்பத்தில் இருந்து பாடல் கேட்கும் ஒரு கருவியை படைத்தார்கள். அதை ஆங்காங்கே எடுத்து  அளவை சிறிதாக்க சொன்னார் அகியோ மோரிடா. பின்னர் நண்பர் இபுகா இப்படி சத்தமாக கேட்கவும் கடுப்பாக இருக்கிறது என்று சொல்ல ஹெட்செட் என்கிற கான்செப்டை கொண்டு வந்தார்கள். அப்படியும் இளைஞர்களின் கனவுப்பொருளான வாக்மேன் வந்தது இப்படித்தான்!
தவறுகளை ஒத்துக்கொள் :
கால்குலேட்டர் பிஸினசில் நுழைந்திருந்தது சோனி. பல ஜப்பானிய நிறுவனங்களும் அதில் ஈடுபட்டதால் பெரிதாக வருமானம் கிடைக்காமல் அந்த தொழிலை மோரிடா இழுத்து மூடிவிட்டார். ஆனால்,அதை அப்படியே வைத்திருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் உலகை முற்றுகையிட்ட கணினித்துறையில் இன்னமும் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என்று தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் அவர்
குடும்பம் நிறுவனம் :
சோனியில் தலைமை அதிகாரிக்கும், அடுத்தடுத்து இருக்கும் ஊழியர்களுக்கும் இடையே சம்பள விகித வித்தியாசம் பெரிய அளவில் இருக்காது. எல்லா நபர்களையும் குடும்பம் போல நடத்துவார்கள். வெறும் பட்டம் மட்டுமே திமைக்கு அளவுகோலாக கொள்ளப்படாமல் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாறி கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் தருவது உறுதி செய்யப்பட்டது ! கோக கோலா, ஜெனரல் மோட்டர்ஸ் என்று டாப் நிறுவனங்களுக்கும் மேலே அமெரிக்காவில்
நம்பகத்தன்மை பெற்று நின்றது சோனி !
விளம்பரம் கொஞ்சம் வில்லங்கம் :
ஒரு புதிய கருவியை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருந்தார் மோரிடா. அது பெரிய ஹிட் அடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் ஒழுங்காக விற்க வைக்க அதிகபட்ச விளம்பரங்களை செய்யச்சொல்லி ஏஜ் இருந்த அதிகாரிக்கு உணர்த்த ,"இவ்வளவு மில்லியன் டாலர் நீங்கள் செலவு செய்யவேண்டும் ! இல்லையென்றால் வீட்டுக்கு போக வேண்டியது தான் !" என்று சொல்லிவிட்டார். சொன்னபடியே செலவு செய்தார் அந்த அதிகாரி. என்ன ! மற்ற பொருள்களுக்கான விளம்பரத்தை குறைத்து அதை இந்த புது குழந்தைக்கு திருப்பி எப்பொழுதும் ஆகும் செலவுக்குள்ளேயே சாதித்தார்!
செய் ! செய்யாதே !:
"தவறுகள் செய்ய அஞ்சாதீர்கள் ,ஆனால் அதே தவறை திருப்பி செய்யாதீர்கள் " என்பதை தன் தாரக மந்திரமாக கொண்டிருந்த அகியோ மோரிடா ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ரோல் மாடல். மேட் இன் ஜப்பான் என்கிற பிராண்டை உலகத்தின் தரத்தின் உச்சமாக மாற்றிய உழைப்பில் எண்ணற்ற நாட்டு மக்களை ஈடுபடுத்திய அவரும்,அவர் தோழர் இபுகாவும் ,"எதுவும் முடியாது என்று சொல்லத்தெரியாத நாடு ஜப்பான் !" என்றே அறியப்பட வேண்டும் என்றார். பெயர் மாறினாலும் நம் நாடும் அப்படி ஆக பயணிப்போம் !
உலகப்போருக்கு பின் அணுகுண்டுகளை வாங்கி நைந்து போயிருந்த தேசத்தை தொழில் நுட்பத்தால் தலைநிமிர்த்த முடியும் என்று இவரும், இபுகா எனும் இவரின் நண்பரும் நம்பினார்கள் .1946 இல் டோக்கியோ டெலி கம்யுனிகேசன்ஸ் இன்ஜினியரிங் கார்ப்பரேசனை தொடங்கினார்கள் .முதலில் மிகப்பெரிய டேப் ரெகார்டரை உருவாக்க அது கவனம் பெறவில்லை ;பார்த்தார் மனிதர் .பெல் நிறுவனம் உருவாக்கி இருந்த ட்ரான்சிஸ்டரை உரிமம் பெற்று தங்களின் ரேடியோக்களில் இணைத்தார்கள்; மாபெரும் வெற்றி பெற்றது அது  .அளவில் சிறியதாக இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். அதையே எட்டு இன்ச் டிவி ,வீடியோ ரெகார்டர் என விரிவாக்கி கொண்டே போனார்கள் .உலகம் முழுக்க மேட் இன் ஜப்பான்  என்கிற சொல்லுக்கு ஒரு தனி கவுரவத்தை தந்தது இவரின் நிறுவனம்.
அமெரிக்காவை முற்றுகையிட ஒரு கவர்ச்சி கரமான பெயரை யோசித்தார்கள். இலத்தீனில் ஒலி என்பதற்கு சோனஸ் என பெயர் ; அமெரிக்காவில் சோனி பாய்ஸ் என்பது பிரபலமான வாசகம் .சோனி என பெயர் மாறியது ஜப்பானின் பீச்களில் பயணம் போகிற பொழுது மிகப்பெரிய ஸ்பீக்கர் கொண்டு போய் மக்கள் இசைகேட்பதை பார்த்தார் ;நடந்துகொண்டே கேட்கும் வாக்மேனை உலகத்துக்கு தந்தார் ;.ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வாக்மேன்களை விற்கா விட்டால் தான் பதவி விலகுவதாக சொல்லி சாதித்தவர் .அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் இவர் ;ஜப்பானியர்
என்கிற பெருமையை அவர் விடவில்லை .அமெரிக்கர்களை புரிந்து கொள்ளவே அங்கே போனார் ;எந்த அளவிற்கு ஜப்பானை அவர் பெருமைபடுத்தினார் என்றால் அவரின் மறைவின் பொழுது சோனி அமெரிக்காவில் கோக கோலா ஜெனெரல் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனிகளை விட மேலான இடத்தில்  மக்களால் பார்க்கப்பட்டது .தன் இறுதிக்காலம் வரை ஒரு மாதத்திற்கு எத்தனை கூட்டங்கள் இருந்தாலும் 17 நாட்கள் வேலை பார்ப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தவர் .என்ற இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்க்குரோல் மாடல்  அவரின் ஒரு நூலின் தலைப்பு இப்படிதான் இருக்கும் முடியாது என்று சொல்லத்தெரியாத ஜப்பான் -அப்படித்தான் அவர் ஒற்றை பிராண்டின் மூலம் நாட்டை தலைநிமிர்த்தினார். அவரின் பிறந்த  நாள் இன்று
- பூ.கொ.சரவணன்

