Saturday, February 24, 2018

ஊட்டத்தூர் ராமர்

ஊட்டத்தூர் ராமர்

பகல் பத்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளைச் சேவித்துவிட்டு ’கனைத்து இளம்’  திருப்பாவை பாசுரத்துக்கு ’மனதுக்கு இனியானான’  ஸ்ரீராமரை பற்றி என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டு இருந்த சமயம் அந்தத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“அடியேன் தாஸன் என்று மிகப் பவ்யமாக ஆனால் பரபரப்பாக “இப்ப பேசலாமா ?” என்றது மறுமுனை

“உங்க பேர் என்ன ?”

“ஸ்ரீநிவாசன்…... “

“சொல்லுங்கோ”

“பல திவ்ய தேசம் சென்று உங்கள் அனுபவம் பற்றி எழுதுவதை எல்லாம் தவறாமல் படிப்பேன்…ஒரு விண்ணப்பம்…. “ என்று தயங்கி ஒரு நிமிஷத்தில்  சொல்லி முடித்தார்.

“திருச்சி - சென்னை போகும் வழியில் பாடாலூரில்  மிகப் பழமையான ராமர் கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டு  என்கிறாகள். வைகுண்ட ஏகாதசிக்குப் போனேன் ஸ்வாமி என்னையும் சேர்த்து  மொத்தம் நான்கு பேர் தான் கோயில் இருந்தார்கள்..  கஷ்டமா இருந்தது.... இந்தக் கோயில் பற்றியும் பற்றி எழுத வேண்டும்..  நிறையப் பேர் அந்தக் கோயிலுக்கு வர வேண்டும்.. ஏதாவது செய்யுங்கள்”

கோயில் பற்றி கூகிளில் தேடினேன். தகவல் கிடைக்கவில்லை. எனக்குத் தொலைப்பேசியில் அழைத்தவரைத் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பிய SMS

“SriKothandaramaswamy temple,UTTATHUR,(via-PADALUR),4kms from PADALUR Jn on Trichy-Chennai Highway”

கூகிள் மோப்பில் கொஞ்சம் மேய்ந்த பிறகு கோயில் தட்டுப்பட்டது. குறித்து வைத்துக்கொண்டேன்.

இந்த மாதம் குடியரசு தினத்துக்கு ராமரைச் சேவிக்க சென்றேன். திருச்சி - சென்னை ஹைவேயில் இன்னும் இரண்டு கி.மி. யூ டர்ன் அடித்தால் அடையார் ஆனந்த பவன் என்ற பலகையை கடந்து சென்ற பிறகு கூகிள் கோயிலுக்குத் திரும்ப சொன்னது. ஊட்டத்தூர்  வந்தடைந்தோம்.

திரு ரா.பி சேதுப்பிள்ளையின் “தமிழகம் ஊரும் பேரும்” என்ற புத்தகத்தில் ஊட்டத்தூர் பற்றிய குறிப்பு இது.

திருச்சி நாட்டைச் சேர்ந்த பெரம்பலூர் வட்டத்தில் உள்ள
ஊற்றத்தூரும் ஒரு பழைய சிவஸ்தலம் ஆகும். “உறையூர்
கடலொற்றியூர் ஊற்றத்தூர்” என்றெடுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.
அவ்வூரில் அமர்ந்த இறைவன் தொகுமாமணி நாயகர் என்று
கல்வெட்டுக்களிற் குறிக்கப் படுகிறார். பிற்காலத்தில் குலோத்துங்க
சோழீச்சுரம் என்னும் திருக்கோயிலும் அவ்வூரில் எழுந்தது. இரண்டாம்
இராஜராஜன் அச் சோழீச்சுர முடையார்க்கு உழுத்தம்பாடி யூரைத்
தேவதானமாக வழங்கிய செய்தியைக் கல்வெட்டிற் காணலாம்.ஊற்றத்தூர்
என்னும் பெயர் இக்காலத்தில் ஊட்டத்தூர் ஆயிற்று”

முழுவதும் பசுமையான கிராமம், புது பெயிண்ட் ஐயனாரையும், சின்ன வெங்காயம் உரித்துக்கொண்டு இருந்தவர்களைக் கடந்து சென்ற போது குடியரசு தினத்துக்கு கிராமத்தில் கோயில் வாசலில் 12.30 மணிக்கு எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்க  விளையாட்டு போட்டிகள் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

 ஸ்ரீகோதண்ட ராமர் கோயில் கோபுரம் தெரிந்து நடை சாத்திவிட போகிறார்கள் என்று அவசரமாகக் கோயிலுக்குள் நுழைந்தவுடன் தூரத்தில் ஸ்ரீ சீதாதேவி ஸ்மேத ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீலக்ஷ்மணர் தெரிய ஒரு மாமி ஓடி வந்து

“வாங்கோ வாங்கோ… இந்தக் கோயிலுக்கு யாரும் வரதில்லை. என் பையன் தான் இவன் ஒன்பதாவது தலைமுறை.. இங்கே அர்ச்சகராக இருக்கிறான்..” என்று படபடப்பாக பேசினார்.  பேச்சில் ஏழ்மையும் சந்தோஷமும் கலந்திருந்தது.

