Wednesday, December 7, 2022

ஒரு ரூபாய்க்கு இறைவன்

Thanks to WhatsApp 

 எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று  கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான் அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார் அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான் சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான் தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர் அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான் அதற்கு அந்த கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார் இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு உன் தாய் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார் மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர் சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது தாயும் உயிர் பிழைத்தார் அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காகன பில் காட்டினார்கள் தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய்  அதிர்ந்து போனார் ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள் உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார் அவரே உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர் அதை வாங்கி படித்தார் தாய் அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே


ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகனுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.


மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...

Wednesday, November 16, 2022

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்

 Received from a friend


ஒரு பய..அவனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போனான். சொன்னான்.


டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே..


டாக்டரு சொன்னாரு..


தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க.  சரி பண்ணிடலாம்!


ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?


ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி.  நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹  சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹ .


ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன்.


ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.


ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில ப்ரஞ்சு ப்ரைஸ், காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.


அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே?


அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு.


ஓ! எப்புடீ?


நம்ம திருநெல்வேலி அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்.


டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.


என்னா தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க!


அது ஒண்ணுமில்லீங்க.  அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு.  அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன்.  இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே..


😄


*சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.*

Thursday, October 27, 2022

நாலாயிர திவ்யப்பிரபந்தம்* *தொகுக்கப்பட்ட வரலாறு

Thanks 🙏 to WhatsApp 😊 forwarded by Sridhar from Sriramgam

நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட (மீட்டுருவாக்கப்பட்ட) வரலாறு


திருமங்கையாழ்வார்   காலத்திற்குப்பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டு விட்டார்கள். இவ்வுலகில் 4000 ஆண்டுகள்    ஆழ்வார்கள்  பாசுரங்கள்  வழக்கொழிந்துபோயின. 

 

4000 ஆண்டுகளுக்குப்பிறகு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்றழைக்கப்படும் காட்டுமன்னார்குடியில் நாதமுனிகள் என்னும் வைணவர் அவதரித்தார்.


அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்திகொண்டு அப்பெருமானுக்கான கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவந்தார். 


  அவர் ஓர்நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலுக்குச்சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தார்.


அப்போது தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள் 


*ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*


*நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே*


*சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை*


*ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.*


எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் மீது அருளிச்செய்த  பாசுரங்கள் பதினொன்றையும் இனிய இசையில்பாடி வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.


அவ்வடியார்கள் பாடிய

*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*


*கழல்கள் அவையேச் சரணாக்கொண்ட குருகூர்ச் சடகோபன்*


*குழலின் மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்*


*மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே.*


 என்னும் 11 ஆம் பாசுரம் நாதமுனிகளின் கவனத்தை ஈர்த்தது.   


அவர் அவ்வடியார்களிடத்தில்

*ஓராயிரத்துள் இப்பத்தும்* என்றால் "இதுபோன்ற இனிய பாசுரங்கள் ஆயிரம் உள்ளனவோ ? அவற்றை நீவிர் அறிவீரோ ?" என வினவினார்.


அதற்கு அவ்வடியார்கள்

 "சுவாமி !

இப்பதினோறு பாசுரங்களே யாம் அறிவோம்." இவை நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள்.  நாங்கள் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் மரபில் வந்தவர்கள். எங்கள் பரம்பரையில் இப்பதினோறு பாசுரங்கள்

மட்டுமே செவிவழியாக  போதிக்கப்பட்டுவருகின்றன. இதனை எங்களுக்குக் கற்பித்த பராங்குசதாசர் என்பவர் தற்போது திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்துவருகிறார். அவரை தாங்கள் அனுகினால் தங்கள் சந்தேகம் தீரவாய்ப்புள்ளது" என்று கூறினார்கள். 


நாதமுனிகள் 1000 பாசுரங்களையும் அறியும் ஆர்வமுடன் ஆழ்வார் திருநகரி சென்று பராங்குசதாசரைச் சந்தித்தார். அவரைப் பணிவுடன் வணங்கி தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.


