Friday, March 23, 2018

பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்

_இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது._

_உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்..._

_இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர்._

_அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உயிர் வந்தவனாய் வெளியே ஓடி .வந்தார். தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார்._

_அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார்._

_"சார். நான் இங்க 10 வருசமா வேலை செய்றேன்...நீங்க ஒருத்தர் மட்டும் தான் என்னையும் ஒரு மனுசனா மதிச்சு காலைல வணக்கமும் சாயங்காலம் குட் பை ரெண்டும் சொல்றவர்._

_இன்னிக்கி காலைல வணக்கம் சொன்னீங்க ..ஆனா சாயங்காலம் உங்களோட குட் பை என் காதில் விழவில்லை.உடனே சந்தேகம் வந்து உள்ள வந்து ஒவ்வொரு இடமா தேடினேன்...அப்போதான் உங்கள் கண்டு பிடிச்சேன் ..." என்றான்_

_ஒருவருக்கொருவர் மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்._


🍂____________________________🍂
          *B E H A V I O R*
             Is always *Greater*
          Than *_Knowledge,_*
         Because In Life There
           Are Many Situations
            Where *Knowledge*
           Fails But *_Behaviour_*
                  Can Handle
             *E V E R Y T H I N G.*
🍂____________________________🍂

உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.

-படித்ததில் பிடித்தது.

Monday, March 5, 2018

மாரநாடு கருப்பசாமியும் ராமநாதபுரம் அரசாங்கமும்

மாரநாடு கோடாங்கி


(250-300 ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி
அருகில் உள்ள மாரநாடு கிராமத்தில் நடை​பெற்ற உண்மைச் சம்பவம்)

அரண்மனை அந்தப்புரம். அரசி, இளவரசி, சேடியர் தவிர வேறுயாரும் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு பாதுகாப்பு. யாரேனும் உள்ளே
தெரிந்தால் உடனடியாகத் தூக்கிலிட்டுவிடுவார்கள். அவ்வளவு கடுமையான தண்டனை. இராமநாதபுர சமஸ்தானத்தின் இளவரசி பருவமடைந்து அந்தப்புரத்தில் இருந்தாள். அழகு என்றால் அழகு அவ்வளவு அழகு. பார்த்தோரைப் பரவசப்படுத்தும் அழகு. மக்களுக்கு மகாலெட்சுமி போல் காட்சியளிப்பாள்.


இதனால், சமஸ்தான மன்னர்களுக்குள் கடும் போட்டாபோட்டி. அவளை மணந்து கொண்டால், இராமநாதபுர சமஸ்தானத்திற்கு மன்னனாகி விடலாம், வீரமிக்க மன்னனுக்குச் சொந்தமாகிவிடலாம், ஆளுக்கு ஆளும் ஆச்சு, பேருக்குப் பேரும் ஆச்சு, ஊருக்கு ஊரும் ஆச்சு. அதனால், "நான் நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு, பெண் கேட்டுத் தூது அனுப்பிக் கொண்டிருந்தனர்; அரசனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி.


நல்லவனாக, வல்லவனாக ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். பெண்கேட்டுப் போட்டாபோட்டி போட்டதால், அரசனுக்குக் கொஞ்சம் பெருமையும் கூடியது. தன் பெண்ணை எண்ணிப் பூரிப்படைந்திருந்தான்.


ஆனால், விதி வேறுவகையாக வேலை செய்தது! ஒருநாள் மாலை, அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்த அரசனுக்கு, அவசரமாக அந்தப்புரத்தில் இருந்து அழைப்பு வந்தது! என்ன அவசரம் என்று எவருக்கும் தெரியவில்லை. அரசனும் அவசர அரசாங்க ஆலோசனைகளை நிறுத்திவைத்துவிட்டு அந்தப் புரத்திற்கு விரைந்து சென்றான்.


அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! இளவரசியின் கழுத்தில் இருந்த "அரசமுத்திரை"மாலையைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அந்த மாலை யார் கழுத்தில் உள்ளதோ அவர்களே அந்நாட்டின் இளைய பட்டம் ஆவர், அந்த மாலையைக் கையில் வைத்திருப்போரே   இளவரசியை மணந்து கொள்ளும் அதிகாரம் பெற்றவர் ஆகிவிடுவர்.


கழுத்தில் இருந்த மாலை காணாமல் போனது எப்படி? காணாமல் போனதைக் கண்டுபிடிப்பது எப்படி? மன்னனுக்கு மகளைப் பற்றி ஒரே கவலை. நல்லவனாக வல்லவனாக அமைந்தால், மகளைக் கட்டிக் கொடுப்பதற்குத் தயாராய் இருந்தார். ஆனால், இப்போது நிலைமை வேறு, மாலையை எவன் எடுத்திருந்தாலும், எதுவும் செய்ய முடியாது! பேசாமல் கொள்ளாமல் மாலையை வைத்திருப்பவனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்!