Saturday, December 12, 2015

கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்(று) - Thanks to Vikatan

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=113428&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 5
யூத்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
நாம பெரிய புத்திசாலின்னு காட்டிக்கிறதுக்காக அடுத்தவரை கேலி செய்யறதும், நக்கல் பண்றதும் எவ்வளவு பெரிய தப்புங்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம்.
‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்கிற திருக்குறளை ஞாபகப் படுத்தி, தன் கருத்துக்களை இ-மெயில் பண்ணியிருந்தார் சுரேஷ். நானோடெக்னாலஜி மூன்றாம் வருடம் படிக்கிறாராம். (நானோ டெக் மாணவர் திருக்குறளை உதாரணம் காட்டுறது ஒரு சுவாரஸ்ய பொருத்தம்தானே?!)
அச்சாணி ஒரு சாண்தான். ஆனா, அதுதான் அவ்ளோ பெரிய தேர் ஓடுறதுக்குத் துணை புரியுது. ஒரு பெரிய இயந்திரத்துல இருக்கிற ஒரு சின்ன நட்டு கழண்டு போனாலும், இயந்திரம் மக்கர் பண்ணும். ஒரு சின்ன ‘சிப்’புக்குள் ஆயிரம் ஆயிரம் தகவல்களைப் பதிஞ்சு வைக்க முடியுற கணினி யுகத்துல இப்ப நாம வாழ்ந்துட்டிருக்கோம்!
ஆக, யாரையும் எதையும் உருவத்தைப் பார்த்துக் கேலி செய்யறதுக்கோ, இவனுக்கு இவ்வளவுதான் தெரியும்னு ஜட்ஜ் பண்றதுக்கோ நமக்கு யோக்கியதை உண்டா?
சுரேஷ் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமானது. அவங்க ஃபேமிலி யோடு ஏதோ ஒரு ஃபங்ஷனுக்குப் போறதுக்காக ஏஜென்ஸிக்கு போன் பண்ணி, ‘கால் டிரைவரை’ வரவழைச்சிருக்காங்க. வழக்கம்போல சுரேஷோட அப்பா முன் சீட்டுல, டிரைவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, பேச்சுக் கொடுத்துட்டே வந்திருக்கார். வேலை, படிப்பு பத்தியெல்லாம் பேசும்போது, “ஏதோ படிச்சேன், மாஸ்டர் டிகிரி முடிச்சேன்; கிடைச்ச வேலையைச் செய்துட்டு வரேன். என்னையெல்லாம் பெரிய படிப்பாளின்னு சொல்லிக்கவே முடியாது. கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு!”ன்னு சொல்லியிருக்கார்.
உடனே சிரிச்சுட்டாராம் அந்த டிரைவர். “ஏம்ப்பா, இப்ப நான் என்ன சொல்லிட் டேன்னு நீ சிரிக்கிறே?”ன்னு கேட்டதுக்கு, “இல்லே… இந்த வசனத்தை நீங்களோ, நானோ, வேறு யாருமோகூட சொல்லத் தகுதியுண்டான்னு யோசிச்சுப் பார்த்தேன்”ன்னாராம். “ஏன், தன்னடக்கமாதானே சொன்னேன்? அதுக்குமா தகுதி வேணும்?”னு சுரேஷ் அப்பா கேட்டிருக்கார்.
“கண்டிப்பா! ‘அறிவாகிய மாபெரும் கடலில் கிளிஞ்சல் பொறுக்கும் சிறுவன் நான்’னு சொன்னார் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். ‘பாராட்டுற அளவுக்கு நான் எதுவும் சாதிச்சுடலை. ஆயிரம் படத்துக்கு இசை அமைச்சாலும் (இளையராஜாவின் இசையில் ஆயிரமாவது படம் ‘தாரை தப்பட்டை’) முதல் படத்தில் எந்த இடத்தில் நின்னேனோ, அதே இடத்தில்தான் இப்போதும் நின்னுட்டிருக்கேன்’னு சொன்னார் இசைஞானி இளையராஜா. அது தன்னடக்கம். அதுக்காக, கொட்டாங்கச்சி வயலினைக் காது கிழிய வாசிச்சுட்டு வரும் குடுகுடுப்பைக்காரர், ‘இசை என்னும் கடல்ல நான் வெறுமே காலை மட்டும்தான் நனைச்சிருக்கேன்’னு சொன்னா காமெடியா இருக்குமா இல்லையா? அது மாதிரிதான் இதுவும்!”னாராம் டிரைவர்.
“புரியலையே?”ன்னு சுரேஷ் அப்பா குழம்ப, “ஐயா! கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவுன்னு சொன்னது யார்?”னு கேட்டாராம் டிரைவர். “இப்ப நான்தான் சொன்னேன்!”னு சுரேஷ் அப்பா சொல்லவும், “அதில்ல சார், இந்த வசனத்தை முதல்ல சொன்னது யார்னு கேக்கறேன்?”னு மறுபடியும் கேட்டார் டிரைவர்.
யாருக்கும் எதுவும் தெரியலை. டிரைவரே தொடர்ந்து சொன்னாராம்…
“கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்!
ஔவையார் பாடல் இது. இதுலதான் நீங்க சொன்ன வசனம் வருது. அதாவது, ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவுன்னு அந்தக் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியே நினைச்சு, இன்னமும் படிச்சுட்டிருக்காளாம்! அப்படியிருக்கிறப்போ நாமெல்லாம் எந்த மூலைங்க ஐயா?”ன்னு அந்த டிரைவர் கேட்கவும், ‘தெய்வமே, நீங்க எங்கியோ போயிட்டீங்க!’னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டாராம் சுரேஷ்.
“அப்புறம் விசாரிப்பதான் தெரிஞ்சுது, அந்த டிரைவர் ஸ்கூல் படிக்கிறப்ப நம்பர் ஒன் ஸ்டூடன்ட்டா இருந்தவராம். வறுமை காரணமா மேலே படிக்க வசதியில்லாம டிரைவர் வேலைக்கு வந்துட்டாராம். ஆனாலும், ஆர்வம் காரணமா நாலடியார், பாரதியார் பாடல்கள்னு வாங்கிப் படிச்சிருக்கார். ‘இப்பவும் படிக்கிற ஆர்வத்தை விடாம ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா கதைகளையெல்லாம் தேடித் தேடிப் படிச்சுட்டிருக்கேன்’னு அவர் சொன்னப்போ, பிரமிப்பா இருந்ததோட, அவர் மேல பெரிய மரியாதையே வந்துச்சு எனக்கு”ன்னு சுரேஷ் எழுதியிருந்ததைப் படிச்சதும், அந்த டிரைவருக்கு மானசிகமா ஒரு சல்யூட் வெச்சு வணங்கத் தோணிச்சு எனக்கு.
- இன்னும் பேசலாம்…

இளைஞர்களுக்கு கிரிக்கெட் புயல் சச்சின் டெண்டுல்கர் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…
* பாசிட்டிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். தோல்விகள் தரும் கசப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் மட்டுமே விரட்ட முடியும்! பாசிட்டிவ் சிந்தனைகள் என்னில் தோன்றியிருக்காவிட்டால், இந்த வெற்றிகளை நான் எட்டிப் பிடித்திருக்க மாட்டேன்.
* வேறு யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அவர் ஒன்றில் திறமைசாலியாக இருந்தால், நீங்கள் வேறு ஒன்றில் திறமை மிக்கவராக இருப்பீர்கள். உங்களுக்கு எதில் அதிக ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்று அறிந்து, அதில் உங்களை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.
* கிடைக்கும் வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கள்; இறுதிவரை போராடுங்கள். வெற்றிக்கான ரகசியம் இவ்வளவுதான்!
*  தீய பழக்கங்களையும் பெருமையாகக் கருதும் போக்கு ஆபத்தானது. என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், குழந்தைகள் என்பதால், அவர்களைத் தீய பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும் எந்த விளம்பரத்திலும் நான் நடிப்பதில்லை.
*  பந்தை அடிக்கும்போது அடி எவ்வளவு பலமாக விழுந்தது, பந்து எந்தத் திசையில், எவ்வளவு தூரம் ஓடும் என்பதெல்லாம் எனக்குத்தான் தெரியும். எனவேதான், பொதுவாக நான் ‘பை-ரன்னர்’ வைத்துக்கொண்டது இல்லை. நானே ஓடி ரன் எடுக்கிறேன். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் பொருந்தும். நீங்களே அடியுங்கள்; நீங்களே ஓடுங்கள்!