பராங்குசதாசர் " அன்பரே ! நம்மாழ்வாரின் 1000 பாடல்களையும் அறியும் உம் ஆர்வத்தை யாம் பாராட்டுகிறோம். ஆனால் எமக்கே பதினோறு பாசுரங்கள்தான் தெரியும். நம்மாழ்வார் ஒருவரே 1000 பாசுரங்களையும் கூறமுடியும். அவர் பரமபதம் சென்று (உயிர் துறந்து) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. என்ன செய்ய ? எம் மூதாதையரான மதுரகவியாழ்வார் தம் குருவான நம்மாழ்வாரையை இறைவனாக பாவித்து *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  எனத்துவங்கி பதினோரு பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார். அவற்றை நான் உமக்கு உபதேசிக்கிறேன். அவற்றை நீர் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரத்தடியில் அமர்ந்து இசைத்தால்  ஒரு வேளை நம்மாழ்வார்  பரமபதத்தினின்றும் மீண்டுவந்து உமக்கு 1000 பாசுரங்களையும் உபதேசிக்க வாய்ப்புள்ளது." என்று கூறி *கண்ணிநுண் சிறுத்தாம்பு* துவங்கி 11 பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு உபதேசித்தார்.


நாதமுனிகள் புளியமரத்தடியில் அமர்ந்து, நம்மாழ்வாரை மனதிலிருத்தி அப்பதினோரு பாசுரங்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தார். 10,000 மாவது முறை பாடிமுடித்ததும் நம்மாழ்வார் அவர் முன் தோன்றினார். நம்மாழ்வார் குருவாக புளியமரத்தடியில் அமர்ந்து நாதமுனிகளுக்கு திருவாய்மொழி 1102 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். நாதமுனிகள் மிக்க மகழ்ச்சி அடைந்து நம்மாழ்வாரை வீழ்ந்து வணங்கி விடைபெற எத்தனித்தார். நம்மாழ்வார் "ஆயிரம் போதுமோ ? மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த மேலும் 3000 பாசுரங்கள் வேண்டாவோ ?" என்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த நாதமுனிகள் அவற்றையும் உபதேசித்தருளுமாறு வேண்டினார். நம்மாழ்வாரும் மேலும் 3000 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். 


நாதமுனிகள் பேரானந்தமடைந்தார்.

நம்மாழ்வார் சந்தேகமிருப்பின் நாளை வாரும் என்றார்.

மறுநாள் நாதமுனிகள் மீண்டும் புளியமரத்தடிக்குச்சென்றார். அங்கே முன்னதாகவே  நம்மாழ்வார் வந்து  வீற்றிருந்தார். 


" சுவாமி ! *பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்*


*நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை*


*கலியும்கெடும் கண்டுகொண்மின்*"

என்று கூறியுள்ளீர்களே, எப்படி எமனுக்கு வேலையில்லாமல் போகும் ?" என்று கேட்டார் நாதமுனிகள்.


உடனே நம்மாழ்வார்  தம் பையிலிருந்து ஓர் விக்கிரகத்தை எடுத்து நாதமுனிகளிடம் கொடுத்து, " இவர் பெயர் இராமானுஜர். இவர் பிற்காலத்தில் இவ்வுலகில் அவதரித்து வைணவ சம்பிரதாயத்தை  நிலைநாட்டுவார். அப்போது மக்கள்  அனைவரும் இவரைப்பின்பற்றி அறவழி நடப்பார்கள். எனவே எமனுக்கு வேலையில்லாமல் போகும்" எனக்கூறினார். மேலும் "இவ்விக்கிரகத்திலுள்ள   உத்தமரை தேடிக்கண்டுபிடித்து வைணவ ஆச்சார்யராகச் செய்யவேண்டியது உமது கடமையாகும்" என்றும் கட்டளையிட்டு மறைந்துபோனார் (மீண்டும் பரமபதம் சென்றார்).


நாதமுனிகள் 4000 பாசுரங்களைப்பெற்ற மகிழ்ச்சியோடும், பவிசாச்சார்ய விக்கிரகத்தைப்பெற்று (நம்மாழ்வார் அளித்த விக்கிரகம். இது தற்போது ஆழ்வார் திருநகரியில் உள்ளது) வைணவத்தைச் சிறப்பிக்கும் கடமை உணர்வோடும் காட்டுமன்னார்கோயில் வந்து சேர்ந்தார்.


4000 பாசுரங்களையும் ஓலைச்சுவடியில் பதிவேற்றினார். அவற்றிற்கு *நாலாயிர திவ்யப்பிரபந்தம்* எனப்பெயர் சூட்டினார். முதலாமாயிரம், இரண்டாமாயிரம், மூன்றாமாயிரம் மற்றும் நாலாமாயிரம் என நான்கு தொகுதிகளாகப்பிரித்தார். 