யார்கையிலாவது கிடைத்து ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால் என்ன செய்வது! அந்தப்புரத்திற்குள் நுழைந்த அந்தக் களவாணி யார்? ஆயிரத்தெட்டு விசாரணைகள். இளவரசிக்குப் பதில் சொல்வதே ஒருபெரும் தொல்லையாய் போய்விட்டது!


"யாரிடமும் நான் மாலையைக் கொடுக்கவும் இல்லை. யாரும் மாலையை எடுக்கவும் இல்லை" என்று எத்தனையோ முறை "இது சத்தியம் சத்தியம்" என்று கூறினாள் !


ஆளே புகமுடியாத அந்தப்புரத்தில் அரசமுத்திரை பதித்த நகை எப்படிக் காணாமல் போனது? அரன்மனையிலேயே களவு நடந்துள்ளதால், மக்களிடம் மரியாதை குறைவதை உணர ஆரம்பித்தான் அரசன். என்ன செய்வதென்று எப்போதும் ஒரே நினைப்பு!. நாடுபோனாலும் போகட்டும், நகரம் போனாலும் போகட்டும், மானம் போய் விடக் கூடாதே! எத்தனைபேர் பெண் கேட்டுத் தூதுஅனுப்பியுள்ளனர். அத்தனைபேர் முகத்திலும் எப்படி இனி நான் விழிப்பேன் என்று மன்னன் இரவு முழுவதும் இதை மட்டுமே எண்ணியிருந்தான். எண்ணி எண்ணி உருக்குலைந்திருந்தான்.


எப்போதும் சரியாய் ஓடுவது காலம் மட்டுமே! விடியற்காலம் வந்துது! அவையைக் கூட்டி ஆலோசனை கேட்டான் அரசன். ஆளாளுக்கு ஆள், ஆயிரத்தெட்டு யோசனை சொன்னார்கள். ஒன்று கூட உருப்படியாய் இல்லை. என்ன செய்வது?  எதுவுமே தெரியவில்லை யாருக்கும்!. அரசன், யோசனைகள் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முடிவுசெய்தான் .


அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த அனைவரையும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்தனர் அரசு அதிகாரிகள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. முத்திரைமாலை போன இடத்தை அறியமுடியவில்லை. அதிகாரிகள் விசாரணை விபரங்களை மன்னனிடம் கூறினர். அரசனுக்குத் தாளமுடியாத வருத்தம். மானம் போகிறதே என்று கண் கலங்கினான். என்ன செய்வது? ” முத்திரை மாலை கிடைக்கும்வரை அத்தனை பேரையும் அரண்மனையிலேயே அடைத்து வையுங்கள்! “ என்று உத்தரவு போட்டான்.


அரண்மனையிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே யிருந்த யாரும் வெளியே வரமுடிய வில்லை. எல்லா இடமும் தேடியாச்சு. அத்தனைபேர் தேடியும் முத்திரைமாலை மட்டும் அகப்படவே இல்லை. என்ன செய்வது? அரண்மனையே ஸ்தம்பித்து. எனவே என்ன ஆலோசனை என்றாலும் ஏற்கத் தயாராக இருந்தான் அரசன். ஆலோசனைக்கு மேல் ஆலோசனை. அதில் ஒன்றுதான் குறிகேட்பது.


குறிசொல்வோர் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தான் அரசன். குறிசொல்வோர் சொன்ன குறியெல்லாம் தவறாகப் போனது; குறி சொன்னது போல் மாலை கிடைக்கவில்லை;  அரசனுக்குக் கோபமான கோபம். அரசுமுத்திரைமாலை கிடைக்காமல் யாரையும் வெளியே விடுவதாக இல்லை.


தவறாகக் குறி சொன்னவர்களையும் சிறையில் அடைத்தான் அரசன். ஒருவர் இருவர் அல்ல, ஒரு ஊருக்கு  இரண்டு மூன்று என்று குறிசொல்வோர்  இருந்தனர். எத்தனை பேர் இருந்து என்ன செய்ய? அரசமுத்திரை மாலை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து குறி சொல்ல முடியவில்லை! அரசனது கோபத்துக்கு அஞ்சி, நாட்டிலிருந்த குறிசொல்வோர் எல்லாம் அண்டைநாடு, அயலார்வீடு என ஓடி ஒளிந்து
கொண்டனர்.


குறிசொல்வோரில் ஒருவன் மட்டுமே துணிந்து அரசன் முன் சென்று நின்றான். "என்ன? சொல்!" என்றான் மன்னன். "எனக்குச் சரியாகச் குறி சொல்லத் தெரியாது! ஆனால் சரியாகக் குறிசொல்பவனைத் தெரியும்; அவன் ஒருவனை மட்டும் அழைத்து வந்தால், தேடும் பொருள் கிடைத்துவிடும்" என்றான்.