கோயில் தூண்கள் வரிசையாக, சூரிய ஒளி ஒரு இடத்தில் அடிக்க
“திரு உடம்பு வான் சுடர்; செந்தாமரை கண்; கை கமலம்” என்று நம்மாழ்வார் கூறுவது போல உள்ளே கோதண்டபாணியாக ”தோற்றமாய் நின்ற சுடராக”   ஸ்ரீராமர்  இடது புறத்தில் சீதா தேவி, வலபுரத்தில் ஸ்ரீலக்ஷ்மணர் திருமுகங்களில் அமைதியைக் காண முடிந்தது.

திருச்சியிலிருந்து  கொண்டு சென்ற மாலையைக் கொடுக்க அர்ச்சகர் அதை ஸ்ரீராமருக்கு சாத்தினார் ஆர்த்தியின் போது ஸ்ரீ லக்‌ஷ்மணர், சீதாவிற்கு மாலையே இல்லாமல் வெறும் கழுத்தாக இருப்பதைக் கவனித்தேன்.

“சீதை, லக்ஷ்மணருக்கு  மாலை இல்லை.. பக்கத்தில் ஏதாவது கடை இருக்கா ?”

”இங்கே கடை எதுவும் இல்லை. ஊருக்கு வெளியே தான் போக வேண்டும்” என்றார் அர்ச்சகர்.

முன்று மாலையாக வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே என்று நொந்துக்கொண்டு சேவிக்கும் போது அர்ச்சகர் சொன்ன விஷயம்

”நான் ஒன்பதாவது தலை முறை.. இதற்கு முன் என் தாத்தா கோயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.. MRF ல் வேலை செய்துகொண்டு இருந்தேன். தாத்தா போன பிறகு கோயில் கைங்கரியம் தடைப்பட்டு விடக் கூடாதே என்று வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்… ஊரில் யாரும் கோயிலுக்கு வருவதில்லை வெளியூரிலிருந்தும் யாரும் வருவதில்லை. எப்பாவாது யாராவது பரிகாரம் என்றால் வருவார்கள்…”

“உற்சவர்களை இல்லையா ? ”

“இங்கே பாதுகாப்பு கிடையாது… அதனால் பக்கத்தில் ஒரு சிவன் கோயில வைத்துப் பூட்டி வைத்திருக்கிறோம்”

மனம் வருந்திய போது அர்ச்சகர் தாயார் சொன்ன விஷயம் மேலும் வருத்தத்தை அளித்தது

“பெருமாளுக்கு விளக்கு ஏற்ற எண்ணைக் கூட இல்லை, வாரத்தில் இரண்டு நாள் புதன், சனிக்கிழமை தான் பெருமாளுக்குப் பிரசாதம் கண்டருள செய்கிறோம்.. இவன் வேலையை விட்டுவிட்டு வந்துட்டான்... இங்கே சம்பளம் கிடையாது… சின்ன குழந்தை இருக்கு …மசம் ஆயிரம் கூட வர மாட்டேங்குது..  “ என்று மேலும் சில குடும்ப விஷயங்களைச் சொன்ன போது மனம் கனத்தது.

”பெருமாளைப் படம் எடுக்கலாமா  ?”

“தாராளமா எடுத்துக்கோங்கோ.. இதைப் பற்றி எழுதுங்கோ பலர் வந்தால் நன்றாக இருக்கும்”

கோயிலை சுற்றிப் பார்த்தோம். விசாலமான பழைய கோயில். கோயில் இடது புரத்தில் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீநம்மாழ்வார் இருக்க அதைச் சேவிக்கும் போது

“இங்கே ஒரு சுரங்க பாதை இருந்தது. சமீபத்தில் அதை அடைத்துவிட்டார்கள்”

கோயில் உள் பிராகாரத்தை சுற்றிக்கொண்டு வந்த போது அங்கே ஸ்ரீஅனுமான் செய்த சாகசங்களை பார்க்க முடிந்தது. சுவரில் மீன் உருவம் செதுக்கியிருந்தார்கள். வெளி பிரகாரத்தில் சில சிற்ப வேலைபாடுகளை பார்க்க முடிந்தது.

வெளி பிரகாரத்துக்கு சென்ற போது அதன் பிரம்மாண்டம் தெரிந்தது. கோயில் மடப்பள்ளிக்குச் சென்ற போது அங்கே ஒரு டப்பா மடப்பள்ளி போல காலியாக இருந்தது.