பரிசு யாருக்கு?
சென்ற இதழ் சவால் கேள்வி நினைவிருக்கிறதா?
அரசன் தான் கண்ட கனவைச் சொல்லி, அது தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்கிறான். தர்க்கரீதியாக அந்தக் கேள்வியே தப்பு. கனவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கெல்லாம் விளக்கம் சொல்ல இயலாது. அரசன் கண்ட கனவை நிஜமாகவே நடைமுறைப்படுத்திப் பார்த்துதான் விடை காண இயலும்.
உயிருள்ள மீனோ, உயிரற்ற மீனோ… எந்த ஒரு பொருளும் தன் பருமனுக்கு நிகரான தண்ணீரை வெளியேற்றும் என்பதே ஆர்க்கிமிடிஸ் விதி!
இந்தச் சரியான விடையை அனுப்பி இருந்தவர் களில் சேலத்தைச் சேர்ந்த ப.ரகுராமன் என்ற வாசகருக்கு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய ‘மேலே, உயரே, உச்சியிலே’ புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

சவால்!
ஒரு குறுகிய பாலம். பலவீனமான பாலம். ஒரே நேரத்தில் இரண்டு பேர் மட்டுமே அதன் வழியாகப் போக முடியும். நல்ல இருளான நேரம். ஒரே ஒரு டார்ச் லைட் உள்ளது. அதன் துணையோடுதான், பாலத்தின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்துக்கு ஒரு பெரியவர், அவரின் மகன், மருமகள், பேத்தி, பேரன் என ஐந்து பேர் கொண்ட குடும்பம் போகவேண்டும்.
பாலத்தைக் கடக்க பெரியவருக்கு 12 நிமிடம் ஆகும்; அவரின் மகனுக்கு 8 நிமிடம்; மருமகளுக்கு 6 நிமிடம்; பேத்தி 3 நிமிடத்தில் கடப்பாள்; பேரனுக்கு ஒரே ஒரு நிமிடம் போதும்!
ஒரே நேரத்தில் இருவர் கடக்கும்போது, இருவரில் யார் அதிக நேரம் எடுப்பார்களோ அதையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பெரியவரும் பேரனும் சேர்ந்து பாலத்தைக் கடப்பதாக இருந்தால், கடக்கும் நேரம் 12 நிமிடம்.
கவனத்தில் கொள்ளுங்கள்… பாலம் 30 நிமிடத்தில் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனில், எவ்வளவு குறைந்த நிமிடத்தில் மொத்தக் குடும்பமும் அந்தப் பாலத்தைக் கடக்க முடியும்? வழிமுறை என்ன?
044-6680 2923 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் குரலிலேயே உங்கள் பதிலைப் பதிவு செய்யுங்கள். அல்லது, 
98406 67184 என்ற எண்ணுக்கு மெஸேஜ் தட்டிவிடுங்கள்; அல்லது வாட்ஸப்புங்கள்! குரல் பதிவாகக்கூட வாட்ஸப்பில் அனுப்பலாம். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு.

Wednesday, November 25, 2015

வானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்!

வானிலையை கணிப்பது எளிது:ரூ.1000 செலவழித்தால் பாமரனும் 'ரமணண்' ஆகலாம்! Thanks to VIKATAN :http://www.vikatan.com/news/tamilnadu/55531-anbumoni.artவானிலையை ரமணன் மட்டுமல்ல சாதாரண பாமரனும் கணிக்கலாம் அந்த அளவுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது. இது உங்கள் மொபைல் மற்றும் கணினியில் இணையத்தில் இயங்கும் செயலி அல்ல இந்த கணிப்பு முறை .நேரடியாக செயற்கைக்கோள் வாயிலாக கிடைக்கப்பெறும் படங்களால் என்பதால் கணிப்பும் தவறாக இருக்காது.இதை பெறுவதற்கு சாதாரண கணினி அறிவு போதுமானதே.
ஆயிரம் ரூபாயில் ஒரு கருவி
RTL-SDR எனப்படும் ஒரு USB DONGLE மற்றும் ஒரு  QHF (Quadrifilar Helix Antennas) ஆன்ட்டனா இரண்டையும் இணைக்க கொஞ்சம் கேபிள் வயர் என மொத்தமே ஆயிரம் ரூபாய்க்குள் தான் செலவாகும். இந்த கருவியானது வெளிநாடுகளில்  மிகப்பிரபலம்.இது வானிலைக்கு மட்டுமல்ல உங்கள் அலுவலக கதவை தொட்டால் உங்க ஸ்மார்ட் போனுக்கு தகவலை சொல்லும் கையில் ஒரு ட்ரில் இயந்திரத்தை இயக்கினால் அதன் வேகம் என்ன? என்பதை சொல்லும் இன்னும் பல பயன்கள் குறித்தும்  ஆராய்சிகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. 
 