குறிசொல்பவன் சொன்ன சொல் மன்னனின் காதில் வீழ்ந்தது. ”நீ சொல்வதுபோல் நடந்து விட்டால், உங்கள் அனைவரையும் விடுதலை செய்து விடுகிறேன்” என்று மன்னன் வாக்களித்தான். மந்திரியை அழைத்தான், "இவன் யாரைச் சொல்கிறானோ, அவனை இங்கே அழைத்து வாருங்கள். இது நமது ஆணை” என்றான் .


” குறி தப்பாமல் சொல்பவன் நாட்டிலேயே ஒருவன்தான் உண்டு; அவன்தான், "மாரநாட்டுக் கோடாங்கி".  அவன் கோடாங்கி எடுத்து அடித்தால்,
கருப்பணசாமி வரும். மாரநாட்டுக் கருப்பணசாமி வந்து சொல்லும்" என்றனர் அறிந்தவர் அனைவரும். அரசு அதிகாரிகள் விரைந்தனர், மாரநாடு
கிராமத்திற்கு. இராமநாதபுரத்திலிருந்து, பரமக்குடி, மானாமதுரை, திருப்பாச்சேத்தி வந்து மாரநாடு கிராமத்திற்கு வந்து சேர்ந்தனர்.


ஊரின் உள்ளே நுழையும் முன்பு, முகப்பு வாயிலிலேயே, கண்மாய்க்கரை ஓரமாகக் கருப்பணசாமி கோயில் இருந்தது. கோயில் உள்ளே சென்று கருப்பணசாமியைக் கும்பிட்டனர். கருவறையில் சிலையோ, படங்களோ எதுவும் இல்லை, வெருமெனே இருந்தது, கருவறை முன் மண்டபத்தில் சூலம் மட்டும் நடப்பட்டிருந்தது. அந்தச் சூலத்தையே கருப்பணசாமி என மக்கள் வணங்கி வருகின்றனர், கருப்பண சாமி வழிபாடு முடிந்ததும், கோயில் பூசரியிடம், "கோடாங்கியைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்றனர்.


இப்படி மண்டபத்தில் உட்காருங்கள் என்று சொல்லி பிரசாதத் தட்டை கோயில் கருவறையில் வைத்து விட்டு அங்கே வந்து பூசாரியும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டான்.


சொல்லுங்கள், "மாரநாடு கோயில் பூசாரிதான் மாரநாடுகோடங்கி ஆவான்". நான்தான் அந்தக் கோடாங்கி, உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் கோடாங்கி. வந்தர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஆஜாகுபான உடம்பைத் தேடிவந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. ஒல்லியான ஒருவ​ரைக் கோடங்கியாகப் பார்த்தவுடன் அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்,கோடாங்கி, நாங்கள் வந்த நோக்கம், என்ன என்றால், "நீங்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குறி சொல்ல வேண்டும்", இது அரச உத்தவரவு என்றனர்.


"நான் குறி சொல்வது இல்லை, இந்தக் கருப்பணசாமிதான் வந்து குறி சொல்லுவான், உங்களுக்கு யார் வேண்டும்?" என்று கேட்டார் கோடாங்கி.
”எங்களுக்குக் குறி சொல்ல வேண்டும், கருப்பணசாமிதான் குறிசொல்லும் என்றால், சாமியைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்” என்றனர்.


”கருப்பணசாமி வருவது என்றால், சும்மாவா? ஒட்டு மச்சம்கூட இல்லாத வெள்ளைக்குதிரையில்தான் கருப்பணசாமி வருவார். முடிந்தால் அந்தமாதிரிக் குதிரையுடன் வாருங்கள். அல்லது வரும் மாசிமாதம் மகாசிவராத்தி அன்றுதான் திருவிழாபற்றிப் பேசி முடிவு செய்வார்கள்.பங்குனிமாதம் திருவிழா நடைபெறும், சாமிபுறப்பாடு இருக்கும், அப்போது வந்து குறி கேளுங்கள்” என்று கூறிமுடித்தார்.


கோடாங்கி சொன்னது எல்லாம் சொல்மாறாமல் இராமநாதபுர மன்னனிடம் கூறப்பட்டன. மானம் போகிற பிரச்சனை ஆயிற்றே. எனவே ”உடனடியாகக் கோடாங்கி கூறியது போல் குதிரை ஒன்றை அனுப்பி வைத்து அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். அனைவரும் தயங்கி நின்றனர். மன்னனுக்குக் கோபமான கோபம் வந்தது! "ஏன் நிற்கின்றீர்கள் ” என எரிந்து விழுந்தான் மன்னன்.


