Tuesday, June 23, 2015

வாடகை பாக்கி செலுத்த ஜூலை 10 வரை கெடு-நன்றி தினமலர்


"நான் என்னத்த சொல்றது.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனாளாம் அங்க நாலு கொடுமை வந்து ஆடுச்சாம" என்கிற சொலவடைக்கு பொருந்துவது போலே... என் வாடகைய வசூலிச்சு தாங்க சாமின்னு கோர்டுக்கு போனா அங்க கோர்ட்டே வக்கீலுங்ககிட்ட பாக்கி வசூலிக்கலயாம் படிங்க இந்த செய்திய

Advertisement
சென்னை : வழக்கறிஞர்கள் அறைக்கான வாடகை பாக்கி செலுத்த, ஜூலை, 10ம் தேதி வரை, உயர் நீதிமன்ற நிர்வாகம் கெடு விதித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கான அறைகள், 500க்கும் மேல் உள்ளன. அறைகளுக்கான வாடகையை, உயர் நீதிமன்ற பதிவு துறையில், வழக்கறிஞர்கள் செலுத்த வேண்டும்.அறையின் அளவைப் பொறுத்து, வழக்கறிஞர்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒரு வழக்கறிஞருக்கு, மாத கட்டணம் என பார்த்தால், 250 ரூபாய் அளவுக்கு வரும்.அறைகளுக்கான வாடகையை, வழக்கறிஞர்கள் பலர் செலுத்தாமல் உள்ளனர். வாடகையை செலுத்தும்படி, அவ்வப்போது, பதிவு துறையும், வழக்கறிஞர்களை அறிவுறுத்தி வருகிறது.தற்போது, 3,000 ரூபாய்க்கு மேல், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை, வழக்குப் பட்டியலில், பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், உயர் நீதிமன்றத்தில் உள்ள, பிரபலமான வழக்கறிஞர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.வாடகை கட்டணத்தை, ஜூலை, 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், 'நோட்டீஸ்' கொடுக்காமல், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என, பதிவுத் துறை எச்சரித்துள்ளது.

அதிகரித்த ஏடிஎம் கட்டணம். (என்றோ நான் எழுதியது)

அதிகரித்த ஏடிஎம் கட்டணம்.

நண்பர்களே இது அநியாயம் ... RBI மக்களுக்கு இழைக்கும் அநீதி. இதனை எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.  எப்படி?.. வங்கியில் கவுன்டரில் பணம் எடுப்பதற்கு ஒன்றும் தடை இல்லை. அதிலும் எவ்வளவு என்று நிர்ணயம் இல்லை. எனவே எல்லாரும் ஏதேனும் ஒரு நாளில் ஒன்று கூடி வரிசையில் நின்று ருபாய் நூறு எடுக்க வேண்டும். இப்படி செய்வதனால் வங்கிகளுக்கு புரியும் ATM மூலமாக எவ்வளவு சேமிப்பு என்று..   சரி ஆர் பி ஐ முடிவில் எனக்கு ஏன் இந்த ஆதங்கம் என்று கேட்கிறார்கள? கொஞ்சம் கீழே படியுங்கள். 

1. எல்லா நிறுவனங்களுமே தங்களுடைய ஊழியர்களுக்கான மாதந்திர சம்பளத்தை வங்கி மூலமாக கொடுக்க துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதிலும் ஒரு கொடுமை அந்த நிறுவனம் சொல்லும் வங்கியின் ஒரு குறிப்பிட்ட வங்கி கிளையில் மட்டுமேய்ய்ய்யி நமது கணக்கு துவங்கப்படும். அவர்கள் ஏ டி எம் அட்டை கொடுப்பார்கள். இது சவுகரியம் தான்.. ஆஆனால் நம்முடைய சண்முகம் அண்ணாச்சி வாங்கும் சம்பளம் ரூ 10,000... கூலிக்கு வேலை செய்யும் கழிவறை சுத்தம் செய்பவர். அவாரலே எல்லா தொகையும் ஒரே நாளில் எடுத்து கையில் வைத்துகொள்ள முடியுமா. அவர் இரண்டு நாளுக்கு ஒரு முறை ரூ 100 ரூ 200 ரூ  500 எடுக்கும் வசதியினால் மட்டுமே கொஞ்சமாவது பணம் சேர்க்கிறார். கையில் காசு இருந்தால் செலவாகிவிடும். இனி அவர் பிழைப்பில் மண் போடுவார்களோ ?