*முதலாமாயிரம்*


1.பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு : 12 பாசுரங்கள்

2.பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி : 461 பாசுரங்கள் 

3.ஆண்டாள் - திருப்பாவை : 30 பாசுரங்கள் 

4.ஆண்டாள் - நாச்சியார் திருமொழி : 143 பாசுரங்கள் 

5.குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி : 105 பாசுரங்கள் 

6.திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம் : 120 பாசுரங்கள் 

7.தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை 45 பாசுரங்கள் 

8.தொண்டரடிப்பொடியாழ்வார்  - திருப்பள்ளியெழுச்சி : 10 பாசுரங்கள் 

9.திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் 10 பாசுரங்கள் 

10.மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு : 11 பாசுரங்கள் 


முதலாமாயிரம் மொத்தம்  947 பாசுரங்கள். 


*இரண்டாமாயிரம்*


1.திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி : 1084 பாசுரங்கள் 

2.திருமங்கையாழ்வார் - திருக்குறுந்தாண்டகம் : 20 பாசுரங்கள் 

3.திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் : 30 பாசுரங்கள் 


இரண்டாமாயிரம் மொத்தம் 1134 பாசுரங்கள்.


*மூன்றாமாயிரம்*


1.பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

2.பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி :  100 பாசுரங்கள் 

3.பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

4.திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி : 96 பாசுரங்கள் 

5.நம்மாழ்வார் - திருவிருத்தம் : 100 பாசுரங்கள் 

6.நம்மாழ்வார் - திருவாசிரியம் : 7 பாசுரங்கள் 

7.நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி  : 87 பாசுரங்கள் 

8.திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை  : 1 பாசுரம்

9.திருமங்கையாழ்வார் - சிறிய திருமடல் : 40 பாசுரங்கள்

10. திருமங்கையாழ்வார் - பெரிய திருமடல்  : 78 பாசுரங்கள் 


மூன்றாமாயிரம் மொத்தம் 709 பாசுரங்கள் 


*நாலாமாயிரம்*


நம்மாழ்வார் - திருவாய்மொழி : 1102 பாசுரங்கள் 


நாலாமாயிரம் மொத்தம் 1102 பாசுரங்கள்


முதலாமாயிரம்     :   947 பாசுரங்கள் 

இரண்டாமாயிரம் :1134 பாசுரங்கள் 

மூன்றாமாயிரம்    :    709 பாசுரங்கள் 

நாலாமாயிரம்        :1102 பாசுரங்கள் 

                                   _________

மொத்தம்                 :3892 பாசுரங்கள்            _________


இவ்வாறு நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்யப்பிரபந்தமே இப்போது நாம் பாராயணம் செய்யும் நூலாகும்.


தற்போது மூன்றாமாயிரத்தில் இடம்பெற்றுள்ள   இராமானுச நூற்றந்தாதி 108 பாசுரங்கள்  இராமானுஜர் காலத்திற்குப்பின் சேர்க்கப்பட்டவை.


வழக்கத்தில் இல்லாமலிருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த்தை மீட்டு நமக்களித்த ஸ்ரீமந் நாதமுனிகள் வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யராகப் போற்றப்படுகிறார்.


இவர் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உலகெங்கும் பரவவேண்டும் என விரும்பினார். எனவே தம் தமக்கை மகன்களான கீழையகத்தாண்டான், மேலையகத்தாண்டான் ஆகிய இருவரையும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை இசையமைத்து பாடி பாமர மக்களிடையே பரப்புமாறு கட்டளையிட்டார்.


அவர்களிருவரும் சிறந்த இசை வல்லுனர்கள் ஆதலால் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தைப் பண்ணோடு பாடும் பணியைச் செவ்வனே செய்தார்கள். 


இவர்கள் ஊர்தோறும் சென்று திருமால் கோயில்களில் பண்ணொடும் பாசுரங்களைப்பாடிப் பரப்பிய தொண்டு அரையர்சேவை என்றழைக்கப்பட்டது. 


இவர்கள் மரபின்வழி வந்தவர்களே இந்நாளில் அரையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


இப்போதும் திருவரங்கம், திருவில்லிப்புத்தூர், திருவானமாமலை,திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோயில்களில் அரையர்கள் மார்கழிமாதம் முழுவதும் அரையர்சேவை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


திவ்யப்பிரபந்தத்தை முதன் முதலில் அருளிச்செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். அவர் அருளிய முதல் பாசுரம் 

*வையம் தகளியா வார்கடலே நெய்யாக*


*வெய்ய கதிரோன் விளக்காக செய்ய*


*சுடாராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை*


*இடாழி நீங்குகவே என்று.*

திவ்யப்பிரபந்தம் முதன் முதலில் தோன்றிய ஊர்  திருக்கோவலுராகும். 