மந்திரி, தயங்கித் தயங்கி மன்னன் அருகில் சென்று, "மன்னா! கோடாங்கி சொல்லியபடி, ஒட்டுமச்சம்கூட இல்லாமல் வெள்ளைவேளேர் குதிரை ஒன்றே ஒன்றுதான் உள்ளது, அதுதான் ஒரே யோசனை" என்றான். ”ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் குதிரையைக் கூட்டிச் செல்வதற்கு ஏன் இத்தனை தயக்கம்?” என்று மன்னன் கேட்டான்.  “அது பட்டத்துக் குதிரை மன்னா! பட்டத்துக் குதிரையில் யார் ஏறி வருகிறாரோ அவரே அந் நாட்டின் மன்னன் ஆவான், பட்டத்துக் குதிரையில் கோடாங்கி ஏறியவுடன், ஏடாகூடமாக ஏதாவது செய்தால், என்ன செய்வது? ஒரே நாளில் ஓராயிரம் கட்டளைகளைப் பிறப்பித்தால் என்ன செய்வது? பட்டத்துக் குதிரையைத் தவிர்த்து, மற்றொரு குதிரைக்கு எங்கே போவது! மற்றொரு குதிரை வாங்கிவரும் வரை காத்திருக்க முடியாதே!” என விடை கிடைத்தது.


இருக்கும் மானத்தைக் காத்தாக வேண்டுமே! என்ன விலையும் கொடுக்கத் தயாராய் இருந்தான் மன்னன், மன்னனுக்குப் பட்டத்துக் குதிரையை அனுப்பிவைப்பதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை, மன்னன் பட்டத்துக் குதிரையை மாரநாட்டிற்கு அனுப்பி வைத்தான், மாரநாடு கருப்பணசாமி கோயில் பூசாரியான கோடாங்கி, வந்திருந்த பட்டத்துக் குதிரைக்கு மாலை அணிவித்தான், மரியாதை செய்தான்.   உடுக்கையையும் விபூதிப் பையையும் எடுத்துக் கொண்டான், கோயிலை வலம் வந்தான், கருப்பணசாமியை வணங்கினான்.


அனைவரும் மாரநாட்டிலிருந்து இராமநாதபுரத்திற்குச் சொல்லத் தயாராய் இருந்தனர்; ஆனால் கோடாங்கி குதிரையில் ஏறவில்லை!
மந்திரி, கோடாங்கியிடம் சென்று, "குதிரையில் ஏறவில்லையே"? என்று கேட்டான்! ”பட்டத்துக் குதிரையில் கருப்பணசாமிதான் ஏறி வரும். நான்
சாமிகூட ஓடியே வந்துவிடுவேன் என்றான் கோடாங்கி. மற்றொரு குதிரையை ஏற்பாடு செய்கிறேன், அதில் ஏறி வாருங்கள் என்றான் மந்திரி. கோடாங்கி மறுத்துவிட்டான். சாமி பாதத்துக்கு மேலே நான்  இருக்கக்கூடாது. எனவே நான் இப்படியே சாமிகூட ஓடியே வந்து விடுவேன்” என்றான்.


மந்திரிக்கு, பட்டத்துக்குதிரையில் ஒரு மனிதன் ஏறிவராமல்  தெய்வம் ஏறிவருவது பெருமையாய் இருந்தது. தான் நினைத்தபடி ஏதுவும் ஏடாகூடமாக நடக்க வாய்ப்பு இல்லை என்பதையும் எண்ணி மனநிறைவடைந்தான் மந்திரி.


பட்டத்துக்குதிரை, கோடாங்கி போட்டுவிட்ட மாலையுடன் முன்னே சென்றது. பட்டத்துக் குதி​ரையுடன் கோடாங்கியும் ஒன்றாக ஓடத் துவங்கினான். மந்திரியும் மற்றோரும் அவரவர் குதிரையில் ஏறிப் புறப்பட்டனர். மாரநாடு ஊரே ஒன்றாக இணைந்து ஓடத் துவங்கியது. வழி​நெடுக, அலையலையாய் மக்கள் கூட்டம்,

வழியெல்லாம் தண்ணீர் தெளித்து, பாதைஎங்கும் மாக்கோலம் போட்டுத் தோரணம் கட்டி, கொம்பு ஊதி வரவேற்பு செய்தனர் மக்கள். தெய்வத்திற்கும் அரசனுக்கும் செய்யும் மரியாதை அத்தனையும் செய்து, பட்டத்துக்குதிரையுடன் ஓடிவரும் கோடாங்கியுடன் ஒன்றாய் சேர்ந்து ஓடத் துவங்கினர் மக்கள்.

மாரநாட்டிலிருந்து கிளம்பி, திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி வழியாக இராமநாதபுரம் அரண்மனை வந்தது சேர்ந்தது பட்டத்துக் குதிரை.