2. பெரும்பாலான ....ஆஆம் பெரும்பா....லான வங்கிகள் தங்களுடைய ஏ டி எம் மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை.  பாதி நேரம் கனெக்டிவிட்டி பிரச்சினை.. மீதி நேரம் பணம் இருக்காது.. அப்படியே இருந்தாலும் அதில் சரியான டினாமிநேஷன் இருக்காது.. என்னுடைய அனுபவம் ஒரிஎண்டல் பேங்க்  டவுன் ஹால் ரோடு மதுரை. சரி பக்கத்தில் வேறு ஒரு பாங்கின் ATM இருக்கிறது என்று எடுத்தால் ...அய்யோடா அதுக்கு ஒரு சார்ஜ் போடுவாங்க. இல்லையா அதே வங்கியின் இன்னொரு இடம் தேடி ஓட வேண்டும். அதுக்கு ஆட்டோ அல்லது வேறு வகையில் ருபாய் 50 செலவழிக்க வேண்டும். அவசரத்துக்கு வேற வழி தண்டம் அழ வேண்டும். (அப்பவே சொன்னேனே கேட்டியா என்று மைவியிடம் ஒரு இடி வேறு) இன்னொரு உதாரணம் இந்தியன் பேங்க்-மதுரையின் பெரும்பாலான கிளைகள். 

3. மேலே சொன்ன வகையில் (எண் 1).. என்னுடைய நிறுவனம் தனது தலைமை அலுவலகம் டில்லியில் இருப்பதால் தனக்கு வசதியாக எல்லா ஊழியர்களுக்கும் அங்கே இருக்கும் ஒரு வங்கி கணக்கில் ஆரம்பிக்க வற்புறுத்துகிறது .. ஆனால் அந்த வங்கிக்கு சென்னை தவிர வேறு எங்கும் ATM கிடையாது.. இந்த நிலையில் என் நிலைமை ஒவ்வூர் மாதமும் தனியாக என்னுடைய பட்ஜெட்டில் ரூ ௨௦௦ எடுத்து வைக்க வேண்டும்..

4. வங்கிகளின் பெரும்பாலான ATM மையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை .. வழுக்கும் படிக்கட்டுகள்.. நாற்றம் பிடித்த உள்அறைகள் .. பாதுகப்பற்ற முறையில் தளம் ..காவலர் இல்லாத நிலை.. அப்படியே இருந்தாலும் ஒரு திடமற்ற ஒப்புக்கு ஒரு 60 வயது அப்பாவி .. அவருக்கான பணி என்ன தெரியுமா? சார் பணமில்லீங்க வேற ATM பாருங்க என்று சொல்வது.. என்னுடைய அனுபவம் ஒரியன்டல் பேங்க் டவுன் ஹால் ரோடு மதுரை.. 

5. முறையான கையேடுகள் இல்லாதது .. உதாரணமாக நீங்கள் சென்னை நங்கநல்லூர் செல்கிறீர்கள் அங்கே நீங்கள் தில்லை கங்கா நகர் செல்கிறீர்கள் AXIS பேங்க் atm எங்கேங்க இருக்கு என்ற ஒவ்வொரு நண்பரிடமும் கேட்க வேண்டும்.. சோதனை நம்ம நண்பரின் வீடு கொல்லைப்பக்கம் தான் இருக்கும்.. ஆனாலும் விதி நம்மை விடாது மேலே சொன்ன வகையில் அங்கே பணம் எடுக்க விடாமல் சதி செய்யும். வேறென்ன அதுக்கு ஒரு சார்ஜ் போடுவார்கள் 

6. இதில் இன்னொரு கொடுமை .. ICICI மாதிரியான சில வங்கிகள் இரண்டு அல்லது மூன்று மெஷின் வைத்திருப்பார்கள்.. ஒன்று ரூ 5௦௦௦ க்கு கீழே எடுப்பதற்கு இன்னொன்று அதுக்கு மேலே ஆனால் வேகமான முறையில் எடுப்பதற்கென்று ஸ்டாண்டர்ட் தொகைகளில் .. இன்னொன்று நீங்கள் கேட்கும் முறையில் ஆனால் ரூ 5௦௦௦ க்கும் மேலே எடுப்பதற்கு .. நம்ம ஷனுமகம் அண்ணாச்சிக்கு என்ன தெரியும்.. அவரும் ஒவ்வொன்றாக போட்டு பார்பார்.. பாவம் அவருக்கு தேவை ரூ ௨௦௦ மட்டுமே .. விதி அவரை விடாது போலே இன்னிமே அதுக்கும் இப்படி எதாவது சார்ஜ் போடுவாங்களோ. 