ஆனால் ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்பிரபந்தத்தைத் தொகுக்கும்போது 

முதன் முதலில் எல்லாம் வல்ல எம்பெருமானாகிய ஸ்ரீமந் நாராயணனை வாழ்த்தித் துவங்குமாறு திவ்யப்பிரபந்தம் அமைய வேண்டும் என விரும்பினார். எனவே


*பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்*


*மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு*


எனத்துவங்கும் ஆழ்வார்கள் வரிசையில்  எட்டாவது வைணவ அடியாராக அவதரித்த  பெரியாழ்வார் அருளிச்செய்த 12 பாசுரங்களை திவ்யப்பிரபந்தத்தின் முகப்புப் பகுதியாக வைத்து, அதற்குத் *திருப்பல்லாண்டு* எனவும் பெயர் சூட்டினார். 


நம்மாழ்வாரிடமிருந்து ஆழ்வார்கள் பாசுரங்கள் நாலாயிரத்தையும் பெறுதற்குக் காரணமாக இருந்த மதுரகவியாழ்வார் அருளிச்செய்த 11 பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அவற்றை முதலாமாயிரத்தின் கடைசிப்பகுதியாக அமைத்து அப்பகுதிக்குக்  *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  என்றே பெயரிட்டார். 


இதுவே நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறாகும்.


ஸ்ரீ வைணவ குருபரம்பரையை நிலைநாட்டிய ஸ்ரீமந் நாதமுனிகளுக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் உய்யக்கொண்டான், குருகைக்காவலப்பன் ஆகியோர் முதன்மையான சீடர்கள் ஆவார்கள்.

உய்யக்கொண்டான் பக்தி மார்கத்தையும், குருகைக்காவலப்பன் யோக மார்கத்தையும், தம் குருநாதரிடம் கசடறக் கற்றார்கள்.


பாமரர்களை உய்விக்கச் சிறந்த நெறி பக்தி மார்க்கமே என உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள், தமக்குப்பின் உய்யககொண்டாரை ஆச்சார்யராக நியமித்து அவரிடம் நம்மாழ்வார் அளித்த பவிதாச்சார்ய விக்கிரகத்தைக் கொடுத்து இராமானுஜரை கண்டறியச்சொன்னார்.


உய்யக்கொண்டாரிடமிருந்த அவ்விக்கிரகம் மணக்கால்நம்பி மூலமாக ஆளவந்தாரை வந்தடைந்தது. ஆளவந்தார் காஞ்சிபுரம் வரதாஜப்பெருமாள் கோயிலுக்கு யாத்திரை சென்றார். அங்கு திருக்கச்சி நம்பிகள் என்னும் அடியவர் மூலமாக இளையாழ்வான் என்னும் பெயர்கொண்ட ஒளிபொருந்திய தோற்றத்துடன் கூடிய வைணவ இளைஞன் ஒருவனைக்கண்டார். அவ்விளைஞனே தம்மிடமிருக்கும் விக்கிரகத்திலுள்ள எதிர்கால ஆச்சார்யர் என அடையாளம் கண்டார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு  நிறைவேறப்போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தார்.


தம் அனுக்கச்சீடரான பெரியநம்பிகளை, இளையாழ்வானை காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்துவரப்பணித்தார். அவர்கள் ஸ்ரீரங்கம் வருவதற்குள் ஆளவந்தார் (இவ்வுலக வாழ்வை நீத்தார்) பரமபதம் அடைந்தார்.


பின்னாளில் பெரிய நம்பிகளின் பெருமுயற்சியால் இளையாழ்வான் சந்நியாசம் ஏற்று இராமானுஜர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீரங்கம் ஜுயராகப் பொறுப்பேற்றார். வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றினார்.


இவ்வாறாக ஸ்ரீமந் நாதமுனிகள் மறைந்து ஏறத்தாழ  400 ஆண்டுகளுக்குப்பிறகு  இராமானுஜர் ஆச்சார்யா பீடத்தை அலங்கரித்தார். 27.10.22.

Saturday, September 3, 2022

கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன

 மன்னனைக் காத்த பருந்து.


ஜெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். ஜெங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.  

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.


ஒரு நாள் ஜெங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள்.  

ஜெங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான்.