குதிரையின் பின் நாடே ஒன்று திரண்டு ஓடி வந்து சேர்ந்தது ஏறத்தாழ எழுபதுகல் தூரம், மாரநாடு கோயிலில் துவங்கிய ஓட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாயிலில் வந்துதான் நின்றது,

அரண்மனை வாயிலுக்கு வந்து வரவேற்றான் மன்னன், உள்ளே சென்ற கோடாங்கி மன்னனிடம், சாணம் கரைத்துத் தெளித்து அதில் மாக்கோலம் போட்டு​வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோடாங்கி மாக்கோலத்தின் நடுவே உட்கார்ந்து கொண்டான். மன்னனும் சிம்மாசனத்திலிருந்து கீழே இறங்கிக் கோடாங்கி எதிரே, அவனுக்குச் சமமாக உட்கார்ந்து கொண்டான்,

உடுக்கையை எடுத்து அடித்து கருப்பணசாமியை வரவழைத்தான் கோடாங்கி, "என்னை எதுக்கு இங்கே அழைக்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்? " என்று மன்னனிடம் கேட்டது கருப்பணசாமி,

"சாமி, மன்னனான எனக்கு ஒரு மானப்பிரச்சனை, பிரச்சனைக்கு உரிய பொருள் எங்கே இருக்கிறது என்று கண்டறிய முடியவில்லை" அதனால் குறி சொல்ல வேண்டும் என்றான் மன்னன். "மன்னன் கேட்டால், மறுக்கக்கூடாது! உன்னைக் காத்து அருளுவோம், இரண்டு குறிக்குமேல் கேட்கக் கூடாது!, கேள், சொல்கிறேன்" என்றது கருப்பணசாமி,

"வந்திருப்பது கருப்பணசாமிதான் என்று எப்படி இந்த மன்னனும் இங்குள்ள மக்களும் நம்புவது?" என்று கேட்டான் மன்னன்,

"முதற்குறி கேட்டுள்ளாய், கருப்பணன் வந்த குதிரையில் மற்றொருவன்
ஏறக்கூடாது, எனவே நான் வந்த வெள்ளைக்குதிரை நின்றபடியே இறந்திருக்கும் பார்" என்றது கருப்பணசாமி,

எல்லோரும் ஒடிச் சென்று பார்த்தனர். மன்னன் முன்வந்து, நின்ற குதிரையைத் தொட்டுப் பார்த்தான், அவ்வளவுதான் சடமாய் நின்ற குதிரை செத்துப் பிணமாய் விழுந்தது,

பட்டத்துக்குதிரை பரிதாபமாய் இறந்துகிடப்பது கண்டு மன்னன் உள்ளம்
பதைபதைத்தது! இருப்பினும் கருப்பணசாமியே அரண்மனைக்கு வந்து குறி சொல்லிக் கொண்டிருப்பதை நினைத்துப் பெருமை கொண்டான் மன்னன்,

ஓடோடி உள்ளே சென்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து வணங்கினான், "சாமி என்பிழையைப் பொருத்தருள வேண்டும், மனிதன் ஒருவன் கோடங்கியுடன் வந்து குறி சொல்வதாகத் தவறாக நினைத்துவிட்டேன். குறிசொல்வது மாரநாடு கருப்பணசாமி என்று அறியாமல் நான் செய்த பிழையைப் பொருத்தருள வேண்டும்" என்று கருப்பணசாமியிடம் வேண்டிக் கொண்டான்,

"என்மகள் கழுத்தில் அணிந்திருந்த அரசமுத்திரைமாலையைக் காணவில்லை?",
"கருப்பணசாமி தான் எங்களைக் காத்தருள வேண்டும்" என்றான் மன்னன்.

"இரண்டாவது குறி கேட்கிறாய், மன்னனே, காணாமல் போன அரசமுத்திரைமாலை, அரண்மனை அந்தப்புரத்தில் இளவரசி குளிக்கும் அறையில் தண்ணீர் வெளியேறும் தூம்பின் உள்ளே கிடக்கிறது, போய் எடுத்து வரச் சொல்" என்றது கருப்பணசாமி,

மன்னனும் "எடுத்துவாருங்கள்" எனக் கட்டளை இட்டான்,

அவ்வளவுதான், மன்னன் இட்ட கட்டளையை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்,

கோடாங்கியையும் மன்னனையும் தவிரக் கூடியிருந்தோர் அனைவரும் அரண்மனை அந்தப்புரம் நோக்கி ஒடினர். மன்னன் மட்டும் கருப்பணசாமியின் அருகிலேயே நின்றான், கருப்பணசாமியின் காலில் விழுந்து விபூதி பிராசதம் பெற்றுக் கொண்டான், ஓடிய மக்கள்கூட்டம் அரண்மனை அந்தப்புரம் என்பதை எல்லாம் உள்ளே சென்று தேடிப்பார்த்தது. தூம்பாக்குழியைத் தோண்டியே எடுத்துவிட்டது,

உள்ளேகிடந்த அரசமுத்திரைமாலையை அப்படியே கையில் அள்ளி எடுத்துவந்தார் மந்திரி. மந்திரியும் மக்களும் கருப்பணசாமி காலில் கும்பிட்டுவிழ முற்பட்டனர்.