“இங்கே பிரசாதம் எல்லாம் செய்வதில்லை. வாரத்துக்கு இரண்டு நாளைக்குத் தான் கண்டருள செய்கிறோம்.. வீட்டிலிருந்து ஏதாவது செய்துகொண்டு வருவோம்…”

எந்தக் காலத்து கோயிலாக இருக்கும் என்று நான் எடுத்த படங்கள் சிலவற்றை நண்பர் சித்திரா மாதவனுக்கு அனுப்பிய போது அவர் உடனே அனுப்பிய தகவல் இது.

“From the photos you have sent this temple belongs to the Vijayanagara Times of the 16th century or later. In case the central part had been constructed earlier, then we have to search for traces of antiquity in and around the Garbha Griham. As it is, this is Vijayanagara style of architecture.”
( நன்றி Chithra Madhavan )

இதே போல ராமரை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று படங்களை தேடிய போது ஹம்பியில் கோதண்ட ராமர் கோயில் நினைவுக்கு வந்தது.

பொதுவாக தமிழ்நாட்டு ராமர் கோயில்களில் ஸ்ரீராமரின் வலது புறத்தில் சீதை அலங்கரிப்பாள், வட தேசம், கர்நாடகாவிலும் சீதை இடதுபுறத்தில்.
( இடது புறத்தில் இருந்தால் அது பட்டாபிஷேக கோலம் என்ற தகவலையும் சித்திரா மாதவன் கூறினார் )

கோயில் வாசலில் ஒருவர் பலகையில் ஏதோ எழுதிக்கொண்டு இருக்க அதைப் பற்றி விசாரித்தேன்
“கோயில் பற்றி போர்ட் வைத்தால் நான்கு பேர் வந்துவிட்டுப் போவார்கள்… இதற்கு இத்தனை நாள் பர்மிஷன் கிடைக்கவில்லை. இப்ப தான் கிடைத்தது...போர்ட் மூவாயிரம் ரூபாய்… “ என்றார்.

ஸ்ரீராமரை மீண்டும் ஒரு முறை சேவித்துவிட்டு காரில் புறப்படும் போது ஊருக்கு வாங்கிய எண்ணை, அரிசி காரில் இருந்தது நினைவுக்கு வர அதைக் கோயிலுக்கு சம்பர்பித்துவிட்டு மனதில் ஏதோ வருத்ததுடன் கிளம்பினோம்.

ஊருக்கு வெளியே ஹைவேயை தொடும் போது ஒரு பூக்கடை கண்ணில் பட்டது.

“தெரிந்திருந்தால் இங்கிருந்து மாலை வாங்கிக்கொண்டு சென்றிருக்கலாம்..
அடுத்த தடவை போகும் போது  லக்ஷ்மணர், சீதைக்குச்  சேர்த்து மூன்று மாலையாக வாங்கிக்கொண்டு போக வேண்டும்… ” என்று காரை ஹைவேயில் ஓட்ட ஆரம்பித்தேன்…

நதாதூர் அம்மாள் பரத்வாதி பஞ்சகம் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். பெருமாளின்  ஐந்து நிலைகளைப் பற்றி கூறுவது இது -
பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை. பயப்பட வேண்டாம் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

பரத்துவம் - வைகுண்டபதியாக இருக்கிறான்.
வியூகம் - பாற்கடலில் இருந்துகொண்டு ஜகத்ரட்சகனாக இருக்கிறான்.
விபவம் - பெருமாள் அவதாரங்களைக் குறிக்கும் ( வாமன, ராமர், கண்ணன் .. )
அந்தர்யாமி - எல்லா உயிர்களுக்குளும் இருக்கிறான்.
அர்ச்சை - எல்லாக் கோயில்களிலும் நாம் பார்க்கும் பெருமாள்.

அர்ச்சை  கடைசியில் வருவதால் தாழ்ந்த நிலை என்று நினைக்க வேண்டாம். அர்ச்சை என்பது அவதாரமாகத் தான் நம் பூர்வர்கள் கொண்டாடினார்கள். அதனால் தான் அர்ச்சாவதாரம்.
அர்ச்சாவதாரம் என்றால் எம்பெருமான் நம் அர்ச்சனையை ஏற்றுக்கொள்கிறான். ( அவனுக்கு அர்ச்சனை செய்பவர் - அர்ச்சகர் ).

“ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” என்கிறது ஸ்ரீவசன பூஷண வாக்கியம்.

“செளலப்பியத்திற்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்” என்றும் “இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள் போலன்றிக்கே கண்ணால் காணலாம் படி இருக்கும்” என்கிறது முமுக்ஷுப்படி

ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்தில் நாம் பெருமாளுக்கு சென்று புஷ்பம் சேர்க்க முடியாது. ஆனால் அர்ச்சாவதாரத்தில் தேர் ஓட்டிய பார்த்தசாரதிக்கு, வெண்ணெய் திருடிய நம்பெருமாளுக்கு ஓவர் நைட் பஸ், ரயிலில் சென்று புஷ்பம் சமர்ப்பிக்கலாம்.