ஜெர்மனியில் உள்ள பேருந்துநிறுத்தங்களில் இந்த RTL-SDR கொண்டு எந்த பேருந்து எங்கு வந்து கொண்டு இருக்கிறது.இன்னும் எவ்வளவு நேரத்தில் இந்த பேருந்துநிலையத்தை அடையும் என்பதுவரை கணித்துக்கொண்டு இருக்கிறது.இதில் ஆர்.டி.எல். என்பது அந்த கருவியில் பயன்படுத்தப்படும் பிராஸசர்.  எஸ்.டி.ஆர் என்றால் software defined radio  ஆகும்.
சாதாரண ரேடியோ போல செயல்பாடு 
இப்ப வானிலைக்கு வருவோம் .பொதுவாக நீங்க ரேடியோ பயன்படுத்தி இருப்பீர்கள் ஏன் செல்போன் எப்படி வேலை செய்கிறதோஅதே தொழில்நுட்பம் தான் இது.  செல்போன் கோபுரத்தில் இருந்து வரும் ஒலிஅலைகள் எப்படி உங்கள் போன் வாயிலாக  செவிகளுக்கு கேட்க்கிறதோஅதே போல நம் பூமியை சுற்றிவரும் இந்த வானிலை செயற்கைக்கோள்கள்(WXsat)அனுப்பும் ஒலிஅலைகளை QHF ஆன்ட்டனா
ஒயர் வாயிலாக RTL SDR கருவியை அடையும் .அந்த ஒலி அலையை SDR SHARP என்ற செயலி வாயிலாக நீங்கள் நேரடியாக பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.வெறும் இரைச்சல் சத்தம் மட்டுமே கேட்க்கும். அந்த ஒலியை VIRTUAL CABLE வாயிலாக WXtoImg என்ற செயலிஒலியை நேரடியாக படமாக மாற்றித்தரும். WX என்பது WEATHER FAX என்பதை குறிக்கும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் லியோசர் செயற்கைக்கோள்களை (Low-Earth Orbiting Search And Rescue)அனுப்பியுள்ளனர்.
இந்த லியோசர் என்றால் பூமியை சுற்றிகொண்டே இருக்கும் செயற்கைக்கோள் அதனால் உலகின் எந்த ஒரு நாட்டின் வானிலையையும் இதன் மூலம் அறியலாம்.Gpredict என்ற செயலி உதவியோட இந்த நொடியில் செயற்கைக்கோள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்த்து தரவுகளை பெறலாம்.NOAA,Meteor,போன்றவை பிரபலமான லியோசர் வானிலை செயற்கைக்கோள்கள். இந்த செயற்கைக்கோள்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அலைவரிசை எண் தகவல்கள்
NOAA 15 – 137.6200 MHz
NOAA 18 – 137.9125 MHz
NOAA 19 – 137.1000 MHz
Meteor - 137.100 or 137.900 MHz
இந்தியாவில் கல்பனா 1,இன்சாட் 3D போன்ற ஜியோசர் செயற்கைக்கோள்கள். (Geostationary Earth Orbit Search And Rescue)ஜியோசர் என்றால் பூமி எந்த வேகத்தில் சுற்றுகிறதோ அதே வேகத்தில் இந்த செயற்கைக்கோள்களும் சுற்றும் அதனால்இந்த நொடி நம் நாட்டின் வானிலைவானிலை நிலை என்ன? என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியும். இவை வானிலை ஆய்வு மையம் மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களுக்கு அனுமதி கிடையாது.
சென்னை பள்ளிகரணையில் செயல்பட்டுவரும்  தென் இந்திய தன்னார்வ வானொலி சமூகம் (Siars) இது குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் சில பேராசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 
-கவின்

Thursday, September 17, 2015

வாகனக் கட்டணமா? வழிப்பறியா? டோல்கேட் தில்லுமுல்லுகள்! ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி




THANKS TO JUNIOR VIKATAN : 20-SEP-2015வாகனக் கட்டணமா? வழிப்பறியா?
டோல்கேட் தில்லுமுல்லுகள்!ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி
நாம் எந்த ஊருக்குப் பயணிப்பதாக இருந்தாலும், டோல்கேட் தாண்டியே செல்லவேண்டிய சூழலில் இருக்கிறோம். காரில் பயணிப்பதாக இருந்தாலும், பேருந்தில் போவதாக இருந்தாலும், நேரடியாக அல்லது மறைமுகமாக டோல்கேட் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும். உதாரணமாக, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல தனியார் பேருந்துக் கட்டணம் 600 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், அதில் 117 ரூபாய் டோல்கேட் சாலைகளுக்கான கட்டணமாக இருக்கிறது. தனியார் பேருந்துகளில் 30 சதவிகித கட்டண உயர்வு, டோல்கேட் கட்டண சாலைகளினால்தான்.
டோல்கேட் கட்டணம் என்பது, நாம் பயணிக்கும் சாலையின் பயன்பாட்டுக் கட்டணத்துடன், அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகளுக்குமான(!) வரியும் அடங்கும். என்ன கொடுமை என்றால், எந்த வாகனமாக இருந்தாலும் அது வாங்கப்படும்போதே, அதற்கான சாலை வரி கட்டப்பட்டுவிடுகிறது. அத்துடன், நாம் செலவழிக்கும் எரிபொருள் கட்டணத்தில் ஒவ்வொரு லிட்டருக்கும் குறிப்பிட்ட பகுதி சாலை வரிக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நாம் பயணிக்கும்போது, குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது. இந்தக் ‘குறிப்பிட்ட’ என்பதுகூட இடத்துக்கு இடம் கி.மீ., மாறுபடும். இதற்கு, அடிப்படை சாலைகள் அமைக்கவே அந்த வரித்தொகை போதுமானதாக இருக்கிறது; அதனால்தான் நெடுஞ்சாலைகளில் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அரசு காரணம் சொல்கிறது.
காலாவதியான உரிமம்
அந்தத் தொகையிலும் எந்த நிறுவனம் சாலை அமைக்கும் பணியைச் செய்கிறதோ அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சாலை அமைக்க செலவு செய்த தொகை, அதற்கான வட்டி, பராமரிப்புத் தொகை, முதலீடு  என வசூலிக்கும் பணத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும் உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமம் முடிந்து இன்னமும் குறிப்பிட்ட ஆண்டுகளைக் கடந்த பிறகும் பல இடங்களில் வசூல் நடந்து வருகிறது.
இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. இந்த டோல்கேட்களைக் கடந்துசெல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது டோல் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்கள் அதைக் கடைப்பிடிப்பது இல்லை. மத்திய அரசை ஏமாற்றி தங்களுடைய லாபக்கணக்கை முற்றிலுமாக மறைத்துவிட்டு நஷ்டத்தைக் காண்பிக்கிறார்கள். நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இந்தக் கட்டண உயர்வு அனுமதியைப் பெற்றுள்ளனர்.
 ஒரு டோல்கேட்டில் இருந்து மற்றொரு டோல்கேட்டுக்கு 60 கி.மீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சியில் இருந்து 10 கி.மீ தூரம் தள்ளித்தான் டோல் பூத் அமைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் சாலைகள் தோண்டப்பட்டுப் புதிய சாலைகள் போட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் எதையும், நெடுஞ்சாலை ஆணையமோ, குத்தகை எடுத்த நிறுவனங்களோ பின்பற்றுவது இல்லை.
வசூலை நிறுத்து...
பல நாடுகளில் டோல் சாலைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அந்த சாலைகளைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மற்ற மாநிலங்களைவிட கட்டணம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் 373 டோல்கேட் சாலைகள் இருக்கின்றன. அவற்றில் 41 சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தனியார் வசம் 29 சுங்கச்சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 12 சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. சராசரியாக ஒரு டோல்கேட்டில் ஒரு நாளைக்கு 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அடிக்கடி உயரும் எரிபொருள் விலை மட்டும் காரணம் இல்லை. மறைமுகமான டோல் கட்டணமும் அதற்கு ஒரு காரணம்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காருக்கு ரூ.710, லாரிக்கு ரூ.2,520 என்றும், சென்னையில் இருந்து திருச்சி வரை காருக்கு ரூ.310, லாரிக்கு ரூ.1,160 என்றும், சென்னையில் இருந்து கோவை வரை காருக்கு ரூ.474, லாரிக்கு ரூ.1,715 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாரிகளுக்கு ஆரம்பகாலத்தில் கிலோ மீட்டருக்கு 40 பைசா என்ற அளவில் இருந்த கட்டணத்தொகை இன்று இரண்டு ரூபாயைத் தாண்டுகிறது. இதனால்தான், பொதுமக்களின் தலையில் பொருட்களின் விலையேற்றமாக வந்துவிழுகிறது. காய்கறிகளின் விலை ஊருக்கு ஊர் வேறுபட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
