Thanks to Dinamalar - Vaaramalar - Thinnai 2013 year
நடிகர் திலகம் நடித்த, "ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற, "தேவனே என்னைப் பாருங்கள் - என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்...' என்ற பாடலை மறக்க முடியுமா? எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலின் நடுவே...
"ஓ... மைலார்ட்... பார்டன் மீ... உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன...
இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...' என்று, உணர்வுப்பூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்தன.
டி.எம்.எஸ்., பாடிய அந்த பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும், நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி., வேண்டுகோள் விடுத்தார்.
"இந்த வசனங்கள், பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை, பாடிக் காட்டுங்கள்...' என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க, உடனே எம்.எஸ்.வி.,
"ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம்... நீங்கள் அறிவீர்... மன்னித்தருள்வீர்...' என்று பாடிக் காட்டி...
"இந்த இடத்தில் தான் தாங்கள்... அந்த, வசனத்தை பேச வேண்டும்...' என்றார்.
"இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேன். வேறு பொருத்தமானவரை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வையுங்கள்...' என்றார் சிவாஜி.
வயலின் வாத்தியக் கலைஞரும், தம் உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ஆனால், அவரது குரல் அந்த பாடலின் வீச்சுக்குப் பொருந்தி வரவில்லை.
"பலகுரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு, இதே வசனத்தைப் பேச வைத்தார்.
ஆனால், அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப் போகாமல் தனித்து நின்றது. நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து, "பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே...' என்றார்.
எம்.எஸ்.வி., - டி.எம்.எஸ்., சிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.
டி.எம்.எஸ்., உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார். அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.
"உங்கள் சிம்மக்குரலில்... அந்த வசனங்களை, ஒரு தடவை எனக்கு பேசிக் காட்டுங்கள் அய்யா...' என்றார்.
நடிகர் திலகம், அந்த வசனங்களை தம் பாணியில் டி.எம்.எஸ்சிடம் பேசிக் காட்டினார்.
அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும், ஏற்ற இறக்கங்களையும் உணர்வுக் குமிழிகளையும், உன்னதங்களையும் அப்படியே தம் மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.,
"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?' என்று டி.எம்.எஸ்., சொன்னதும்... எம்.எஸ்.வி., கையசைத்தார்.
ஏக்கமும், விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின், "ஞானத் தேடல்' விளங்கும் விதமாக, உணர்ச்சிப் பிழம்பாக மாறி, அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்.,
"அருமை டி.எம்.எஸ்., அற்புதம்...' என்று பாராட்டினார் சிவாஜி.