அவதரங்களிலேயே ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் ’பூர்ண அவதாரங்கள்’ என்பார்கள். அதாவது they were complete. இத்தானைக்கும் ராமர் மட்டும் தான் தன்னுடன் எல்லோரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார், கண்ணன் தனியாக தான் சென்றான்.

பூர்ண என்ற சொல்லைக்  கட்டிலும் பரிபூரணம் ஒரு படி மேல் பரிபூரணம் - Perfect. பரிபூரண அவதாரம் என்றால் அது அர்ச்சாவதாரம் தான்.

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாடகத்தில்

உலகம் ஏத்தும்
தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்!
குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய்!* பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே!

“பின் ஆனார் வணங்கும் சோதி!” அதாவது அவதார காலத்துக்குப் பின் வந்தோர் வணங்கும்படி இருக்கிறார் பெருமாள் என்கிறார் ஆழ்வார்.

மேலே கூறிய  ஐந்து நிலைகளிலும் எல்லாத் திருக்குணங்களும் நிறைந்த இடம் அர்ச்சாவதாரமே என்று தெரிந்துகொண்டு சரணாகதி  செய்வதற்கு ஏற்ற இடம்  என்று முடிவுகட்டியவர்கள் ஆழ்வார்கள்.

அர்ச்சாவதாரமாக சில இடங்களில் படுக்கையை விரித்து பக்தர்கள் வரும் போது  வரட்டும் என்று படுத்துக்கொண்டு இருக்கிறான். சில இடங்களில் நிற்பதைப் பார்த்தால் யாரையோ எதிர்பார்த்துக்கொண்டு நிற்பது மாதிரி தோன்றும்.

கார் ஓட்டிக்கொண்டு நாம் அவனைச் சேவிப்பது பெரிய சாகசம் மாதிரி நினைக்கிறோம். நமக்காகக் காலங்காலமாக  நின்றுகொண்டே இருக்கிறான் ? அதைவிடவா இது பெரிசு ?

நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை  “உள்ளேன் ஐயா!” என்று அட்டண்டன்ஸ் கொடுத்தால் போதும். அப்பாடா வந்துவிட்டான் என்று மகிழ்கிறான்.

மணி 2.30. பூக்கடையை தாண்டியதும் “அப்பா Lakshmana and Sita have also done great deeds.. மாலை வாங்கி அவர்களுக்குக் கொடுத்துவிட்டு போகலாம்” என்றான் அமுதன்.

பூமாலையை வாங்கிக்கொண்டு மீண்டும் ஊருக்குள் சென்றோம். கோயில் சாத்தியிருந்தது. அர்ச்சகரைப் போனில் தொடர்பு கொண்ட போது “சாப்பிட்டுக்கொண்டு  இருக்கிறேன்.. இதோ வந்துவிட்டேன்” என்று பாதி சாப்பாட்டில் எழுந்துகொண்டு வந்தார்.

மீண்டும் கதவு திறந்து இளையபெருமாள், சீதா தேவிக்கு மாலை சாற்றிய பிறகு தான் மனதுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இந்த மாலை கொஞ்ச நாள் வாடாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.

கோயில் எப்படிப் போக வேண்டும் என்று கூகிள் மேப் கொடுத்திருக்கிறேன். கூட்டமாகச் சென்றுவாருங்கள், ”ஆர்வமே நெய்யாக” கொஞ்சம் எண்ணை, புஷ்பம், அரிசி எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

துவஜஸ்தம்பம் எனப்படும் கோயில் கொடிமரம் இந்தக் கோயிலில் இல்லை ஆனால் வெளியில் ஸ்ரீகருடாழ்வார் பெருமாளைப் பார்த்துக்கொண்டும், அவருக்குப் பின்புறம் ஸ்ரீஅனுமார் யாராவது வந்தால் வரவேற்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

31.1.2018
தை பூசம்
ஸ்ரீஉடையவர் 'தான் உகந்த திருமேனி’ பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்

பிகு: அர்ச்சகர் பெயர் ஸ்ரீ தாமோதரன். போன் நம்பர் +91-80984 46462

மகான் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராம நாம மகிமை

🕉தினம் ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம்
-
போதேந்திர சரஸ்வதி ஸ்வாமி
-
புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில், மண்டனமிஸ்ரர் அக்ரகாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன் என்ற அந்தணர். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார். குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன் புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை, மடத்துக்குப் புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.

விளையும் பயிரின் சாதுர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து இந்தக் குழந்தை யாருடையது? என்றார் ஸ்வாமிகள். தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதோ.. நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா? யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், வாயில் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள் இறைவனின் சங்கல்பத்தால் எழுந்தவையாக இருக்கும் என்று அனுமானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து தங்களுடைய விருப்பமே என்று விருப்பமும் என்றார்.

இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள் என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை. பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? என்று தன்னையும்தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினான். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சர அப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்று தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யா சன்னிதியின் முன் அமர்ந்து சங்கல்பம் எடுத்துகொண்டான். (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்). அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர், ஒருவர், பின் ஒருவராக இறைவனின் திருப்பதம் அடைந்தனர்.

நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும் பவ்யமும் கூடிக் கொண்டே வந்தது. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார். காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன். எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, நாம் சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.

குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை ஆனந்தமாக அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே. போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று. நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர். ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.

ஒரு சமயம் விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகளுடன் போதேந்திரர் யாத்திரை சென்று கொண்டிருந்தார். அப்போது உடல் நலம் குன்றி மகா சமாதி அடைந்தார். விஸ்வாதிகேந்திர ஸ்வாமிகள். குருநாதருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களை முறையாகச் செய்து முடித்து, போதேந்திரர், காஞ்சிபுரத்துக்கே திரும்பிவிட்டார். வெவ்வேறு ஊர்களில் நடக்கும் போதேந்திரரின் நாம ஜப உற்சவங்களுக்குப் பெருமளவில் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். இதே காலத்தில்தான், போதேந்திரருக்கு திருவிசநல்லூரில் நாம ஜபத்தில் பிரபலமாக இருந்த ஸ்ரீதர ஐயாவாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்தே யாத்திரைகள் மேற்கொண்டனர். கிராமம் கிராமமாகச் சென்று நாம ஜபத்தின் உயர்வைச் சொன்னார்கள். ஒருமுறை போதேந்திரரும் ஸ்ரீதர ஐயாவாளும் பெரம்பூர் என்கிற கிராமத்துக்கு சிஷ்யகோடிகளுடன் வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் வசித்து வந்த ஆசாரமான அந்தணர் ஒருவர் தங்கள் இல்லத்துக்கு எழுந்தருளி. பிட்சை ஏற்குமாறு ஸ்வாமிகள் இருவரையும் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது இல்லத்துக்கு ஸ்வாமிகளும் சிஷ்யகோடிகளும் சென்றனர்.

போதேந்திர ஸ்வாமிகள் பிட்சை எடுத்து உண்ட பிறகே ஸ்ரீதர ஐயாவாள் பிட்சை எடுத்து உண்பது வழக்கம் எனவே போதேந்திரர் முதலில் பிட்சை எடுத்துக்கொள்ள அமர்ந்தார். ஸ்ரீதர ஐயாவாளும், சிஷ்யகோடிகளும் ஊர் ஜனங்களும் ஸ்வாமிகளுக்கு எதிரே பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். அந்தணர் இல்லதைச் சேர்ந்தவர்கள் ஸ்வாமிகளது இலையில் பிட்சைக்காரன் பதார்த்தங்களை ஒவ்வொன்றாகப் பரிமாறத் தொடங்கினார்கள்.
அந்த அந்தணருக்கு ஒரே மகன். சுமார் ஐந்து வயது இருக்கும். ஊமை, சின்னஞ்சிறுவன் ஆனதாலும் உணவில் மேல் கொண்ட பிரியத்தினாலும் ஸ்வாமிகளின் இலையில் பரிமாறப்பட்ட பதார்த்தங்கள் தனக்கு உடனே வேண்டும் என்று ஜாடையில் சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஸ்வாமிகளுக்கு துக்கம் வந்தது. ராம நாமத்தை சொன்னால் மோட்சம் அடையலாம். அப்படி இருக்கும்போது ஊமையான இந்தச் சிறுவன் எப்படி பகவன் நாமத்தைச் சொல்ல முடியும்? எப்படி இவன் கரை ஏறுவான் என்பதே ஸ்வாமிகளின் கவலை. ஆனால், அடுத்து அங்கே என்ன நடக்கப் போகிறது என்பதை ஸ்வாமிகள் அறியாதவரா என்ன?

சிறுவனின் பரிதாப நிலையை நேராகப் பார்த்த பிறகு, ஸ்வாமிகளுடைய கவனம் பிட்சையில் செல்லவில்லை. விருப்பம் இல்லாமல் சாப்பிட்டார். பல பதார்த்தங்களை இலையில் மீதம் வைத்து விட்டு எழுந்து, வெளியே வந்து அமர்ந்தார். அப்போது ஸ்வாமிகளிடம் ஆசி பெற ஏராளமானோர் கூடினர். அந்தணரின் குடும்பத்தினரும் பவ்யமாக நின்றிருந்தனர்.