கோடாங்கி அவர்களைக் கும்பிட்டு விழாமல் தடுத்துவிட்டான். "மன்னனுக்குப் பிரசாதம் கொடுத்துவிட்டு கருப்பணசாமி மலையேறிப்
போய்விட்டது, என் காலில் நீங்கள் யாரும் விழுந்து கும்பிடக்கூடாது" என்றான் கோடாங்கி.

மன்னனின் மானம் மட்டுமன்று; நாட்டு மக்களின்மானமும் காக்கப்பட்டுள்ளது. காத்தவன் அந்த மாரநாடு கருப்பணசாமி என்றான் கோடாங்கி.

"எங்கள் மானத்தைக் காத்த, கருப்பணசாமிக்கு நாங்கள் எல்லாம் அடிமை" என்றனர் மன்னனும் மக்களும். தங்கக்காசுகள் உட்பட, தாம்பாளம் தாம்பளமாய் பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்து மன்னன் கையில் கொடுத்தனர் அரண்மனை அலுவலர்கள், மன்னன், அவற்றை அப்படியே வாங்கிக் கோடாங்கி கையில் கொடுக்க முயன்றான்,

ஆனால், கோடாங்கி அவற்றைத் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை, "மானம் காத்த கருப்பணசாமிக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள்" என்றான். "நான் உண்பது நாழி உடுப்பது இரண்டு" என்றான். அப்படியே செய்வதாக வாக்களித்தான் மன்னன்,

சிறை​வைக்கப்பட்டிருந்த அரண்மனை அந்தப்புறத்தில் பணியாற்றி​யோர் மற்றும் குறி​சொன்ன அனைவரும் விடுவிக்கப்பட்டனர், அவரவர் செய்து வந்த தொழிலை அப்படியே தொடர்ந்து செய்துவருமாறு மன்னன் ஆணையிட்டான்,

சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்தான். மன்னனும், கோடாங்கியும் மந்திரியும் மக்களும் ஒன்றாய் உட்கார்ந்து உணவருந்தினர். கோடாங்கிக்கு ஒரு வேட்டியும் துண்டும் பரிசாகக் கொடுத்தான் மன்னன்,

இதுநடந்து இருநூற்றைம்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருந்தாலும், இன்றும் ஒருகுறையும் இல்லாமல், மரபு மாறாமல் செய்து வருகின்றனர் மன்னர் குடும்பத்தினர்.

பங்குனித் திருவிழாவில் கருப்பணசாமி புறப்பாடு ஆரம்பித்தவுடன், முதல் மரியாதையாகக் கருப்பணசாமிக்கு இராமநாதபுரஅரண்மனை மாலை அணிவிக்கப்படுகிறது. அரண்மனை மாலையைத் தொடர்ந்து மக்கள்அனைவரும் சாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டு வாழ்க்கையில் உய்வடைகின்றனர்,

இரவு முழுவதும் கருப்பணசாமி ஆட்டம், மாலை என்றால் மாலை, மலைபோல் குமிந்து விழும், அதை அப்படியே குவித்து வைத்திருப்பர். இரவு முடிந்து சூரியன் உதிப்பதற்கு முன் கருப்பணசாமி ஆடிக் குறிசொல்லி முடித்துவிடும். விடிந்தால், சாமியும் இருக்காது. மலைபோல் குவிந்த மாலையும் இருக்காது !


கருப்பணசாமி கோயிலுக்குள் சென்ற மறுவினாடியே அத்தனை மாலையையும் அவரவர் பிரசாதமாக எண்ணிப் பக்தர்கள் எடுத்துச் சென்று விடுவர்,  குறிகேட்க விழைவோர் எல்லாம் வந்து சாமிக்கு மாலையணிவித்து, மரியாதை செய்து, வேண்டிய குறி கேட்டு உய்யலாம்.


இத்த உண்மைக் கதையைக் படித்தோரும், படித்ததைப் பிறருக்குச் சொன்னோரும், அதைக் கேட்டோரும் மாரநாடு கருப்பணசாமியின் திருவருளாள் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர்.

Sunday, March 4, 2018

இறைவன் மீது நம் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்

*ஒரு கிராமத்தில் ஏழைப்பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்குச் சொந்தமாக  ஒரு பசுமாடு இருந்தது. அவள் அந்தப் பசுமாட்டிலிருந்து பாலைக் கறந்து,  ஊர் மக்களுக்கு விற்றுவந்தாள். அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாள்.*

அந்தக் கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றின் மறுகரையில் ஒரு கோயில் அர்ச்சகர் வாழ்ந்து வந்தார்.  தினமும் பூஜைக்கு இந்தப் பெண்ணிடம்தான் அவர் பால் வாங்குவார்.