7.  நம்மளை எல்லாம் விடுங்க.. சில பென்ஷேன் வாங்கும் பெரியோர்களின் கொடுமை சொல்லில் மாளாது.. அவர்களின் அப்போ அப்போ தேவை என மருந்து மாத்திரை செலவளுகளுக்கு பணம் எடுத்தால் அதோ கதி.. அவர்களுடைய ஒரு வேளை டிபன் காசு கானாமாக போகும். 

இன்னும் ஒரு பத்து பாயிண்டு சொல்ல முடியும் .. ஆனாலும் ஒங்க இலகுவான மனசை புண் படுத்த மனசு வல்ல 

இப்போ சொல்லுங்க நண்பர்களே என்னுடைய ஆதங்கம் நியாயமா இல்லையான்னு .. சொன்னால் பத்தாது இதை எல்லோருக்கும் சொல்லுங்க .. ஒரு தேதிய குறிங்க.. போராடுவோம். புரிய வெப்போம் நம்ம அவஸ்தைய..

எஸ் ரமணன் 
11-Nov-2014

கட்டாய ஹெல்மெட் உத்தரவில் விதி விலக்கு வருமா - நன்றி தினமலர்

கட்டாய 'ஹெல்மெட்' உத்தரவில் விதிவிலக்கு வருமா?
நன்றி : தினமலர் 23 Jun 2015

'இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், ஜூலை 1 முதல், கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவின் எதிரொலியே இந்த அறிவிப்பு.இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. 
'எக்ஸ்ட்ரா லக்கேஜ்':

இனிமேல் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும், 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' ஆக, கூடுதலாக ஒரு, ஹெல்மெட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், மனைவி, உறவினர், நண்பர் என, யாரையும் பின் இருக்கையில் அமர்த்த முடியாது.மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 129ல், இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பயணிப்பவர், பாதுகாப்பு தலைக்கவசம் - 'ஹெல்மெட்' அணிய வேண்டும். அந்த தலைக்கவசம், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்துள்ள தரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த பிரிவு, அதாவது, கட்டாய தலைக்கவசம் அணிவது, சீக்கியர்களுக்கு பொருந்தாது. மாநில அரசு விரும்பினால், விதிவிலக்கு அளிக்கலாம் எனவும், சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.தமிழக அரசைப் பொறுத்தவரை, விதிவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

வாகன ஓட்டிகளுக்கு, இன்னும் ஒரு பிரச்னை உள்ளது. வாகனத்தை ஓட்டுபவர், ஹெல்மெட் அணிந்து, பின்னால் உட்கார்ந்திருப்பவர் அணியவில்லை என்றால், ஆணவங்கள் பறிமுதல் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது.ஆவணங்கள் பறிமுதல் செய்வது என்பது, வாகனத்தை முடக்கி வைப்பது போல் தான். ஏனென்றால், ஓட்டுனர் உரிமம், வாகன ஆவணங்கள் இல்லாமல், வாகனத்தை ஓட்ட முடியாது. அப்படி ஓட்டினால், அது, சட்டப்படி குற்றம். அதனால், இந்த குற்றத்துக்காக, போலீசார் நடவடிக்கை எடுக்க முடியும்.எந்தெந்த குற்றங்களுக்காக,
ஆவணங்களை முடக்கி வைக்க போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை, மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 206 விளக்குகிறது. 
ஆவணங்களை முடக்கலாம்...:

இந்தப் பிரிவில், ஹெல்மெட் அணியாததற்காக, ஆவணங்களை முடக்கலாம் என, கூறப்படவில்லை.ஹெல்மெட் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்க தான், சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக தவறு செய்தால், 100 ரூபாய், தொடர்ந்து செய்தால், ஒவ்வொரு முறையும், 300 ரூபாய், அபராதம் விதிக்கலாம்.ஹெல்மெட் அணியாததால், 10 ஆண்டுகளில் ஏற்பட்ட உயிரிழப்பு, 1,670ல் இருந்து, 6,419 ஆக உயர்ந்துள்ளது. 'இந்த அசாதாரண சூழ்நிலையால் தான், சட்டத்துக்கு அப்பாற்பட்டு, உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை உள்ளது' என, நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

அதற்கு முன்னுதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த,பிரிதிபால் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, நீதிபதி கிருபாகரன் மேற்கோள் காட்டியுள்ளார்.ஆவணங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடுவதன் நோக்கம், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்காக தான் எனவும், நீதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். அதேநேரத்தில், 'நீதிமன்ற உத்தரவு மூலம், வாகன ஓட்டிகளை தேவையின்றி இடையூறு செய்யக் கூடாது' என, போலீசாருக்கும் அறிவுறுத்தி உள்ளார்.
உற்பத்தியாளர்கள் பொறுப்பு!

மோட்டார் வாகன விதிகளின்படி, வாகன உற்பத்தியாளர்கள், ஹெல்மெட் வழங்க வேண்டும். இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, வாகன உற்பத்தியாளர்கள், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்துள்ளபடி, ஹெல்மெட் வழங்க வேண்டும்.விதிகளில் இது இடம் பெற்றிருந்தாலும், வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்கள், இதை அமல்படுத்துவதில்லை. எனவே, வாகன உற்பத்தியாளர்கள், இதை கண்டிப்புடன் அமல்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கேரளாவிலும் இதே பிரச்னை!

கேரள மாநிலத்திலும், மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தும் விதமாக, வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிய வேண்டும் என, அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அந்த உத்தரவில், 'வாகன ஓட்டிகள், பயணிப்பவர்கள் அணியும், ஹெல்மெட், ஐ.எஸ்.ஐ., தரத்தில் இருக்க வேண்டும்' என, கூறப்பட்டது. அதை எதிர்த்து, கேரளா ஆட்டோ டூ வீலர் சங்கம், மேல்முறையீடு செய்தது.மனுவை, நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், சங்கரசுப்பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மோட்டார் வாகன சட்டப் பிரிவு, 129ல், கொண்டு வரப்பட்ட திருத்தம் குறித்து, தனி நீதிபதியின் கவனத்துக்கு, மனுதாரரோ, மாநில அரசோ, கொண்டு வரவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை பார்க்கும் போது, கேரள மோட்டார் வாகன விதிகளை அமல்படுத்துவது போலாகும். அந்த விதியில், 'ஐ.எஸ்.ஐ., தரம் உடைய ஹெல்மெட் அணிய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த விதியை, அமல்படுத்த முடியாது. ஏனென்றால், பிரிவு 129ல், திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டது. அதன்படி, ஹெல்மெட் குறித்து, 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' அமைப்பு நிர்ணயித்த தரத்தை தான், கேரள அரசு பின்பற்ற வேண்டும். பிரிவு, 129ல் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை கவனிக்காமல், வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவில் குறுக்கிடுவதை தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை.தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்கிறோம். மனுவை தள்ளுபடி செய்வதால், 'பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' நிர்ணயித்த தரத்தை, கேரள அரசு அமல்படுத்துவதில் இந்த உத்தரவு குறுக்கே நிற்காது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, 2000, ஜனவரியில் பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்றவர்.

-
நமது நிருபர் -


Thursday, June 4, 2015

டோல்கேட்' ( Toll gate) என்னும் தனியார் சுங்க சாவடி மையங்கள்-நன்றி விகடன்

ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு சுங்கச் சாவடி!
'எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை 'எனச் சொல்ல முடியாமல் இருக்கும் ஒரு அமைப்பு என்றால் அது ; டோல்கேட்' ( Toll gate) என்னும் தனியார் சுங்க சாவடி  மையங்கள்தான். கோடிக்கால் பூதம் போல் இந்த வழியா வந்தாலும் டோல்கேட், அந்த வழியாக வந்தாலும், குறைந்த அளவு தூரத்திலும் டோல்கேட் . இதில் 'NEXT  TOLL PLAZA 500 METERS 'என மிரட்டும் எச்சரிக்கை பலகை வேறு. 