ஊமையான அந்தச் சிறுவன் மட்டும் பசியுடன் ஸ்வாமிகள் சாப்பிட்ட இலைக்கு முன் தவிப்புடன் நின்றிருந்தான். அவரது இலையில் சில பதார்த்தங்கள் மீதம் இருந்தன. அங்கே வேறு எவரும் இல்லாததால் இலைக்குமுன் அமர்ந்து ஸ்வாமிகள் உண்டது போக மிச்சம், மீதி இருந்த உணவு வகைகள் ஒன்றையும் விடாமல் பரபரவென்று உட்கொண்டான். பசி எனும் நெருப்பு தற்போது தணிந்துவிட்டதால், சிறுவனின் உள்ளத்தில் ஆனந்தம் குடிகொண்டது.

அடுத்து நடந்த நிகழ்வை ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை எந்த ஒரு வார்த்தையயுமே உச்சரிக்காமல் இருந்த அவனுடைய வாய் ஸ்ரீராம ராம என்று சந்தோஷமாக உச்சரித்தது. இதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். தனக்குப் பேச வந்துவிட்டதே என்கிற ஆனந்தத்தில் அவன் கூத்தாடினான். வாய் பேச முடியாத தன் மகனின் வாயில் இருந்து ஸ்ரீராம கோஷம் வருவதைக் கேட்ட அவனுடைய பெற்றோர். திகைத்துப் போய் வாசலில் இருந்து வீட்டின் உள்ளே ஓடினர்.

மகனே.. மகனே! உனக்கு பேச்சு வந்துவிட்டது. அதுவும் ராம நாம ஜபத்துடன் உன் பேச்சைத் துவக்கி இருக்கிறாய் என்று கூறி அவனுடைய பெற்றோர் கண் கலங்க அவனைக் கட்டித் தழுவினர்.

வெளியே, வாசலில் அமர்ந்திருந்த அந்த மகான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். இதெல்லாம் நடந்தது இவருடைய கருணையில்தானே! பேச முடியாத மகன் பேசக் காரணமாக இருந்தது இவரல்லவா? ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை, எந்த நேரமும் பகவானின் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும் போதேந்திரரின் நாவில்பட்ட உணவின் மீதியை உட்கொண்டதால் அல்லவா, அந்தச் சிறுவன் பேசினான்! அவன் பேச வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மகான் தனது இலையில் பதார்த்தங்களை மிச்சம் வைத்துவிட்டு எழுந்து சென்றாரோ? மகனுடன் சென்று, அந்த மகானின் திருப்பாதங்களில் விழுந்து தொழுதனர் பெற்றோர்.

கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் கழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள்.

கள்ளங் கபடம் இல்லாத அந்தச் சிறுவர்களுக்கு இணையாக வயது வித்தியாசம் பாராமல் விளையாடுவார் ஸ்வாமிகள். சிறுவர்களின் ஆனந்தம் கண்டு குதூகலிப்பார். சில சமயம் ஆற்றங்கரையில் சாகசங்கள் சிலவற்றை செய்து காண்பித்து சிறுவர்களை மகிழ்விப்பார் ஸ்வாமிகள். இது ஸ்வாமிகளுக்கும் சந்தோஷமாக இருக்கும். காவிரி ஆற்றங்கரையில் போதேந்திர ஸ்வாமிகள் இருப்பதை சிறுவர்கள் பார்த்துவிட்டால் போதும். அவர்களுக்கு குஷி பிறந்துவிடும். துள்ளிக் குதித்து ஓடிவந்து விளையாடுவதற்கென்று ஸ்வாமிகளுடன் ஒட்டிக்கொண்டு விடுவார்கள்.

அது அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று என்றாலும், அன்றைய தினம் நடக்கப் போகும் விளையாட்டுதான் ஸ்வாமிகளின் இறுதியான விளையாட்டு என்பதை. பாவம் அந்தச் சிறுவர்கள் அறியவில்லை!

அது கோடை காலம் காவிரி ஆற்றில் தண்ணீர் வற்றிப்போய் இருந்தது. நதியின் பெரும் பகுதியில் மணல் தெரிந்தது. தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.

மணல் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள். தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள் என்ன? என்றார்.

ஸ்வாமிகளுடனான ஒரு விளையாட்டே இது என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. வாங்கடா, வீட்டுக்குப் போகலாம். சாமீ ஜபம் பண்றாரு. இங்கே நாம நின்னா அவருக்குத் தொந்தரவா இருக்கும் என்று இருட்டுகிற வேளையில் அனைவரும் கலைந்துவிட்டனர். மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி. ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடி கொண்டிருக்க... அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியது பல இடங்களில் தேடிப் பார்ததனர்.

ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள்.

சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அசாரீ வாக்கு ஒன்று எழுந்தது. பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். தோண்டுவதை நிறுத்துங்கள் இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம் என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் குழியைத் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர்.

ஸ்வாமிகள் நிரந்தாமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள். ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிக்கிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் ராம நாம ஒலியைக் கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை தரிசிப்போமா? பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சன்னிதி. போதேந்திரரின் அதிஷ்டானம் இவை இரண்டும்தான் இங்கே பிரதானம். ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் டிரஸ்ட் அமைப்பினர் இந்த அதிஷ்டானத்தைத் திறம்பட நிர்வகித்து வருகிறார்கள்.

இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது

குறையொன்றுமில்லை.

ஓலைப் பெட்டியில் இருந்த பூணூலை எடுத்து, மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் அந்த ஏழை பிராமணர். 
"இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது?  பாவம் இது கூடத் தெரியாமல் இவர் அதன் எடைக்கு நிகராகப் பொருள் கொடுத்தால் போதும் என்கிறாரே" என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டான் ராஜா.

ஒரு காசை எடுத்துத் தட்டிலே போட்டான்.  அந்தத் தட்டு கூடத் தாழவேயில்லை!  இரண்டு காசுகள் போட்டான்... பத்து... எவ்வளவு போட்ட போதும் அசையாமல் நின்றது.  தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி பூணூலுக்கு நிகராக எடை போட்டுப் பார்த்தான்.  அப்போதும் அதன் இணையை எட்ட முடியவில்லை.   இரத்தின கிரீடத்தை எடுத்து  வைத்தான். "என்னிடம் இருக்கிற மொத்தத்தையும் எடுத்து வச்சுட்டேன்" என்கிறான்.

உடனே அந்த நாட்டின் மந்திரி போய், ராஜாவின் காதோடு சொன்னான்; "அவசரப்பட வேண்டாம்!  இந்த பிராமணரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாளைக்குத் திரும்பவும் வரச் சொல்லுங்கள்..."

ராஜாவும் அந்த உத்தமரைப் பார்த்து, "நீங்கள் நாளைக்கு வந்தால் இந்த நூலுக்கு நிகரான எடையில் செல்வத்தைத் தருகிறேன்" என்றான்.

பிராமணர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தார்.  "இப்படி பூணூல் எடைக்கு மேல் வாங்கிக்கலை என்று சொல்லி விபரீதத்திலே மாட்டிக் கொண்டோமே" என்று அவருக்கு ஒரே பயம்.

அந்த பயத்துடனேயே புறப்பட்டுப் போனவர் மறுநாள், "சிரச்சேதம் பண்ணி விடுவானோ அரசன்...? என்கிற பயத்துடனேயே திரும்பி வந்தார்.

தராசு கொண்டு வரப்பட்டது.  பூணூலை வைத்தார் அந்தணர்.  ராஜ ஒரு காசை எடுத்துப் போட்டான்.  உடனே பூணூல் தட்டு மேலே போய்  விட்டது.

"அதே நூல்தான், அதே  தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நடந்தது?  நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது?  ராஜ மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.

மந்திரி அதற்கு விளக்கம் சொன்னான்.

நேற்று அவர் கொண்டு வந்தது யக்ஜோபவீதம்.  யக்ஜோபவீதம் பரமம் பவித்ரம்னு சொல்வதுண்டு.  மிகவும் புனிதமானது அது.  அதற்கு நிறை காண முயல்வதே தப்பு.  நமக்கெல்லாம் ஆத்மா என்று பெயர்.  பகவானை மட்டும் பரமாத்மா என்று "பரம" - "உத்தமமான"  என்கிற அடை மொழி சொல்லி அழைக்கிறோம்.  அதே அடைமொழி இந்த யக்ஜோபவீதத்துக்கும் சொல்லப்படுகிறது.  அவ்வளவு பவித்ரமானதாக அது இருந்ததினாலேதான் ராஜ்யத்தையே எடை கொண்டது.  ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய்  விட்டது.  அதனாலே சுலபமாக அதை எடை போட்டு விட்டோம்.

"ஏன் போனது அதனுடைய பவித்ரம்" என்று கேட்டான் அரசன்.

"பூணூலைத் திரிப்பவர்கள் (தரிப்பவர்களும்) நியமங்களில் இருந்து தவறவே கூடாது.  ஆனால், இந்தப் பெரியவர் தமது பயம் காரணமாக இன்றைக்கு அந்த நியமங்களைச் செய்யவில்லை.  அதனாலே தான் அதன் பவித்ரம் போனது"

நியமமாகச் செய்யப்படும் பூணூலின் மகிமையைச் சொல்வது இந்தக் கதை.  சர்வமேன்மை பொருந்திய பரம பவித்ரமான யக்ஜோபவீதம் பகவானுக்கு வாமன அவதாரத்தின் போது அணிவிக்கப்பட்டது.  சூரியனே அவருக்குப் பிரம்மோபதேசம் பண்ணினார் என்று சொன்னேனில்லையா...? பார்வதி தேவி  வந்து அவருக்கு முதல் பிட்சை இடுகிறாள்.  பலாச தண்டத்தை பகவானின் கையிலே தருகிறார்கள்.