"என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான்.


அவன் குதிரையில் பயணித்தபோது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.


பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் ஜெங்கிஸ்கான், தன் அடையாளத்துக்காக...!


அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லாது. அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான்  

பருந்தும் பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.


அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. ஜெங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான்.  

பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது.  

ஜெங்கிஸ்கானும் நண்பர்களும் களைத்து போகும்வரை வேட்டையாடினார்கள்.


விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கான், தன் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான். மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. ஜெங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது.


நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.  

அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.


தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது.  

தன் கையில் அமர்ந்திருந்த  பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.  

குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.


இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம்..


"இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன்.  

இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை'' என்று கடிந்தபடி ,ஜெங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்து கையில் பிடித்துக் கொண்டான். ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.


"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.  

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். அது மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன்.


பருந்து வெட்டுண்டது, என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.


பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது.


இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான்.  

பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி  

இருந்தது.


அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.  

தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.


அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும்.


மன்னன் அந்த நீரை அருந்தியிருந்தால், சந்தேகமில்லாமல் உடனே செத்திருப்பான்.  

அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.


உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான ஜெங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.


நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்திலான பருந்தின் சிலை செய்து வைத்தான்.


அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.


*கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.*


மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது..


"உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான் செய்கிறான் என்பதை நினைவில் கொள்.."


ஜெங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.


ஒரு செயலை எடை போடும் போது அந்த செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும்.


நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள். நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


நம்மைக் கவிழ்க்க நினைப்பவர்கள் நம்மைப் புகழ்வார்கள். நமக்குப் பிடித்ததை மட்டும் செய்வார்கள்.  

ஆனால், நம்மை வீழ்த்துவது தான் அவர்கள் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, January 26, 2022

ஞான ஒளி திரைப்படம் பாடல் MSV அய்யாவின் கம்போசிங்

 Thanks to Dinamalar - Vaaramalar - Thinnai 2013 year


நடிகர் திலகம் நடித்த, "ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற, "தேவனே என்னைப் பாருங்கள் - என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்...' என்ற பாடலை மறக்க முடியுமா? எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலின் நடுவே...

"ஓ... மைலார்ட்... பார்டன் மீ... உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன...

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...' என்று, உணர்வுப்பூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

டி.எம்.எஸ்., பாடிய அந்த பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும், நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி., வேண்டுகோள் விடுத்தார்.

"இந்த வசனங்கள், பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை, பாடிக் காட்டுங்கள்...' என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க, உடனே எம்.எஸ்.வி.,

"ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம்... நீங்கள் அறிவீர்... மன்னித்தருள்வீர்...' என்று பாடிக் காட்டி...

"இந்த இடத்தில் தான் தாங்கள்... அந்த, வசனத்தை பேச வேண்டும்...' என்றார்.

"இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேன். வேறு பொருத்தமானவரை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வையுங்கள்...' என்றார் சிவாஜி.

வயலின் வாத்தியக் கலைஞரும், தம் உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஆனால், அவரது குரல் அந்த பாடலின் வீச்சுக்குப் பொருந்தி வரவில்லை.

"பலகுரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு, இதே வசனத்தைப் பேச வைத்தார்.

ஆனால், அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப் போகாமல் தனித்து நின்றது. நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து, "பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே...' என்றார்.

எம்.எஸ்.வி., - டி.எம்.எஸ்., சிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.

டி.எம்.எஸ்., உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார். அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.

"உங்கள் சிம்மக்குரலில்... அந்த வசனங்களை, ஒரு தடவை எனக்கு பேசிக் காட்டுங்கள் அய்யா...' என்றார்.

நடிகர் திலகம், அந்த வசனங்களை தம் பாணியில் டி.எம்.எஸ்சிடம் பேசிக் காட்டினார்.

அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும், ஏற்ற இறக்கங்களையும் உணர்வுக் குமிழிகளையும், உன்னதங்களையும் அப்படியே தம் மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.,

"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?' என்று டி.எம்.எஸ்., சொன்னதும்... எம்.எஸ்.வி., கையசைத்தார்.

ஏக்கமும், விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின், "ஞானத் தேடல்' விளங்கும் விதமாக, உணர்ச்சிப் பிழம்பாக மாறி, அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்.,

"அருமை டி.எம்.எஸ்., அற்புதம்...' என்று பாராட்டினார் சிவாஜி.