ஒருவேளை நம் நேரத்தையும் பணத்தையும் சாவடிப்பதால் இப்படி 'சாவடி' என பேர் வந்ததோ? எனத் தெரிய வில்லை. 

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தங்க நாற்கரச்சாலைத் திட்டத்தை அமைக்க முற்பட்ட வாஜ்பாய்   தலைமையிலான  பா.ஜ.க. அரசு, நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் செயல்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது. சாலைகளை நேர்படுத்தி, விரிவுபடுத்துவதற்கான செலவை ஈடுகட்டிக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாவடி அமைத்தது.சாலைகள் சிறப்புற அமைந்ததால்தான் இன்று எளிதில் பயணிக்க முடிகிறது. நேரம் மிச்சமாகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. வாகன பழுது குறைவாகிறது.

இப்படியாக  ‘கட்டு, சொந்த மாக்கிக்கொள், செயற்படுத்து (பின்னர் அரசிடம்) திருப்பிக்கொடு' என்ற முறை யில் சாலைப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப்படுத்தியது. சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப்பட்டது. 

ஆனால், 15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும், அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிட பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன தனியார் நிறுவனங்கள். 

சுங்கச் சாவடி மையங்களுக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு மேலும் நீட்டித்துக் கொண்டு போவது நியாயமில்லை.  இந்த  தனியார் நிறுவனங்கள், அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்து வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
 
பாண்டிச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியே  சென்னை செல்லும் 145 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 சுங்க சாவடிகள் உள்ளன. சென்னையிலிருந்து பெங்களுரூக்கு கிருஷ்ணகிரி வழியாக வாகனத்தில் 350 கிலோ மீட்டர் செல்வோர் ஒன்பது சுங்கச் சாவடிகளில் கிட்டத்தட்ட ஒருவழிப்பயணத்துக்கு மட்டும் சுமார் 270 ரூபாய் சுங்கம் அழ வேண்டியுள்ளது.
''அரசு அனுமதி  கொடுத்திருக்கிறது .நாங்கள் வாங்குகிறோம். இந்தா சீட்டு. கொடு துட்டு .இடத்தைவிட்டு நகரு..!" என tollgate நிர்வாகிகள் சொல்வது  சரியாக இருந்தாலும், வழி செல்ல பயன்படும் சாலைகளை உருவாக்கிய நிறுவனங்கள் இப்படி வழிப்பறி போல் செயல் படக்கூடாது. 

இந்த பிரச்னை பல மாநிலங்களில் அவ்வப்போது வெடிக்கிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சி தோல்விக்கு இந்த சுங்கச் சாவடி வசூலும் ஒரு காரணம். சென்ற வருடம் மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இருந்த சுங்கச் சாவடிகளை எம்.என்.எஸ் கட்சியினர் அடித்து நொறுக்கினர். இது பெரும் பிரச்னையாக மகாராஷ்டிர தேர்தலில் உருவெடுத்து பாஜக ஆட்சி அமைய  காரணமாகி விட்டது. மகாராஷ்டிரத்தில்  பாஜக ஆட்சி  அமைந்த பின் இப்போது ஜூன் 1 முதல் மாநிலத்தில் முதல்கட்டமாக 12 சுங்கச்சாவடிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர மற்ற 53 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், அரசுப் பேருந்து ஆகிய வாகனங்கள் சுங்க வரி செலுத்தாமல் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இதை பின்பற்றி மத்திய பாஜக  அரசும் மற்ற மாநில அரசுகளும் சுங்கச்சாவடிகளை பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும்.
“நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை” என்று பராசக்தி வசனம் போல் அனைத்து சுங்க சாவடிகளையும் மூட வேண்டாம். ஆட்டுக்கு தாடி போல தேவையற்று உருவாகியிருக்கும் சில சுங்க சாவடிகளை மூட வேண்டும். பல சாவடிகளில் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கக் கூடாது. 

சாலைவரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், என் தேசத்துக்குள் நான் நடமாட ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?

சாலைகள் அரசுக்கு சொந்தம் - இது ""welfare state " கிடையாதா? என மக்கள் நினைப்பதை , கேட்பதை அரசு செயல்படுத்த வேண்டும்.

- ஷான்