பலாச தண்டம் என்பது என்ன...? தண்டம் என்பது சந்நியாசிகளின் கரத்தில் கொடுக்கப்படும் கோல்.   உபநயன காலத்தில் பலாச மரத்தின் கிளையை இப்படி 'வடு'வின் கையில் கொடுப்பதுண்டு.
ஏன் பலாச மரத்தின் கிளையைக் கொடுக்க வேண்டும்?  வேறு மரத்தின் கிளையைக் கொடுத்தால் என்ன என்று கேட்டால் அதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.

வேத வித்துக்கள் பலர் ஒரு சமயம் பாலச மரத்தடியில் கூடினார்கள்.  அங்கே அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை ஓதி அதன் மகிமையைப் பேசினார்கள்.  இதைக் கேட்டுக் கொண்டே இருந்த பலாச மரத்தின் வட்டமான இலைகள் மூன்று மூன்று கூறுகளை உடைய இலைகளாக வடிவத்தில் மாறிவிட்டன.  காயத்ரி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு.  அந்த மந்திரத்தைக் கேட்டதும் அதன் மூன்று பாகங்களையும் தன் இழையிலேயே காட்டியது பலாச மரம்!  அதனால்தான் பலாச தண்டத்தைக் கொடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.

"மாயா வாமனனே மதுசூத நீயருள்வாய்" என்று "வாமனனையும், மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்று கண்ணனையும் பாடுகிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மாயன்தான் மூவுலகளந்த திரிவிக்கிரமனாய் விச்வரூபம் எடுக்கவிருக்கிறான்.

விச்வ சப்தத்துக்குரிய இந்த மாயன், நர்மதா நதி தீரத்திலே, பிரஹலாதனுடைய பேரனான பலி சக்ரவர்த்தி செய்த அசுவமேத யாகத்துக்கு வருகிறான்.

யக்ஞ சம்ரக்ஷகன் அந்த பரமாத்மா.  சிரார்த்த சம்ரக்ஷகன் என்றும் அவனைச் சொல்வதுண்டு.  சிரார்த்தம் பண்ணும்போது ஸ்ரீ மகாவிஷ்ணும் ஆவாஹயாமிஎன்று அவனை ஆவாஹனம் பண்ணுகிறோம்.  எனவே அவன் சிரார்த்த சம்ரக்ஷகன் ஆகிறான்.
சிரார்த்த சம்ரக்ஷகனாக மட்டுமா - அவன் இருக்கிறான்?  எல்லாவற்றுக்கும் சம்ரக்ஷகன் அவன்தான்  சர்வதா ரக்ஷகன்.  எப்போதும் ரக்ஷிக்கிறவன்.  சர்வத்ர ரக்ஷகன் - எங்கும் ரக்ஷிக்கிறவன்!

இதை உணர்த்த வேடிக்கைக் கதை ஒன்று சொல்வார்கள்.  ஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்;  "அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும்.  அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்" என்றார் அவர். 

25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை!  மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம்!  அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார்.  எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்...!  திரவிய ரக்ஷணம்.  இவரே ஒரு ரக்ஷகர்.  அப்புறம் பரமாத்மா...? சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.
இது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல்!  உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன்.  அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா...? நினைக்கத்தான் முடியுமா?  அவன் தான் நம்மை எப்போதும்  ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.

பராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் - பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.  உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்:  "வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா?  புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா?  எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்?  அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க!  ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே... பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்?"

"அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா" கேட்டார் பட்டர்.

"ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்"

பார்த்தார் பட்டர்.  "இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன்.  காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

பராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர்.  கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார்.  கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.

பட்டர் கேட்டார்:  "ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா?"

"சாப்பிட்டேன் "

"நன்றாக தூங்கினீரா"?

"தூங்கினேன்".

"எத்தனை மணிக்குப் படுத்தீர்"?

"9 மணிக்கு"

"எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது"?

"ஒரு ஒன்பதரை மணியிருக்கும்".

"எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் "?

"காலை நாலரை மணிக்கு"

"ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா"?

"தூக்கத்திலே யார்தான் உணர்வார்கள்"?

"இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா"?

"தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்"?

"தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம்.  துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம்.  இதில் இருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றி அந்த பரமாத்மா ரட்சிக்கவில்லையா?  இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா"? என்று கேட்டார் பராசர பட்டர்.

வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கைப் பாடம்😃👍

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள்.

காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.

அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள்.

பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள்.

அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை.

அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார்.


அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார்.

ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது.

பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.

அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன.

மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார்.

பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள்.

அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார்.

பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள்.

அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார்.

பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன.

விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள்.

அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள்.

அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

*”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான்.*

*ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது.*

*உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”*

*“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள்.*

*வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”*

*“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம்.*

*எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”*

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள்.

*சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது.*😢

இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். 😔

இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார். 👏

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.🙌🏻
💐💐💐💐💐