Saturday, October 5, 2019

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது...
விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி நாம் உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

வாரியார் சுவாமிகள் வாரினார்

ஒரு சமயம் #வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.

வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.

வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது.
காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்.
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.
மன்னனால் தூங்க முடியவில்லை.
உணவும் குறைந்து விட்டது.
மன்னன் பொலிவு இழந்தான்.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி வந்து சேர்ந்தார.
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.
எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.
அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும் கவலைப்படாதீர்கள் என்றார்.
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது.
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.
நன்றாக உண்டான்.
பழைய பொலிவு திரும்பி விட்டது.
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்.
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
""குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''
''துறவி புன்னகை பூத்தார். ""பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?, மன்னனின் செவிக்குள், ''அதுதான் இல்லை, மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம், சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை, உடனே வெளியே வந்திருக்கும்,
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.
அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே?''"
"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."
''அந்த மூலிகை?''
"நம் ஊரில் சாதாரணமாக விளையும் செடியின் இலைகள்தான்.
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்.
பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டுஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.
மன்னன் நம்பி விட்டான். அவன் மனநோயும் தீர்ந்தது."
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி வெளியேறி விட்டது.
மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"எங்கப்பா மட்டும் பொறுப்பா சம்பாதித்திருந்தா, பெரிய படிப்பு படிக்க வச்சிருந்தா, பணம் கொடுத்திருந்தா, யாராவது உதவி செய்திருந்தா நான் பெரிய ஆளாயிருப்பேன்'' என்று எத்தனை பேர் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள்தான்.
பெரிய படிப்பு படிக்காதவர்கள்தான்.
பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி, கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.
அது நம் மனதில் இருக்கிறது.
பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது.
ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்!.