சில நாட்களாக குறித்த நேரத்தில் அந்தப் பெண்மணியால் பால் கொண்டு வர இயலவில்லை. இதனால் கோபம்கொண்ட  அர்ச்சகர், ஒரு நாள் அவளைக் கூப்பிட்டார்.

``ஏன், அம்மா ... பார்த்தாயா... உன்னுடைய காலதாமத்தால் என்னால் உரிய நேரத்தில் பூஜையை முடிக்க முடியவில்லை’’ என்று கொஞ்சம் கோபமாகவே கடிந்துகொண்டார். 

``மன்னிக்கவேண்டும் சுவாமி, நான் வீட்டிலிருந்து  முன்னதாகவே கிளம்பிவிடுகிறேன். ஆனால். ஆற்றைக் கடந்து வர வேண்டும் என்பதால், கரையில் படகுக்காக வெகுநேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது" என்றாள் பணிவுடன்.

அப்பாவியாக அந்தப் பெண் சொன்ன பதிலைக் கேட்டு மனமிரங்கினார் அர்ச்சகர்.

“என்னது... ஆற்றைக்  கடக்கப் படகுக்கு காத்திருக்கிறாயா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே `கடவுள்’ பெயரைச் சொல்லிக்கொண்டே கடந்துவிடுகிறான்.  நீ என்னடாவென்றால், சிறிய ஆற்றைக் கடப்பதற்கெல்லாம் படகோட்டியை நம்பிக்கொண்டிருக்கிறாயே! இதுதான் கடைசி. இனிமேல் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், எனக்கு நீ பால் கொண்டுவர வேண்டாம்" என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அவர் இதைக் கொஞ்சம் கேலியாகத்தான் சொன்னார். ஆனால், அதை, அந்த அப்பாவிப் பெண்ணால் உணர முடியவில்லை.

'இந்த ஊரிலேயே அதிகமாக பால் வாங்குபவர் இவர் ஒருவர்தான். இவரும் இப்படிச் சொல்லிவிட்டாரே... என்ன செய்வது?' என வருத்தத்துடன் கிளம்பிச் சென்றாள்.

அதன் பிறகு, சில நாட்களுக்கு அவள் குறித்த நேரத்துக்குள் வந்து விட்டாள். அந்தப் பெரியவருக்கே அது ஆச்சர்யமாக இருந்தது. ஒரு நாள் சந்தேகத்தோடு அவளைக் கூப்பிட்டார்.

"இப்போதெல்லாம் சரியான நேரத்துக்குள் வந்துவிடுகிறாயே... எப்படியம்மா?" என்று கேட்டார்.

"அது ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை, சுவாமி. நீங்கள் சொன்னது போலத்தான் செய்கிறேன்."

"என்னது... நான் சொன்னபடியா! ஆற்றின் தண்ணீர் மேல் நடந்தா வந்தாய்..!" என்றார் கேலியுடன்.

"ஆமாம் சுவாமி! அப்படித்தான் நடந்துவந்தேன்" என்றாள் அந்தப் பெண் உறுதியான குரலில்.

`இது எப்படிச் சாத்தியம்?’ அர்ச்சகரின் மனதுக்குள் சந்தேகம் இருந்தாலும், அதை அவர் வெளிகாட்டிக்கொள்ளவில்லை. ''எங்கே... என் கண்முன்னே நடந்துகாட்டுவாயா?" என்று கேட்டார்.

அவள் மறுக்கவில்லை "நிச்சயமாகக் காட்டுகிறேன்!’’ என்றாள்.

இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்றனர்.

"நீ முன்னே செல், நான் உன்னைப் பின்தொடர்கிறேன்" என்றார் அர்ச்சகர். 

உடனே அந்தப் பெண்மணி, கை இரண்டையும் கூப்பியபடி, கடவுளின் பெயரைக் கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள்.

கண்முன்னே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்த அர்ச்சகருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி... அதை வெளிகாட்ட முடியாமல், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு அவளைப் பின்தொடர்ந்தார். 

`ஆற்றின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று தெரியலையே’ என்று பயத்துடன் நினைத்தபடியே கடவுளின் பெயரைக் கூறியபடி, இறங்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு ஓர் எண்ணம்....`தண்ணீரில் நடக்க முடியுமோ முடியாதோ... ஒருவேளை நீரில் விழவேண்டி இருந்தால், குறைந்த பட்சம் ஆடையாவது நனையாமல் இருக்கட்டுமே...’ என நினத்தவர் தன்னுடைய ஆடையைக்  கைகளால் தூக்கிப் பிடித்துக்கொண்டு  ஆற்றில் இறங்கினார்.

ஆனால், கால் தண்ணீருக்கு உள்ளே சென்றது. அர்ச்சகர் திடுக்கிட்டார்.