விலை உயர்வுக்குக் காரணம்...
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் 1992-ம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதியும், 2008-ம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தச் சுங்கச்சாவடிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவிகிதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2008-ம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தச் சுங்கச்சாவடிகளில் 5 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் 3 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகம். மொத்த குறியீட்டு வேறுபாடு என்று மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சிமென்ட், பால் போன்ற 300 வகையான பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துக்கு தகுந்தவாறு அந்த வகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 40 சதவிகிதம் வரை கட்டண மாற்றம் இருக்கும். இதனால் அந்தப் பொருட்களுக்கான விலையிலும் மாற்றம் இருக்கும்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் கட்டணத் தொகையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 22 டோல்கேட்களில் எட்டு ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படும். ஆனால், குறைக்கும்போது ஒரு ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும். மதுரை, சேலம் மாவட்டங்களில் எல்லா பக்கமும் டோல்கேட்கள் இருக்கின்றன. டோல்கேட்டில் கழிப்பிடம், ஓய்வறை, தொலைபேசி, மருத்துவ வசதிகள் ஆகியவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், எத்தனை டோல்கேட் சாலைகளில் இந்த வசதிகள் உள்ளன?
மல்லுக்கட்டும் மதுரை
2012-ம் ஆண்டு திருமங்கலம் அருகே கப்பலூரில் நான்கு வழிச்சாலைக்கான டோல்பிளாசா அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டதில் இருந்து திருமங்கலம், பேரையூர், கல்லுப்பட்டி பகுதி மக்கள் பெரும்துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். விருதுநகரை நோக்கிச் செல்லும் நான்கு வழிச்சாலையைத் தாண்டி, ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது ஆரம்ப காலத்திலிருந்து உபயோகத்திலிருக்கும் சாலையாகும். இதனால் தென்காசி செங்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் போன்ற ஊர்களுக்கு வழக்கமான தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறவர்களும் டோல்கேட்டில் கட்டாயக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்கள்கூட அதனைத் தாண்டிச் செல்ல கட்டணம் கட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனால், சுங்கச்சாவடியை ஒட்டி 20 கி.மீ., சுற்றளவில் வசிப்பவர்கள் மாத சந்தா கட்டி பாஸ் வாங்கிக் கொள்ளலாம் என்கிற சலுகை குறித்து மக்களிடம் அதிக அளவில் விழிப்பு உணர்வு இல்லை. அதுபோல சில இடங்களில் 30 கி.மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே அடுத்த டோல்கேட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவர், வாகனக் கட்டணம் செலுத்தவில்லை என மறித்தனர். மாற்றுத்திறனாளிகளின் வாகனத்துக்குக் கட்டண விலக்கு உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எந்த அரசு உத்தரவையும் மதிக்காமல் அந்த நபரை அலைக்கழித்தார்கள்.
தொடரும் போராட்டம்...
மதுரை கப்பலூருக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களும் திருமங்கலத்தில் வசிப்பவர்களும் கட்டணம் கட்ட வற்புறுத்தப்பட்டார்கள். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஊர்மக்கள் திரண்டு டோல்கேட்டுக்கு எதிராக முற்றுகையிட்ட சம்பவங்களும் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை மதிக்காமல் டோல்கேட் ஊழியர்கள் உள்ளூர் மக்களிடம் கட்டணம் கேட்டு தினந்தோறும் தகராறு செய்து வருகின்றனர். காவல் துறையோ உள்ளூர் மக்கள் மீதே வழக்குப் போடுகிறது. உள்ளூர் மக்களிடம் சண்டை போட்ட ஊழியர்களே நியாயமான ஊதியம் வழங்கவில்லை என்று ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். அன்று மட்டும் எந்த வாகனத்துக்கும் கட்டணம் வாங்காமல் திறந்துவிட்டனர். அந்த ஐந்து மணி நேர போராட்டத்தால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின் சமாதானமானார்கள். அப்படி இருந்தபோதிலும் ஊர் மக்களுக்கும் இவர்களுக்குமான சண்டை தொடர்ந்துகொண்டேதான் உள்ளது.

