Tuesday, February 28, 2017

எங்கே அடுத்த முட்டாள்?” - Sorry dont read last line

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதையை மிக சுவாரசியமாக   வாசித்துக்கொன்டு  நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி  படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்-Thanks Whatsup

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

Tuesday, February 14, 2017

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் ....Thanks to Whatsup

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶
நடந்து சென்றே...

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்


ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!

காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!.......

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!

நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!

"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,

இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.

"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....

"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும்!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா....
நிச்சயம் வரும்!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம்,நல்லதை மட்டுமே விதைப்போம்!!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல்


நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன் (காவல் கோட்டம் என்ற நூலில் இருந்து) படித்ததில் பிடித்தது - Got from Madura College Alumni Group - Courtesy Mr.Nagarajan

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...

நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன் (காவல் கோட்டம் என்ற நூலில் இருந்து) படித்ததில் பிடித்தது