வேறு வழி தெரியாமல் திரும்பி, கரையேறினார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவர் இருக்கும் கரைக்கே வந்தாள்.

"என்னை மன்னித்துவிடம்மா! என்னால் உன்னைப் போல் நீரில் நடக்க முடியவில்லை. உண்மையாகவே நீ  நீர் மேல் நடந்து சென்றது எப்படி சாத்தியமானது என்பதை எனக்குச் சொல்லேன்..." என்று கேட்டார் குழைந்த குரலில் அர்ச்சகர்.

அந்தப் பெண் பணிவுடன், *“சுவாமி…. உங்கள் உதடுகள்  கடவுள் பெயரைச்  உச்சரித்தாலும், உங்கள் கைகள் இரண்டும் உங்கள் உடைகள் நனையக் கூடாது என்பதற்காக தூக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தன. அதன் பிறகு நீங்கள் நீரில் இறங்கினீர்கள். கடவுள் மேல் உண்மையாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள்"* என்ற அந்தப் பெண் சற்றுத் தயங்கிவிட்டுச் சொன்னாள்...

*``மேலும், ஆற்றின் ஆழத்தைப் பரீட்சித்து பார்ப்பது, அந்த ஆண்டவனையே ஆழம் பார்ப்பது போன்றது அல்லவா?”* என்றாள்.
அந்தப் பெண் இதைச் சாதாரணமாகச் சொன்னாலும், அதை அந்த இறைவனே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது அர்ச்சகருக்கு.
அவர் வெட்கித் தலைகுனிந்தார்.

*இறைவன் மீது நம் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்* என்பதை விளக்க, பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.


*"பிரார்த்தனை  என்பது அந்தப் பெண்ணின் மனநிலையைப் போலத்தான் இருக்கவேண்டும். அந்த அர்ச்சகரைப்போல இருக்கக் கூடாது""* என்பதுதான் *ஸ்ரீராமகிருஷ்ணர்* நமக்கு உணர்த்தும் செய்தி.

*இதைத்தான், `உள்ளன்போடு ஒருவன் இறைவனிடத்துப் பிரார்த்தனை செய்ய வேண்டும். உள்ளூர ஒரு மனிதன் எதை  விரும்புகிறான் என்பதை இறைவன் நன்கு அறிகிறார். அதனை நிறைவேற்றவும் செய்கிறார்’ என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

Friday, March 2, 2018

வேளுக்குடி வரதாச்சாரியார் மொட்டைதலைக்கும் முழங்காலுக்கும்

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்"
-----------------------------------------------------------------------------------
இவரின் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. இவரிடம் ஒரு விசேஷம்...

என்ன பேசவேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒருமுறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர்.

 ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்ததுபோல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக்கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்றுவிட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்றுவிட்டான் என்பதற்கான அடையாளம் அது. திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்துவிட்டது. நான் உனக்கு அடிமைப்பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு.

அப்படிச் செய்துவிட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிவிட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.

நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார்திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். இது ஒரு சாதனை!

இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60. சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்துகொண்டு இருந்தார்.

 மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக்கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்துவிட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்துவிட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்துகொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்துவிட்டு, பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்தபோது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்துவிட்டார்!

##மீள் 2012 முரளி பட்டர் அவர்கள் பதிவு.

புரந்தரதாசர் சங்கீத மும்மூர்த்தியில் முதல்வர்

ஒன்பது கோடி

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன்.

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

 நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும்.

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கி றது. இதெல்லாம் இறைவன் திரு விளையாட்டு.

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள்.

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.

அதுவும் எப்படி? அற்புத மான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்.

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு.

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான்.

அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக்.

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி.

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார்.

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்.

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன்.

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...''

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...''

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன்.

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை.

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா...

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி.

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?'

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது?

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை!

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார்.

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்....

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.!

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....'

 புரந்தரதாசன்ஸ்ரீ னிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார்.

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

 சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

 நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார்.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே.

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.

காலஞ்சென்ற திருமதி எம்.எல். வசந்தகுமாரி அவர்கள் தமிழ் நாட்டில் புரந்தரதாசரின் பதங்களைப் பாடி பக்தியை ஊட்டினார்.

எம்.எஸ்.ஸின் "ஜகதோ தாரணா'வும் கேட்க கேட்க பக்தியை நம் மனத் தில் விதைப்பவை.

அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்.

சென்னபட்ணா எனும் (Bangalore to Mysore road) ஊரில் பாடப்பட்டது ஜகதோத்தாரணா பாடல். உலகத்துக்கே கடவுளாக இருந்தாலும் யசோதைக்கு அதாவது அன்னைக்கு நீ பிள்ளை. கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும் என்பது பாடலின் பொருள்