Friday, September 11, 2015

விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் மூன்றுக்கும் மூன்று நிலை

http://rkthapovanam.blogspot.no/2012/02/blog-post.html

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர், ஸ்ரீமத் பகவத்கீதை வியாக்யானத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன parables உவமைக் கதைகளை ஒவ்வொரு சுலோகத்திற்கும் பொருத்தமாக உபயோகப்படுத்தியிருப்பார். குருமகராஜ்(பரமஹம்ஸர்) எப்படி உவமைக் கதைகளைச் சொல்லி வந்தாரோ அதேபோல் பொருத்தமான கதைகளைச் சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவர் சுவாமிஜி. விசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் மூன்றுக்கும் மூன்று நிலைகளைச் சொன்னவர் பெரிய சுவாமிஜி.  ஒவ்வொரு துறையிலும் அத்வைத நிலைக்கு வரும் வரையிலும் ஆனந்தம் கிடையாது. ஐக்கியப்படுத்திக் கொண்ட பின்புதான் முழுமையான ஆனந்தம் கிடைக்கும். இதற்கு சுவாமிஜி சொல்லும் கதை:-
வழிப்போக்கன் ஒருவன் சாப்பாடு கட்டிக்கொண்டு போகிறான். அப்போது அவன் வேறு உணவு வேறு; அது த்வைதம்.
பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து உணவைச் சாப்பிடுகிறான். இப்போது உணவு அவனுக்குள் இருக்கிறது; ஜீரணமாகி அவன்மயம் ஆகவில்லை எனினும் அவனுக்குள் இருக்கிறது; இது விசிஷ்டாத்வைதம்.
உணவு ஜீரணமாகி அவனோடு கலந்துவிடுகிறது; இது அத்வைதம்.
இப்படி சுவாமி விவேகானந்தரின் அறிவுமிக்க போக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் எளிமையான உவமைக்கதை வழியாக சுவாமி சித்பவானந்தர் அரிய உண்மைகளை விளக்கியுள்ளார்.
தமிழே தெரியாத என்னைத் தமிழிலே பேசச் சொல்லி, அன்பினை என்மேலே வாரிக்கொட்டி, என்னை பல புத்தகங்கள் எழுதவைத்து, என் மூலமாக அந்தர்யோகங்கள் நடத்துவதற்கும் வாய்ப்பு கொடுத்து, ஆனந்தமாக இருக்கச் சொல்லிய மகானுக்கு சிரத்தாஞ்சலி.
-டாக்டர். கே. சுப்பிரமணியம்,
முன்னாள் முதல்வர்,
ஸ்ரீ விவேகானந்த கல்லூரி,
திருவேடகம்.

