Facebook : sathyamoorthy Ramanujam எழுதியது
டெல்லியில் இருந்தபோது, மொபைல் ஃபோன் வந்த புதிது. இந்தியா முழுக்க சர்கிள் - சர்கிள் என பிரித்து, மாநகரத்துக்கு ரெண்டு ஆபரேட்டர், மாநகரம் தாண்டி மாநில மொஃபஸலுக்கு ரெண்டு ஆபரேட்டர் என்று மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்.
டெல்லியில் ஏர்டெல், ஏர்செல் இருந்தன. என் முதல் மொபைல் ஏர்டெல்லிடம் இருந்து. 1994 - 95 என்று நினைக்கிறேன். ஆஃபரில் ஃபிலிப்ஸ் கம்பெனி மொபைல். அன்றைய தேதியில் அதன் விலை ரூ.17000/-
ஒரு நிமிஷத்துக்கு incoming ரூ.8, outgoing ரூ.16. கால் நிமிடம் பேசினாலும் முழுதாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். என் ப்ளானில் 100 நிமிடங்கள் ஃப்ரீ என்று இருந்தது என்று ஞாபகம்.
அந்த மொபைல் ரொம்ப நாள் உழைத்தது. அப்போது அது ஒரு அரை அடி உயரம் இருக்கும்.
அந்த சமயத்தில், பட்டன் மொபைல் ஆனாலும் சிறியதாக வைத்திருந்தால்தான் பெரிய ஆள்.
ஷர்ட் பாக்கெட்டில் வைத்தால் அதன் கொம்பு நுனி மட்டும் வெளியே தெரியும். என்னோட பாஸ் அதை வைத்திருந்தார்.
எரிக்ஸன் மொபைல். அதன் விளம்பரம் ஒன்று டிவியில் வரும், அதன் சிறுமையின் பெருமையைக் காட்ட என.
ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு அழகிய பெண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருப்பாள். எதிரே யாரும் இருக்கமாட்டார். தூரத்தில் ஒரு நடுத்தர வயது மனிதர் அமர்ந்திருப்பார். அவருக்கு இந்தப் பெண் இவருடன பேசுவது போல இருக்கும். எழுந்து இந்தப் பெண்ணருகில் ஜொள்ளராக வருவார். சரியாக அந்த சமயத்தில் அந்தப் பெண் கன்னத்தில் இருந்து கையை எடுக்க, அவள் கையடக்கமாக எரிக்ஸன மொபைல் இருக்கும்.
அந்த ஃபோன் வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் விலை அதிகம் என்பதால் நெருங்க முடியவில்லை. பின்னர் மோட்டோரோலா, நோகியா என்று புது மாடல்கள் வாங்கியிருக்கிறேன். பெரிய ஃபீச்சரெல்லாம் இருக்காது. அதிக நேரம் பேட்டரி, நிறைய நம்பர் ஸ்டோர் செய்யலாம் என்று இருக்கும்.
படத்தில் இருப்பது அந்த ஃபோன்களில் ஒன்று.
அந்த காலத்துல இது லேட்டஸ்ட் மொபைல்.
கருங்கல் மாதிரி அதோட பேட்டரி.
பக்கத்துல முழு விசிட்டிங் கார்ட் போல சிம். அந்த வி.கார்ட் சிம் நுழைக்க அந்த மோட்டோரோலா ஃபோன்ல ஸ்லாட் இருந்தது.
ஒரு நிமிஷம் பேச ரூ.16 சார்ஜ் என்பதால், ஃபோன் பெருமைக்குதான். மிஸ்ட் காலிலேயே காலம் தள்ளுவோம்.
ஒத்தனும் ஃபோன் பண்ணமாட்டான்.
அதாலயே, ஒரு முறை சார்ஜ் போட்டால் ஒரு வாரம் வரும்.
இந்த ஃபோன் கால்ல விழுந்தா ஃபோன் ஒடையாது. கால் ஒடையும்.
நான் உபயோகித்து அப்புறம் ரொம்ப நாள் என்னுடைய அப்பா அதை உபயோகித்தார். இன்னும் பத்திரமாக பீரோவில் இருக்கிறது.
யாராவது பீரியட் படம் எடுத்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று இருக்கிறேன்.