அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
மாமன் அடித்தாரோ மல்லிப்பூ செண்டாலே
மறந்து போச்சு இந்த பாட்டு – இல்லை
மறைந்து போச்சு நம்ம தாலாட்டு
அத்தை என்று சொன்னேன் நான்
அழகு மகளுக்கு புரியவில்லை
மாமன் என்று சொன்னேன் – நல்ல
மகனுக்கும் தெரியவில்லை – உறவை
என்ன சொல்லி புரிய வைப்பேன்
எப்படி நான் கற்க வைப்பேன்
இன்றைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை
எப்படி நான் எடுத்துரைப்பேன்.
இரண்டு பெற்றால் சுமை என்று
இந்நாளின் இடர்நிறை பொருளியலை
இயல்பாக புரிந்து கொண்ட பெற்றோர்
பெற்றது ஒன்றுமட்டும் – எனக்கு மட்டுமல்ல
என் மனைவியின் நிலையிதுவே
இத்தகைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை
என்ன சொல்லி புரிய வைப்பேன்
கூட்டு குடும்பம் என்பது போய்
கூட்டில் குடும்பம் என சுருங்கி
கூடி வாழ யாரும் இன்றி
தனி குடும்பம் ஆகி போச்சு
அக்கம் பக்கம் எல்லாம் அன்று
அக்கா அண்ணா என்று இருந்த
அழகான காலம் போய் – இன்று
ஆண்டி அங்கிள் ஆயாச்சு
அம்மா அப்பா என்பது போய்
டாடி மம்மி ஆகி இப்போ
டாட் மம் என சுருங்கி
வேற்றுலகம் ஆயாச்சு – ஆம்
இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல
உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட
11.5.2014 written by S.Ramanan