Wednesday, September 9, 2015

உங்கள் தலைவர்களிடம் '9C' இருக்கிறதா?- நன்றி : விகடன்

http://www.vikatan.com/news/article.php?aid=52135


நன்றி : விகடன் வாசகர் பக்கம் நீங்களும் எழுதலாம்
உங்கள் தலைவர்களிடம் '9C' இருக்கிறதா?
பிரபல வேளாண்மை நிபுணர்களான லீ அயு கோக்கா மற்றும் தேரின் விட்னி ஆகிய இருவரும் இணைந்து 'Where Have all the leaders gone?' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டனர். இந்தப் புத்தகம் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நாட்டு மக்களின் கவனத்தையும் பெற்றது.

தலைமை இல்லாமல் எந்த ஒரு நாடும் கிடையாது. தலைவர்கள் இல்லாமல் எந்த ஒரு நிர்வாகமும் இல்லை. தலைவர்கள் இல்லாமல் எந்த ஒரு அணியும் கிடையாது. அந்தளவுக்கு தலைமை என்பது மிக முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தொண்டர்களும் சரியாக இருப்பார்கள் என்பார்கள். தலைவரின் செயல்பாடுகளைப் பொருத்தே தொண்டர்களின் மனநிலையில் முன்னேற்றம் வரும். ஒரு சிறந்த தலைவர் என்பவர் யார்? அவரின் குண நலன்கள் எப்படி இருக்கும்? அவரிடம் உள்ள பண்புகள் என்ன? என்று பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஆராய்கிறது இந்நூல்.

அதோடு, ஒரு சிறந்த தலைவரிடம் இருக்க வேண்டிய குண நலன்கள் பற்றியும், தனித்தன்மைகள் பற்றியும் விரிவாக அலசுகிறது. இதில், குறிப்பாக ஒன்பது விதமான ‘C’க்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்கள் எழுத்தாளர்கள். இந்தத் தன்மைகள் இருக்கும்பட்சத்தில் ஒருவரால் சிறந்த தலைவராக திகழ முடியும் என்று அடையாளப்படுத்துகின்றார்கள். அது, சிலரிடம் மட்டும்தான் இயற்கையாகவே இருக்கும். தலைவராக விரும்பும் ஒவ்வொருவரும் தாங்களாகவே அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்கள்.

அந்த ஒன்பது விதமான ‘சி’க்கள் என்ன என்பதுப்பற்றி பார்ப்போம்.

http://img.vikatan.com/news/2015/09/08/images/leaders350.jpg1. CURIOSITY (ஆர்வம்)

2. CREATIVE (
படைப்பாற்றல்)

3. COMMUNICATE (
தொடர்பு)

4. CHARACTER (
குணம்)

5. COURAGE (
தைரியம்)

6. CONVICTION (
உறுதி)

7. CHARISMA (
கவர்ந்திழுக்கும் தன்மை)

8. COMPETENT (
சமாளிக்கும் தன்மை)

9. COMMON SENSE (
பொது அறிவு)

இந்த விஷயங்களையெல்லாம் ஒருவர் தன்னிடம் வளர்த்துக் கொள்ளும் போது, அவரும் ஒரு சிறந்த தலைவராக சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்படுவார். இன்றைய சமூகத்தில் உள்ள இளைஞர்கள்,  தலைவர்களெல்லாம் இயற்கையாகவே பிறக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தலைவர்கள் பிறக்கப்படுவதில்லை; உருவாக்கப்படுகின்றார்கள்.

தலைவர்களின் பணி வெறும் மேசையில் உட்கார்ந்து கொண்டு உரை நிகழ்த்துவது மட்டுமில்லை, அவர்கள் போர்க்களங்களுக்கும் செல்வார்கள். தங்களுடைய குடும்பத்தை அங்கு அனுப்ப வேண்டிய சூழல் வந்தாலும் அதையும் செய்வார்கள். அதோடு மட்டுமல்லாமல், தான் மடிந்து விட்டால், அதன்பிறகு வழிநடத்த அடுத்த தலைமையையும் உருவாக்கி வைத்திருப்பார்கள். அவர் வெற்றியை நோக்கி வழி நடத்துவார்.

ஆப்ரகாம் லிங்கன் ஒருமுறை கூறும்போது, “நீங்கள் ஒருவரை சோதிக்க வேண்டும் என்றால், அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்து பார்க்க வேண்டும்” என்கின்றார். அதனால், நீங்களும் உங்களை தலைவராக அறிந்து கொள்ள இந்தப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

- சலீம்


Sunday, August 23, 2015

வழக்கறிஞராக மாறி எஸ்பிஐ வங்கியிடம் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!-நன்றி விகடன்


http://www.vikatan.com/news/article.php?aid=51390


டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.

ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.

தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
கிருத்திகா மாடசாமி